தாட்சாவின் அறையில் தாட்சா, ஏஞ்சல், திவ்யா, மார்க்ஸ் அனைவரும் கூடி ஹர்ஷவர்தனை எப்படிச் சமாளிப்பது என விவாதித்துக் கொண்டிருந்தார்கள். மேனன் மட்டும் அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்டபடி அமர்ந்திருந்தார்.
தாட்சா மேனனை பார்த்து திரும்பியவள், “எங்களோட தாட்ஸ் எல்லாம் சொல்லிட்டோம். என்ன பண்ணலாம்னு நீங்கதான் சொல்லணும்” என்றாள்.
“அந்த ஹர்ஷவர்தனை நான் நேர்ல பார்க்கணும்னு சொல்லுங்க” என்றார் மேனன்.
“அவர்கிட்ட பேச ட்ரை பண்ணிட்டுதான் சார் இருக்கோம். போன் எடுக்க மாட்றாரு. அவரோட வக்கீல் கிட்ட பேசுனா எதுவா இருந்தாலும் மெயில் அனுப்புங்க... நேர்ல பேச எதுவும் இல்லைன்னு ரூடா பேசுறாரு சார்” என்றான் மார்க்ஸ்.
“இன்னைக்கு ஈவ்னிங்குள்ள அவரே போன் பண்ணி நம்மள மீட் பண்ணனும்னு சொல்லுவாரு...”
அனைவரும் மேனனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
“எப்படி சார்?” எனத் தயக்கமாக கேட்டான் மார்க்ஸ்.
“தர்மம் ஜெயிக்கும்னு உனக்கு நம்பிக்கையிருக்கா மார்க்ஸ்?” என கேட்டார் மேனன்.
மார்க்ஸ் அரைகுறையாகத் தலையாட்டினான்.
“தர்மம் கண்டிப்பா ஜெயிக்கும். என்ன சில சமயம் அது ஜெயிக்கிறதுக்கு அதர்மத்தோட உதவி தேவைப்படும்” எனச் சிரித்தார் மேனன்.
அனைவரும் அவரைப் புரியாமல் பார்த்தனர்.
“மதியானத்துக்குள்ள ஒரு ப்ரோமோ நம்ம சேனல்ல வரணும். அது வந்தா ஈவ்னிங் ஹர்ஷவர்தனே போன் பண்ணி என்ன பாக்கணும்னு சொல்வாரு.”
“என்ன ப்ரோமோ சார்?” எனக் கேட்டாள் திவ்யா.
மேனன் அர்த்தமாய் புன்னகைத்தார்.
மதிய உணவுக்கு பிறகான குட்டி தூக்கம் கலைந்து தன் வீட்டு மாடிப்படியில் இருந்து இறங்கிவந்தார் ஹர்ஷவர்தன்.
அவரது உதவியாளர் போனுடன் ஹாலில் காத்திருந்தான்.
“என்னடா யாராவது போன் பண்ணாங்களா?"
“ஏகப்பட்ட போன் சார்” என அவன் சொல்லும் போது அவன் கையிலிருந்த போன் அடித்தது. போனை எடுத்து பார்த்தவன்...
“சார் ஹெல்த் செகரட்டரி ராம் மோகன் போன்ல” என்றான்.
ஹர்ஷவர்தன் போனை வாங்கி காதில் வைத்தார்.
“ஹர்ஷா... கிரேட் ஷோ... மதியத்திலிருந்து ஒரு இருபது தடவையாவது வாய்ஸ் ஸ்டார் ப்ரோமோ பார்த்திருப்பேன். கண்ணு கலங்கிருச்சு. அருமையான ஷோல அசோசியேட் ஆயிருக்கேடா... வாழ்த்துகள்!”
‘என்ன ப்ரோமோ?” என புரியாமல் கேட்டார் ஹர்ஷவர்தன்.
“நீயே இன்னும் பாக்கலையா... முதல்ல பாரு... நான் அப்புறம் பேசுறேன்” என போனை கட் செய்தார் ராம்மோகன்.
