ஓடிடி தளங்கள் திரைத்துறையில் பெரும் இடத்தைப் பிடிக்கும் என்பது முன்னரே கணிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா லாக்டௌன் இந்த வளர்ச்சியை, மாற்றத்தை ஒரே வருடத்தில் துரிதப்படுத்தியுள்ளது. பெரிய பட்ஜெட், பெரிய ஸ்டார்களின் படங்களை வாங்கி ரிலீஸ் செய்வது தொடங்கி, இந்திய ரசிகர்களுக்காகவே பிரத்யேகமாக வெப்சீரிஸ் மற்றும் ஒரிஜினல் படங்களை பெரிய பட்ஜெட்டில் செய்யும் அளவுக்கான முயற்சிகளில் முன்னணி ஓடிடி தளங்கள் எப்போதோ இறங்கிவிட்டன. ஒவ்வொரு சீசனுக்கும் தங்களின் அடுத்தடுத்த தயாரிப்புகள் குறித்து அறிவிப்புகளை அவை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளம் 2021-ல் மீதமிருக்கும் மாதங்களுக்கான தங்களுடைய ப்ளான் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஒரிஜினல் வெப் சீரிஸ், படங்கள் என முழுக்க முழுக்க பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதுக்குமான கன்டென்ட்டாகத் திட்டமிருக்கும் அந்நிறுவனம் அதற்காக பல முன்னணி நட்சத்திரங்களை இதற்காக ஓடிடி-க்குக் கொண்டு வந்துள்ளது.
அஜய் தேவ்கன், சுஷ்மிதா சென், சயிஃப் அலி கான், ஷெஃபாலி ஷா, ரிச்சா சத்தா, பிரதிக் காந்தி, கே கே மேனன், குனல் கபூர் என பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், தென்னகத்திலிருந்து சித்தார்த், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்டவர்களையும் களம் இறக்கியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான நிக்கில் அத்வானி, 'தோனி' புகழ் நீரஜ் பாண்டே, திக்மான்ஷு தூலியா உள்ளிட்டோரும் இதில் அடக்கம்.
புதிய தொடர்கள் மற்றும் படங்கள் குறித்த அறிமுக விழா, இணைய வழி சந்திப்பாக நேற்று நிகழ்ந்தது. நடிகர் நடிகையர்களுடன் கலந்துரையாடலை அடுத்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளித்தனர். அதிலிருந்து சில ஹைலைட்ஸ்...
'ஸ்கேம் 1992' வெப் சீரிஸ் மூலம் சர்வதேச புகழடைந்த பிரதீக் காந்தி ஓடிடி தளங்களின் வருகை குறித்து கேள்விக்கு, "மக்களிடம் இருந்து இப்படியொரு அன்பும் பேராதரவும் கிடைப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நான் 16 வருடங்களாக நாடகங்களிலும் உள்ளூர் படங்களிலும் நடித்துள்ளேன். ஆனால், என் முதல் வெப் சீரிஸ் இப்படியொரு வரவேற்பைப் பெறும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது நான் இதுவரை செய்தது சரிதான் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது" என்று நெகிழ்ச்சியாகப் பதிலளித்தார். அவர்தான் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் 'சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ்' மர்டர் மிஸ்ட்ரி தொடரின் நாயகன்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் 'ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னெஸ்' வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் உலகில் முதன் முறையாகக் காலடி எடுத்து வைக்கிறார். அவரிடம், "சினிமாவுக்காக எடுக்கப்படும் படங்கள் தாண்டி, ஓடிடிக்கு என ஒரு கதையைத் தேர்தெடுக்கையில் அதில் எதுவும் புதிய அணுகுமுறை அல்லது யுக்தியை கையாண்டீர்களா? உங்களின் எண்ணவோட்டம் என்னவாக இருந்தது?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
Also Read: Mimi: வாடகைத் தாயின் சிக்கல்களும், உணர்வுகளும்... ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எப்படியிருக்கிறது மிமி?!
அதற்குப் பதிலளித்த அஜய் தேவ்கன், "ஒரு நடிகனுக்கு மீடியத்தைவிட கன்டென்ட்தான் முக்கியமானது. மக்கள் எங்கள் படைப்புகளை பார்த்து பாராட்ட வேண்டும், அவ்வளவே! ஓடிடி இன்று முக்கியமானதொரு இடத்தில் இருக்கிறது. அதன் வளர்ச்சி இன்னமும் தொடரும். அதன் வீச்சு அற்புதமான கன்டென்ட்கள் பலவற்றை சாத்தியப்படுத்துகிறது. அதுதான் என்னை இங்கே வரவைத்தது. நாம் எங்கே வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படிச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். 'இது நான் செய்யவேண்டியது, இதை நான் ரசித்து செய்வேன், இது நான் ஏற்கெனவே செய்ததுதான், ஆனால் இந்த முறை அதை வேறு மாதிரி ரசித்து செய்வேன்' என இதில் ஏதேனும் ஓர் எண்ணம் தோன்றினாலே போதும், அந்தக் கதையை நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்" என்று விளக்கமளித்தார்.
சித்தார்த்திடம், "நீங்கள் நடிக்கும் 'எஸ்கேப் லைவ்' தொடர் ஒரு டெக் த்ரில்லர். நீங்கள் ஒரு ரொமான்டிக் ஹீரோ. இந்த ஜானரில் நீங்கள் இதுவரை எதுவும் செய்ததில்லை. திடீரென இப்படியொரு ஸ்க்ரிப்டை டிக் செய்யக் காரணம் என்ன?" என்று கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த சித்தார்த், "இப்போது நாமிருக்கும் காலகட்டம், நடிகர்களுக்கு ஏற்ற ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரு டெக் த்ரில்லராக அந்தக் கதை எனக்கு சவாலான ஒன்றாகவே பட்டது. இந்த ஓடிடி வெளியும் தேசிய அளவிலான வீச்சுடைய ஒன்றாக இருக்கிறது. பலதரப்பட்ட பார்வையாளர்களும் இந்த நடிகர் என்னவெல்லாம் செய்வார், என்னவெல்லாம் செய்யமாட்டார், அவருக்கு எதெல்லாம் வரும், வராது என்பதை அறிந்துகொள்வார்கள். இந்தச் சவால் சுவாரஸ்யமானது" என்றார்.
புதிய தொடர்கள், படங்கள் குறித்து ஒரு முன்னோட்டம்
இந்த இந்திய படைப்புகள் தாண்டி, டிஸ்னி, பிக்ஸர், நேஷனல் ஜியோகிராபிக் மற்றும் மார்வெல் காமிக்ஸின் சர்வதேச படைப்புகளும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் தொடர்ந்து வெளியாகும்.
from விகடன்
Comments