மிஸ்டர் மியாவ்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘மாறன்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். தனுஷின் பிறந்த நாளன்று வெளியான டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. மாஸ் ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதன் ஷூட்டிங்கை முடித்துவிட்டுத்தான் செல்வராகவன், ‘முண்டாசுப்பட்டி’ ராம் ஆகியோரின் படத்துக்குத் தேதி கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறாராம் தனுஷ். அதனால் ஷூட்டிங்கை 50 நாள்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இயக்குநர் விருமாண்டியிடம் ‘க.பெ.ரணசிங்கம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரெடி செய்யச் சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி. நிறைய படங்கள் செய்தாலும் ‘க.பெ.ரணசிங்கம்’ கொடுத்த மனநிறைவு விஜய் சேதுபதிக்கு ரொம்பவே பெரிதாம். இரண்டாம் பாகத்திலும் விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணிதானாம். இதற்கிடையில் சசிகுமார் நடிப்பில் அடுத்த படத்தைத் தொடங்கியிருக்கிறார் விருமாண்டி.

‘மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகு, மிகப்பெரிய உச்சம் தொட்டிருக்க வேண்டியவர் நடிகர் கலையரசன். ஆனால், அடுத்தடுத்த வாய்ப்புகள் சரியானபடி அமையாமல் போக, மீண்டும் தன் ‘சார்பட்டா’ படத்தில் வாய்ப்பு வழங்கினார் இயக்குநர் பா.இரஞ்சித். கொஞ்சம் நெகட்டிவ் கலந்த பாத்திரம் என்றாலும், கலையரசன் நடிப்புக்கு நல்ல வரவேற்பு. இதனால் நல்ல பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிற விதியைத் தளர்த்தி, சவாலான எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் கலை.

இன்ஸ்டாவில் வாணி போஜன் தனது போட்டோக்களை இறக்குவது அவரது ரசிகர்களுக்கு முதல் சந்தோஷம் என்றால், அந்த போட்டோ ஷூட்டின் மேக்கிங் வீடியோவையும் இறக்குவது ரெட்டை சந்தோஷம். சின்னச் சின்ன அசைவுகளில் சிலிர்க்கவைக்கிற அவரது ரியாக்‌ஷன்களுக்கு ‘ஆஹா... ஓஹோ...’ கமென்ட்கள் குவிகின்றன. ஆறேழு படங்கள் கைவசமிருக்க, அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளோடு இயக்குநர்களும் இவரிடம் கதை சொல்லக் காத்திருக்கிறார்கள். மொத்தத்தில் கரியரில் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார் வாணி!

உஷ்…

“சிறு வயது குழந்தைக்குத் தந்தை என்பதுவரை ஓகே. ஆனால், அதைத் தாண்டிய வயதான கேரக்டருக்கு என்னை அழைக்காதீர்கள்” என அறிவித்துவிட்டாராம் பேரன்பான நடிகர். சமீபத்தில் தமிழ்நாட்டிலிருந்து போன கமென்டரி நடிகர் “உங்களோட சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப ஆசை சார்” என எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், வயதான பாத்திரத்தை மறுத்துவிட்டாராம் அந்த நடிகர்! #எம்மனச ஒட்டுறியே... மம்மூட்டிபோல் வெட்டுறியே!



from விகடன்

Comments