இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் வரவேற்பு வாள் சண்டை உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கும் இருப்பதில்லை. சிறிய பயிற்சி அரங்கத்துக்குள் மட்டுமே கவனம் பெற்றிருந்த வாள்சண்டை போட்டியை, ஒலிம்பிக் களம்வரை கொண்டு சென்று, இந்தியர்களிடம் அறிமுக வெளிச்சம் பாய்ச்சியிருக்கும் பவானி தேவி, இந்த விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை அடையாளம். சென்னையைச் சேர்ந்த பவானி, உலகமே உற்றுநோக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான தனிநபர் சேபர் (Sabre) பிரிவில் அண்மையில் களம் கண்டார்.
ஆறு சுற்றுகள் கொண்ட போட்டியில், முதல் சுற்றில் வெற்றி கண்டார். உலக தரவரிசையில் 42-வது இடத்தில் இருக்கும் பவானி, தரவரிசையில் மூன்றாம் இடத்திலுள்ள ஃபிரான்ஸ் வீராங்கனை மேனோன் புரூனட்டிடம், இரண்டாம் சுற்றில் தோல்வியடைந்தார். இதனால், பதக்க வாய்ப்பையும் இழந்தார். வாள்வீச்சு விளையாட்டில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பவானி தேவிக்கு, இது மிகவும் கெளரவமான தோல்விதான். அதனால்தான், ``உங்கள் பங்களிப்பைக் கண்டு இந்த தேசம் பெருமை கொள்கிறது. இந்திய மக்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம்" என்று பெருமிதத்துடன் பவானி தேவியை ட்விட்டரில் பாராட்டினார் பிரதமர் மோடி. ``உங்கள் வெற்றிக்கான பயணத்தில் இது மற்றுமொரு படி" என்று வாழ்த்தியுள்ளார் ராகுல் காந்தி.
தான் நேசிக்கும் வாள்வீச்சு விளையாட்டில் சிறந்த பங்களிப்பைக் கொடுத்து, அரசியல் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள்வரை வெகுஜன மக்களின் பார்வையையும் தன்மீதும், இந்த விளையாட்டின்மீதும் திருப்பியிருப்பதுதான் பவானி தேவியின் பெரும் சாதனை. பள்ளிக் காலத்தில் தொடங்கிய கனவில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார். தோல்விக்குப் பிறகு சற்றே கலக்கத்துடன் இருந்த பவானி தேவி, அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராவதற்கு தன்னைத் தயார் படுத்திக்கொண்டார்.
``போட்டியில் சில தவறுகளை இழைத்துவிட்டேன். இதுதான் நான் பங்குபெறும் முதல் ஒலிம்பிக் களம். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். இதில், கிடைத்த அனுபவத்தைப் பாடமாகக் கொண்டு, எனது ஆட்டத்திறனை முன்னேற்றுவேன்" என்று சர்வதேச ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பவானியின் பேச்சில் எக்கச்சக்க பாசிட்டிவிட்டி.
பவானி தேவியின் வெற்றிக்கு நிழலாக இருக்கும் தாய் ரமணி, மகளின் ஒலிம்பிக் கனவை அருகில் இருந்து பார்த்து பெருமிதப்பட்டுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கும் ரமணியிடம் பேசினோம். ``ஸ்கூல் படிக்கும்போதே வாள் சண்டை விளையாட்டுதான் தன்னோட அடையாளம்னு பவானி முடிவு பண்ணிட்டா. 2005-ல் தமிழ்நாடு சப்-ஜூனியர் பிரிவுல முதல் தங்கப்பதக்கம் வாங்கினா. பிறகு, கடந்த 16 வருஷங்கள்ல பவானி எதிர்கொண்ட சவால்களும், இந்த விளையாட்டுக்கு அவ கொடுத்த உழைப்பும் ரொம்பவே அதிகம். சர்வதேச அளவுல பவானி ஜெயிச்ச எல்லா வெற்றிகளுமே, இந்தியாவுக்குக் கிடைச்ச மைல்கல் சாதனைகள். கடந்த பல வருஷங்களாவே மகளோட உலகமா இருந்தது இந்த விளையாட்டு மட்டும்தான். பயிற்சிக்காக இத்தாலியிலயே தங்கிட்டா.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவா. 2019-ல் என் கணவர் தவறிட்டார். அப்போகூட 16 நாள்கள்தான் அவளால வீட்டுல இருக்க முடிஞ்சது. போன வருஷம் லாக்டெளன் நேரத்துல வீட்டுக்கு வந்தா. நம்ம நாட்டுல சில இடங்கள்லதான் வாள்வீச்சு பயிற்சிக்கான கட்டமைப்பு வசதிகள் போதிய அளவுல இருக்கு. தமிழ்நாட்டுலயும் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்ல. அதனால, வீட்டு மொட்டைமாடியிலயே பல மாதங்கள் பயிற்சி எடுத்தா. சர்வதேச போட்டிகள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சதுல இருந்தே, ஒலிம்பிக் போட்டியில பங்களிப்பு செய்றதுதான் பவானியின் பெருங்கனவு.
