ராஜ் குந்த்ரா வழக்கில் ஷெர்லின் சோப்ராவை கைது செய்ய கோர்ட் தடை; பாதிக்கப்பட்ட நடிகைகள் வாக்குமூலம்!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து மொபைல் ஆப்களில் பதிவேற்றம் செய்ததாக கூறி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரோடு தொடர்புடைய நடிகைகளுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். நடிகை ஷெர்லின் சோப்ராவிடம் விசாரிக்க போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனால் இவ்வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ஷெர்லின் சோப்ரா மும்பையில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் தன்னை கைது செய்ய தடை விதிக்கவேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாக்குமூலம் வாங்கவே சம்மன் அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

கெஹானா வசிஸ்த்

ஷெர்லின் சோப்ரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தேஷ் போர்கர், "எனது மனுதாரர் போலீஸாரிடம் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க பயப்படவில்லை. ஆனால் இவ்வழக்கில் மற்றவர்களை கைது செய்திருப்பது போன்று எனது மனுதாரரையும் கைது செய்துவிடுவார்கள் என்று அஞ்சுவதால் அதிலிருந்து கோர்ட் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். எனது மனுதாரரிடம் முதல் தகவல் அறிக்கையை கொடுக்கவில்லை. அல்லது அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வழக்கின் உண்மை தகவல்கள் தெரியாமலேயே இவ்வழக்கில் சிக்க வைக்கப்படலாம் என்று எனது மனுதாரர் சந்தேகிக்கிறார். சில வழக்குகளில் இயற்கையாகவே ஜாமீன் பெற முடியாத நிலை இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து ஷெர்லின் சோப்ராவை வரும் செப்டம்பர் 21ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம் வரும் 29ம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தது.

Also Read: ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்! பிக்பாஸ் மாடல்களையும் ஆபாச பட ஷூட்டிங்கிற்காக அணுகினாரா?

இதற்கிடையே ராஜ் குந்த்ராவின் ஆபாச படங்களில் நடித்த நடிகைகள் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தங்களை மிரட்டி போலீஸில் சிக்க வைத்துவிடுவதாக கூறி கட்டாயப்படுத்தி, படங்களில் தங்களை நடிக்க வைத்ததாக போலீஸில் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்ததாகவும், அந்த நேரத்தில் வெப் சீரிஸ்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக நடிகை கெஹானா தெரிவித்ததால் அவருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அதனை பயன்படுத்தி தங்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்துவிட்டதாகவும் போலீஸாரிடம் இரண்டு நடிகைகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குந்த்ரா

இது தொடர்பாக 25 வயது நடிகை அளித்துள்ள வாக்குமூலத்தில், "நான் இந்தி, மராத்தி, போஜ்புரி படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தேன். ரவுனக் என்ற இயக்குநர் மூலம் சில வாய்ப்புக்கள் கிடைத்தன. பிப்ரவரி 4ம் தேதி அவரும் வேறு ஒரு பெண்ணும் என்னை சந்தித்தனர். அப்பெண்ணை இயக்குநர் என்று அறிமுகம் செய்து வைத்தனர். அவர்கள் என்னை மலாடு மத் தீவிற்கு அழைத்து சென்று 'சிங்கிள் மதர்' என்ற குறும்படத்தில் நடிக்கவேண்டும் என்று கூறி கதையை என்னிடம் கொடுத்தனர். நான் நடிக்க தயாரான போது இந்த கேரக்டருக்கு நீங்கள் ஒத்து வரமாட்டீர்கள் என்று கூறி வேறு ஒரு கதையை கொடுத்தனர். அதை படித்து பார்த்துவிட்டு அதில் நடிக்க முடியாது என்று சொன்னேன். ஆனால், பணம் வேண்டுமானால் இதில் நடிக்கவேண்டும் என்றும், இது எந்த சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்படாது என்றும், எனது தோற்றம் மற்றும் பெயரை மாற்றிவிடுவோம் என்றும் தெரிவித்தனர். நானும் அதில் நடித்தேன்.

Also Read: ராஜ் குந்த்ரா விவகாரம்: நடிகைகளை மிரட்டி மும்பையில் ஆபாச பட ஷூட்டிங்... லண்டனில் அப்லோடிங்!

ஆனால், முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு மறுத்தேன். உடனே இப்படத்திற்காக நாங்கள் அதிக அளவு செலவு செய்துவிட்டோம் என்றும், இதில் நடிக்கவில்லையெனில் அதற்கு ஆன செலவை என்னிடமிருந்து வசூலிப்போம் என்று மிரட்டினர். இதனால் வேறு வழியின்றி அரை நிர்வாணத்துடன் நடிக்க சம்மதித்து, நடித்த போது போலீஸார் வந்துவிட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதே போன்று 20 வயதாகும் புதிய நடிகை, "கொரோனா காலத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தேன். அந்நேரம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நடிக்க ஆட்கள் தேவை என்று விளம்பரம் வந்தது. அதனை தொடர்பு கொண்டபோது வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாகக் கூறினர்.

விசாரணைக்குப் பிறகு அழைத்துச் செல்லப்படும் குந்த்ரா

அவர்கள் என்னை மலாடு மத் தீவிற்கு அழைத்து சென்று ராஜா, ராணி தொடர்பான கதை என்று கூறினர். ஆனால் சில காட்சிகள் படப்பிடிப்பு நடத்திய பிறகு ஆபாசமாக நடிக்கும் படி கேட்டுக்கொண்டனர். நான் மறுத்த போது இந்த படப்பிடிப்புக்கு 10 லட்சம் செலவாகி இருப்பதாகவும், அந்தப் பணத்தை என்னிடம் வசூலிக்க இருப்பதாக நடிகை கெஹானா மிரட்டினார். இதனால் வேறு வழியில்லாமல் நடிக்கவேண்டியதாகிவிட்டது" என்று தெரிவித்தார்.

இதில் நடிக்க அவருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளனர். இது போன்று 100 ஆபாச குறும்படங்களை தயாரித்து மொபைல் ஆப்களில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.



from விகடன்

Comments