EXCLUSIVE : மணிரத்னம் டு வெற்றிமாறன்…12 இயக்குநர்கள் கூட்டணியும், RainOn நிறுவனமும் உருவானது எப்படி?
தமிழ் சினிமா வரலாற்றிலேயே புது முயற்சியாக 12 இயக்குநர்கள் ஒன்றிணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கும் செய்தி எல்லா தரப்பிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், சசி, லிங்குசாமி, கெளதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் என மொத்தம் 12 இயக்குநர்கள் இணைந்து Rain on films என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக லாக்டெளன் அமல்படுத்தப்பட்டபோது இயக்குநர் ஷங்கரும், லிங்குசாமியும்தான் இந்த இயக்குநர்கள் இணைப்பு முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள். முதலில் ஸூம் வழியே ஆன்லைனில் இணைந்துபேச ஆரம்பித்தவர்கள் லாக்டெளன் முடிந்தபின்னர் நேரிலும் சந்தித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இயக்குநர் மிஷ்கின் அலுவலகம், லிங்குசாமி அலுவலகம், ஷங்கர் அலுவலகம் என மாறி மாறி பல இயக்குநர்களின் அலுவலகங்களில் மீட்டிங் நடந்திருக்கிறது. இந்த தொடர் சந்திப்புகளில்தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் rain on films என்கிற பெயரில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் இயக்குநர்களாக இயக்குநர் மணிரத்னமும், ஷங்கரும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது.
ஏன் தயாரிப்பு நிறுவனத்துக்கு Rain on எனப் பெயர்வைக்கப்பட்டிருக்கிறது என விசாரித்தோம். ‘’கடவுளுக்கு அடுத்து மழை பெய்ய வைக்கும் வல்லமை இயக்குநருக்குத்தான் இருக்கிறது. இயக்குநர் rain on என்று சொன்னால் மழை வரும். அதனால்தான் இந்தப் பெயர்’’ என்கிறார்கள்.
இந்த நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு இயக்குநருக்கும் அவரவர் சிக்னேச்சர் ஸ்டைலில் போட்டோ/வீடியோ ஷூட் செய்திருக்கிறார்கள். அதாவது கெளதம் மேனன் என்றால் அவரது சிக்னேச்சர் ஸ்டைலாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கேட் சீனைவைத்து கெளதமை ஷூட் செய்திருக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறனுக்கு ‘வடசென்னை’ கப்பல் சீன் சிக்னேச்சர் ஸ்டைலாக வைக்கப்பட்டிருக்கிறது. அதேப்போல் இயக்குநர் லிங்குசாமிக்கு ‘ரன்’ படத்தின் சப்வே ஷட்டர் காட்சி சிக்னேச்சர் ஸ்டைல். பாலாஜி சக்திவேலுக்கு ‘காதல்’ பட நினைவாக மெக்கானிக் ஷெட்டில் இருப்பதுபோன்ற சிக்னேச்சர் ஸ்டைலில் ஷூட் எடுக்கப்பட்டிருக்கிறது.
முதல் படத்தை யார் இயக்குவது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முதல் கட்டமாக லோகேஷ், ஷங்கர், வெற்றிமாறன், சசி ஆகியோரின் பெயர்கள் இந்த நிறுவனத்துக்காக படம் இயக்கும் லிஸ்ட்டில் இருக்கிறது. இதில் ஷங்கர், வெற்றிமாறன் ஆகியோர் ஏகப்பட்ட ப்ராஜெக்ட்களில் பிஸியாக இருப்பதால் லோகேஷ் அல்லது சசி முதல் படத்தை இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயக்குநர்கள் லிஸ்ட்டில் இல்லாமல் ‘சில்லுகருப்பட்டி’, ‘ஏலேய்’ படங்களை இயக்கிய ஹலிதா ஷமீமின் பெயரும் படம் இயக்கும் லிஸ்ட்டில் இருக்கிறது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்!
from விகடன்
Comments