மறைந்த தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகனும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.தமிழரசுவின் திருமண மண்டபம் மற்றும் பைக் டீலர்ஷிப் திறப்பு விழா இன்று காலை சென்னை கேளம்பாக்கத்தில் நடந்தது. கருணாநிதியின் வாரிசாக இருந்தாலும் அரசியலைவிட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருப்பவர் மு.க.தமிழரசு. இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஹீரோ மற்றும் ஹோண்டா பைக் டீலராக இருந்து சென்னையில் பல ஷோரூம்களையும், கூடவே திருமண மண்டபங்களையும் நடந்திவருகிறார். தமிழரசுவின் மகன்தான் நடிகர் அருள்நிதி.
கேளம்பாக்கத்தில் தமிழரசுவுக்கு சொந்தமான மோகனா மஹால் மற்றும் மோகனா ஹீரோ ஷோரூம் இரண்டையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க, துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவின் மூத்தத்த தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், செல்வி செல்வம், மு.க.அழகிரி குடும்பத்தினர் மறைந்த முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலரும் இந்த தொடக்கவிழாவில் கலந்துகொண்டனர்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்து திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதலே முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் அழகிரியை நேருக்கு நேர் சந்திப்பாரா என்கிற எதிர்பார்ப்பு திமுக தொண்டர்களிடையே இருந்து வந்த நிலையில் இந்த குடும்ப நிகழ்ச்சி மிக முக்கியமான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. முதலமைச்சராகப் பதவி ஏற்றது முதல் இதுவரை தன் அண்ணன் அழகிரியை ஸ்டாலின் சந்திக்கவில்லை. ஸ்டாலின் மதுரை சென்ற போதும் இவர்களின் சந்திப்பு நிகழவில்லை. அதனால் இன்றைய நிகழ்வில் ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அழகிரியும் தனது குடும்பத்துடன் நிகழ்ச்சிக்கு வந்தார். ஆனால், அவர் வருவதற்கு முன்பாகவே மண்டபத்தைத் திறந்து வைத்து விட்டுத் தனது பரிவாரங்களுடன் கிளம்பி விட்டார் முதல்வர் ஸ்டாலின். அதனால் இன்றும் ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு நிகழவில்லை.
திமுக தலைமையின் அடுத்த குடும்ப நிகழ்ச்சியாக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்தி திருமண வரவேற்பு விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலாவது ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு நடக்குமா எனக் காத்திருக்கின்றனர் உடன்பிறப்புகள்.
from விகடன்
Comments