சர்வைவர் - 18 | உசுப்பேற்றிய அர்ஜூன்… மிஸ் ஆன பார்வதி, பார்ட்டி கொண்டாடிய காடர்கள்!

ரிவார்ட் சேலன்ஞ்தான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். இந்த வாரமும் மீண்டும் ஒரு ‘வாழ்வா சாவா’ சவால். பலத்த போராட்டத்துக்குப் பிறகு காடர்கள் அணி வென்றது. இது அவர்களின் இரண்டாவது வெற்றி. அர்ஜூனுக்கும் ‘அழுகாச்சி டாஸ்க்’ கொடுத்தார்கள். ‘என்கிட்ட சீப்பு இருக்கு... நானும் சீவுவேன்” என்பது போல் தன் வாழ்க்கைச் சம்பவத்தை உருக்கமாக விவரித்தார்.

இந்த எபிசோடில் பார்வதியை பார்க்க, மன்னிக்க... கேட்க முடியவில்லை என்பது மிகப் பெரிய குறையாக இருந்தது.

சர்வைவர் 18-ம் நாளில் என்ன நடந்தது என்ன?!

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் சிறந்த பங்கேற்பாளராக உமாபதி வெற்றி பெற்றதுக்கு ‘டென்ட்’ பரிசளிக்கப்பட்டதால் காடர்கள் நன்றாக தூங்கினார்களாம். இன்று ‘ரிவார்ட்’ சேலன்ஞ் என்பதால் இரண்டு அணியிலும் அது குறித்த உரையாடல்கள், முன் தயாரிப்புகள் நடந்தன.

சர்வைவர் - 18 - அர்ஜுன்

டீமாக அல்லாமல் ‘தனி நபர்’ ஆட்டத்தை ஆவேசத்துடன் அம்ஜத் ஆடத் தொடங்கி விட்டார். எனவே ‘அவனைத் தூக்கலாம்... இவனுக்கு ஸ்கெட்ச் போடலாம்’ என்று வில்லன் மாதிரியே பேசிக் கொண்டிருந்தார். ஆனால் கேம் ஸ்ட்ராட்டஜி என்கிற வகையில் இது அவசியமே. ‘வலிமையுள்ளதே எஞ்சும்’ என்பதுதான் சர்வைவரின் கான்செப்ட்.

“இப்பத்திக்கு நாம நெகட்டிவா எதையும் யோசிக்க வேண்டாம். ஒத்துமையா இருந்து இந்த ரிவார்டை கைப்பற்றுவோம். மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்” என்று சமாதானக் கொடியை பறக்க விட்டார் புதிய தலைவர் ‘நந்தா’. (இவர் கணக்கு என்னன்னு தெரியல!)

‘களத்துக்கு வாங்க சர்வைவர்ஸ்’ என்று அழைப்பு விடுத்தார் அர்ஜுன். பூச்சிக்கடி பிரச்சனையால் ராம் முதலில் வரவில்லை. மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். லேடி காஷிற்கும் அதே பிரச்னைதான். இன்று போட்டி இருப்பதால் மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி வந்திருக்கிறாராம்.

ராம் வரவில்லையென்றால் வேடர்கள் அணியிலிருந்து யாராவது ஒருவர் விலக வேண்டும். கடந்த சவாலில் காலில் அடிபட்டதால் அம்ஜத் இதற்கு தயாராக இருந்தார். ஆனால் ராம் வந்து விட்டார்.

இரு அணிகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் தன் சொந்தக்கதையை அவிழ்த்து விட்டார் அர்ஜூன். ஒரு கட்டத்தில் அவரின் திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியைத் தழுவியதாம். மனைவி, அம்மா ஆகியோர்களின் சொத்துக்கள் அனைத்தையும் வைத்து சொந்தப் படம் தயாரிக்கத் தொடங்கினாராம். கடைசி கட்டத்தில் நிதிச் சிக்கல் ஏற்பட்டது. படப்பிடிப்பு நாளில் என்ன செய்வது என்று தெரியாமல் அனைத்து சக்தியையும் இழந்து அப்படியே அமர்ந்து விட்டாராம் அர்ஜுன். ஆனால் திடீர் என்று எங்கிருந்தோ உத்வேகம் வந்து எழுந்து விட்டாராம். அதன் பிறகு வெற்றிதானாம்.

