AKS - 6 | சுந்தரின் அட்வைஸும், கவிதாவின் காத்திருப்பும்... சென்னையில் முதல் நாள் எப்படி இருந்தது?

இரண்டு மாதங்கள் வேலை பார்க்க குடும்பத்தில் அனுமதி பெற்று ஒரு வழியாக காயத்ரி சென்னை கிளம்புகிறாள். அவளை வழியனுப்ப அழைத்துச் செல்லும் சுந்தர் அவளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டு வருகிறான். எரிச்சலுடன் கேட்டுக்கொண்டு வரும் காயத்ரி அவனின் அறிவுரைகளில் இருந்து தப்பிப்பாளா?

தேனியில் இருந்து சென்னை வரும் பாண்டியனும் அவனது தோழி கவிதாவும் பாண்டியனுக்கு வேலை கிடைத்திருக்கும் அலுவலகத்துக்கு வருகிறார்கள். பாண்டியனின் முதல் நாள் வேலை எப்படி இருக்கிறது?

இதுதான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ சீரிஸின் 6வது எபிசோட் சுருக்கம்.

AKS - 6 - ஆதலினால் காதல் செய்வீர்

முந்தைய எபிசோடில் சீக்கிரமே தூங்கி, அதிகாலையிலேயே எழுவது பற்றி சொல்லிக் கொண்டிருந்த சுந்தர், காயத்ரியிடம் டீ காபி குடிக்கும் பழக்கத்தையும் நிறுத்தச் சொல்கிறான்.

டீ, காபிக்கு பதிலாக வெஜிடபிள் சூப் குடிக்க வேண்டும், பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும், காலை 4.30 மணிக்கு எழுந்து ஜாக்கிங் செல்ல வேண்டும், இரவு பத்து மணிக்கு தூங்கிவிட வேண்டுமென இரண்டு மாதங்கள் சென்னை செல்லும் காயத்ரிக்கு இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்னால் போய் அய்யன் வள்ளுவனை துணைக்கழைத்து வந்து சுந்தர் அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறான். அவனது அறிவுரைகள் காயத்ரிக்கு முதலில் போரடிக்க ஆரம்பித்து பின் எரிச்சல் ஆகிறது. சுந்தர் சொல்வது எல்லாம் நல்ல விஷயங்கள்தான் என்று எடுத்துக் கொண்டாலும்கூட காயத்ரியை அவனது உடைமையாக எண்ணியே இவற்றையெல்லாம் சொல்கிறான்.

திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணுக்கு அல்லது மனைவிக்கு அவர்கள் கேட்காமலேயே பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, அவர்களுக்கும் சேர்த்து ஆண்களே சிந்திப்பது, முடிவுகள் எடுப்பது எல்லாம் காதல் என்றும், மனைவியை நன்றாக பார்த்துக்கொள்வது என்றும் சமூகம் கற்பிதம் வைத்திருக்கிறது. மிக பத்திரமாக தங்கம், வைரத்தை பார்த்துக் கொள்வதற்கு இணையாக ஒரு விலை உயர்ந்த பொருளாக பெண்களை நடத்துவதுதான் அது. அந்த உறவில் பெண்களுக்கு மூச்சுவிடும் சுதந்திரம் கூட இருக்காது.

சுந்தரிடம் இருந்து கிட்டத்தட்ட தப்பித்துச் செல்வது போல் பேருந்தை கண்டதும் ஓடும் காயத்ரியின் முகத்தில் அந்த உணர்வை துல்லியமாக காணலாம்.

AKS - 6 - ஆதலினால் காதல் செய்வீர்

காரிலிருந்து காயத்ரியின் பெட்டியை எடுத்து வரும் சுந்தரிடம் அவற்றை தானே எடுத்துக் கொள்வதாக சொல்கிறாள். அதற்கு சுந்தர், “எப்படியும் இரண்டு மாதங்கள் கழித்து நீ எங்க வீட்டிலிருந்து ஆர்டர் போடத்தான் போற, அதை நான் இப்போ இருந்தே பழகிக்கிறேன்” என்பான். அவன் அப்படி பேசியது பிடிக்காமல் அவள் முகம் சுளிக்கிறாள்.

