அனைவரும் காத்திருந்தார்கள். இரவு மணி பன்னிரண்டை தாண்டியிருந்தது. ஐம்பது போட்டியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் அந்த ஐம்பது பேரில் தேர்வாகப்போகும் இருபது பேர் யார் எனத் தெரிந்து கொள்வதற்காக ஆடிட்டோரியத்தில் மெல்லிய படபடப்புடன் அமர்ந்திருந்தார்கள். மேக்கப் அறையில் ஹர்ஷவர்தன் கண்களை மூடி சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தார்.
ஆடிட்டோரியத்தின் வெளியே இருந்த மைதானத்தில் தாட்சா, திவ்யா, ஏஞ்சல், மார்க்ஸ் என மொத்த ஆரஞ்ச் டிவி ஆட்களும் மேனன் என்ன சொல்லப் போகிறார் என யோசித்தபடி நின்றிருந்தார்கள். அவர்களுக்கு சற்று தள்ளி மேனன் அமைதியாக அங்குமிங்கும் நடந்தபடியிருந்தார். மைதானம் இருளாக இருந்ததால் அவரது முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் புகைக்கிற போதெல்லாம் சிகரெட் நுனியின் நெருப்பு வெளிச்சம் பிரகாசமாவது மட்டும் தெரிந்தது.
இது போன்றதொரு சூழ்நிலையை ஏதேனும் ஒரு தருணத்தில் எல்லோரும் சந்திக்க நேரிடும். நியாயத்திற்கும் தேவைக்கும் நடுவில் முடிவெடுக்க வேண்டிய தருணம் அது. உங்கள் மனதுக்கும் அறிவுக்குமிடையில் நடக்கிற போரட்டத்தில் நீங்கள் எந்த பக்கம் நிற்பதென தீர்மானிக்க வேண்டிய சமயம் அது. உங்களது ஒரு சொல் ஒருவனது வாழ்க்கையையே மாற்றிவிடும். ஆனால், அந்த ஒரு சொல்லுக்கு நீங்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியதிருக்கும். இது போன்ற தருணங்களில் நாம் எடுக்கிற முடிவுகள்தான் நாம் யார் என்பதை தீர்மானிக்கின்றன.
மேனன் நடந்து அருகில் வந்தார். அனைவரும் அவர் என்ன சொல்லப்போகிறார் என அவரது முகத்தை பார்த்தபடி இருந்தார்கள்.
“அவரோட லிஸ்ட்ல இருக்குற 20 பேரையே அனவுன்ஸ் பண்ண சொல்லுங்க” என்றார் மேனன்.
மேனன் அப்படிச் சொல்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
“சார்” என மார்க்ஸ் ஏதோ சொல்ல வந்தான். “நேரமாகுது மார்க்ஸ்... எல்லாரும் காத்திருக்காங்க... ஷூட்டிங்கை முடிக்கலாம்” என்றார் மேனன்.
பதில் சொல்லாமல் மார்க்ஸ் அங்கிருந்து நகர்ந்தான். ஏஞ்சல் ஹர்ஷவர்தனை அழைக்க ஓடினாள்.
தாட்சா மேனனைத் திரும்பிப் பார்த்தாள். அவர் என்ன யோசிக்கிறார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஹர்ஷவர்தன் தனது கையில் இருந்த பெயர் பட்டியலைத் தந்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் பார்வதி அடுத்த சுற்றுக்கு தேர்வான போட்டியாளர்களின் பெயர்களை மேடையில் அறிவிக்கத் துவங்கினாள்.
ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தாட்சாவின் கையால் சான்றிதழையும் பதக்கம் ஒன்றையும் வாங்கிக் கொண்டார்கள். பின் எதிரில் நடுவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து ஹர்ஷவர்தன் மற்றும் இதர நடுவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தங்களது குடும்பத்தினர் அருகே சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.
“என்னையா நம்ம டைகர் மேனன் இப்படி பேக் பல்டி அடிச்சிட்டாரு?” என்றார் நெல்லையப்பன்.
“அதுதான் மாமா ஒண்ணும் புரியல. தலையே ஷாக்லதான் இருக்கு” என்றான் பாண்டியன்.
பெயர்கள் அறிவிக்கப்படும் நிகழ்வு தொடர்ந்தது.