சர்வைவர் - 18

‘வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்து விடாது. தொடர்ந்து முயன்றால்தான் கிடைக்கும்’ என்பதுதான் அர்ஜூன் சொல்ல வந்த நீதி. (இன்று அண்டை நாட்டின் தீவிரவாதிகள் நம்மைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றால் அதற்கு அர்ஜூன் படங்களும் ஒரு காரணம்!).

“இன்னிக்கு ரிவார்ட் சேலன்ஞ்சில் கிடைக்கும் வெகுமதியை நீங்க ரொம்ப விரும்புவீங்க” என்று இரு அணிகளையும் உசுப்பேற்றி விட்டார் அர்ஜூன்.

போட்டி தொடங்கியது. முதலில் மிகவும் பளுவான மர உருளைகளைத் உருட்டிச் சென்று பாதை அமைக்க வேண்டும். அதன் மீது ஏறிச் சென்று மர சுத்தியலால் மூன்று ஆணிகளை தரையில் அடித்து இறக்க வேண்டும். பிறகு ஒரு சரிவின் வழியாக மேலேறி பத்தடி உயரத்தில் இருந்து கீழே நீரில் குதிக்க வேண்டும். அந்த தடையை தாண்டிச் சென்றவுடன், இரண்டு பேர் மட்டும் முன்னேறி ஒரு புதிரை தீர்க்க வேண்டும். அந்தந்த அணிகளின் உருவம் பொறிக்கப்பட்ட மரப்பலகைகள் தனித்தனியாக இருக்கும். அதை சரியாக அமைத்தால் அணியின் லோகோ வர வேண்டும்.

ஒவ்வொரு மர உருளையும் 40-50 கிலோ எடை கொண்டதாக இருந்தது. எனவே போட்டியாளர்கள் மிகச் சிரமத்துடன் ஒவ்வொன்றையும் தூக்கிச் சென்று பாதையின் ஒவ்வொரு இடைவெளியையும் நிரப்பினார்கள். பளுவை தூக்க முடியாதவர்கள் உருட்டி உதவினார்கள். உருளையை தூக்கிப் போடும் போது அவர்களின் கைகள் எங்காவது சிக்கிக் கொள்ளுமோ என்று பார்க்கின்ற நமக்கே பதற்றமாக இருந்தது.

இந்த நிலையில் வேடர்கள் அணி லீட் எடுத்தது. ஆனால் அவர்கள் கடைசியாக அமைக்க முயன்ற உருளை, துரதிர்ஷ்டவசமாக பள்ளத்தில் விழுந்து விட்டது. ரவி சட்டென்று கீழே குதித்து அதை தூக்கி மேலே தர முயல, நந்தாவும் அம்ஜத்தும் சிரமத்துடன் வாங்கி அந்தக் கடைசி உருளையைப் பொருத்தினார்கள். இதனால் ஏற்பட்ட தாமதத்தை காடர்கள் அணி சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அவர்கள் மரப்பாலத்தை முதலில் அமைத்து வேகமாக முன்னேறிச் சென்றார்கள்.

சர்வைவர் - 18

அடுத்ததாக மரச்சுத்தியலை கயிற்றில் இருந்து அவிழ்க்க வேண்டும். இந்த நிலையில் இரண்டு அணிகளும் சமமான இடத்தில் இருந்தன. ஆனால் ஆணிகளை அடிக்கும் பகுதியில் மறுபடியும் காடர்கள் அணி முன்னிலையில் இருந்தது. விக்ராந்த் முதல் ஆணியை நச்சென்று அடித்து முடிக்க, அடுத்து வந்த ராம் சற்று தடுமாறினாலும் அடித்து விட்டார். மூன்றாவதாக வந்த உமாபதி மூன்றே அடிகளில் பலமாக அடித்து ஆணியை எளிதாக இறக்கி விட்டார்.