கடந்த மார்ச் மாசம்தான், அதுக்கான வாய்ப்பு அமைஞ்சது. ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிக்கு நேர அவகாசம் ரொம்பவே குறைவாகத்தான் இருந்துச்சு. அதனால, கடந்த மூணு மாதங்களா ஓய்வில்லாம பயிற்சி எடுத்தா. கடந்த 16 வருஷங்கள்ல மகள் கலந்துக்கும் முக்கியமான போட்டிகள் எல்லாத்துலயும் அவளுக்குத் துணையா நானும் கலந்துப்பேன். இந்த முறையும் நான் உடன் இருக்கணும்னு ஆசைப்பட்டா. கடந்த 20-ம் தேதி சென்னையில இருந்து டோக்கியோவுக்கு வந்தேன். இங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமா இருக்குறதால, மகளும் நானும் வெவ்வேறு இடங்கள்ல தங்கியிருக்கோம்" என்பவரின் குரலில் சற்றே கலக்கம் கூடுகிறது.
``நேற்று முன்தினம் வாள்சண்டை போட்டிகள் நடந்துச்சு. போட்டி நடந்த அரங்கத்துலதான் நானும் இருந்தேன். முதல் சுற்றுல ஜெயிச்ச பிறகு தைரியமாதான் இருந்தா. திடீர்னு என்னாச்சுன்னு தெரியல. பயிற்சி ஆட்டத்துல தோற்கடிச்ச ஃபிரான்ஸ் வீராங்கனைகிட்ட பவானி தோல்வியடைஞ்சுட்டா. மேடையில இருந்து இறங்கி வந்ததும் அழ ஆரம்பிச்சவ, ஒரு ரூம்ல தனியா உட்கார்ந்து ரொம்பவே கண்கலங்கினா.
ஒருமணிநேரம் கழிச்சு என்கிட்ட வந்தா. `அடுத்த முறை பார்த்துக்கலாம். வருத்தப்படாதே...'னு அவளை ஊக்கப்படுத்தினேன். கொஞ்ச நேரத்துல நம்பிக்கையுடன் பேச ஆரம்பிச்சவ, `இந்தத் தோல்வியைப் பத்தி யாரும் நினைவூட்டாதீங்க. அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு உடனே தயாராகப் போறேன். அதுக்கு நிறைய திட்டமிடணும்; பயிற்சி எடுக்கணும்'னு சொன்னா.
Also Read: `உட்றாதீங்க பவானி தேவி!' - டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள் வீசப்போகும் வடசென்னை தமிழச்சி!
பவானியை தோற்கடிச்ச அந்த ஃபிரான்ஸ் வீராங்கனை, ஒலிம்பிக்ல வெண்கலப்பதக்கம் வாங்கினாங்க. அவரும் பவானியும் தோழிகள்தான். அந்த வீராங்கனைக்கு பவானி வாழ்த்து சொன்னா. ஒலிம்பிக்ல இந்தியாவுக்கு ஏதாச்சும் ஒரு பதக்கம் வாங்கிக் கொடுக்கணும்னு பவானி ரொம்பவே வைராக்கியமா இருந்தா. அது இந்த முறை சாத்தியமாகல. முதன்முறையா ஒலிம்பிக் களத்துக்கு வந்து, இந்தப் போட்டிக்கான எல்லா நுணுக்கங்களையும் கண்கூடா பார்த்துட்டா. அதனால, அடுத்த ஒலிம்பிக் போட்டியில கூடுதல் முனைப்புடன் விளையாடி பதக்கம் ஜெயிப்பா.
பவானிக்கு ஆறுதல் சொன்னாலும், நேத்தெல்லாம் என் மனசே ஆறல. மகளோட உழைப்பு, கனவெல்லாம் பொய்த்துப் போச்சேன்னு நானும் அழுதுட்டேன். ஆனால், மூணு வருஷங்கள் கழிச்சு பாரிஸ்ல நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ல பவானி பதக்கம் வெல்வான்னு உறுதியா நம்புறேன். நேத்தும் இன்னைக்கும் பொண்ணுகிட்ட பேசினப்போ, உற்சாகமா இருந்தா. சென்னைக்கு வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு போன்னு சொன்னேன். செப்டம்பர்ல நடக்கவிருக்கும் சர்வதேச போட்டி ஒன்றுக்கு தயாராகணும். `நேரம் கிடைக்கும்போது சென்னை வர்றேன்மா...'னு சொன்னவ, டோக்கியோவுல இருந்து இன்னைக்கு இத்தாலி கிளம்புறா. ஓரிரு தினங்கள்ல நானும் சென்னை வந்திடுவேன்.
Also Read: `சகல வசதிகள், கடுமையான கட்டுப்பாடுகள், இந்திய வீரர்களுடன் நான்..!' - கவிதாவின் ஒலிம்பிக் அப்டேட்ஸ்
பவானியின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் ரொம்பவே ஊக்கம் கொடுத்தன. பிரதமர், விளையாட்டுத்துறை அமைச்சர், தமிழக முன்னாள், இந்நாள் முதல்வர்கள் எல்லோருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கோம். சமீபத்துல காணொலியில பவானிகிட்ட பேசின முதல்வர் ஸ்டாலின் சார், `நல்லா விளையாடி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கணும்'னு ஊக்கப்படுத்தினார். அடுத்த ஒலிம்பிக்ல பவானிக்கு வெற்றி கைகூடணும்" என்று நெகிழ்ச்சியாக முடித்தார் ரமணி.
பாரிஸ் ஒலிம்பிக்கில் முத்தாய்ப்பான வெற்றியை வசப்படுத்துங்கள் பவானி தேவி!
from விகடன்
Comments