“என்னடா ப்ரோமோ போட்டானுங்க?” எனக் குழப்பமும் கோபமுமாக உதவியாளரிடம் கேட்டார் ஹர்ஷவர்தன்.
“அது சார்... ப்ரோமோ... அது யூ-ட்யூப்ல இருக்கு சார். ப்ளே பண்றேன்” என உதவியாளர் அவசரமாக ரிமோட்டை எடுத்து ஹாலில் இருந்த பெரிய டிவியை ஆன் செய்தான்.
சண்முகத்தின் குடும்ப பின்னணி குறித்த வாய்ஸ் ஓவர், அதைத் தொடர்ந்து அவன் கணீரென பாடும், ‘’அம்மா என்றழைக்காத’’ பாடல் ப்ரோமோவில் ஓடியது. ‘’முதல் பரிசு 50 லட்சம் ஜெயிச்சா என்ன செய்வீங்க?’’ என சண்முகத்திடம் கேட்கப்பட, ‘’அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கி தருவேன்’’ என அப்பாவியாக சொல்லி அவன் கண் கலங்கினான். “வாய்ஸ் ஸ்டார் கனவுகளின் குரல்...” என ப்ரோமோ முடிந்தது.
அதிர்ந்து போய் அமர்ந்திருந்தார் ஹர்ஷவர்தன்.
“மூணு மணி நேரத்துல 2 மில்லியன் வியூஸ். அவனை செலக்ட் பண்ண உங்களை பாராட்டி தள்றாங்க கமென்ட்ஸ்ல” என்றான் உதவியாளன்.
மீண்டும் அவன் கையிலிருக்கும் போன் அடித்தது. ஹர்ஷவர்தன் திரும்பி உதவியாளனை பார்த்தார்.
“அண்ணாச்சி பேசுறாரு” என அவன் போனை நீட்டினான்.
“அய்யா... வணக்கம் நல்லா இருக்கீங்களா?” என்றார் அண்ணாச்சி மறுமுனையில்.
“சொல்லுங்க அண்ணாச்சி நல்லா இருக்கேன்” என்றார் ஹர்ஷவர்தன்.
“ஒண்ணும் இல்ல... வாய்ஸ் ஸ்டார் ப்ரோமோ பார்த்தேன். மனசுக்கு சங்கடமா போச்சு. நம்ம கடையில இருந்து இலவசமா அந்த சண்முகத்தோட அம்மாவுக்கு 100 புடவை தரலாம்னு இருக்கேன். அத நீங்க உங்க கையால குடுக்கணும்னுதான் போன் பண்ணேன்.”
“பண்ணிரலாம்” என போனைத் தயக்கமாகத் துண்டித்தார் ஹர்ஷவர்தன்.
ஒரே ப்ரோமோ மூலம் சண்முகம் ஒட்டுமொத்த தமிழகத்தின் அனுதாபத்தை, ஆதரவை சம்பாதித்திருந்தான். இப்போது அவனுக்கு எதிராக தான் வீசும் கற்கள் அனைத்தும் தன்னை நோக்கி திரும்பும் என்பது ஹர்ஷவர்தனுக்குப் புரிந்தது.
“சேனலுக்கு போன் பண்ணி சம்பந்தப்பட்டவங்கள பார்க்கணும்னு சொல்லு” என்றார் ஹர்ஷவர்தன். அவரது குரலில் கர்வம் குறைந்து பயம் தெரிந்தது.
ஹர்ஷவர்தனும் மேனனும் அவரது வீட்டின் வெளிப்புறமிருந்த தோட்டத்தில் எதிர் எதிரே அமர்ந்திருந்தார்கள். கடற்கரையை ஒட்டிய பெரிய வீடு அவருடையது. கடல் காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. எதிரே டீப்பாயில் இருந்த காபி ஆறிக் கொண்டிருந்தது.
ஹர்ஷவர்தன் முகம் இருண்டு போயிருந்தது. மேனன் வழக்கமான புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.
“சாமார்த்தியமா என்ன மடக்கிட்டதா நினைப்பா?”
