முட்டை ஓடு, மீன் முள், கோழி பாதம்... மாஸ்டர் செஃப்-ல் கலவர, ரணகள சமையல் ஸ்பெஷல்!

மாஸ்டர் செஃப் தமிழ் ஏழாவது எபிசோடில் போட்டியாளர்கள் ஒரு சிறப்பான ஏழரையைச் சந்தித்தார்கள். ஆம், அவர்கள் சமைப்பதற்கு அளிக்கப்பட்ட பொருட்களின் லிஸ்ட் அத்தனை ரணகளமாக இருந்தது. என்னவென்று பார்ப்போமா? சற்று மூச்சை இறுக்கப் பிடித்துக் கொள்ளுங்கள்.

முதல் அயிட்டம் கோழிக்கால். “ஹே… ஹே... இதுல என்ன ரணகளம்? நான் பிரியாணியை எப்போதுமே லெக்பீஸ் இல்லாம சாப்பிட மாட்டேன்” என்கிறீர்களா? இது அந்த லெக்பீஸ் இல்லை. கோழியை சுத்தம் செய்யும் போது வேண்டாம் என்று தூக்கிப் போடும் கோழியின் பாதங்கள் இருக்கின்றன அல்லவா? அதை வைத்துதான் சமைக்க வேண்டும். நிற்க... இத்தோடு முடியவில்லை. இந்த ரணகள லிஸ்ட்டில் இருக்கும் இதர அயிட்டங்களையும் பார்த்து விடுவோம்.

மீன்முள், முட்டை ஓடு, பட்டாணி தோல், சோளத்தின் தண்டு மற்றும் தோல், வேக வைத்த கொண்டைக்கடலையின் தண்ணீர், வாழைப்பழத் தோல், தர்பூசணி தோல் மற்றும் பலா கொட்டை.

அதாவது சமையல் அறையில் நாம் பொருட்களை சுத்தம் செய்து விட்டு எவையெல்லாம் கழிவுகள் என்று குப்பைக்கூடையில் போடுகிறோமோ, அவற்றை வைத்து போட்டியாளர்கள் சமைக்க வேண்டும் என்பதுதான் நேற்றைய சவால்.

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப் தமிழ்

‘’சேதாரத்தை ஆதாரமாக வைத்து சமைக்கப் போகிறீர்கள்... அதாவது வேஸ்ட் ஆன பொருட்களை ‘டேஸ்ட்’ ஆக மாற்றப் போகிறீர்கள்” என்று விஜய் சேதுபதி ரைமிங்கில் பின்னிக் கொண்டிருந்தார். (யாருப்பா... ஸ்கிரிப்ட் எழுதினது?!). அந்த ரைமிங்கில் நானும் ஒன்றை இணைக்க முயற்சி செய்கிறேன். ‘’சோறு மிகுதியாகப் போனால் மறுநாள் ‘பழையது’ என்று சாப்பிடலாம். ஆனால் ‘பழையதையே’ எப்படி மறுபடியும் சோறாக மாற்ற முடியும்?! (ஆச்சரியக்குறி).

ஆக... சமையல் பொருட்களின் கழிவுகளையும் வைத்து சமைக்க முடியும் என்கிற ஆச்சரியத்தை அடைய முடிந்தது. மேலே குறிப்பிட்ட ரணகள பட்டியலில் முதல் மூன்று அயிட்டங்களை வைத்து ஸ்டார்ட்டர், அடுத்த மூன்று அயிட்டங்களை வைத்து மெயின் கோர்ஸ், அதற்கு அடுத்த அயிட்டங்களை வைத்து டெஸர்ட் ஆகிய உணவு வகைகளை போட்டியாளர்கள் சமைக்க வேண்டும் என்பதுதான் ஏழாவது எபிசோடின் டாஸ்க்.

நிகழ்ச்சி தொடங்கிபோது அரங்கமே காலியாக இருந்தது. ‘யாரையும் காணோமே’ என்று தானே வசனம் பேசிய படி தூர்தர்ஷன் டிராமா பாணியில் உள்ளே நுழைந்தார் விஜய் சேதுபதி. முன்பே சொன்னதுதான். அவரை நன்றாக பட்டினி போட்டுத்தான் இந்த ஷோவுக்குள் அழைத்து வருவார்கள் போலிருக்கிறது.

