சத்யஜித் ரே நூறு ஆண்டுகளைக் கடந்தவிட்ட கலைஞன். இந்திய சினிமாவுக்கு முகவரி தந்த இயக்குநர் என்பதைத் தாண்டி, இசையமைத்திருக்கிறார், கட்டுரைகள், பாடல் வரிகள் எழுதியிருக்கிறார். ஓவியராக போஸ்டர் வடிவமைப்பாளராகக் கூட இருந்திருக்கிறார், விமர்சகராகவும் இருந்திருக்கிறார். கூடவே நிறையச் சிறுகதைகள், தொடர் கதைகள் எழுதியிருக்கிறார். அவரின் தொடர் கதைகளில் வரும் டிடெக்டிவ் ஃபெலுடா, பேராசிரியர் ஷோங்கு போன்ற பாத்திரங்கள் பலரின் ஃபேவரைட்!
தற்போது நெட்ஃப்ளிக்ஸ் அவரின் நான்கு சிறுகதைகளை எடுத்து, ஒவ்வொரு மணிநேரத்துக்கு நீளும் நான்கு எபிசோடுகளாக, ஒரு ஆந்தாலஜி சிரீஸாக 'ரே' என்ற தொடரை வெளியிட்டுள்ளது. பாலிவுட் மற்றும் பெங்காலி சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான மனோஜ் பாஜ்பாய், கஜராஜ் ராவ், கே.கே.மேனன், ஹர்ஷவர்தன் கபூர், அலி ஃபசல், ஷ்வேதா பாஸு பிரசாத், அனிந்திதா போஸ், பிடிதா பாக் என ஒரு பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. இயக்குநர் ஶ்ரீஜித் முகர்ஜி இரண்டு எபிசோடுகளை இயக்க, இயக்குநர்கள் அபிஷேக் சௌபே, மற்றும் வாசன் பாலா ஆகியோர் தலா ஒரு எபிசோடை இயக்கியுள்ளனர்.
சத்யஜித் ரேவின் நூற்றாண்டுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக வெளியாகியிருக்கும் 'ரே' ஒரு வெப்சிரீஸாக நம்மை ஈர்க்கிறதா?
Forget Me Not - ஶ்ரீஜித் முகர்ஜி
இப்ஸித் ராம நாயர் ஒரு முன்னணி பிசினஸ்மேன். நண்பர்கள் மற்றும் பிசினஸ் வட்டாரத்தில் 'மனித கம்ப்யூட்டர்' எனப் புகழப்படும் அளவுக்கு எல்லாத் தகவல்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும் மனிதர். ஒருவரின் பிறந்த தேதி, அக்கவுன்ட் நம்பர் தொடங்கி எங்கே எப்போது யாரைச் சந்தித்தோம், அடுத்து என்ன செய்யவேண்டும் என அனைத்தையும் தன்னுள் டேட்டாவாகப் புதைத்து வைத்திருக்கும் மனிதர். அதுதான் அவரின் சீக்ரட் ஆஃப் சக்சஸாகவும் இருக்கிறது.
இப்படி உலவும் மனிதர் தன் வாழ்நாளில் நடந்த முக்கியமானதொரு நிகழ்வை மறந்துவிட்டார் என்றால் அது அவரின் மனநிலையை எவ்வாறு பாதிக்கும்? மெமரி லாஸ் வந்தவராய், தன் சுயத்தை இழக்கிறார், நிலைதடுமாறுகிறார், பிசினஸிலும் சொதப்புகிறார். தன் கட்டுப்பாடின்றி காரியங்கள் செய்கிறார். அவர் நிஜமாகவே அந்த நிகழ்வை மறந்துவிட்டாரா? இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டாரா? ஒரு சுவாரஸ்யமான சைக்காலஜிக்கல் த்ரில்லராக விரிகிறது இந்தக் கதை.