வேடர்கள் அணியில் முதலில் அம்ஜத்தும் இரண்டாவதாக ரவியும் மூன்றாவதாக நந்தாவும் ஆணி அடித்தார்கள். ஆனால் இந்த அணியின் வேகம் இந்த இடத்தில் குறைந்து விட்டது.

காடர்கள் அணி மளமளவென மேடையில் ஏறி தண்ணீரில் குதித்து புதிர் அமைந்திருக்கும் இடத்துக்கு சென்று விட்டார்கள். அவர்கள் இவ்வளவு நேரம் வேகம் காட்டியது கூட பெரிதான விஷயமில்லை. இந்தப் புதிரை விரைவில் முடித்தால்தான் வெற்றி அடைய முடியும். இது மூளையைப் பயன்படுத்தி செய்ய வேண்டிய விஷயம். ஆனால், வேடர்கள் அணியின் ரவி தண்ணீரில் குதித்து வருவதற்கு மிகவும் சிரமப்பட்டார்... நீர் பகுதி முடிந்ததும் அவரால் எழ முடியவில்லை. எனவே தரையில் உருண்டு கொண்டே வந்து சேர்ந்தார்.

சர்வைவர் - 18

வேடர்களும் ஒருவழியாக புதிர் கட்டத்துக்கு வந்து விட்டார்கள். ஒரு புதிரை திறமையாக கையாள்வதில் லட்சுமி பிரியாவுக்கு எக்ஸ்ட்ரா அறிவுக்கூர்மை உண்டு. இதை கடந்த சவால் ஒன்றிலேயே நிரூபித்திருந்தார். எனவே காடர்களுக்கு இது குறித்த பயம் இருந்தது. ஒருவேளை லட்சுமிபிரியாவின் உதவியினால் எதிர் அணி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக முடித்து விடுவார்களோ என்று இந்தப் பக்கம் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

காடர்கள் அச்சப்பட்டது போல் லட்சுமிபிரியா மிகத் திறமையாக இந்தப் புதிரை கையாளத் தொடங்கினார். கூட உதவிக்கு நாராயணன். அந்தப் பக்கத்தில் விஜயலட்சுமியும் லேடி காஷும் தங்கள் அணியின் லோகோவை வரவழைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வேடர்கள் அணி ஏறத்தாழ முடித்து விடும்போதுதான் அவர்கள் செய்திருந்த சிறிய தவறு தெரிந்தது. ஐஸ்வர்யாதான் இதைச் சுட்டிக் காட்டினார். ஒரு பலகை சரியாக அமைக்கப்படாததால் உருவம் முழுமையாக நிறைவு பெறவில்லை.

இந்த இடைவெளியை காடர்கள் அணி மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டது. கடைசி நிலையில் இருந்த ஒரு சிறிய தவறை விஜயலட்சுமி சரியாக கண்டுபிடித்து சரி செய்ய.. காடர்கள் அணி வெற்றி பெற்றது.

சர்வைவர் - 18

அதாவது கடந்த ரிவார்ட் சேலன்ஞ்சில் நிகழ்ந்த அதே விஷயம் இப்போது தலைகீழாக மாறியது. ஒரு சிறிய விஷயத்தை கவனிக்கத் தவறி விட்டதால் அப்போது விஜயலட்சுமி வெற்றியைத் தவற விட்டார். இப்போது அதே நிலைமையில் லட்சுமிபிரியா நின்று கொண்டிருந்தார். இத்தனை கஷ்டப்பட்டும் தோற்று விட்டோமே என்று வேடர்கள் அணி திகைத்து நின்று கொண்டிருக்க, இவர்களை வெறுப்பேற்றும் வகையில் உற்சாக நடனம் ஆடினார் உமாபதி. இது காடர்களுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி.