இந்த நுட்பத்தை பல ஆண்களும் சகஜமாக பயன்படுத்துவார்கள். வீட்டில் எல்லாவித கட்டுப்பாடுகளையும் தனது கையில் வைத்திருப்பார்கள். ஆனால் மனைவி ’ஆர்டர்’ போடுவதை தான் செய்வதை போல வெளியில் சொல்லிக் கொள்வார்கள். ஆரம்பத்தில் பெண்கள்கூட வீட்டின் மொத்த கன்ட்ரோலும் தனது கையில் இருப்பதாக ஏமாந்து போய் விடுவார்கள். இது மனைவியை எதிர்த்து பேச விடாமல் வைத்துக் கொள்வதற்கான ஆண்களின் டெக்னிக்.

எல்லாவற்றையும் சொல்லி விட்டு இறுதியாக, “எல்லாம் உன் மேல் உள்ள Affectionதான்” என்று கூறுவார்கள். அதையேதான் சுந்தரும் எபிசோடின் இறுதியில் சொல்கிறான்.

சோர்வாக இருக்கும் காயத்ரியிடம் அதன் காரணத்தை கேட்பான் சுந்தர். குடும்பத்தை பிரிந்து முதல்முறையாக செல்வதால் வருத்தமாக இருப்பதாக கூறுவாள். அதை மிக ஈஸியாக ''ஓகே.... ஓகே... அவங்கள நாங்க பார்த்துக்கறோம்''’ என்று கடந்துவிடும் சுந்தர், தான் காயத்ரியை பிரிந்து இருக்கப்போவதுதான் மிக கடினமானது என அவளிடம் சொல்வான். காயத்ரியின் உணர்வுகளை சரியாக உள்வாங்கி அதைபற்றி பேசாமல் தன்னை பற்றி மற்றுமே சிந்திப்பவனாக இருக்கிறான்.

AKS - 6 - ஆதலினால் காதல் செய்வீர்

காயத்ரிக்கு பரிசுப் பொருளுடன் ஐ லவ் யூ சொல்லும் சுந்தருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவிப்பாள் காயத்ரி. சுந்தருக்கு என்ன பதில் சொல்வது என்று முழிப்பது, எப்படி தப்பிப்பது என்று தவிப்பது, பேருந்தை கண்டவுடன் தப்பித்தோம் என எஸ்கேப் ஆவது என காயத்ரியின் முகத்தில் தோன்றும் எக்ஸ்பிரஷன்ஸ் மிக அருமை.

பயணத்தின் இடையில் அழைக்கும் சுந்தர் பேருந்து ஹைவேஸில் நிற்கிறதா எனக் கேட்பான். அதிர்ச்சியாகும் காயத்ரியிடம் மொபைல் ஆப்பில் ட்ராக் செய்தேன் என்பான். தனக்கு நிச்சியக்கப்பட்ட பெண்ணாகவே இருந்தாலும், அவளை இவ்வளவு தூரம் ஃபாலோ செய்வது நிச்சயமாக அன்பு இல்லை. ஒருவகையில் தெரிந்தே செய்யும் ஸ்டாக்கிங்.

ஃபிரஷ் ஜூஸ் குடி, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், சரியான நேரத்திற்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என மீண்டும் இரண்டாம் கட்ட அட்வைஸ் மழையை பொழிய தொடங்குகிறான் சுந்தர். அவன் எப்போது அழைப்பை துண்டிப்பான் என்கிற நிலையிலேயே இருக்கிறாள் காயத்ரி. சுந்தரின் அறிவுரையில் அந்த காட்சி முடிவதற்குள் நாமும் 4 கிளாஸ் தண்ணீர் குடித்தால்தான் அடுத்த காட்சிக்கு போகமுடியும் என்று தோன்றிவிட செய்கிறது சுந்தரின் எக்ஷ்ப்ரஷன்ஸும், டயலாக் டெலிவரியும்.