இப்ஸித்தாக நடித்திருக்கும் அலி ஃபசல் அட்டகாசம் செய்திருக்கிறார். எப்படிப்பட்ட பிரச்னைகளையும் சமாளிக்கும் அந்த பிசினஸ் மூளை, தனிப்பட்ட ஒரு விஷயத்தில் சிக்கித் தவிக்கையில் அந்தப் போராட்டத்தைப் பரிதாபப்படும் வகையில் வெளிப்படுத்தியிருக்கிறார். ரேவின் பிரபலமான கதைகளில் ஒன்றான இது குறித்த கேள்விகூட NCERT தேர்வில் கேட்கப்பட்டிருக்கும்.
கதையின் சாராம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு கதையைத் தற்போதைய உலகுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து இருக்கின்றனர். அந்த ட்விஸ்ட் சுவாரஸ்யம்தான் என்றாலும் அது ஒன்றுகூடி வருவதற்கான காரணங்கள் லாஜிக் என்ன விலை என்று கேட்கின்றன. அதேபோல் கதை முழுக்கவே இப்ஸித்தின் பாடுகளாக விரிவதால் நாம் அந்தப் பாத்திரத்தோடு மட்டுமே பொருந்திப் போகிறோம். அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில் கிளைமேக்ஸ் அந்நியப்பட்டு நிற்கிறது. இருந்தும் அந்த ட்விஸ்டை வெளிப்படுத்தும் காட்சி படமாக்கப்பட்ட விதம் அருமை.
Bahrupiya (பல முகங்கள்) - ஶ்ரீஜித் முகர்ஜி
40-களில் இருக்கும் இந்திரசிஷ் ஷாவிற்கு எதிலுமே தோல்வி முகம். வீட்டு வாடகைக் கொடுக்க பணமில்லை, வேலையிலும் நாட்டமில்லை. போராட்டம் நிறைந்த வாழ்வில், தன் பாட்டியின் இறப்புக்குப் பின்னர், பூர்விக சொத்தில் ஒரு பெரும்பங்கு இவருக்கு வந்து சேருகிறது. கூடவே உலகத்தரம் வாய்ந்த ஒப்பனை எப்படிப் போடுவது என்ற ரகசியக் குறிப்புகள் அடங்கிய அவரின் பாட்டியின் புத்தகமும் இவரை வந்தடைகிறது. அதன்படி, மேக்கப் போட்டால் மொத்தமாக ஒருவரை அடையாளமே தெரியாமல் மாற்றலாம், வேறொருவரைப் போலவும் தன்னை மாற்றிக்கொள்ளலாம்.
இயல்பாகவே மேக்கப் ஆர்ட்டிஸ்டான இந்திரசிஷ், இந்தத் தந்திரத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களைப் பழிவாங்கும் படலத்தைத் தொடங்குகிறார். தனக்கு இதுவரை எதுவும் செய்யாத கடவுளை ஒதுக்கிவைத்துவிட்டு, தன்னையே கடவுளாக நினைத்துக் கொள்கிறார். இது எதில் போய் முடிந்தது?
இந்திரசிஷ்ஷாக கே.கே.மேனன் செம ஸ்கோரிங். தட்டுத்தடுமாறும் உடல்மொழி, வறண்டதொரு வாழ்க்கையை வாழும் விரக்தி எனத் தன் பாத்திரத்தின் அகநிலையை இயல்பாக நமக்குள் கடத்தியிருக்கிறார். காதலை வலியபோய் எதிர்பார்ப்பது, அதனால் ஏமாற்றம் அடைவது, மேலதிகாரியைப் பழிதீர்ப்பது என அவர் சரியானவர் இல்லை என்பதை பல இடங்களில் நாமுமே உணர்கிறோம்.
கதை நடக்கும் களமும், அங்கு உலாவும் மனிதர்களும், அந்தக் கலாசாரமும் முழுக்க முழுக்க மேற்கு வங்கத்தை நினைவூட்ட, கதாபாத்திரங்கள் எல்லோரும் இந்தியில் மட்டுமே பேசிக்கொண்டிருப்பது உறுத்துகிறது. என்னதான் உலகத்தர மேக்கப் என்றாலும் அதில் ஒரு நுண்ணிய ஃபேன்டஸி இழை எட்டிப்பார்க்கவே செய்கிறது. கே.கே.மேனனுக்கும் அந்தச் சாமியாருக்கும் நடக்கும் உரையாடல் பட்டாஸ் ரகம்! அது பேசும் நியாய தர்மங்களுக்காகவே இதை ரசிக்கலாம்.
