அரவணைக்கும் விஜய் சேதுபதி, அழவைக்கும் நடுவர்கள்… ‘மாஸ்டர் செஃப்’ல் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்?

சமையல் அறை பக்கம் அதிகம் சென்றிராதவர்களுக்கு பல பொருட்களுக்கு வித்தியாசம் தெரியாது. பச்சரிசிக்கும் புழுங்கலரிசிக்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுபவர் பலர். சீரகமும் சோம்பும் ஒன்று என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். உடைத்த கடலை என்று நினைத்துக் கொண்டு கடலைப்பருப்பை வாயில் போட்டு மென்று பல்லை உடைத்துக் கொண்டவர்கள் அதிகம்.

இதெல்லாம் சிக்கன் பக்கம்... ச்சே…. கிச்சன் பக்கம் அதிகம் சென்றிராதவர்களுக்கானது. ஆனால் மாஸ்டர் செஃப் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் என்றால் அவர்கள் ஆதாரமான பல விஷயங்களில் கரை கண்டிருப்பார்கள். ஆனால் அவர்களையே தடுமாற வைக்கும் வகையில் போட்டி இன்று அமைந்தது.

ஆம், சமையல் மூலப் பொருட்களை சரியாக அடையாளம் கண்டுபிடிப்பவர்கள், எலிமினேஷில் இருந்து தப்ப முடியும். அல்லாதவர்களுக்கு ஆபத்து.

என்ன நிகழ்ந்தது?

மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி

நடுவர்களின் முன்னால் பல சிறிய குடுவைகளில் சமையல் மூலப்பொருட்களின் சாம்பிள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. “என்ன சார்... ஒரே வாசனையா இருக்குது?” என்றபடி வந்த விஜய்சேதுபதி, அண்ணாச்சி கடையில் நாம் அரிசியை எடுத்து தன்னிச்சையாக வாயில் போடுவது போல், அதிலிருந்த ஒன்றை எடுத்து வாயில் போட்டு மென்றார். (இதையும் விட்டு வைக்க மாட்டீங்களா விசே?!).

ஏழாவது எபிசோடில் ஆறு ஜோடிகளுக்குள் நிகழ்ந்த போட்டியில் மூன்று ஜோடி வெற்றி பெற்று பால்கனிக்குச் சென்றது. மீதமுள்ள மூன்று ஜோடிகள், அதாவது ஆறு நபர்கள் இன்றைய எலிமினேஷன் சவாலை சந்திக்க வேண்டும்.

ஆறு நபர்களையும் போலீஸ் பரேட் போல் நிற்க வைத்த நீதிபதிகள், எலிமினேஷில் இருந்து தப்பிப்பதற்கான முதல் சுற்றை மங்கலகரமாக ஆரம்பித்து வைத்தார்கள்.

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ingredients-ல் ஒன்றை தேர்ந்தெடுத்து, அது என்ன பொருள் என்பதை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். அவற்றை தொட்டுப் பார்க்கலாம்; முகர்ந்து பார்க்கலாம். ஆனால் சுவைக்கக்கூடாது. ஒருமுறை குடுவையை கையில் தூக்கி விட்டால் அதற்கான விடையை சொல்லியே ஆக வேண்டும்.

இதில் விடையை தவறாக சொல்பவர், எலிமினேஷன் சுற்றை எதிர்கொள்ளக்கூடிய ஆபத்திற்குள் செல்வார். சோதனைச் சுற்று ஆரம்பித்தது.

மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி

நிற்க. பொருட்களைப் பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும்... அவ்வளவுதானே என்று இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏற்கெனவே சொன்னபடி, எப்படி சமையல் அறியாதவர்களுக்கு துவரம் பருப்புக்கும் கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாதோ, அப்படியே செஃப்பிற்கான அடையாளத்தைத் துரத்தும் இந்தப் போட்டியாளர்களுக்கு தெரியாத விஷயங்கள் பல இருக்கக்கூடும்.

மட்டுமல்ல, சில பொருட்கள் தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தி தடுமாற வைத்து விடும். எலிமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டுமே என்கிற பதற்றமும் தவறுகளைச் செய்து வைத்து விடலாம்.

இவற்றைத் தாண்டி, போட்டியாளர்கள் விடையைச் சொல்லும் போது, நீதிபதிகள் வேறு ‘நீங்க சொன்னது சரியா... நல்லாப் பார்த்தீங்களா... யோசிச்சீங்களா,” என்று ரைட் இண்டிகேட்டரைப் போட்டு விடை சொன்னவர்களின் வயிற்றில் ஜாலியாக புளியைக் கரைத்தார்கள்.