மார்க்ஸ் ஓரக் கண்ணால் சண்முகத்தை பார்த்தபடியிருந்தான். ஒவ்வொரு பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்னும் அது தன் பேராக இருக்குமா என்கிற எதிர்பார்ப்பும் படபடப்பும் அவன் முகத்தில் தெரிந்தது. அது தனது பெயரில்லை எனத் தெரிந்ததும் ஏமாற்றத்தில் அது சுருங்கியது.
கனத்த இதயத்துடன் மார்க்ஸ் அவனைப் பார்த்தபடி இருந்தான். கிளம்பி வரும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் சண்முகம் கிளம்பி வந்தான். முதல் சுற்றில் அவன் வெளியேற்றப்பட்டிருந்தால் கூட அவன் கவலைப்பட்டிருக்க மாட்டான். ஆனால், இத்தனை சுற்றுகள் முன்னேறியதும், அவன் ஒவ்வொரு முறை பாடி முடித்ததும் சக போட்டியாளர்களே கை தட்டி பாராட்டியதும் எப்படியும்தான் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கையை அவனுக்குள் வளர்த்திருந்தது.
பார்வதி இருபதாவது பேரை சொல்லி முடித்தாள். அனைவரும் கரவொலி எழுப்பினார்கள். தேர்வாகாத போட்டியாளர்கள் சின்ன ஏமாற்றத்துடன் கிளம்பத் தயாரானார்கள். சண்முகம் உதட்டை கடித்து அழுகையை அடக்க முயன்றான். தொலைவில் நின்று கொண்டிருந்த மார்க்ஸின் முகத்தை பார்க்க முயன்றான். மார்க்ஸோ அவனது பார்வையைத் தவிர்த்து மேடையை உன்னிப்பாகக் கவனிக்கும் பாவனையிலிருந்தான்.
எல்லாம் முடிந்தது என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கையில், “அடுத்த ரவுண்டுக்கு போக போறது இருபது பேரில்ல... இருபத்தியோரு பேர். ஒரு ஸ்பெஷல் செலக்ஷன் இருக்கு... அது யாருன்னா!” என பார்வதி சின்ன சஸ்பென்ஸுடன் அறிவிப்பை பாதியில் நிறுத்தினாள்.
மேடையில் நின்று கொண்டிருந்த தாட்சா திரும்பி கீழே நின்று கொண்டிருந்த மேனனைப் பார்த்தாள். அவள் மட்டுமல்ல மொத்த ஆரஞ்ச் டிவியும் மேனனைத் திரும்பிப் பார்த்தது. மேனன் புன்னகைத்தார். அந்தப் பெயர் யார் என்பது பார்வதி சொல்வதற்கு முன்னால் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
எப்போது பார்வதியிடம் மேனன் இதைச் சொன்னார் என ஆச்சர்யமானாள் தாட்சா.
“சண்முகம்” என பார்வதி சொல்லி முடிக்க அனைவரும் உற்சாகமாகக் கை தட்டினார்கள். சண்முகம் கண்ணீரும் அழுகையுமாக அப்படியே நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் விழுந்து அழுதான். அந்த அழுகை அவனது போராட்டம், சந்தோஷம் என அனைத்தையும் சொல்லியது. அவசரமாக அவனை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி எழுந்து அமர வைத்தார்கள். தோற்று போனவர்கள் முகத்தில் கூட சண்முகம் தேர்வானதன் மகிழ்ச்சி தெரிந்தது. ஹர்ஷவர்தன் முகம் இருண்டது. கோபமாக அவர் எழுந்தார்.
“நிறுத்துங்க... நிறுத்துங்க!” என அவர் குரலை உயர்த்த சந்தோஷம் குறைந்து அந்த இடத்தைப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“யார் இவனை செலக்ட் பண்ணது?” என கோபமாகக் கேட்டார் ஹர்ஷவர்தன்.
“மத்த நாலு ஜட்ஜஸோட செலக்ஷன் லிஸ்ட்ல சண்முகம் பேர் இருக்கு சார்” என்றான் மார்க்ஸ்.
“நான் அவனுக்கு முட்டை போட்டிருக்கனே!”
“அப்பவும் ஆவரேஜ் பார்த்தா அவன் அந்த இருபது பேர்ல இருக்கான் சார்!”