மனிதர் செட்டுக்குள் நுழைந்ததுமே, ''யாரையும் காணோம்... பசிக்குதே'' என்றபடி உணவுப்பொருட்கள் அடுக்கி வைத்திருக்கும் pantry அறைக்குள் சென்று ஒரு வாழைப்பழத்தை தின்றபடி வெளியே வர, அங்கு நீதிபதிகள் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். “விஜய்... தோலை கீழே போட்டுடாதீங்க” என்று அவர்கள் சொல்ல, வாழைப்பழத் தோலை ஓர் அலங்காரப் பொருள் போல கோட் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டார் விசே.

ஆக... வாழைப்பழத் தோல் போன்ற, சமையல் அறையில் வேண்டாம் என்று நாம் தூக்கிப் போடும் அயிட்டங்களை வைத்துதான் இன்றைய போட்டி அமையப் போகிறது என்பதை தொடக்கத்திலேயே சிம்பாலிக்காக சொல்லிவிட்டார்கள்.

விஜய் சேதுபதியின் கோட் பாக்கெட்டில் இருந்த வா.ப. தோலை உள்ளூற பீதியுடன் பார்த்தபடி ஆனால் வெளியில் சிரித்த முகத்துடன் போட்டியாளர்கள் உள்ளே வந்தார்கள்.

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப் தமிழ்

“இதுவரைக்கும் நீங்க சந்தித்ததெல்லாம் சாதாரணம்... போட்டி இனிமேத்தான் கடுமையாகப் போகுது” என்று டெரரான குரலில் கெளஷிக் சொன்னார். (இவர் சாதாரணமா பேசினாலே அப்படித்தான் இருக்கு!).

இங்கு இடைமறித்த விசே, “அப்படின்னா.. இதுவரைக்கும் செஞ்சது ஈஸியான போட்டியாவா இருந்தது... சொல்லுங்க மக்களே” என்று போட்டியாளர்களை நோக்கி கேட்க சிலர் மட்டும் ‘ஆமாம்’ என்று சொன்னார்கள். இந்த ‘ஆமாம்’ கோஷ்டியில் மணிகண்டனும் இருந்தது ஆச்சரியம். இவர் தகுதிச் சுற்றில் தோல்வியுற்று விசேவின் பரிந்துரையின் பேரில் போட்டிக்குள் வந்தவர். மட்டுமல்ல விசேவின் செல்லப் பிள்ளையும் கூட.

எனவே இவரது மிதமிஞ்சிய தன்னம்பிக்கையை சற்று ஜாலியாக உடைக்கும் வகையில் ‘என்ன மணிகண்டா... அவ்ளோ ஈஸியாவா இருந்தது?” என்று விஜய் சேதுபதி கலாய்க்க.. ‘ஆமாம் சார்... இல்லை சார்’ என்று தடுமாறினார் மணிகண்டன்.

“யாருக்கெல்லாம் லக் மேல நம்பிக்கையிருக்குது?” என்று சூசகமான கேள்வியை அடுத்ததாக நீதிபதிகள் கேட்க, இதற்கும் கலந்து கட்டி போட்டியாளர்கள் பதில் சொன்னார்கள். சான்ட்டா கிளாஸ் மாதிரி தோளில் சாய்த்திருந்த மூட்டையுடன் விசே வர, அந்த மூட்டையில் இருக்கும் ஒரு ஏப்ரனை ஒவ்வொரு போட்டியாளரும் கண்ணை மூடிக் கொண்டு எடுக்க வேண்டும்.

நீலம், மஞ்சள், சிவப்பு என்று மூன்று நிறங்களில் இருந்த ஏப்ரனை, 12 போட்டியாளர்களும் தற்செயல் தேர்வில் எடுத்து முடிந்த பின்னால் நிறத்தின் அடிப்படையில் அணிகளாக பிரிந்து நின்றார்கள். இதில் கிருதாஜிற்கு அந்த பாழாய்ப் போன சிவப்பு நிறம் இந்த வாரமும் வந்து தொலைத்தது. என்றாலும் மனிதர் தன்னம்பிக்கையுடன் இருந்தார்.

ஆக நிறத்தின் அடிப்படையில் அணியாகப் பிரியப் போகிறோம் போல என்று போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடையும் போது, புது விதியை அறிவித்து அதில் வெந்நீரை ஊற்றினார் விசே.

ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு தோதான சக போட்டியாளரை அவரே தேர்ந்தெடுக்கலாம். ஆனால், ஜாதகம் பொருந்தியிருக்க வேண்டும் என்பது போல, கலர் மேட்ச் இதில் முக்கியம். தான் அணிந்திருக்கும் அதே நிற ஏப்ரன் அணிந்திருப்பவரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். ஒவ்வொரு கலர் டீமும் கூடி ஆலோசித்து இங்கி பிங்கி பாங்கி போட்டு தங்களின் டீம்மேட்டை தேர்ந்தெடுத்து ஜோடிகளாக மாறினார்கள்.

இதற்குப் பிறகுதான் ‘எதை வைத்து சமைக்க வேண்டும்?’ என்கிற விஷயம் அவர்களுக்கு சொல்லப்பட்டது. ‘அய்யோ கடவுளே... என்று ஒவ்வொருவரும் முகம் மாறினாலும் உடனே சுதாரித்துக் கொண்டு ‘நீ அடுத்து ரசத்தை ஊத்து... அதுல பூனை கிடக்குதா பார்க்கலாம்’ என்கிற மோடிற்கு மாறி சுறுசுறுப்பானார்கள்.

இதற்குத் தரப்பட்டிருந்த நேரம் 60 நிமிடங்கள். உணவு கிடங்கிற்குள் சென்று சமையல் பொருட்களை தேர்ந்தெடுத்து எடுத்து வர ஐந்து நிமிடம்.

சமைப்பதற்கான பொருட்கள் எடுத்து வரப்படுவதற்குள் கோழி பாதங்களை நெருப்பில் காட்டி சமையல் பூஜையை, அதாவது பாத பூஜையை மங்கலகரமாக ஆரம்பித்து விட்டார் கிருதாஜ். நீதிபதிகள் சொன்ன ‘டெரரரான’ அயிட்டங்களைத் தாண்டி வெங்காய தோலைக் கூட சமையலில் பயன்படுத்த முடியும் என்று சொல்லி நீதிபதிகளையே கலவரமூட்டினார் போட்டியாளர் ஆர்த்தி. (இதையெல்லாம் பல வீட்டம்மணிகள் தொலைக்காட்சியில் பார்த்து ‘நோட்ஸ்’ எடுத்துக் கொண்டிருப்பார்களே என்று நமக்குத்தான் பயமாக இருக்கிறது.)

விஜய் சேதுபதி - மாஸ்டர் செஃப் தமிழ்

“மக்களே நல்லா கேட்டுக்கங்க... இதை வெச்சுல்லாம் சமைக்கலாம்-ன்றதே எனக்கு இன்னைக்குத்தான் தெரியும். உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே நீதிபதிகள் சாப்பிட்ட பிறகுதான் நான் சாப்பிடுவேன்” என்று இன்னொரு பக்கம் ஜாலியாக அலப்பறை தந்து கொண்டிருந்தார் விஜய் சேதுபதி.

“மத்த டீம்லாம் சுனாமி மாதிரி அலைபாய்ஞ்சிட்டு இருக்காங்க. நித்யா இருக்குற டீம் மட்டும் அமைதியா நதி மாதிரி ஓடுது. அப்படி கூலா, நிதானமா சமைக்கறாங்க” என்று நித்யாவுக்கு விசே சான்றிதழ் தந்து கொண்டிருக்க, அதை புன்னகையுடன் நீதிபதிகள் ஆமோதித்தார்கள்.

விசே சொன்ன வாய் முகூர்த்தம், நித்யா டீமில் சிறிய கலவரம் வெடித்தது. நித்யாவின் டீம்மேட் சுனிதா வேகவைத்த பலாக்கொட்டை தீய்ந்து விட, ‘’அய்யோ... நாலு நிமிஷம்தான் அடுப்புல வெச்சேன்’’ என்று அவர் பதறினார்.

தன் கோட் பாக்கெட்டில் வைத்திருந்த வாழைப்பழத் தோலை, தன் செல்லப்பிள்ளையான மணிகண்டனுக்கு அன்பளிப்பாக வழங்கிய விசே “இதையும் மறக்காம சமையல்ல யூஸ் பண்ணணும்” என்று கட்டளையிட, சங்கடமான புன்னகையுடன் அதை பெற்றுக் கொண்டார் மணிகண்டன்.