“இல்ல சார்... இந்த ஷோல சேனல் மூணு கோடி ரூபா இன்வெஸ்ட் பண்ணியிருக்கு. அந்த ஷோவை நல்லபடியா டிவியில் கொண்டு வர வேண்டியது என்னோட பொறுப்பு. அதைத்தான் நான் செய்யுறேன்.”
“இப்பவும் நான் இந்த ஷோவுக்கு ஸ்டே வாங்க முடியும்!”
“நீங்க ஸ்டே வாங்குனீங்கன்னா எதுக்காக நீங்க ஸ்டே வாங்குனீங்கன்ற காரணத்த நான் எல்லாருக்கும் சொல்ல வேண்டியதிருக்கும்” என்றார் மேனன்.
ஹர்ஷவர்தன் அவரை உற்றுப் பார்த்தார்.
“கோடியில ஒருத்தன் நான். ஜனங்க என்ன சப்போர்ட் பண்ணுவாங்களா இல்ல அந்த சண்முகத்தை சப்போர்ட் பண்ணுவாங்களா?”
“போராடிக்கிட்டு இருக்கிற கோடி பேர்ல சான்ஸ் கிடைச்ச ஒரு ஆள் நீங்க. சான்ஸ் கிடைக்காம இன்னும் கஷ்டப்படுற மீதி பேர்ல சண்முகம் ஒரு ஆள். கண்டிப்பா ஜனங்க அவனைதான் சப்போர்ட் பண்ணுவாங்க. அவனைதான் அவங்கள்ல ஒருத்தனா பார்ப்பாங்க!”
“ஒரே ப்ரோமோல அவனை ஹீரோவாக்கி என்னை வில்லனாக்கலாம்னு பாக்குறீங்களா?”
“சண்முகம் ஹீரோவாயிட்டான். நீங்க வில்லனாகுறதோ இல்ல விலகிக்கிறதோ உங்க கையிலதான் இருக்கு” என்றார் மேனன்.
ஹர்ஷவர்தன் தொண்டையை செருமிக் கொண்டார். தோல்வியை ஒப்புக்கொள்ள அவரது ஈகோ மறுத்தது.
“எவனோ ஒருத்தனுக்காக ஏன்யா இவ்வளவு போராடுறீங்க?”
“தப்புன்னு தெரியறப்ப வாயை மூடிக்கிட்டு இருந்தா அது அப்படியே பழகிடும் சார்” என்றார் மேனன்.
ஹர்ஷவர்தன் கோபத்தில் பல்லைக் கடித்தார்.
“பெரிய ஆள் சார் நீங்க... உங்க முன்னால அந்த சண்முகம் எல்லாம் ஒரு சின்ன புள்ளி. அவனோட நீங்க மல்லுக்கட்டுறது உங்க தகுதிக்கு நல்லாவா இருக்கு. பேர் புகழ் வசதி பதவி இருக்கிறவன் பெரியாள் கிடையாது. பெருந்தன்மையா நடந்துகிறவன்தான் பெரியாள்.”
மேனனின் குரலில் சற்று கடுமை ஏறியிருந்தது.
“சண்முகம் வேற யாரும் இல்ல... நாற்பது வருஷத்துக்கு முன்னால வாய்ப்பு தேடி சென்னைக்கு ஓடி வந்த உங்களோட ஜெராக்ஸ்தான் சார் அவன். அன்னைக்கு உங்களை நம்பி ஒருத்தர் வாய்ப்பு குடுத்தாரு. இன்னைக்கு நீங்க இந்த நிலைமையில இருக்கீங்க. 100 சண்முகத்தை உருவாக்குற வாய்ப்பு இப்ப உங்களுக்கு கடவுள் கொடுத்திருக்காரு. நூறில்ல... ஆயிரம் சண்முகத்தை உருவாக்குங்க சார். அத விட்டுட்டு ஒருத்தன அழிக்கணும்னு ஏன் இவ்வளவு அடம் பிடிக்கிறீங்க?”
ஹர்ஷவர்தன் முகம் மாறி மேனனைப் பார்த்தார்.