போட்டி ஆரம்பித்தது. முதலில் வருபவர்கள், தங்களுக்கு எளிதாக தோன்றும் பொருட்களை தேர்வு செய்யும் வாய்ப்பிருந்தது. அதன்படி முதலில் வந்த தேவகி, ஒரு வஸ்துவை எடுத்து ‘பொட்டுக்கடலை’ என்றார். ஆனால் அது ‘வறுத்த பொட்டுக்கடலை’யாம். (வித்தியாசத்தை கவனித்தீர்களா!) என்றாலும் தேவகி சொன்ன பதில் ஏற்கப்பட்டது.

அடுத்து வந்த நித்யாவுக்கு நட்சத்திர ஹோட்டல் மெனுவெல்லாம் சற்று அத்துப்படி. எனவே ‘தாமரை தண்டு’ என்று சரியான பதிலைச் சொன்னார். (அப்ப… அந்தக் கட்சியோட உறுப்பினராக்கி விட வேண்டியதுதான்).

அடுத்து வந்த சுமித்ரா ‘காடை முட்டை’ என்று சரியாக அடையாளம் காட்டினார். நம்ம ஊர் பாரம்பரிய உணவு வகைகளைச் செய்யும் சசியம்மாள், ‘கருப்பட்டி’யை எளிதாக இனம் கண்டுகொண்டார். ‘மக்கானா’ என்கிற அயிட்டத்தை துல்லியமாக அடையாளம் காட்டினார் கிருதாஜ். ‘சுண்டைக்காய்’ என்று சரியான பதிலைச் சொன்னார் சுனிதா.

ஆக... முதல் சுற்றில் எவரும் தவறு செய்யவில்லை. இரண்டாம் சுற்று ஆரம்பித்தது. இதிலும் யாரும் பெரிதாக பிழை செய்யவில்லை. ‘நல்லா யோசிச்சிச்சீங்களா’ என்று நீதிபதிகள் விளையாட்டு காட்டினாலும் முதலில் தடுமாறிய போட்டியாளர்கள், பிறகு சுதாரித்துக் கொண்டு அழுத்தமாக பதில் சொன்னார்கள். ‘கருப்பு கவுனி அரிசி’ என்கிற அயிட்டத்தை சரியாகச் சொன்னார் சசியம்மாள். (இப்படில்லாம் உலகத்துல விஷயங்கள் இருக்குதா?!).

மாஸ்டர் செஃப்

மூன்றாவது சுற்றில் ‘ரம்பை இலை’ என்பதை சரியாகச் சொன்னார் தேவகி. (அப்ப... ஊர்வசி, மேனகையும் உண்டா?). இந்த இலை பிரியாணியில் வாசனைக்காக சேர்க்கப்படுவது என்றாலும் பல மருத்துவ குணங்களையும் கொண்டதாம். (கூகுள் பண்ணிப் பார்த்தேன்).

‘‘என்னடா... எல்லாமே நல்லாத்தானே போயிட்டு இருக்கு?’’ என்று தோன்றியபோது முதலில் வந்து மாட்டியவர் சுமித்ரா. ‘கோழி இறைச்சி’ மாதிரியாக வைக்கப்பட்டிருந்த வஸ்துவை ‘கோழி’ என்று அவர் அழுத்தமாகச் சொல்ல அது ‘தவறான பதில்’ என்று சொல்லப்பட்டது. அது கோழி அல்ல. வாத்தாம். (இதனால்தான் ‘வாத்து மடையா’ என்று சொல்கிறார்களா?!). தான் தவறாக சொன்ன வஸ்துவை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஓரமாக நின்றார் சுமித்ரா.

இனி மீதமுள்ளவர்கள் போட்டியைத் தொடர்வார்கள். அடுத்து வந்த சசியம்மாளும் பிழை செய்து மாட்டினார். இவர் கருப்பாக இருந்த ஒரு வஸ்துவை எடுத்து ‘குடம்புளி’ என்று சொல்ல ‘தவறும்மா. அது கோக்கம்’ என்றார் செஃப் ஹரீஷ். (நமக்கு குடம்புளியே தெரியாது. இதுல கோக்கம் வேற).