சமையல் முடியும் போது அடுப்பங்கரையை சசியம்மாள் சுத்தமாக துடைத்து வைத்த காட்சியைப் பார்க்க அத்தனை நன்றாக இருந்தது. சமையலை சுத்தமாக செய்வது எத்தனை முக்கியமோ, அதேயளவுக்கு சமையல் மேடையை சுத்தமாக வைப்பதுவும் இந்தக் கலையின் ஒரு முக்கியமான அம்சம்.

போட்டியாளர்கள் தங்களின் மெனுவுக்கு சூட்டியிருந்த பெயர்கள் ஒவ்வொன்றும் ரணகளமாக இருந்தன. என்னவென்று பார்ப்போமா?

ஸ்டார்ட்டர் வரிசையில் முதல் டீம் வந்தது. கிருதாஜ் மற்றும் தேவகி அணி செய்திருந்த மெனுவின் பெயர் ‘தீப்பொறி சிக்கன்’. “தீப்பொறி ஆறுமுகம் மாதிரியா?” என்று கிண்டலடித்தார் விசே. ‘ஸ்பைஸியா இல்லையே” என்று நெகட்டிவ் கமென்ட்டை வழங்கினார் செஃப் ஆர்த்தி. (சிவப்பு கலர் ராசி நல்லா வேலை செய்யுது!).

இவர்களுடன் போட்டியிட்ட ஷாஜியா – ஆர்த்தி உருவாக்கியிருந்த மெனுவின் பெயர் ‘தாய் பொரிச்ச கோழி’. “பாங்காங் ஸ்ட்ரீட் ஃபுட்’ சாப்பிட்ட ஃபீல் வருது. நல்லா செஞ்சிருக்கீங்க” என்று நீதிபதிகள் பாராட்டு வழங்க இருவரின் முகங்களிலும் புன்னகை. ‘’முட்டை ஓட்டை வைத்து நீங்க செஞ்சிருந்த விதமும் சூப்பர்’’ என்று பாராட்டு குவிய, இந்த அணிதான் வெற்றி பெற்று பால்கனிக்குச் செல்லப் போகிறார்கள் என்பது அப்போதே தெரிந்து விட்டது. (பாவம் கிருதாஜ்).

மாஸ்டர் செஃப் தமிழ்

''எலும்பு, முள் போன்றவற்றை வைத்து சமைக்கும் போது அதன் கூர்மையான நுனிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். சாப்பிடுபவர்களுக்கு அதனால் ஆபத்து ஏற்படலாம்’ என்று மருத்துவ டிப்ஸ் தந்தார் செஃப் ஹரீஷ் ராவ்.

அடுத்தது மெயின் கோர்ஸ்!

முதலில் வந்த சுமித்ரா – சசியம்மாள் டீம் செய்து வந்திருந்த மெனுவின் பெயர் ‘வேஸ்ட்டா இந்த தமாலி?’. அதாவது நாங்க செஞ்சதை வேஸ்ட்டுன்னு நீங்க சொல்லிடுவீங்களா பார்க்கலாம் என்று சவால் விடுவது போல் கேள்விக்குறியுடன் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ஆனால் இவர்களுடன் போட்டியிட்ட கிருத்திகா – நவ்ஸீன் அணிதான் நீதிபதிகளைக் கவர்ந்தார்கள். இவர்கள் செய்த அயிட்டத்தின் பெயர் “வேற லெவல் வேஸ்ட்”. (கவித கவித...) மீன் முள்ளோ. முட்டை ஓடோ... எதை சமைத்துக் கொண்டு வந்தாலும் ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிடும் விசே, இதையும் ‘‘சிறப்பு... உண்மையிலேயே வேற லெவல்’’ என்று அவர்களைப் பாராட்டினார்.

தாங்கள் பின்தங்கியதில் சசியம்மாளுக்கு வருத்தம். சசியின் முகம் வாடிப் போயிற்று. தன்னால் தன்னுடைய டீம்மேட்டுக்கு பின்னடைவு ஏற்பட்டு விட்டதே என்பதுதான் அவரின் சோகத்திற்கு காரணம்.

மெயின் கோர்ஸ் உணவை அடுத்து டெஸர்ட்!