Hungama Hai Kyon Barpa - அபிஷேக் சௌபே
பாடகர் மற்றும் கவிஞர் முசாபிர் அலியும், மல்யுத்தம் குறித்து எழுதும் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் அஸ்லாம் பைகும் ஓர் ரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். 'Kleptomania' (கண்ணில் பட்டதை திருட நினைப்பது) என்னும் நோயால் பாதிக்கப்பட்டவரான முசாபிர் அலி, 10 வருடங்களுக்கு முன்னர் இதே அஸ்லாம் பைகுவிடம், இதே போன்றதொரு ரயில் பயணத்தில் ஒரு பாக்கெட் கடிகாரத்தைத் திருடியதை நினைவுகூர்கிறார். தற்போது மாபெரும் பாடகராகிவிட்ட முசாபிர், துணிந்து தான் எப்போதோ செய்த தவற்றை ஒப்புக்கொண்டாரா, கணக்கை நேர் செய்தாரா?
இந்த ஆந்தாலஜியிலேயே சிம்பிளான கதை என்றால் இதுவாகத்தான் இருக்கும். முசாபிர் அலியாக மனோஜ் பாஜ்பாய், அஸ்லாம் பைகுவாக கஜ ராஜ் ராவ் என இரண்டு தேர்ந்த நடிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருக்கின்றனர். கதை மொத்தமும் இவர்களே பிரதானம் என்பதால், இருவருக்குமே நடிப்புத் திறனை வெளிப்படுத்த நிறையவே வாய்ப்பு இருந்திருக்கிறது. டென்னிஸ் விளையாடுவதுபோல, ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி ஸ்கோர் செய்திருக்கின்றனர்.
குறிப்பாக மனோஜ் பாஜ்பாய் தன் எண்ண ஓட்டங்களைக் கற்பனைக் காட்சிகளாக ஓடவிடும் இடங்களில் ஒரு படி மேலே செல்கிறார். இது ஒரு நல்ல கதை சொல்லும் யுக்தி. ஆனால், எப்படி யோசித்தாலும் ஒரு 20 நிமிட குறும்படமாக எடுத்து முடித்திருக்க வேண்டிய கதையை ஒரு மணிநேரத்துக்கு நீட்டி முழக்கியிருக்கிறார்கள். அதிலும் இறுதியில் வரும் அந்த அடகுக் கடை கிளைமேக்ஸ் எதற்கோ உவமையாகச் சொல்லப்பட்டு, அது செட்டாகாமல் தனித்து நிற்கிறது. மற்ற கதைகளைப் போல் பெரிதும் மெனக்கெடாமல் பெரும்பாலான காட்சிகள் ஒரு ரயில் பெட்டியிலேயே முடிந்திருக்கின்றன. அதுவே சற்று அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
Spotlight - வாசன் பாலா
கண்களைச் சுருக்கிக்கொண்டு நோட்டமிடும் ஒரேயொரு மேஜிக்கல் லுக்கை வைத்தே ஓவர்நைட்டில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆகிறார் விக் என்கிற விக்ரம் அரோரா. ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் அவரின் அடுத்த பட ஷூட்டிங் நடக்க, அங்கே புகழ்பெற்ற பாடகி மடோனா தங்கிய அறை வேண்டுமென அடம்பிடித்துத் தேர்ந்தெடுக்கிறார் விக். ஆனால், அங்கே தங்க வரும் புகழ்பெற்ற பெண் சாமியாரான 'திதி'யும் அதே அறையையே தேர்ந்தெடுக்க, விக்கும் அவரின் நண்பரும் வேறொரு அறைக்கு மாற்றப்படுகின்றனர். பாலிவுட் ஸ்டார் என்பதால் அதுவரை அவருக்கு அந்த ஹோட்டலில் கிடைத்துவந்த மரியாதை, திதி வந்ததும் அவர் பக்கம் சாய்ந்து விடுகிறது. தான் இழந்த முதல் மரியாதையை மீட்கப் போராடுகிறார் விக். இறுதியில் அவர் திதியை வென்றாரா?