கிருதாஜ் ‘புளிச்ச கீரை’யையும் சுனிதா ‘Mud Crab’ஐயும் சரியாக கண்டுபிடித்தார்கள். அடுத்த சுற்றில் ‘திப்பிலி’யை கண்டுபிடித்தார் தேவகி. (இந்தப் பெயரை இலக்கணப் பாடத்துல எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதே?!). அடுத்து வந்த நித்யா ‘சூர்ய காந்தி விதை’ என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். (நான் சூரியகாந்தி பூவையே பார்த்ததில்லை). நம்மூரில் ‘சித்தரத்தை’ எனப்படும் மருத்துவ குணம் வாய்ந்த வஸ்துவின் பெயரை சரியாகச் சொன்னார் கிருதாஜ்.

மாஸ்டர் செஃப்

சுமித்ரா, சசியம்மாளைத் தொடர்ந்து தவறுசெய்து மாட்டிக் கொண்டவர் சுனிதா. ஆப்பிள் பழம் மாதிரி தோற்றமளித்ததை ‘Peach’ என்றார். ‘‘சரியான விடையா?” என்று நீதிபதிகள் குறும்பாக கேட்டாலும், ‘அவர்கள் வழக்கம் போல் விளையாடுகிறார்கள் போல’ என்று நினைத்த சுனிதா, Peachதான் என்று சாதித்தார். (Peach என்பது சீனாவைச் சேர்ந்த தாவரத்திலிருந்து விளையும் ஆப்பிள் மாதிரியான பழம்).

ஆனால் சுனிதா சொன்ன பதில் தவறு. அது ‘Apricot’ எனப்படும் பழம். நம் ஊரில் ‘ஆல்பகடா பழம்’ என்பார்கள். சுரம் வரும் போது வாந்தியெடுக்கும் உணர்வை கட்டுப்படுத்த இதை வாயில் அதக்கிக் கொள்வார்கள்.

ஆக... சுமித்ரா, சசியம்மாள், சுனிதா என்று மூன்று தோல்வியுற்ற நபர்கள் சேர்ந்து விட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற தேவகி, நித்யா மற்றும் கிருதாஜ் ஆகியோர் வெற்றி பெற்று பால்கனி வரிசையில் இணைந்தார்கள்.

பொருட்களை அடையாளம் கண்டுபிடிக்கும் இந்தச் சுற்றில் தோற்றுப் போன மூன்று பலியாடுகளுக்கும் கறுப்பு ஏப்ரன் அணிவிக்கப்பட்டது. இவர்களுக்குள் போட்டி நிகழும். இதிலும் பின்தங்குபவர் போட்டியிலிருந்து விலகுவார்.

மூன்று நபர்களுக்கும் இடையிலான போட்டி தொடங்கியது. ‘அதை தொட்டது ஒரு குத்தமாய்யா?’ என்பது போல், அவர்கள் எந்தப் பொருளின் பெயரை தவறாகச் சொன்னார்களோ அதை வைத்தே சமைக்க வேண்டுமாம். இதற்காக 60 நிமிடங்கள் தரப்பட்டது.

இந்த ‘pressure test’-ஐ இரண்டாவது முறையாக சுமித்ரா எதிர்கொள்கிறார். “வணக்கம்... நாங்க சன்டிவில இருந்து வர்றோம்” என்று சசியம்மாளின் சமையல் மேஜைக்குச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட விசே, ஜாலியாக அலப்பறை செய்த போது ‘என்னய்யா... இவரு இப்படி தொந்தரவு செய்யறார்’ என்றுதான் தோன்றியது. அப்புறம் பார்த்தால், சசியம்மாளுக்கு அரைகிலோ வெங்காயம் அரிந்து கொடுத்து விசே உதவி செய்திருக்கிறாராம். (இதெல்லாம் விதிமீறல் இல்லையா?!).

‘வாத்தை’ முதன்முறையாக சமைப்பதால் அதனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் சுமித்ரா. அதை சுத்தம் செய்வதற்கே அவர் மிகவும் போராட வேண்டியிருந்தது. ‘கால் பகுதியை எடுக்காம... நெஞ்சு பகுதியை எடுத்தா சமையல் செய்யறது ஈஸியா இருக்குமாம்’ என்கிற டிப்ஸை அருகில் வந்த விசே சொல்ல, அதை பின்பற்ற முயன்றார் சுமித்ரா. (செஃப்கள் பேசிக் கொண்டிருந்ததை விசே ஒட்டுக் கேட்டு வந்து சொன்னாரோ என்னமோ!).