“உங்களுக்கு கிடைச்ச வெகுமதி என்னன்னு பார்த்துடலாமா?” என்று காடர்கள் அணியை அர்ஜூன் கேட்டதும் உற்சாகமாக தலையசைத்தார்கள். பரிசை திறந்து காட்டியதும் காடர்கள் மட்டுமல்லாது, வேடர்கள் அணியும் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றது. ஆம், அங்கு இருந்தவை முழுவதும் சமையல் பொருட்கள். சிக்கன், முட்டை, ரொட்டி, பருப்பு வகைகள் என்று விதவிதமாக இருந்தன.

இந்த நிலையில் ஒரு ஆன்ட்டி கிளைமாக்ஸை ஏற்படுத்தினார் லட்சுமிபிரியா. “ஆத்தா... நான் பாஸாயிட்டேன்” என்பது மாதிரி அவர் ஒரு பேப்பர் துண்டை கொண்டு போய் அர்ஜூனிடம் காட்டினார். அது Secret advantage-க்கான சான்றிதழாம். அதை அந்தத் தீவில் யாராவது கண்டெடுத்தால் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை எப்போதோ கண்டெடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்த லட்சுமிபிரியா, ‘’சொத்துல பங்கு கொடுங்க” என்று வந்து நின்றார்.

உண்மையில் அந்தப் பேப்பர் விஜயலட்சுமியின் கண்களில் ஏற்கெனவேபட்டிருந்தது. ஆனால் அவர் அதை சரியாக கவனிக்கவில்லை. இந்த அலட்சியத்திற்கான விலையை இன்று அவர் தர வேண்டியிருந்தது.

“ஓகே.... இதுல இருக்கறதுல நீங்க ஏதாவது ஒரு பொருளை எடுத்துக்கலாம்” என்று வேடர்கள் அணிக்கு அனுமதியளித்தார் அர்ஜூன். ‘கடவுளே லட்சுமிபிரியா சிக்கன்ல கை வெச்சிரக்கூடாது’ என்று காடர்கள் அணி வேண்டிக் கொண்டது. அதைப் புரிந்து கொண்டதாலோ என்னமோ... லட்சுமிபிரியா முட்டைகளை மட்டும் எடுத்துக்கொண்டார். (லட்சுமிபிரியா மிகவும் புத்திசாலி. அந்த முட்டைகளை வைத்து பல கோழிகளை உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிட்டாரோ என்னமோ!).

இந்தச் சமயத்தில் இன்னொரு ட்விஸ்ட்டை தெரிவித்தார் அர்ஜூன். காடர்கள் அணி, எதிர் அணியில் இருந்து யாராவது ஒருவரைத் தேர்ந்தெடுத்து விருந்தினராக அழைத்துச் செல்லலாமாம். அவர்கள் கூடிப்பேசி ‘நந்தா’வை அழைத்துச் சென்றார்கள்.

“எந்தவொன்றையும் கவனிப்பதில் நந்தா திறமையானவர். எனவே எதிரணியின் ரகசியங்களை (?!) அவர் ஒற்று அறிந்து வருவார்” என்று நந்தாவை ஏதோ இன்டர்நேனஷல் ஸ்பை ரேஞ்சுக்கு சொல்லிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. “ஒரு துண்டு சிக்கனாவது தந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்று ஏக்கத்துடன் நாக்கைச் சப்புக் கொண்டிருந்தார் நாராயணன்.

சர்வைவர் - 18

“நாங்கள் இருக்கிற வேடர்கள் தீவே பரவாயில்லை. அங்கேயாவது பப்பாளி, வாழை, கிழங்குல்லாம் இருக்கு. ஆனா காடர்கள் தீவுல ஒண்ணுமே இல்ல. தென்னை மரம்தான் இருக்கு. அதுவும் ரொம்ப ஹைட்டு. பாவம்... இவிய்ங்க எப்படித்தான் இத்தனை நாள் வாழ்ந்தாங்கன்னே தெரியலை” என்று காடர்களுக்காக இரக்கப்பட்டுக் கொண்டிருந்தார் நந்தா.

