மாணவியைத் துடைப்பத்தால் அடிப்பேன் எனப் பேச்சு, விவாகரத்து கேட்கும் மனைவி - தொடர் சர்ச்சையில் முகேஷ்!

பிரபல மலையாள நடிகர் முகேஷ். இவர் தமிழில் ஐந்தாம்படை, ஜாதிமல்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கேரள மாநிலம் கொல்லம் தொகுதியில் சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ-வாக உள்ளார். நடிகர் முகேஷ் பேசிய தொலைபேசி உரையாடல் ஆடியோ இந்த மாதம் தொடக்கத்தில் வெளியானது. அதில் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியில் இருந்து அழைப்பதாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பேசினார். ஓர் அவசர தேவைக்காக அழைப்பதாகவும் கூறினார்.

ஆனால் அந்த மாணவியை பேசவிடாத நடிகர் முகேஷ், "நீ ஆறு முறை அழைத்திருக்கிறாய். நான் ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தேன். எதற்காக திரும்பத் திரும்ப அழைக்கிறாய். வேறு தொகுதியில் இருந்து அதிலும் மற்றொரு மாவட்ட எம்.எல்.ஏ-வை எதற்காக அழைக்கிறாய்? உன் தொகுதி எம்.எல்.ஏ உயிரோடுதானே இருக்கிறார். பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் எம்.எல்.ஏ யார் என்று உனக்கு தெரியுமா?" என ஆவேசமாக கேட்டார் நடிகர் முகேஷ். அதற்கு 'தெரியாது' என அந்த மாணவி பதில் சொன்னார். நடிகர் முகேஷ் மீண்டும் தொடர்ந்தார், "ஒற்றப்பாலம் எம்.எல்.ஏ-வின் பெயர் கூட தெரியாது. உன்னை நான் நேரில் பார்த்தால் துடைப்பத்தால் அடித்துவிடுவேன்" என ஆவேசமாக பேசினார்.

சி.பி.எம் எம்.எல்.ஏ நடிகர் முகேஷ்

நடிகர் முகேசின் இந்த ஆடியோ வைரலாக பரவியது. இதையடுத்து இதுபற்றி கருத்து தெரிவித்த ஒற்றப்பாலம் சி.பி.எம் எம்.எல்.ஏ பிரேம்குமார், "அது நடிகர் முகேசின் குரல்தானா எனத் தெரியவில்லை. நான் முகேஷுக்கு தொடர்பு கொண்டபோதும் கிடைக்கவில்லை" என்றார். இதற்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட நடிகர் முகேஷ், "சிலரின் தூண்டுதலின் பேரில் இது போன்று பல குழந்தைகள் போனில் அழைக்கிறார்கள். நான் அவர்களுக்கு அறிவுரை கூறிவந்துள்ளேன். இந்த ஆடியோவிற்கு முன்பு நான் பேசிய ஆடியோவை வெளியிடவில்லை. என்னை போனில் அழைப்பவர்கள் பற்றி கொல்லம் போலீஸ் கமிஷனரிடமும், சைபர்கிரைம் போலீசிடமும் புகார் அளிக்க உள்ளேன்" எனக் கூறியிருந்தார்.

Also Read: கேரளா: குறையாத கொரோனா... 16 நாள்களில் 50-ஐ கடந்த ஜிகா வைரஸ் பாதிப்பு!

போன் உரையாடல் சர்ச்சை முடிவடைவதற்குள் நடிகர் முகேசுக்கு அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. நடிகர் முகேசின் முதல் மனைவியான நடிகை சரிதா விவகாரத்து பெற்ற நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு இரண்டாவதாக மேதில் தேவிகாவை திருமணம் செய்தார். இப்போது மேதில் தேவிகா நடிகர் முகேசை விவாகரத்து செய்ய வழக்கறிஞரை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மலையாள மீடியாக்களிடம் பேசிய மேதில் தேவிகா, "முகேஷ் நல்ல மனிதர். அன்புகாட்டுவதில் சிறந்தவர். ஆனால் வாழ்க்கையில் நல்ல கணவராக இருக்கவில்லை. குடும்ப வாழ்க்கையை நல்லபடியாக கொண்டுசெல்ல முடியவில்லை. எட்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார்.

பிந்து கிருஷ்ணா

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கொல்லம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவி பிந்து கிருஷ்ணா, "இப்போது வெளியாகும் செய்திகள் உண்மை என்றால் முகேஷ் மீது பாலியல் தொல்லை வழக்கு பதிவு செய்ய காவல்துறை தயாராக வேண்டும். மக்கள் பிரதிநிதியான முகேசுக்கு எதிராக பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் முகேஷ் விவகாரங்கள் கேரளத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.



from விகடன்

Comments