பிரதமர், முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் செல்லும் இடங்களில் சாலைப்பாதுகாப்பு பணிகளில் பெண் போலீஸார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். சாலைகளில் பணிபுரியும் போது இவர்களுக்கு குடிதண்ணீர் கிடைப்பது சிரமமாகி வந்தது. இயற்கை உபாதைகள் கூட கழிக்க வசதிகளின்றி துயரத்தில் இருந்துவந்தனர். பணியிலிருக்கும் ஒரு பெண் காவலரின் அவதியை வலியுறுத்தி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கிய படம் 'மிக மிக அவசரம்'. அதில் பெண் போலீஸ் சாமந்தியாக ஶ்ரீப்ரியங்கா நடித்திருந்தார்.
இப்போது சாலைப்பாதுகாப்பு பணிகளில் பெண் போலீசை ஈடுபடுத்துவதில் இருந்து விலக்கு அறிவிக்கப்பட்டது குறித்து, ஶ்ரீப்ரியங்காவிடம் பேசினேன். இவர் இதற்கு முன் ‘கங்காரு’, ‘ஸ்கெட்ச்’ உள்பட சில படங்களில் நடித்தவர். இப்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார்.
"என்னோட சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள திருக்கனூர். அங்கதான் அப்பா குணசேகரன் ஜூஸ் கடை வெச்சிருந்தாங்க. அம்மா பூங்கொடி, அண்ணா பிரவீன் குமார், நான்... இதுதான் எங்க குடும்பம். அப்பா கடைக்கு ஜூஸ் குடிக்க வந்த இயக்குநர் ஆண்டாள் ரமேஷ் என்னைப் பார்த்துட்டு, அப்பாகிட்ட விசாரிச்சிருக்கார். `சினிமாவுல நடிக்க வெக்கிற எண்ணம் இருக்கா'ன்னு கேட்டிருக்கார். அப்பா தயங்க, நான் ஓகே சொன்னேன். இப்படித்தான் `ஆசாமி'ங்கிற படம் மூலமா திரைத்துறைக்குள் நுழைஞ்சேன். அந்தப் படத்துல எனக்கு அம்மன் வேஷம். இதுவரைக்கும் 10 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். இதுல ‘மிகமிக அவசரம்’ ரொம்ப ஸ்பெஷலாகிடுச்சு.
Also Read: காபி மட்டும் குடித்த மு.க.ஸ்டாலின்... இயக்குநர் ஷங்கர் மகள் திருமண விழாவின் முக்கிய மொமன்ட்ஸ்!
இப்படி ஓர் உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவிச்சுக்கறேன். நிஜத்தைப் பிரதிபலிக்கும் இப்படி ஒரு கதையில் நடிக்க முன்வந்ததுக்குக் காரணமே, பெண் காவலர்களுக்கு நல்ல விஷயம் நடக்கணும்னுதான். அரசின் இந்த அறிவிப்பால எங்க டீம்ல எல்லாருமே சந்தோஷமா இருக்கோம். நான் நடிகையாகாமல் ஒரு பெண் காவலர் சாமந்தியா இருந்திருந்தால், எப்படி இருந்திருப்பேனோ அப்படித்தான் இந்த கேரக்டரை உணர்ந்து நடிச்சேன். ரெஃபரன்ஸ் எடுக்கல. யாரையும் காப்பி எடுக்கல.
ஒரு சவாலா எடுத்துட்டு பண்ணினேன். உண்மையை சொல்லணும்னா நார்மலா நான் வீட்ல கூட ஹோம் ஒர்க் பண்ண மாட்டேன். ஒரு கேரக்டருக்காக ஹோம் ஒர்க் பண்ணி நடிச்சா அது செயற்கைத்தனமா இருக்கும்னு நான் நினைக்கறேன். இவ்ளோ பெரிய கேரக்டரை என்னால பண்ண முடியும்னு நம்பி கொடுத்த இயக்குநர் சுரேஷ் காமாட்சி சார், முத்துராமன் சார், நரேஷ், ஜேம்ஸ்டேவிட் சார், சக நடிகர்கள், டீம்னு எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கறேன். மாற்றம் வரணும்னு நினைச்சு எடுத்தோம். அதைப் போல நல்ல மாற்றமும் நிகழ்ந்தது சந்தோஷமா இருக்கு. இது தொடர்பா இன்னொரு அங்கீகாரமும் கிடைச்சிருக்கு. போன வருஷம் நார்வேல எனக்கு சிறந்த நடிகை விருது அறிவிச்சாங்க. இந்த வருஷம் அந்த விருது கைக்கு வரும்னு நம்புறேன்" என நெகிழ்கிறார் ஶ்ரீப்ரியங்கா.
from விகடன்
Comments