“உங்களுக்கு வித்தையை கத்து கொடுத்தாரே ஒருத்தர் அவருக்கு எப்பவாவது நீங்க நன்றி சொல்லி இருக்கீங்களா… வாய்ப்பு கிடைச்சிருக்காது. ஏன்னா நீங்க பெரியாளாகுறப்ப அவர் போய் சேர்ந்திருப்பாரு. அவர் உங்களுக்கு கத்து கொடுத்ததை மத்தவங்களுக்கு கத்துக் கொடுக்கிறதுதான் நீங்க உங்க குருவுக்கு சொல்ற நன்றி. இது உதவியல்ல, கடமை. முடியாதுன்னு சொல்றது நன்றி கெட்டத்தனம்!”
ஹர்ஷவர்தன் மௌனமாக இருந்தார்.
“நம்ம வாழ்க்கையை நாம எப்படி வேணா வாழலாம். ஆனா, கடவுள் சில சமயத்துல மத்தவங்களோட வாழ்க்கையை நம்ம கையில தருவாரு. அதை நம்ம இஷ்டத்துக்கு வாழ முடியாது. ரொம்ப பத்திரமா பார்த்துக்கணும். இரவல் சங்கிலியை நம்ம சங்கிலியை விட பத்திரமா பார்த்துப்பமே, அப்படி பார்த்துக்கணும்!”
ஹார்ஷவர்தன் மேனனை பார்த்தபடி இருந்தார்.
“ஒருத்தன் வாழ்க்கையை மாத்துற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அத சொர்க்கமா மாத்துங்க சார். அத நரகமாக்கி பாக்குறதுல உங்களுக்கு என்ன சந்தோஷம்?”
“பேசி முடிச்சிட்டீங்களா?”
“அது நீங்க சொல்லப்போற பதில்ல இருக்கு”
“என் முடிவ நான் மாத்திக்க போறதில்ல... என்ன பண்ணுவீங்க?”
மேனனுக்கு முதன் முறையாக கோபம் வந்தது.
உலகத்தில் சகித்துக் கொள்ள முடியாத குற்றம் முட்டாள்தனம். தவறு எனத் தெரிந்தும் அதை செய்தே தீருவேன் எனப் பிடிவாதம் பிடிப்பவர்களை என்ன செய்யலாம்? வளைய மறுப்பதை உடைப்பதை தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தார் மேனன்.
“நீங்க சண்முகத்தை பத்தி பேசுன வீடியோ ஒண்ணு இருக்கு பாக்குறீங்களா?” என மேனன் தனது போனை எடுத்து வீடியோவை ப்ளே செய்தார்.
“சண்முகம் ஒரு பட்டிக்காட்டான். அவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு… யார் இந்த ஷோவுக்கு வரணும், யார் வரக்கூடாதுன்னுலாம் ஒரு ஃபில்டரே இல்லையே... இவனுங்களுக்களாம் எதுக்கு இந்த மியூசிக்… இவன் பாடுறதை நான் ரசிச்சி கேட்டு கைதட்டி பாராட்டணுமா… *******” என கெட்ட வார்த்தையோடு தான் ஷூட்டிங்கில் கோபமாக பேசிய வீடியோவை பார்த்து ஆடிப்போனார் ஹர்ஷவர்தன்.
“இத... இத... எப்படி எடுத்தீங்க?”
“உங்களை சுத்தி அவ்ளோ கேமரா இருந்தது... அங்க யார் பேசினாலும் ரெக்கார்ட் ஆகும்!”
“இதை சேனல்ல போட்டா நான் உங்கள Sue பண்ணுவேன்” என சொல்லும் போதே ஹர்ஷவர்தன் உடல் பதற்றத்தில் அதிர்ந்தது.
