`லோகி' இனி தமிழும் பேசுவான்! மார்வெல்லின் புதிய சீரிஸில் என்ன ஸ்பெஷல்?

'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' நிகழ்த்திய சாதனைகளை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம். பல சூப்பர்ஹீரோக்கள் இணைந்து பாதி உலகை அழித்த தானோஸை வென்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்கும் கதை அது. அதில் சூப்பர்ஹீரோக்கள் ஒரு மிஷனுக்காக இறந்த காலம் செல்லும்போது தவறுதலாகக் குற்றவாளியான லோகி எனும் கடவுள் தப்பிக்க வழியை ஏற்படுத்திவிடுகிறார்கள். தோரின் சகோதரனான லோகி செல்லும் இடமெல்லாம் குழப்பம் விளைவிக்கும் கலகக்காரன்.

லோகியின் இந்தப் புதிய வெர்ஷன், எந்தக் காலத்துக்கும் பொருந்தாத ஒரு பிழை என்பதால் அவரைக் கூட்டிச் செல்கிறது கால மாறுபாடுகளைக் கண்காணிக்கும் அதிகார அமைப்பான டைம் வேரியன்ஸ் அத்தாரிட்டி (Time Variance Authority). அங்கிருக்கும் அதிகாரிகளுடன் இணைந்து புதிதாக உருவாகும் நேரச் சிக்கல்களைச் சரி செய்யவும் பலகாலமாக அவர்கள் தேடும் ஒரு குற்றவாளியைப் பிடிக்கவும் லோகி தயாராகிறான். குழப்பத்துக்குப் பெயர்போன லோகி அவர்களுடன் சேர்ந்து செய்யும் சாகசங்களே இந்த 'லோகி' வெப்சிரீஸின் கதை.

Loki | லோகி

வெப்சிரீஸின் தாக்கத்தை உணர்ந்து அதில் பிரமாண்டமானதொரு தடத்தைப் பதிக்க, தன் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் பிற கதாபாத்திரங்களின் கதைகளைச் சொல்ல, வெப்சிரீஸ் பக்கம் வந்திருக்கிறது டிஸ்னி. ஏற்கெனவே 'வாண்டாவிஷன்' மற்றும் 'ஃபால்கன் அண்டு தி வின்டர் சோல்ஜர்' வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது 'லோகி' தொடரும் ஒளிபரப்பாகத் தொடங்கி இருக்கிறது.

Also Read: Ray: சத்யஜித் ரேவின் 4 சிறுகதைகள்... நெட்ஃப்ளிக்ஸின் `ரே' ஆந்தாலஜி சிரீஸ் எப்படி இருக்கிறது?

ஒவ்வொரு புதன்கிழமையும், அதாவது வாரம் ஒரு எபிசோடு என, இதுவரை மூன்று எபிசோடுகள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் இந்தத் தொடரை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கண்டுகளிக்கலாம்.

கேட் ஹெரான் இயக்கத்தில், மைக்கேல் வால்ட்ரான் எழுதியிருக்கும் இந்தத் தொடரில் லோகியாக டாம் ஹிடில்ஸ்டன் நடிக்க, மோபியஸ் எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் ஓவன் வில்சன் நடிக்கிறார். அவருடன் குகு பாதா-ரா, சோபியா டி மார்டினோ, உன்மிமொசாகு மற்றும் ரிச்சர்ட் இ கிராண்ட் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

Loki | லோகி

சமீபத்தில் ஒரு வீடியோவில், டாம் ஹிடில்ஸ்டன் சென்னைக்கும் தனக்கும் உண்டான பந்தம் குறித்து பேசியுள்ளார். அதில் அவரின் அக்கா சென்னையில் பணிபுரிந்ததாகவும் அப்போது அவரைப் பார்க்க ஒரு சில முறை தான் சென்னை வந்ததாகவும், அது ஒரு சிறப்பான நகரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே பார்க்க முடிந்த 'லோகி'யை வரும் ஜூன் 30 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கண்டுகளிக்கலாம்.


from விகடன்

Comments