‘மிச்சம் அமிர்தம்’ என்கிற அட்டகாசமான பெயரைச் சூட்டியிருந்தார்கள் மணியும் வின்னியும். “பலாக்கொட்டையை வைத்து இப்படி ஸ்வீட்டா பண்ண முடியும்னு இப்பத்தான் பார்க்கறேன்” என்று செஃப் கெளஷிக்கே பாராட்ட, வின்னியும் மணியும் உற்சாகத்தின் எல்லைக்கு சென்றார்கள். இவர்கள் தட்டில் அலங்காரம் செய்திருந்த விதமும் அத்தனை வசீகரமானதாக இருந்தது. ‘‘பலாக்கொட்டையை முதன்முறையா ஸ்வீட் வடிவில் சாப்பிடறேன். சிறப்பு” என்று விசேவும் சான்றிதழ் வழங்கினார்.

மாஸ்டர் செஃப் தமிழ்

இந்த அணி செய்திருந்த டெஸர்ட்டில் அல்வா செய்தது மட்டுமே மணிகண்டனின் பங்கு. இதர விஷயங்களை வின்னி கவனித்துக் கொண்டார். “அல்வா பிரமாதம்தான். ஆனா என்ன மணி... உங்களுக்கு அல்வா மட்டும்தான் செய்யத் தெரியுமா” என்று கெளஷிக் செல்லமாக கடுகடுத்தார்.

“நான் கொடுத்த வாழைப்பழத் தோலை யூஸ் பண்ணீங்களா... இல்லையா?” என்று தன் பங்கிற்கு விசேவும் ஜாலியாக கலாய்க்க, மணிகண்டனுக்கு அப்போதே வியர்க்க ஆரம்பித்தது.

“என்னா மணி... உங்க பார்ட்னரை பால்கனிக்கு அனுப்பிச்சிட்டு நீங்க தியாகம் பண்ண ரெடியா இருந்தீங்களாமே. உண்மையா?’’ என்று தன் அலப்பறையை விசே தொடர, அதற்கு உளறி, கிளறிக் கொட்டினார் மணிகண்டன். “இந்த தியாக டிராமால்லாம் இங்க கூடாது. சரியா?” என்பது போல் கலாய்த்தார் விஜய் சேதுபதி.


இவர்களுடன் போட்டியிட்ட இன்னொரு அணியான ‘நித்யா மற்றும் சுனிதா’ தயாரித்திருந்த மெனுவின் பெயர் ‘Flavour taste from waste’ (இங்லீஷ் கவித). இதுவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், சுவை என்கிற நோக்கில் மணி-வின்னி டீம் செய்திருந்த டெஸர்ட், நன்றாக இருந்ததாக கமென்ட் வந்தது.

இந்த இரண்டு அணிகளுக்குள்ளும் கடுமையான போட்டி நிகழ்ந்தாலும் மணிகண்டன் கிண்டிய அல்வாவே வெற்றி பெற்றது. தங்கள் அணி வெற்றி பெற்றதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய மணிகண்டன், “அண்ணே... உங்களை ஹக் பண்ணிக்கட்டுமா... 26 வாரமும் உங்களை அணைச்சிக்கிட்டாதான் எனக்கு பாசிட்டிவ் எனர்ஜி வரும்” என்று விசேவிடம் சென்ட்டிமென்டைப் பொழிய ‘’அத்தனை வாரம்லாம் உன்னை வெச்சிருக்கமாட்டேன். கவலைப்படாதே. சீக்கிரம் அனுப்பிச்சிருவோம்” என்று ஜாலியாக வாழ்த்தி அனுப்பினார் விசே.

மொத்த அணிகளும் செய்ததில், சிறப்பான மெனுவாக ‘மிச்சம் அமிர்தம்’ தேர்வு செய்யப்பட, மணிக்கும் வின்னிக்கும் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது. தங்கள் அணி தோற்றதில் நித்யாவின் முகத்தில் வருத்தம் அப்பட்டமாகத் தென்பட்டது.


ஆக... மொத்தமிருந்த ஆறு ஜோடிகளில், மூன்று ஜோடிகள் வெற்றி பெற்று பால்கனிக்குச் சென்று விட மீதமுள்ள மூன்று ஜோடிகள், அடுத்த எபிசோடில் தரப்படும் சவாலை சந்திக்க வேண்டும்.

இன்றைக்கே முட்டை ஓடு, மீன்முள், கோழி பாதம் என்று ஒவ்வொரு அயிட்டமும் டெரராக இருந்தது. அடுத்தது என்ன தரப்போகிறார்களோ.. என்பதை நினைத்தால் இப்போதே கலவரமாக இருக்கிறது!



from விகடன்

Comments