“நான் ஏன் சேனல்ல போடப் போறேன். ஷூட்டிங் வந்த யாரோ ஒருத்தர் மொபைல்ல ஷூட் பண்ணதுன்னு சொல்லி இதை சோஷியல் மீடியால லீக் பண்ணிடுவேன். ஃபேஸ்புக், ட்விட்டர்னு இந்த வீடியோ நிமிஷத்துல வைரலாகிடும். இத்தனை வருஷமா நீங்க சம்பாதிச்ச பேர் புகழ் கர்வம் எல்லாம் சில மணி நேரத்துல தரைமட்டமாகிடும்” என்றார் மேனன்.
“இது... இது அநியாயம்!”
“நீங்க பண்ணதுதான் அநியாயம். நான் ஒன்னும் பொய்யான வீடியோவை போடலையே... நீங்க பேசுனதைத்தான் போடுறேன்.”
ஹர்ஷ்வர்தன் பதற்றமாகப் பார்த்தார்.
“நான் கிளம்பறேன். இங்க இருந்து ஆபிஸ் போறதுக்கு ஒரு மணி நேரமாகும். அதுக்குள்ள அந்த வக்கீல் நோட்டீஸை வாபஸ் வாங்கியிருக்கணும். ஷோவை நீங்க இல்லாம தொடர்ந்து பண்றதுல அப்ஜக்ஷன் இல்லைன்னு ஒரு லெட்டரும் வேணும்.”
“என் வக்கீல் கிட்ட பேசுங்க!”
“நான் ஏன்யா பேசணும். நீ பேசு... ‘உங்களுக்கு உடம்பு சரியில்ல... அதனால நீங்க ஷோவ கண்டினியூ பண்ண முடியல’ன்னு நான் சொல்லிடுறேன். உன்னோட இமேஜுக்கு எந்தப் பாதிப்பும் வராம நான் பாத்துக்குறேன். இதுதான் டீல். இதுக்கு மேல இதுல நெகோஷியேட் பண்ண எதுவுமில்ல” என மேனன் கோபமாக எழுந்தவர் திரும்பி ஹர்ஷவர்தனை பார்த்து,
“இந்த வீடியோ மட்டும் வெளிய வந்தா ஷோவோட டிஆர்பி வேற லெவல்ல போகும். ஆனா, அத நான் பண்ணல. அப்புறம் உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கு. என்னை உன்ன மாதிரி ஆக்கிடாத... நீ தாங்க மாட்ட” எனச் சொல்லிவிட்டு மேனன் நகர்ந்தார்.
கெட்டவர்களால் எப்போதும் நல்லவர்களைத்தான் சங்கடத்திற்குள்ளாக்க முடியும். இன்னொரு கெட்டவனை சமாளிக்க அவர்களால் முடியாது.
ஆடிப்போய் அமர்ந்திருந்தார் ஹர்ஷ்வர்தன்.
மேனன் ஆபிஸுக்குள் நுழைந்த போது ரிசப்ஷனில் காத்திருந்த அனைவரும் கரவொலி எழுப்பினர்.
மேனன் புன்னகையுடன் “என்னாச்சு?” எனக் கேட்டார்.
“அத நாங்க தான் கேட்கணும் மேனன். நமக்கு அனுப்புன வக்கீல் நோட்டீஸ் வாபஸ் வாங்கிட்டாங்க. ஷோவை கன்டின்யூ பண்ண நோ அப்ஜெக்ஷன் சொல்லிட்டாங்க. அப்படி என்ன சொன்னீங்க அவர் கிட்ட!”
“உண்மைய சொன்னேன்” என ‘பாட்ஷா’ ரஜினி ஸ்டைலில் நெல்லையப்பன் சொல்ல அனைவரும் சிரித்தனர்.
“ஆமா... உண்மைய சொன்னேன் ஒத்துகிட்டாரு” எனச் சிரித்தார் மேனன்.
“சார் அவரே ஷோல ஜட்ஜா கன்டின்யூ பண்றேன்னு சொல்றாரு சார்” என்றாள் ஏஞ்சல்.
“வேணாம் ஏஞ்சல்” என யோசிக்காமல் சொன்னார் மேனன்.