‘போன இடத்துல வெறுமனே சோத்தை தின்னுட்டு வந்தா நல்லாயிருக்குமா... நாலு வேலையைச் செஞ்சாதான் நமக்கு மருவாதை’ என்று எண்ணிக் கொண்ட நந்தா, அவர்கள் கோக்குமாக்காக அமைத்து வைத்திருந்த கூடாரத்தை சீர் செய்து தந்தார். சிக்கன் உறிப்பது, மசாலா தடவுவது போன்ற பணிகளிலும் உதவி செய்தார்.

காடர்கள் அணிக்கு, அர்ஜூன் கூடுதல் பரிசு ஒன்றையும் தந்திருந்தார். அதாவது சர்வைவர் கரன்ஸி என்றதொரு சமாச்சாரம் இருக்கிறதாம். அதை வைத்து ‘சர்வைவர் தீவில்’ ஷாப்பிங் செய்யலாமாம். (அது சரி... சிறையிலேயே ஷாப்பிங் வசதி இருக்கும் போது தீவில் இருக்கக்கூடாதா?). காடர்களுக்கு 30 காயின் மதிப்புள்ள நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டிருந்தன.

ஒரு சிறிய பெட்டிக்கடை மாதிரியான செட்அப்பில், ஷாம்பு, சாக்லேட் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. (கேஷியர் யாருமில்லை). தேவைக்கேற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு அதற்குத் தகுந்த நாணயங்களை நாமே நாணயமாக வைத்து விட்டு வர வேண்டுமாம். (சுயஉதவி சூப்பர் மார்க்கெட் போல இருக்கு!). ஷாம்பு போன்ற அநாவசியமான பொருட்களை விட்டு விட்டு சாக்லேட், ஜூஸ் போன்ற உணவுப் பொருட்களை அள்ளிக் கொண்டார்கள்.

சர்வைவர் - 18

உமாபதியை ஓரங்கட்டிய நந்தா அவரிடம் ‘ராமை’ பற்றி பேசிக் கொண்டிருந்தார். “ராம்... மாத்தி மாத்தி பேசறாரு” என்று புகார் சொன்னார் உமாபதி. “உமாபதி அந்த அணிக்கு கிடைத்த பரிசு. திறமையான பையன். ஆனா அவனை நம்ப முடியாது’ என்று பின்னர் கமென்ட்ரி சொன்னார் நந்தா.

பின்னர் ராமையும் ஓரங்கட்டி பேசினார் நந்தா. தான் பாம்பு பார்த்த கதையை நூறாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்தார் ராம். “முதல் சில நாட்கள் இவங்க கூட சரியா பழக முடியலை. அப்புறம் விக்ராந்த் பிரதர் பேசி சரி பண்ணிட்டார். இப்ப ஓகே” என்ற ராமை “அத விடுங்க. அடுத்து உங்களை எலிமினேட் பண்ணா என்ன செய்வீங்க?” என்று நந்தா கேட்க, ‘என்ன பண்றது? அப்படியே போற போக்குல போக வேண்டியதுதான். இன்னிக்கு சிக்கன் கிடைக்குதா. அதைப் பார்ப்போம்” என்பது மாதிரி ‘தலைவிதியே’ என்று ராம் பேச “இவன் தேற மாட்டான் போல. அடுத்த பாயாசத்தை இவனுக்குத்தான் போடுவாங்க” என்பது போல் நந்தாவின் முகம் மாறியது.

உமாபதி வாழை இலையை பறித்து வர, சிக்கன் ரைஸ், ஜூஸ் என்று காடர்கள் அணி விருந்தைக் கொண்டாடியது. ‘மூன்றாம் உலகத்தில் பார்வதியக்கா என்னென்ன சிரமப்படுகிறார்’ என்பதைக் காட்டாமலேயே நேற்றைய எபிசோடை முடித்து விட்ட சர்வைவர் டீமின் மெத்தனப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இது இன்டர்நேஷனல் ஏரியா மேட்டர் என்பதால் ஐநா சபை இதில் உடனடியாக தலையிட்டு பார்வதியின் பாதுகாப்பை உடனே உறுதி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். செய்வாங்களா?!

பார்த்துடுவோம்!


from விகடன்

Comments