மதுர மக்கள்: "எம்ஜிஆருக்குச் சிலம்பம் கற்றுக்கொடுத்த குடும்பம்!"- சிலம்பம் வாத்தியார் சந்திரனின் கதை

"என்னோட இருபது வயசுல எம்ஜிஆரைப் பார்த்தேன். அவரைச் சந்திக்கிறதுக்கும் பேசி பழகுறதுக்கும் எங்களுக்கு தடையே வந்தது இல்ல. எங்க அப்பா பெரியப்பான்னு ரெண்டு பேரோட கம்பு சுத்துறதும் எம்ஜிஆருக்கு ரொம்பவே விருப்பம் அதனால கூடவே வச்சுக்கிட்டாரு!" - தன் பால்யகால நினைவுகளில் மூழ்கத் துவங்கிவிட்டார் சந்திரன் என்கிற கலிங்க வஸ்டாத். மதுரை சிலம்ப வாத்தியார். இவருடைய அப்பா மற்றும் பெரியப்பா ஆகியோரது சிலம்ப ஸ்டைலை கண்டு தன் கூடவே எம்ஜிஆர் வைத்துக்கொள்ள அவரது கடைசி காலம்வரை அவருடன் பயணித்த குடும்பம் சந்திரனுடையது.

உங்க குடும்பத்தோட பூர்விகம் பத்தி சொல்லுங்க..?

எம்ஜிஆருடன் சந்திரன் குடும்பம்

"என்னோட தாத்தா பேருதான் எனக்கும் வச்சாங்க. என்னோட தாத்தாவோட அப்பா மீனாட்சிதான் திருமலை நாயக்கரோட அரசவையில படைத்தளபதியா இருந்தாரு. அதுக்கு பிறகு எங்க தாத்தா கலிங்க வஸ்து பெங்களூருல மைசூர் ராஜாகூட இருந்தாரு. அதன் பிறகு இங்க மாடக்குளத்துல வந்து செட்டில் ஆகிட்டாங்க. எங்க தாத்தவுக்கு அஞ்சு பசங்க, ரெண்டு பொண்ணுங்க. பையன் பொண்ணுன்னு ஏழு பேருமே தற்காப்புக் கலைகள் கத்துக்கிட்டாங்க."

உங்க குடும்பத்துக்கு சினிமா வாய்ப்பு முதன்முதலில் எப்படிக் கிடைச்சது?

"முதன் முதலில் 'காவேரி'னு சிவாஜி படத்துல எங்க பெரியப்பா அழகிரிசாமிக்கு டூப் போட வாய்ப்பு கிடைச்சது. ஸ்டன்ட் மாஸ்டர் சோமு மூலமாத்தான் பெரியப்பாவுக்கு அந்த வாய்ப்பும் கிடைச்சது. அதே காலகட்டத்துல ஸ்டன்ட் மாஸ்டர் சோமுவுக்கு எம்ஜிஆர் படத்துக்கு ஸ்டண்ட பண்ண வாய்ப்பும் கிடைச்சது. அப்போ சிலம்பத்துல வகிடு எடுக்கிறதுல மத்த கலைஞர்கள் எல்லாம் ஒரு பக்கம் மட்டும் வகிடு எடுத்தப்போ எங்க சித்தப்பாவும் பெரியப்பாவும் மட்டும்தான் ரெண்டு பக்கமும் எடுத்துப்பண்ணிருக்காங்க. அதுல ரொம்ப ஆச்சர்யப்பட்டுப்போன எம்ஜிஆர், சித்தப்பா அழகிரி சாமிகிட்டயும் பெரியப்பா தர்மலிங்கத்திக்கிட்டயும் உரிமையோட பேசி பழகி கூட இருக்க வச்சுக்கிட்டாரு.

எம்ஜிஆருடன்...
எம்ஜிஆர் மற்றும் நம்பியாருடன்...

அதுமட்டும் இல்லாம தனக்கும் சிலம்பம் கத்துக்குடுக்க சொல்லி கேட்ருக்காரு. எங்க குடும்பத்துக்கு ஒளிவிளக்கே எம்ஜிஆர்தான். உலகத்துக்கே அவர்கிட்ட நெருங்க தயக்கம் இருக்கும். அதே தயக்கத்தோடதான் என்னோட இருபது வயசுல நான் அவரைப் பார்த்தேன். ஆனா அந்தப் பிம்பத்தை எல்லாம் உடைச்சு ரொம்ப நாள் பழகுன ஒருத்தர் மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டாரு தலைவரு. ராமாபுரம் தோட்டத்துல உள்ள அவரு வீட்டுக்குள்ள எங்களுக்கு போயிட்டு வர எந்த தடையுமே இருந்தது இல்ல. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு டூப்பெல்லாம் போட்டுருக்காரு எங்க அண்ணன்."

Also Read: மதுர மக்கள்: "கலைக்குப் பணம் தடையா இருக்கக்கூடாது. அதனால..." நாட்டுப்புறக் கலைஞர் தங்கப்பாண்டியன்

வம்சாவளியா சினிமாவுக்கு உழைச்சிருக்கீங்க... எப்படிச் சாத்தியமானது? இப்ப இந்தக் கலைக்காக நீங்க என்னென்ன முயற்சிகள் எடுத்துட்டு வர்றீங்க?

"எம்ஜிஆர் படங்களுக்குப் பிறகு, சினிமாவுக்கு எங்க குடும்பத்துல இருந்து தொடர்ச்சிய ஸ்டன்ட் மாஸ்டர்கள் போக ஆரம்பிச்சாங்க. என்னோட அண்ணன் ராஜாமணி போனாரு. பிறகு மாடக்குளம் ரவின்னு இன்னொரு அண்ணனும் போனாரு. 'தூரல் நின்னு போச்சு', 'தாவணிக் கனவுகள்'னு இயக்குநர் பாக்யராஜ் படங்கள்ல இருந்தார். அதுக்கு காரணம் என்னன்னா டைரக்டர் பாக்யராஜும் பெரியப்பாகிட்ட கத்துக்கிட்டவருதான்.

சிலம்பம் வாத்தியார் சந்திரன்

எல்லாருமே இதே மாடக்குளம் பகுதியில சிலம்பம் கத்துக்கிட்டவங்கதான். நாங்களும் இப்போ இதே இடத்துலதான் சிலம்பம் கத்துக்குடுத்துக்கிட்டு இருக்கோம். இந்தத் தற்காப்பு கலையை எல்லாருக்கும் கொண்டு சேர்க்கணும். எங்களுக்கு அப்பறம் எங்ககிட்ட கத்துக்கிட்ட பசங்க இன்னும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போயி சேர்ப்பாங்கன்னு நம்புறேன்!"



from விகடன்

Comments