அன்பால் மனம் திருந்தியவர்களுக்கு இன்னொரு வாய்ப்பளிப்பது மனிதாபிமானம். அடித்து திருத்தியவர்களை விட்டு விலகியிருப்பதே புத்திசாலித்தனம். அவன் மீண்டும் நம்மை திருப்பி அடிப்பதற்கான சமயத்திற்காகக் காத்திருக்கக்கூடும்.
ராயும், திவ்யாவும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் அமர்ந்திருந்தனர்.
“சொல்லு ஏதோ பேசணும்னு சொன்னியே” என்றாள் திவ்யா.
“இன்னொரு சான்ஸ் குடு திவ்யா” என சிரித்தான் ராய்.
திவ்யாவுக்கு சிரிப்பு வந்தது.
“என்ன ஸ்கூல் அட்மிஷன் மாதிரி கேக்குற!”
ராயும் சிரித்தான்.
“ராய்... இது சரியா வரும்னு எனக்கு தோணல. நான் அதைக் கடந்து வந்துட்டேன்” என்றாள் திவ்யா.
“என்னால முடியல திவ்யா” என்ற ராயின் குரலில் நிஜமான வருத்தம் இருந்தது.
திவ்யா என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியாயிருந்தாள்.
“என்ன பிடிச்சதுக்கு சில காரணங்கள் உன்கிட்ட இருந்திச்சுதான?” எனக் கேட்டான் ராய்.
“பிடிக்காம போனதுக்கும் சில காரணங்கள் இருந்திச்சில்ல” என்றாள் திவ்யா.
“யெஸ்... பிடிச்சத மட்டும் யோசி... உனக்கு பிடிக்காத விஷயங்களை நான் மாத்திக்கிறேன்... என்ன சொல்ற?”
“ராய்” என திவ்யா என்ன சொல்வதென தெரியாமல் யோசித்தாள்.
“எனக்கு புரியுது... ஒண்ணும் அவசரம் இல்ல... இப்போதைக்கு வேண்டாம்னு ஃபுல்ஸ்டாப் வச்சிடாத அவ்வளவுதான். இந்த இரண்டாவது ரவுண்ட் எப்படி போகுதுன்னு பாத்துட்டு முடிவு பண்ணலாம்… ஓகே வா?”
“ஒகே” என அவனது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு திவ்யா, சாப்பிடத் தொடங்க அவளின் போனடித்தது.
“மார்க்ஸ் நான் லன்ச்சுக்கு வெளிய வந்திருக்கேன். திரும்ப கூப்புடுறேன்” என போனை வைத்துவிட்டு மீண்டும் சாப்பிடத் தொடங்கினாள்.
ராய் அவளையே யோசனையாக பார்த்தபடி இருந்தான்.
மருத்துவமனை வாசலில் கார் வந்து நின்றது. ஒருபுறம் இருந்து பாண்டியன் இறங்கி வேகமாக ஓடி வந்து மறுபக்கக் கதவை திறந்தான். மேகலா பாண்டியனின் கையை பிடித்தபடி மெதுவாக இறங்கினாள். கார் நகர்ந்து சென்றது.
“ஆபிஸ் டயத்துல இப்படி என்கூட ஆஸ்பிட்டல்ல இருக்கீங்களே, யாரும் கேட்க மாட்டாங்களா?” எனக் கேட்டாள் மேகலா.
“மார்க்ஸ்தான் உங்களை பாத்துக்க சொல்லி அனுப்பியிருக்காரு. அதனால பிரச்னை இல்லை” என்றான் பாண்டியன்.
மேகலா மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். ‘இன்னும் எவ்வளவு நாள் இந்த பொய்யை மெயிண்டெயின் பண்றன்னு பார்ப்போம்’ என்றது அவளது மனது.
அங்கிருந்து வார்ட்பாய் ஒருவனிடம் “தம்பி... வீல் சேர் கொண்டு வாங்களேன்” என்றான் பாண்டியன்.
“எந்த ஃப்ளோர் போகணும் சார்?” எனக் கேட்டான் வார்ட் பாய்.
“செகண்ட் ஃப்ளோர்” என்றாள் மேகலா.
