ஆந்தாலஜி சீசனில், அந்த ஆந்தாலஜியைத் தாண்டி என்ன செய்யலாம் என யோசித்து ஒரு ஹைப்பர்லிங்க் வகை சினிமாவை ஆறு செக்மென்ட்டாக பக்காவாகப் பிரித்துக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். ஆறு கதைகளிலும் பொதுவாக ஒரு சில கதாபாத்திரங்கள், ஒரு மருந்து பேக்டரி, ஒரு கதையின் நாயகன்/நாயகி மற்றொரு கதையில் துணைக் கதாபாத்திரம், ஒரு கதையின் க்ளைமாக்ஸை மற்றொரு கதையில் ட்விஸ்டாக மாற்றுவது எனப் பல விளையாட்டுகளைப் பெரிதாகச் சிக்கல்கள் ஏதுமின்றி சுவாரஸ்யமாகச் செய்திருக்கிறார்.
கதை இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்லைனைப் பிடிப்பது சிரமம் என்பதைத் தாண்டி, ஸ்பாய்லரும் ஆகிவிடும் என்பதால் அதைத் தவிர்த்துவிடலாம். விளிம்பு நிலை மக்கள், அதிகார வர்க்கத்திடமும், சாதியப் பாகுபாடு பார்ப்பவர்களிடமும், பணம் பண்ணவேண்டும் என்ற சுயநலம்கொண்ட மனிதர்களிடமும் எப்படியெல்லாம் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதையும், அவர்களின் மீட்பராக ஒரு சிலர் தலைதூக்குவதும், ஒருவரின் செயல் அடுத்தவரின் வாழ்வை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையும் கோர்வையாகக் கோத்து நீண்ட நெடிய கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் தொடக்கத்தில் சிம்புதேவன் கூறும் 'கயாஸ் தியரி' (பட்டர்ஃபிளை எஃபெக்ட்) கமலின் தசாவதார விளக்கத்தை நினைவுபடுத்துகிறது. மற்றொரு தியரியாக அவர் கூறும் 'வேன்டேஜ் பாயின்ட்' - அதாவது ஒருவர் பார்வையில் ஒருவர் வில்லனாகத் தெரிந்தால், மற்றொருவர் பார்வையில் அவர் வேறு விதமாகத் தெரிய வாய்ப்புண்டு என்று பார்ப்பவர்களைப் பொருத்து ஒருவர் குறித்த நம் புரிதலும் மாறுபடும். இந்த இரண்டையும் எல்லாக் கதைகளிலும் நம்மால் பொருத்திப் பார்க்க முடிகிறது. வெவ்வேறு மனிதர்களின் வாழ்வை ஒரு பெரிய கதைக்குள் இணைத்த திரைக்கதையின் உழைப்பு பெரிது. சிம்புதேவனுக்கு வாழ்த்துகள்.
படத்தின் நடிகர்கள், டெக்னீஷியன்கள் பெயர்களை எழுத மட்டும் இரண்டு அடிஷ்னல் ஷீட் வாங்க வேண்டும் . அத்தனை நடிகர்கள். 'சுயம்வரம்' படத்துக்குப் பின்னர், ஒரு தமிழ்ப்படத்தில் அதிக நடிகர்கள் இருப்பது 'கசடதபற'வில் தான். வெங்கட் பிரபு விழாக் குழுவிலிருந்து வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சம்பத், விஜயலட்சுமி, சுப்பு பஞ்சு, அம்மா ப்ரொடக்ஷன்ஸ் சிவா, அரவிந்த் ஆகாஷ்; இவர்களோடு சாந்தனு, பிரியா பவானிசங்கர், சுந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, யூகி சேது, பிருத்விராஜன், சென்றாயன், சாந்தினி, சிஜா ரோஸ் ('றெக்க' மாலா டீச்சர்)... போதும். ஆனா, இன்னும் இருக்காங்க பாஸ்!
டெக்னிக்கல் டீம் என எடுத்துக்கொண்டாலும் யுவன்ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், SR கதிர், பாலசுப்பிரமணியம், சாம் CS இன்னும் பலர் என ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு குழு வேலை செய்திருக்கிறது. அனைத்துப் படங்களும் பொதுவான, மற்றும் பெரிய வேலை என்றால் காஸ்டியூம் டிசைனர் வாசுபி பாஸ்கரின் பணிதான்.
தன் முந்தைய படங்களைப் போல இதை மீண்டுமொரு காமெடி படமாக எடுக்கக்கூடாது என்கிற முனைப்பு சிம்புதேவனிடம் இருந்திருக்கிறது. அதையும் தாண்டி சில இடங்களில் அது வெளிப்பட்டிருக்கிறது. 'அறை எண் 305-ல் கடவுள்' படத்தைக்கூட ஸ்பூஃப் செய்திருக்கிறார். அதேபோல் 'இம்சை அரசன் 2' படத்தின் அப்டேட்டையெல்லாம் இதில் இணைத்திருப்பது சிம்புதேவன் டச்! காமெடி வசனங்கள் பல இடங்களில் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. சில இடங்களில் பழங்கால ஸ்டாண்ட் அப் காமெடி ஜோக்போல நமத்து போயிருக்கிறது.
காமெடியைக் கடந்து விஜயலட்சுமியின் கதையும், வெங்கட் பிரபுவின் கதையும் எமோஷனலாக ஈர்க்கிறது. இருவரின் நடிப்பையும் நிச்சயம் குறிப்பிட்டுப் பாராட்டலாம். ட்விஸ்ட்களில் சாந்தனுவின் கதை செம! ஹரீஷ் கல்யாணின் கதை, நியாய தர்மங்களைவிடுத்து அதர்மத்தின் சாட்சியாக விரிந்திருக்கிறது.
ஒரு 2.30 மணி நேர சினிமாவில் அதிக அளவு கன்டென்ட் கொண்ட படமாக மாறிவிட்டதாலேயே 'ஹரி படத்தின் வேகத்தில்' கதைமாந்தர்கள் வருகிறார்கள், போகிறார்கள். எல்லாமே ஃபாஸ்ட் ஃபார்வர்டில் பார்ப்பதுபோல் இருக்கிறது. அதே போல் சில துணைக் கதாபாத்திரங்களில் பெரிய நடிகர்கள் நடித்திருப்பதால், அவர்கள் கதையின் கதி என்ன ஆனது என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. (அதெல்லாம் 'யரலவழள'-ல வருமோ!)
அதே போல், சில கதாபாத்திரங்கள் சொல்லும் கருத்துகளும் நகைமுரணாகவே இருக்கிறது. உதாரணமாக, சந்தீப் கிஷனின் மனமாற்றமும் அதற்கு பிறகான அவரின் சித்தாந்தமும் உறுத்தவே செய்கிறது. நிறைய மனிதர்களும் அவர்களைச் சுற்றிய நிறைய நிறையச் சம்பவங்களும் அரங்கேறுவதால் ஒரு சுவாரஸ்ய கணக்கு கிளாஸை பிரேக் இல்லாமல் பார்த்த ஃபீல் வருகிறது. அது நம் மூளையையும் 'சுடோகு' ஆட வைத்திருக்கிறது.
மொத்தத்தில், ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தர முயன்று, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
from விகடன்
Comments