`திருமணத்துக்குப் பிறகு ஹீரோயினாக நடிக்க முடியாது'
`கொஞ்சம் பூசினாற்போல இருப்பது தகுதிக் குறைவு'
- இப்படி தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கென எழுதப்படாத விதிகள் எத்தனையோ உண்டு. ஜோதிகா, அபர்ணா பாலமுரளி என ஒரு சிலரால் அரிதாக எப்போதாவது அந்த விதிகள் தகர்க்கப்படும். ஆனால் தொடராது.
நிறமும் நடிகையின் சைஸ் ஜீரோ உடல்வாகுமே சினிமாவில் பிரதான தகுதிகளாகப் பார்க்கப்படுவது மாபெரும் அவலம். நடிப்புத் திறமையெல்லாம் அங்கே இரண்டாம் பட்சம்தான். முதல் இரண்டும் இல்லாமல் காணாமல் போன திறமைசாலி நடிகைகள் இங்கு எத்தனையோ பேர். அவர்களில் ஒருவராக காணாமல் போயிருக்க வேண்டியவர் நடிகை மஞ்சிமா மோகன். `அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர், அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில படங்களில் தலைகாட்டினார். இடையில் சில காலம் மீடியா வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருந்தார். காரணம்.... அவருக்கு ஏற்பட்ட மனப் பதற்றம் மற்றும் உடல் பருமன் பிரச்னைகள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு `துக்ளக் தர்பார்', `எஃப்.ஐ.ஆர்' என இரண்டு படங்களில் நடித்திருப்பவர், தன் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசுகிறார்.
``நடிகைகளும் மனுஷங்கதானே... சாதாரண மனுஷங்க சந்திக்கிற எல்லாவிதமான உடல், மனநல பிரச்னைகளையும் நாங்களும் எதிர்கொள்வோம். ஆனா எங்களை ட்ரோல் பண்றவங்களுக்கு அந்த யதார்த்தம் ஏனோ புரியவே மாட்டேங்குது. 2019-ம் வருஷம் எனக்கு கால்ல ஒரு சர்ஜரி நடந்தது. அதுக்கப்புறம் கடுமையான முதுகுவலி, அதுக்கான ட்ரீட்மென்ட்டுனு இருந்ததுல கொஞ்சம் வெயிட் போட்டேன். தொடர்ந்து யோகா பண்றது, பிசியோதெரபி, டயட்டீஷியனுடைய அட்வைஸை ஃபாலோ பண்றதுன்னு எல்லாம் செய்திட்டிருந்தேன். ஒரு கட்டத்துல என் வெயிட்டை வெச்சு என்னை பாடி ஷேமிங் பண்ண ஆரம்பிச்சாங்க. நான் நடிச்ச படத்தோட புரமோஷனுக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே என்னைப் பார்த்த எல்லாரும் என் வெயிட்டை பத்தியே கேள்வி கேட்க ஆரம்பிச்சாங்க. எல்லாருக்கும் பதில் சொல்றதும் விளக்கம் கொடுக்கிறதுமே வேலையா இருந்தது. அது எனக்கு பெரிய ஸ்ட்ரெஸ்ஸை கொடுத்தது.
Also Read: ```நடிகைகள் ஹோட்டலில் கும்மாளம்’னு எழுத எப்படி மனசு வரும்..?’’ - நடிகை ராதிகா
ஒரு கட்டத்துல இதுதான் என் உடம்புனு ஏத்துக்கப் பழகினேன். நடிகைன்னா குண்டா இருக்கக்கூடாதுங்கிற விதியை ஆடியன்ஸ் யாரும் உருவாக்கலை. இன்னும் சொல்லப் போனா நான் சந்திக்கிற மக்கள்ல பலரும் நான் கொஞ்சம் இளைச்சாலே, `ஏன் இப்படி உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கீங்க'னுதான் கேட்டிருக்காங்க. அதுவே வெயிட் போட்டா அவங்க யாரும் அதைக் கேள்வி கேட்கறதே இல்லை. ஆனா இண்டஸ்ட்ரிக்குள்ளதான் பிரச்னையே... அதுவும் டைரக்டரோ, கூட நடிக்கிறவங்களோ கேட்க மாட்டாங்க. மத்தவங்கதான் கேட்பாங்க. தவிர இதையெல்லாம் வெச்சு சோஷியல் மீடியாவுல ட்ரோல் பண்றவங்கதான் அதிகம். ஆனா இதெல்லாம் என்னை பாதிக்காதுனு மனசுல நினைப்பேன். அதுக்காக நான் இப்படித்தான் இருப்பேன்னு சொல்ல வரலை. கமர்ஷியல் படத்துல நடிக்கும்போது அந்தப் படத்துல அந்தக் கேரக்டருக்கு என்ன தேவையோ நான் அதுக்கேத்த மாதிரி இருந்தாகணும்ங்கிறதுல எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. இப்பவும் நான் வெயிட் லாஸ் முயற்சிகளைத் தீவிரமா ஃபாலோ பண்ணிட்டிருக்கேன். ஏன்னா அது என் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயமும்கூட....
இன்னிக்கு எத்தனையோ சின்ன குழந்தைங்க என்கிட்ட வந்து நான் டயட் பண்ணணும்னு கேட்கறாங்க. ஃப்ரூட் டயட்டை ஃபாலோ பண்ணலாமா, அந்த டயட் இருக்கலாமான்னெல்லாம் கேட்கறதைப் பார்க்கும்போது மனசுக்கு வருத்தமா இருக்கு. குழந்தைங்க மனசுல ஆரோக்கியத்துக்காக சாப்பிடணும்ங்கிறதைவிடவும் அழகுக்காக சாப்பிடணும்ங்கிறதுதான் பதிஞ்சிருக்கு. இதெல்லாம் மாறணும்.
Also Read: `100 கிலோ எடை, நிறைய பாடி ஷேமிங், அதுக்கிடையே காதல் புரபோஸல்!' - கீர்த்தி சுரேஷ் அக்கா ஷேரிங்ஸ்
பாடி ஷேமிங் அனுபவத்தை சந்திச்ச மாதிரியே நான் ஆங்ஸைட்டி பிரச்னையையும் அனுபவிச்சேன்... எல்லாமே தப்பா நடக்குற மாதிரி, எனக்கு மட்டும் அப்படி நடக்குற மாதிரியெல்லாம் ஃபீல் பண்ணிருக்கேன். நல்லவேளையா சரியான நேரத்துல சரியான நபர்கிட்ட உதவி கேட்டதால இன்னிக்கு நான் அதுலேருந்து மீண்டு வந்திருக்கேன்''
- உடலும் மனமும் தந்த அழுத்தங்களிலிருந்து வெளியே வந்த அனுபவங்கள் பகிர்கிறார் நடிகை மஞ்சிமா மோகன்.
தனக்கு ஆங்ஸைட்டி ஏற்பட்டது, அதிலிருந்து மீண்டது பற்றி அவர் விரிவாக அளித்திருக்கும் பேட்டி, நாளை வெளிவரும் அவள் விகடன் இதழில்!
from விகடன்
Comments