EXCLUSIVE : இந்தியன் -2 | ஷங்கர் - லைகா பிரச்னை தீர்ந்தது... லீலா பேலஸ் ரகசிய சந்திப்பில் சமாதானம்!

கமல்ஹாசன் நடிக்க, ஷங்கர் இயக்கும் 'இந்தியன் - 2' படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவந்தது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்தநிலையில் 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் 'இந்தியன் -2' பெரும் பிரச்னையை சந்தித்தது.

ஈவிபி-யில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற விபத்தில் மிகப்பெரிய விபத்து நடக்க இதில் மூன்று பேர் உயிரிழந்தார்கள். இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம், இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் என மூவருக்கும் இடையே பிரச்னை உருவானது. அத்தோடு ஷங்கர் பட்ஜெட்டை மீறிப்போவதாக குற்றம்சாட்டியது லைகா நிறுவனம். இதனால் பிரச்னை பெரிதானது.

இந்தியன் 2

லைகா நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட லைகா நிறுவனமும் எதிர் அறிக்கை வெளியிட்டது. இதனால் 'இந்தியன் -2' படப்பிடிப்பு மீண்டும் தொடங்காது என்றே சொல்லப்பட்ட நிலையில் லைகா நிறுவனம் கமல்ஹாசனோடு சாமாதானம் பேசியது. இதில் கமல் ''எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்கள் ஷங்கர் பிரச்னையை முடித்துவிட்டு வந்தால் நான் ரெடி'' என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையே ஷங்கர் ராம் சரண் நடிக்க தெலுங்கு படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பை வெளியிட லைகா நிறுவனம் இந்தப் படத்துக்கு தடைகோரியும், 'இந்தியன் -2' படத்தை முடித்தப்பிறகுதான் ஷங்கர் அடுத்தப்படத்தை இயக்கவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இருதரப்பும் மாறி மாறி நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்துவந்த நிலையில் இப்போது நீதிமன்றத்துக்கு வெளியே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் முகாமிட்டிருக்கும் லைகா நிறுவனர் சுபாஷ்கரன் பெங்களூருவில் இருந்து நேற்று சென்னை வந்தார். நேற்று இரவு சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் சுபாஷ்கரன் மற்றும் அவரது மனைவி, ஷங்கர் மற்றும் அவரது மனைவி என நான்கு பேர் மட்டுமே சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

இந்தியன் -2

இருதரப்புமே 'இந்தியன் -2' படம் தொடர்பாக மனம் விட்டுப் பேச இருதரப்புக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதன்படி தெலுங்கு படம் முடிந்ததும் 'இந்தியன் -2' படத்தின் மீதி படப்பிடிப்பை தொடங்குகிறார் ஷங்கர். இதற்குள் கமல்ஹாசனும் 'விக்ரம்' படத்தை முடித்துவிட்டு வருவார் என்று சொல்லியிருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் தொடர்ந்திருக்கும் வழக்கை நாளை வாபஸ் வாங்குவதாக இருக்கிறார்கள்.

ஆக... 'இந்தியன் -2' பஞ்சாயத்து ஓவர்!



from விகடன்

Comments