தமிழ்த் தொலைக்காட்சியில் இந்த அளவிற்கு யாராலும் டிரெண்ட் ஆகியிருக்க முடியாதுப்பா என்ற அளவிற்கு ட்ரெண்டிங்கில் தவறாமல் இடம்பிடிக்கும் தொடர் 'பாரதி கண்ணம்மா'. இந்தத் தொடருக்கு எப்படி ரசிகர்கள் அதிகமோ அதே அளவிற்கு இந்த சீரியலை வைத்து மீம் கிரியேட் செய்பவர்களும் ஏராளம்.
இந்தத் தொடரில் 'அகில்' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த அகிலன் தற்போது அந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கிறார். நாளை ஒளிபரப்பாக இருக்கும் தொடரில் அகிலுக்குப் பதிலாக வேறு ஒருவர் நடிக்கிறார். இந்த விலகல் குறித்து அகிலனிடம் பேசினோம்.
"சினிமாவில் நடிக்கணுங்குறதுதான் என்னுடைய ஆசை. அதுக்காகத்தான் இந்தத் துறைக்குள் நுழைந்தேன். மாடலிங், ஷார்ட் ஃபிலிம்னு பண்ணிட்டு இருக்கும்போதுதான் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. 'பாரதி கண்ணம்மா' வில் நடிக்க ஆரம்பிச்சு கிட்டத்தட்ட இரண்டு வருஷத்துக்கும் மேல ஆச்சு. சீரியலில் நடிச்சிட்டு இருக்கும்போது சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. தொடர்ந்து சினிமா ஷூட்டிங் இருக்கிறதனால என்னால சீரியலுக்கு சரியா தேதிகள் ஒதுக்க முடியலை. அதுனாலதான் வேற வழியில்லாம சீரியலில் இருந்து விலகிட்டேன்.
'பாரதி கண்ணம்மா' எனக்கு ரொம்ப ஃபேவரைட். அங்கே நாங்க எல்லோரும் ஒரு பேமிலி மாதிரி. நிச்சயம் அந்த டீமை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். நான் இந்த சீரியலுக்குள்ளே நுழையும்போது எனக்கு எல்லாமே புதுசு. அங்கே நான், அருண், ஸ்வீட்டி, ரோஷிணி, ஃபரீனா எல்லோருமே நண்பர்கள். காலேஜ் டைம்ல ஃப்ரெண்ட்ஸ்கூட எப்படி இருப்போமோ அப்படித்தான் செட்ல இருப்போம். அருணும், ஸ்வீட்டியும் என்னை ரொம்பவே நல்லா பார்த்துப்பாங்க. எனக்கு ஏதாச்சும்னா முதல் ஆளா எனக்கு சப்போர்ட்டா வந்து நிப்பாங்க. உண்மையாவே அவங்க எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்றேன்.
செட்ல வைச்சு யார்கிட்டேயும் நான் போறேங்குறதை சொல்லலை. எல்லோருக்கும் தெரிய வரவும் எல்லோரும் பயங்கர ஷாக் ஆகிட்டாங்க. எனக்கு ஃபோன் பண்ணி ஒவ்வொருத்தரும் ரொம்ப எமோஷனலா பேசுனாங்க. அருணும், நானும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். சீரியலில் எப்படி அண்ணன், தம்பியோ நிஜத்திலும் அந்த நெருக்கம் எங்களுக்குள்ளே இருந்துச்சு. நான் போறேன்னு தெரிஞ்சதும் அருண் ரொம்ப நேரம் போன்ல எமோஷனால பேசுனான். அந்த மொமண்ட் எனக்கு நெகிழ்வான தருணமா இருந்துச்சு.
Also Read: `குக்கு வித் கோமாளி' கனி டு சரவணன் மீனாட்சி ரச்சிதா… பிக்பாஸ் சீசன் - 5 போட்டியாளர்கள் யார், யார்?!
ஹீரோவை மட்டும்தான் மக்கள் அங்கீகரிப்பாங்கன்னுலாம் இல்லை. 100% உழைப்பை கொடுத்தால் அது எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி மக்கள் கொண்டாடுவாங்கன்னு நான் புரிஞ்சுகிட்டேன். நான் அந்தத் தொடரில் நடிச்சப்போகூட என் மேல இவ்வளவு அன்பைக் கொட்டுறதுக்கு ரசிகர்கள் இருக்காங்கன்னு எனக்கு தெரியலை. ஆனா, இப்போ சீரியலில் இருந்து விலகிய பிறகு அத்தனை லவ்வை மக்கள் எனக்கு கொடுக்கிறாங்க.
இப்போ 'வீரமே வாகை சூடும்' (விஷால் 31), 'பீட்சா 3', 'பகீரா' போன்ற படங்களில் நடிச்சிருக்கேன். ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிச்சிட்டு இருக்கேன். இதுவரை என் ரசிகர்களை சந்திக்க அவங்க வீட்டுக்கு போயிட்டு இருந்தேன். இனி அவங்க என்னை சந்திக்க தியேட்டருக்கு வருவாங்கன்னு நம்புறேன்."
from விகடன்
Comments