சுந்தரின் டாக்ஸிக் அட்வைஸிலிருந்து காயத்ரியை போலவே தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவந்து பாண்டியன் - கவிதாவின் சாஃப்ட்வேர் கம்பெனியில் லேண்ட் ஆனது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

முதன்முறையாக சென்னைக்கு வரும் கவிதா, சென்னையின் பிரமாண்டத்தை வியந்து பேசுகிறாள். சென்னையின் உயரமான கட்டடங்களை பார்த்து கவிதாவுக்கு கழுத்து சுளுக்கிக்கொள்கிறது.

சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை என்றதும் ஃபார்மல் சட்டை, டக்-இன் செய்து வந்திருக்கும் பாண்டியனிடம் அங்கு எல்லோரும் டி-ஷர்ட், ஜீன்ஸில் இருப்பதை காட்டி கேலி செய்கிறாள் கவிதா. கம்பெனியில் டி-ஷர்ட் அணியலாம் என்று தனது அப்பாவுக்குத் தெரிய வந்தால் ஊரில் மளிகைப் பொருட்கள் விளம்பரத்துக்கு இலவசமாக வந்த டீ-ஷர்ட்களை பார்சலில் அனுப்பி விடுவார் என்று பயப்படுகிறான் பாண்டியன்.

AKS - 6 - ஆதலினால் காதல் செய்வீர்

பாண்டியனின் அப்பாவை போல தகப்பன்கள் இருக்கிறார்கள். தாங்களே விளம்பரத்துக்கு வரும் டீஷர்ட்களை அணிந்து கொள்வார்கள். இதை கண்டதும், அப்பா, குடும்பத்துக்காகத்தானே இவற்றை செய்கிறார்கள் என ரொமான்டிஸைஸ் செய்து நியாயப்படுத்த தேவையில்லை. வருமானம் மிகக் குறைவான குடும்பங்களில் சிக்கனமாக இருப்பது வேறு. நல்ல வருமானம் இருந்தும் எதையும் அனுபவிக்காமல் பிள்ளைகளுக்கு மட்டுமே சேர்த்து வைப்பது தவறு. தான் மளிகைக்கடை டீஷர்ட் அணிந்து கொண்டு மகனுக்கு ஆயிரத்து 1500 ரூபாயில் பிராண்டட் டீ-ஷர்ட் வாங்கிக் கொடுக்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள்.

இதுபோன்றவர்களின் பிரச்னை என்னவென்றால் தங்கள் மனைவியும் தங்களை போலவே சிக்கனமாக(?!) இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மனைவியின் அடிப்படை ஆசைகளைக் கூட குடும்பச் சிக்கனம் என்கிற பெயரில் விட்டுக்கொடுக்க நிர்பந்திப்பார்கள். இப்படியெல்லாம் பணம் சேர்த்துக் வைத்து பிள்ளைகளுக்கு கொடுக்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள். தங்களின் பிள்ளைகளின் மேல் இருக்கும் அக்கறை தங்கள் மனைவியின் மேல் இவர்களுக்கு இருப்பதில்லை.

இது எளிமையோ, நல்ல வளர்ப்போ அல்ல. பெற்றோர்கள் தனக்காக முதலில் சிந்திக்க வேண்டும், பிறகு சுற்றியிருப்பவர்களின் மீது அன்போடு நடந்து, பிள்ளைகளுக்கும் ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.

AKS - 6 - ஆதலினால் காதல் செய்வீர்

பாண்டியனுக்காக அலுவலகக் கேன்டீனில் உணவுகளை ஆர்டர் செய்து வைத்துக்கொண்டு அவனை விட்டுவிட்டு சாப்பிட மனமில்லாமல் காத்திருக்கிறாள் கவிதா. வேலையில் சேர்வதற்கான நடைமுறைகள் செய்து கொண்டிருக்கும் பாண்டியனை செல்போனில் அழைத்து தொந்தரவு செய்கிறாள். எந்த நேரமும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் இருவரின் இடையில் இந்த சிறிய அன்பின் தருணங்கள் அழகாக இருக்கிறது.

சென்னை வந்து சேரும் காயத்ரிக்கும், புதிதாக வேலையில் சேரும் பாண்டியனுக்கும் சென்னை வைத்திருக்கும் சர்ப்ரைஸ் என்ன?

காத்திருப்போம்!


from விகடன்

Comments