கொரோனா லாக்டெளன் சூழலுக்கு இடையே மிகச்சிறப்பாக நடந்துமுடிந்திருக்கிறது பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் மகள் டாக்டர் ஐஸ்வர்யாவின் திருமணம். கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ‘வெல்கம்' ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற இத்திருமணத்துக்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* இயக்குநர் ஷங்கரின் மாப்பிள்ளை ரோஹித் தாமோதரன் கிரிக்கெட் வீரர். புதுச்சேரி ரஞ்சி அணியின் கேப்டனாக விளையாடிவருகிறார் ரோஹித். டிஎன்பிஎல் தொடரில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர் இவரது தந்தை தாமோதரன் என்பது குறிப்பிடத்தக்கது. Siechem டெக்னால்ஜிஸ் என்கிற பெயரில் ஒயர்கள் மற்றும் கேபிள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை தாமோதரன் நடத்திவருகிறார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று சொல்லி புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கம் தொடங்கப்பட மிக முக்கிய காரணமாக இருந்தவர் இந்த தாமோதரன்.
* திருமணம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிட்டப்பட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே வெல்கம் ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின். அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பங்கேற்ற முதல் திரையுலக திருமணம் ஷங்கர் வீட்டு விசேஷம்தான்.
* மணமக்களுக்கு மரக்கன்று அடங்கிய பசுமைக்கூடையைப் பரிசாக அளித்தார் முதல்வர் ஸ்டாலின். அதில் ‘மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்' என்கிற வாசகம் இடம்பெற்றிருந்தது.
* திருமணத்துக்கு வந்த முதல்வரிடம் நன்றி தெரிவித்த ஷங்கர், அவர்களை சாப்பிடவும் அழைக்க… ‘’காஃபி மட்டும் சாப்பிடுறேன்’’ என ஃபில்டர் காபியை சுவைத்துவிட்டு புறப்பட்டிருக்கிறார்.
* திருமண விழாவில் முழுக்க முழுக்க சைவை உணவுகள்தான் வழங்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றுப்பரவல் முடிந்து சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியதும் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார் ஷங்கர். அதில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமா நடிகர்கள் மட்டுமல்லாது பாலிவுட்டில் இருந்தும் திரை நட்சத்திரங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
* திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பே லிங்குசாமி உள்ளிட்ட இயக்குநர் ஷங்கரின் நெருங்கிய நட்பு வட்டத்தினர் அவர் வீட்டிற்கே சென்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
from விகடன்
Comments