சுமித்ராவின் டேபிளின் அருகே வந்த செஃப்கள் ‘உங்க டிஷ்ஷூக்காகத்தான் நாங்க ரொம்ப ஆவலா வெயிட் பண்றோம். எங்களுக்குப் பிடிச்ச உணவு இது’ என்று பில்டப்பைக் கூட்ட சுமித்ராவுக்கு அப்போதே பிரஷர் கூடுதலானது.

மாஸ்டர் செஃப் தமிழ்

ஆல்பகடா பழத்துடன் சிக்கன் எல்லாம் சேர்த்து என்னென்னமோ கிளறிக் கொண்டிருந்த சுனிதா, மாவு பிசைதலில் ஏதோ சொதப்பி விட, மிகவும் தடுமாறி பிளான் –Bயை வைத்து சமாளிக்க முயன்றார். அவரின் டென்ஷன் மிக அப்பட்டமாக தெரிந்தது.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் வந்த விசே, ‘உணவும் சினிமாவும் ஒருவகையில் ஒன்று’ என்பதை விக்ரமன் படத்தின் வசனம் போல் விளக்கிக் கொண்டிருக்க, நேரத்தை நிரப்புவதற்காக செய்கிறார்களோ என்று தோன்றிவிட்டது. அத்தனை செயற்கையான வியாக்கியானம்.

மூன்று போட்டியாளர்களும் டென்ஷனுடன் தயார் செய்திருந்த உணவு வகைகளை தனியறையில் வைத்து செஃப்கள் சோதித்துப் பார்த்தார்கள். கடவுளின் முன்னால் பிரசாதத்தை வைப்பது போல் பயபக்தியுடன் வைத்து விட்டு போட்டியாளர்கள் விலகிச் சென்று நகத்தைக் கடித்துக் கொண்டு ரிசல்ட்டுக்காக டென்ஷனுடன் காத்திருந்தனர்.

முதலில் வந்த சசியம்மாள் செய்திருந்த அயிட்டம் ‘கோக்கம் ஃபிஷ் கறி’. தனது செய்முறையை விளக்கி விட்டு அகன்றார் சசி. இவர் தயார் செய்திருந்த மீன், இனிப்புச் சுவையுடன் இருப்பதாக செஃப்களின் கருத்து இருந்தது. சற்று உப்பு சேர்த்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாமாம்.

இது போன்ற பரிசோதனையின் போது செஃப்கள் உணவை எடுத்து முகர்வது, மிக கவனமாக வாயில் போட்டு அழுத்தமாக மெல்வது, கண்ணை மூடி அதன் சுவையை, தரத்தை மதிப்பீடு செய்ய முயல்வது... இப்படியாக அவர்களின் அந்த நேரத்தின் உடல்மொழியை கவனிப்பது அத்தனை சுவாரசியமாக இருக்கிறது.

சசியம்மாள் செய்திருந்த மீன் உணவுதான் ஃபெயிலாகி விட்டது என்றால், கோக்கம் வைத்து அவர் செய்திருந்த பானகத்தை குடித்த செஃப்களின் முகங்கள், கசப்பு மருந்தைக் குடித்த குழந்தைகளின் முகம் மாதிரி ‘ஞே’ என்று மாறி விட்டது. ‘நோ... கமென்ட்ஸ்’ என்று ஒரே குரலில் மூவரும் கசப்புடன் சொன்னார்கள்.

மாஸ்டர் செஃப் - சசியம்மாள்

வாத்தை வைத்து முதன்முறையாக சமைத்திருந்தாலும் தன்னம்பிக்கையோடு தன் உணவை எடுத்து வந்து மேஜையில் வைத்தார் சுமித்ரா. ‘டக் ஆலா ஆரஞ்சு’ என்பது அதன் பெயர். அதைச் சாப்பிட்ட செஃப்களின் முகத்தில் சற்று திருப்தி தெரிந்தது. ‘இன்னமும் நன்றாக தயார் செய்யப்பட்டிருக்கலாம்’ என்றாலும் முதல் முறையிலேயே சரியாக முயற்சித்த விதத்தைப் பாராட்டினார்கள்.

