`சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ – பேருந்தோ, ரயிலோ தாம்பரத்தைத் தொடும்போது இந்த அறிவிப்புப் பலகை பார்த்து ஒரு ஜிலீர் உணர்வை அனுபவித்தவர்களா நீங்கள்?
தலைநகரின் பேருந்து நிறுத்தங்களில் எதிர் திசையில் ஏறிவிட்டு நடத்துநரிடம் திட்டு வாங்கி இறங்கிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?
‘மாப்ள, கூவம்கிறது ஆறு இல்ல, ஊருக்கு நடுவுல ஓடற சாக்கடை’ என சென்னைக்கு வந்து இறங்கியதும் ஊருக்குப் போன் போட்டுச் சொல்லியிருக்கிறீர்களா?
மேன்சன், அபார்ட்மெண்ட்களில், அறிமுகம் இல்லாதவர்களுடன் அறையைப் பகிர்ந்து கொண்டு, வாழ்வில் புதிய நட்பு வட்டங்களை உருவாக்கியிருக்கிறீர்களா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் ஆமெனில்,
விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் டிஜிட்டல் டெய்லி சீரிஸ், ‘ஆதலினால் காதல் செய்வீர்’! உங்களது கதைதான்.
’வந்தாரை வாழ வைக்கும் சென்னை' ஒரு பஞ்சாரம் எனச் சொல்லலாம்.
தேனி, பெங்களூரு என வெவ்வேறு இடங்களிலிருந்து சென்னை வரும் மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் என ஆறு பேர் அங்கு ஒரே வீட்டில் தங்குகிறார்கள். பலவிதமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்த இவர்கள் இணைவது, அது ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டாக்கும் மாற்றங்கள் ஆகியவை காட்சிகளாக விரிகின்றன.
கிராமத்திலிருந்து முதன்முறையாகச் சென்னைக்கு ஐ.டி. வேலைக்கு வரும் பெண் அந்தப் பணிச் சூழலை எப்படி எதிர்கொள்கிறாள்? சென்னையின் பிரம்மாண்டம் அவளுக்குத் தரும் வியப்பு என்ன? முன்பின் அறிமுகமில்லாதவர்கள் ஒரே அறையில் தங்குகிற போது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், குணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன? - என்பன போன்ற நிறையக் கேள்விகளுக்கான பதில்கள் கதையில் கிடைக்கின்றன.
’ஆறு பேர் என்றால், மூணு ஜோடிதானே' என்றால், அங்கேதான் ட்விஸ்ட்!
யார் யார் இடையே காதல் இருக்கிறது? யார் யார் நண்பர்கள்? இவர்களில் யார் காதலுக்கு யார் உதவுகிறார்கள்? யாருக்கு ஏற்கெனவே காதல் இருந்தது? இவர்களுக்கிடையில் திருமணம் நடக்கிறதா? இதெல்லாம்தான் கதை.
ஆறு பேருடைய குடும்பங்களும் அவரவர் ஊரில் இருந்தும் சென்னைக்கு வந்தும் சென்றும் தொடரில் இணைந்து பயணிக்க இருக்கின்றனர்.
பாலின வேறுபாடு இல்லாது ஒரே வீட்டில் அறையெடுத்துத் தங்குகிற சென்னையின் இன்றைய பண்பாட்டை பெற்றோர் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன? அவர்கள் நினைப்பதெல்லாம் சரியா அல்லது குறுகிய எண்ண ஓட்டமா? பசங்க செய்வதெல்லாம் தவறா, பெற்றோரின் அணுகுமுறை (அடக்குமுறை) சரிதானா? என எழுகிற ஏகப்பட்ட கேள்விகளுக்கு ட்விஸ்டுகளுடன் பதிலைப் பேச இருக்கிறது தொடர்.
தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றை இயக்கிய ராஜிவ் கே பிரசாத் இயக்க, திருமதி செல்வம் முதல் தமிழும் சரஸ்வதியும் வரை திரைக்கதையை வடிவமைத்த வே.கி.அமிர்தராஜ் திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை ஜோ ஜார்ஜ்.
இந்தத் தொடர் விகடன் டெலிவிஸ்டாஸின் யூடியூப் பக்கத்தில் வெளியாகும்.
from விகடன்
Comments