“லிஃப்ட் மெயின்டனன்ஸ் வேலை நடக்குது. ஒரு மணி நேரமாகும்!”
“தம்பி இன்னும் பத்து நிமிஷத்தில அப்பாய்ன்மென்ட்பா” எனக் கோபமாக சொன்னான் பாண்டியன்.
“வீல் சேர் மாடிப்படி ஏறாது சார். அவ்வளவு அவசரம்னா நீங்கதான் அவங்களைத் தூக்கிட்டு போகணும்” எனச் சொல்லிவிட்டு நகர்ந்தான் வார்ட் பாய்.
மேகலா சிரித்தாள். சட்டென பாண்டியனை வெட்கம் சூழ்ந்தது.
“என்ன சார் என்ன தூக்கிட்டு போறீங்களா?” என சிரித்தபடி கேட்டாள் மேகலா.
“இல்லைங்க அது சரியா வராது... நான்” என அவன் ஏதோ சொல்ல வந்தான்.
“நீங்க என்ன தூக்கிட்டு போக மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்” என்றாள் மேகலா.
“ஏன் அன்னைக்கு உங்க வீட்ல நான் உங்கள தூக்கிட்டு போகலையா?”
“அது வேற சார். வீட்டுக்குள்ள யாரும் பார்க்கல... பப்ளிக்குல அதுவும் ஒரு பிரச்னையான நடிகையை தூக்கிட்டு போனா உங்க இமேஜ் என்னாகும்!”
“நான் என் இமேஜிக்காக யோசிக்கல... நீங்க ஒரு பாப்புலரான ஆள்... உங்க இமேஜிக்காதான் பார்த்தேன்.”
“சும்மா சமாளிக்காதிங்க சார்” என்றாள் மேகலா.
பாண்டியன் அவள் அருகில் வந்தவன் அவளை ஒரு குழந்தையைப் போல இரு கையிலும் தூக்கிக் கொண்டான். மேகலா தடுமாறி கரங்களால் அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள்.
பாண்டியன் அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைய மொத்த மருத்துவமனையும் அவர்களை வேடிக்கை பார்த்தது.
நர்ஸ் ஒருத்தி அவசரமாக தனது போனில் அவர்களை வீடியோ எடுக்க முயன்றதை ஓரக் கண்ணால் கவனித்தான் பாண்டியன். அதை அலட்சியம் செய்தவனாக அவன் மாடிப்படியேற துவங்கினான்.
“நான் ரொம்ப வெயிட்டா இருக்கேனா?” எனப் புன்னகைத்தாள் மேகலா.
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல” என்றான் பாண்டியன்.
“எனக்கு ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருது...”
“எனக்கும்” என வெட்கமாகச் சிரித்தான் பாண்டியன்.
“கையில் மிதக்கும் கனவா நீ... கை கால் முளைத்த காற்றா நீ” என மெல்லிய குரலில் பாடினாள் மேகலா.
“அந்த அளவுக்கெல்லாம் நீங்க லேசா இல்ல” என சிரித்தான் பாண்டியன். மேகலாவும் சிரித்தாள்.
மார்க்ஸ் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தான். ராய் கையில் சிகரெட்டுடன் வந்தவன் ஒரு கணம் மார்க்ஸைப் பார்த்து தயங்கி பின் புன்னகைத்தவாறு சிகரெட்டை பற்றவைத்தான்.
இருவருக்கும் இடையில் ஒரு சின்ன மெளனம் நிலவியது. "நீ யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருன்னு உனக்கு தெரியும்” என்பதான மௌனம் அது.
“நீங்க திவ்யாவுக்கு போன் பண்ணும்போது நாங்க ரெண்டு பேரும்தான் லன்ச்சுல இருந்தோம்” என்றான் ராய்.
கடுப்பை மறைத்தபடி “ஓ” என்றான் மார்க்ஸ்.
“நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”
“சொல்லுங்க ராய்” என்றான் மார்க்ஸ்.
“நானும் திவ்யாவும் கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தோம்.”