அடுத்து வந்தவர் சுனிதா. தான் செய்திருந்த உணவு குறித்து அவருக்கே திருப்தியில்லை. அவர் செய்ய முயன்ற ‘பாவ்’ மாவு பிசைதலில் ஏதோ சொதப்பி விட, அதை அவரால் தயாரிக்க முடியவில்லை. எனவே அது குறித்த சங்கடம் மற்றும் குற்றவுணர்வுடன் வந்தார். “ஒரு மணி நேரத்துல இதைத்தான் உங்களால செய்ய முடிஞ்சுதா?” என்று ஹெட்மாஸ்டர் குரலில் கெளஷிக் கேட்டதும் இன்னமும் உடைந்து போனார் சுனிதா.

மூன்று போட்டியாளர்களும் பதற்றத்துடன் ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருந்த போது அதற்கான நேரம் வந்தது. முதன்முறையாக என்றாலும் வாத்தை சரியாக ஹேண்டில் செய்த சுமித்ரா வெற்றி பெற்று பால்கனிக்கு தேர்வானார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற சுமித்ரா ‘’இப்ப எனக்கு தைரியம் வந்துடுச்சு. இனிமே வாத்தை எப்படி சமைக்கணும்னு தெரிஞ்சுடுச்சு” என்றார். (வாத்துக்கள் ஜாக்கிரதை!).

‘இந்த மூணு டிஷ்ஷூல ஒண்ணு மட்டும்தான் ஓகே.. மத்த ரெண்டும் எங்களுக்கு திருப்தியேயில்ல. ரொம்ப ஏமாற்றமா இருக்குது’ என்று நீதிபதிகள் சொன்னதும் சுனிதா மற்றும் சசியம்மாளின் முகம் வாடியது.

“செஃப் ஆவறதுதானே உங்க கனவு... நீங்க கடைசி வாய்ப்புல வந்தீங்க இல்லையா. இது எலிமினேஷன் ரவுண்டுன்னு தெரியாதா… ஒருவேளை மிதமிஞ்சிய நம்பிக்கைக்குள்ள போயிட்டீங்களா?” என்றெல்லாம் சுனிதாவை ஹரீஷ் கடும் சொற்களால் வறுத்தெடுக்க தலைகுனிந்தபடி உடைந்து அழுதார் சுனிதா. இதைக் கண்டு இதர போட்டியாளர்களும் கலங்கினார்கள்.

“உங்க ரெண்டு பேர் மேலயும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனா ஏமாத்திட்டீங்க” என்று நீதிபதிகள் சொன்னது கறார் தொனியில் இருந்தாலும், சமையல் என்பது விளையாட்டுச் சமாச்சாரமில்லை என்கிற அழுத்தமான தகவலை மறைமுகமாகச் சொன்னார்கள்.

இரண்டு பேர் தயார் செய்திருந்த உணவும் திருப்தி அளிக்கவில்லை என்றாலும், இதில் தேர்வானவர் சுனிதா. இதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது. தரப்பட்டிருக்கும் பொருளை பிரதானமாக வைத்து சமைக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான விதி. இந்த நோக்கில் சசியம்மாள் தோற்றுப் போனார். சுனிதா தயாரித்ததில் ‘சுவை’ என்கிற அம்சம் இல்லையென்றாலும் தனக்கு தரப்பட்டிருந்த டாஸ்க்கை சரியாகப் பின்பற்றியிருந்தார். அதுவே அவர் தேர்வானதற்கு காரணம்.

ஆக... இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகிறவர் ‘சசியம்மாள்’ என்பது தெரிந்து விட்டது. 62 வயது ஆகும் இவர், சமையலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். “தமிழ்நாட்டில் மாஸ்டர் செஃப்பிற்காக ஒவ்வொரு நகரிலும் நிகழ்ந்த ஆடிஷனலில் மனம் தளராமல் தொடர்ந்து கலந்து கொண்டார்’’ என்கிற நெகிழ்வான தகவலை கெளஷிக் சொல்ல, சபை சசியம்மாளுக்காக கலங்கியது.

தனது வழக்கமான பாணியில், சசியம்மாளை அரவணைத்து, கைகளில் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. ஆக... போட்டியாளர்களின் எண்ணிக்கை பதினொன்றாக குறைந்திருக்கிறது. சமையல் பொருட்களை அடையாளம் காண்பது ஒருபக்கம் இருக்கட்டும், தனது வீட்டில் கிச்சன் எந்தப்பக்கம் இருக்கிறது என்பதையே அடையாளம் காண முடியாமல் இருக்கிறவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் நிறைய பாடங்கள் இருக்கின்றன.



from விகடன்

Comments