நான் பெரியவனா, நீ பெரியவனா என ஒரு பெண் ஆன்மிகவாதியிடம் மோதும் சினிமா ஸ்டார் என்பதுதான் ஒன்லைன். புகழின் உச்சியில் இருக்கும் இருவரையும் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதாகத் தொடங்கும் கதை, பின்னர் தடம்மாறி வேறொரு பாதைக்குச் சென்று, இறுதியில் திக்கற்று நிற்கிறது. விக்ரம் அரோராவாக ஹர்ஷவர்தன் கபூர், ஒரு லுக்கை வைத்தே ஹீரோவானார் என்ற பாலிவுட் பகடி ரசிக்கும்படி இருந்தாலும், நிஜக்கதையிலும் அவர் ஒரே லுக்கில் திரிவது நியாயமே இல்லை பாஸ்! காதலியிடம் பிரேக்கப் செய்யும் காட்சியில் மட்டும் மிளிர்கிறார்.
ஆனால், அவரையும் தாண்டி சர்ப்ரைஸ் ஸ்கோர் செய்திருப்பது அவரின் நண்பராக வரும் சந்தன் ராய் சன்யால். அதேபோல், திதியாக ராதிகா மதன் ஒரு காட்சியில் தோன்றினாலும் சிறப்பாகவே செய்திருக்கிறார். "சினிமா வந்து 100 வருஷம்தான் ஆச்சு. ஆனா இங்க மதம் வந்து 10,000 வருஷமாச்சு!" என்ற ஒற்றை வசனம் கதை முழுவதையும் சொல்லிவிடுகிறது. ஆனால், கதை ஒரு பலமான கிளைமேக்ஸை எட்டிய பின்னரும் இரண்டாம் பாகம்போல ஃபேன்டஸி கணக்காகத் தொடர்ந்து நீள்வது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதைக்குக் கொஞ்சமேனும் கடிவாளம் போட்டிருக்கலாம்.
Also Read: The Little Things: ஹாலிவுட்டின் மூன்று முக்கிய நடிகர்கள் இணைந்த க்ரைம் த்ரில்லர் எப்படியிருக்கிறது?
மொத்தத்தில் நான்கில் இரண்டு கதைகளை நிச்சயம் பார்க்கலாம். பொதுவாகவே இந்த ஆந்தாலஜி சினிமாவின் பிரச்னை என்னவென்றால், மக்கள் அதில் எந்தக் கதை நன்றாக இருக்கிறது என்பதை மட்டும் தெரிந்துகொண்டு அந்தப் பக்கம் ஒதுங்கிவிடுவார்கள். அதே பிரச்னை 'ரே'வுக்கும் நிகழ வாய்ப்பிருக்கிறது.
இதைத் தாண்டி சத்யஜித் ரேவின் கதைகள் பெரும்பாலும் முதன்மை கதாபாத்திரம் ஒன்றின் பயணமாகவோ, அதன் ஆழ்நிலை எண்ணங்களாகவோ அல்லது அதன் பார்வை வழியாகவோதான் நகரும். இந்த 4 கதைகளுமே அதே பாணியில்தான் நகர்கின்றன. இந்தத் திரைக்கதை அமைப்பு, ஒரு சில கதைகளுக்குப் பொருந்தினாலும், இங்கே மற்ற கதாபாத்திரங்களின் மூலமும் சில ட்விஸ்ட்கள் ஏற்படுவதால், அவை நமக்கு எந்தவித அதிர்ச்சியையும் கொடுக்காமல் கடந்துவிடுகின்றன.
அதேபோல், சத்யஜித் ரேவின் கதைகளில் அது நடக்கும் காலமும் இடமும் கதையில் பெரும்பங்கு வகிக்கும். அதைத் தற்போது நடப்பதுபோல மாற்றி எடுப்பது சற்றே சவாலான விஷயம்தான். அதை இரண்டு கதைகள் தெளிவாகச் செய்திருக்கின்றன என்றால், மற்றவை சொதப்பியிருக்கின்றன. நடிப்பில் அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்க, திரைக்கதைக்கு மட்டும் இன்னமும் உழைத்திருந்தால் நான்கு கதைகளுமே நம்மை ஈர்த்திருக்கும்!
from விகடன்
Comments