ராய் சட்டென அப்படி நேரடியாகப் பேசுவான் என மார்க்ஸ் எதிர்பார்க்கவில்லை.
“நீங்க ரெண்டு பேரும் காதலிச்சதா திவ்யா சொல்லியிருக்காங்க” என்றான் மார்க்ஸ்.
“இல்ல... இல்ல... அதுக்கும் மேல... பேரன்ட்ஸ் எல்லாம் பேசி முடிவெடுத்து... கல்யாணத்துக்கு அப்புறம் எங்க தங்கலாம்னு வீடு எல்லாம் கூட பார்த்துட்டோம்” என்றான் ராய்.
“ஓ”
“நடுவுல எங்களுக்குள்ள சின்ன சின்ன குழப்பங்கள்... திரும்பவும் அதையெல்லாம் சரி பண்ணலாம்னுதான் நான் சென்னைக்கே வந்தேன்.”
“இதெல்லாம் என்கிட்ட ஏன் சொல்றீங்க?” எனக் கேட்டான் மார்க்ஸ்.
“எதுக்கு சுத்தி வளைச்சிக்கிட்டு... நேராவே சொல்றேன்... உங்களுக்கு திவ்யா மேல ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்கிறதா திவ்யா சொன்னா.... அதுக்கு வாய்ப்பில்ல... நீங்க டிசப்பாயின்ட் ஆக வேணாம்னுதான் சொல்ல வந்தேன்.”
மார்க்ஸ் சிரித்தான்.
“ஐ நோ.. இது இப்படி பேச வேண்டிய விஷயம் கிடையாதுதான். இருந்தாலும் ஒப்பனா பேசுறது தப்பில்லைன்னு தோணிச்சு அதான்.”
“ராய்... நீங்க என்ன பத்தி ஓப்பனா பேசலாம், நான் உங்கள பத்தி ஓப்பனா பேசலாம். ஆனா, இங்க இல்லாத இன்னொருத்தர் பத்தி ஓப்பனா பேச நமக்கு ரைட்ஸ் கிடையாது.”
ராய் முகம் மாறினான்.
“நீங்க கையில வச்சிருக்கிற பொருள் நான் ஏற்கெனவே செலக்ட் பண்ணது... அதை என் கிட்ட குடுத்திருங்கன்னு கேட்குறதுக்கு திவ்யா உயிரில்லாத பொருள் கிடையாது!”
“இல்ல நான் என்ன சொல்ல வந்தேன்னா...” என ராய் தடுமாற,
“திவ்யாவுக்கு யார் வேணும்னு திவ்யாதான் முடிவு பண்ணனும். அவ எனக்கு உனக்குன்னு நம்ம சண்டை போடுறதுல பிரயோஜனமில்லை... அதனால இத பத்தி நாம இனி பேச வேண்டாம்” என மார்க்ஸ் நகர முற்பட, “ஒரு நிமிஷம்” என்றான் ராய்.
மார்க்ஸ் நின்று திரும்பினான்.
“5 வருஷ காதல். எங்களுக்கு நடுவுல நிறைய மொமன்ட்ஸ் இருக்கு. அவ்வளவு ஈஸியா அதை ரெண்டு பேராலயும் தாண்டி போகமுடியாது. நாங்க திரும்பவும் சேருவோம். வெட்டிங்குக்கு உங்களுக்கு இன்விட்டேஷன் அனுப்புறேன்.”
“அப்படி ஒண்ணு நடந்தா கண்டிப்பா உன் கல்யாணத்துல வந்து ‘ஆனந்தம் ஆனந்தம் பாடும்’னு நான் பாட்டு பாடுறேன். மாத்தி நடந்தா என் கல்யாணத்துக்கு வந்து நீ பாடணும். தமிழ்ப் பாட்டு பிரமாதமான லிரிக்ஸ்... நீ கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணி வச்சுக்கோ” எனச் சொல்லிவிட்டு நகர்ந்தான் மார்க்ஸ்.
மார்க்ஸ் போவதை முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் ராய்.
- Stay Tuned...
from விகடன்
Comments