“என்ன விளையாடுறீங்களா... நீங்களே எல்லாம் முடிவெடுக்கிறதா இருந்தா நான் எதுக்கு? இதுக்கெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன். இது என் ஷோ. அவன் நல்லா பாடுறான், பாடலைன்றதெல்லாம் முக்கியம் இல்ல. நான் ஒருத்தனை ரிஜெக்ட் பண்ணா பண்ணது தான். உங்க சேனல் திமிர என்கிட்ட காட்டாதீங்க!”
“இல்ல சார்” என மார்க்ஸ் அவரை சமாதனப்படுத்தும் தொனியில் பேச ஆரம்பிக்க அவர் காதில் அது எதுவும் விழுவதாக இல்லை.
“மேடையில சொல்லிட்டா நான் ஒத்துப்பேன்னு நினைச்சீங்களா அது நடக்காது. நீங்க யார வச்சு வேணா இந்த ஷோவை நடத்திக்குங்க... நான் இல்ல அவ்வளவுதான்” என விறுவிறுவென ஹர்ஷவர்தன் அங்கிருந்து நகர்ந்தார்.
ஏஞ்சல் பதற்றமாக அவர் பின்னால் ஓடினாள்.
வெளியே போகும் முன் வழியில் நின்று கொண்டிருந்த மேனனை பார்த்தவர், “என்ன நீ பெரியாளா... நான் பெரியாளான்னு போட்டு பாக்குறியா?” என கோபமாக கேட்டார்.
“நம்ம ரெண்டு பேர விடவும் நியாயம் ரொம்ப பெரிசு ஹர்ஷவர்தன்” என்றார் மேனன்.
“நீ இதுக்காக வருத்தப்படுவ!”
“இத பண்ணலைன்னா அதுக்காக வருத்தப்பட்டிருப்பேன். தப்பு பண்ணி வருத்தப்படுறதுக்கு சரியான ஒரு விஷயத்தை பண்ணிட்டு வருத்தப்படுறது பெட்டர் இல்லையா!” என்றார் மேனன்.
ஹர்ஷவர்தன் கோபமாக அரங்கத்தை விட்டு வெளியேறினார்.
உள்ளே சந்தோஷத்தை மறைத்தபடி சீரியசான முகத்துடன், “இப்ப என்ன சார் பண்ணலாம்?” எனக் கேட்டான் மார்க்ஸ்.
“சண்முகம் சர்ட்டிஃபிகேட் மெடல் வாங்குறதை இன்னும் ஷூட் பண்ணலல்ல… அத முதல்ல பண்ணிடுங்க... அப்புறம் பேசலாம்!” என்றார் மேனன்.
மார்க்ஸ் புன்னகையுடன், “ரெடி... ரெடி… லைட்ஸ்... ரோல் கேமரா” என உரக்க குரலெழுப்பினான்.
“சாரி சார்” என மேனன் அருகில் நின்று கொண்டிருந்த நெல்லையப்பன் தயக்கமாகச் சொன்னார்.
“எதுக்கு நெல்லையப்பன் சாரி?”
“நீங்க பயந்திட்டீங்கன்னு ஒரு செகண்ட் உங்களைத் தப்பா நினைச்சிட்டேன் சார்!”
“ரொம்ப பயந்தேன் நெல்லையப்பன். பயந்துகிட்டே சரி எதோ அதை பண்ணிட்டேன்” எனச் சிரித்தார் மேனன்.
கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. தாட்சாவின் காரில் சாய்ந்து மேனன் நின்று கொண்டிருந்தார். தாட்சா அருகில் வந்தாள்.
“அப்ப நான் கிளம்புறேன்” என்றார் மேனன்.
“எப்படி போறீங்க?”
“ஆபிஸ் கார்ல...” என்றார் மேனன். சிறிது நேரம் யோசித்த தாட்சா “மேனன்... இன்னைக்கு என் வீட்ல ஸ்டே பண்ணுங்க” என்றாள்.
“தாட்சா...”
“நீங்க இன்னைக்கு தனியா இருக்க வேணாம்னு தோணுச்சு அதான்” என்றாள் தாட்சா.
“நான் கேட்டா தப்பா இருக்கும்னு கேட்கல... எனக்கும் இன்னைக்கு யாராவது தெரிஞ்சுவங்களோட இருந்தா பெட்டரா இருக்கும் போல இருந்துச்சு” என்றார் மேனன்.
“ஏன் அப்படி?”
“சும்மாதான்... உங்களுக்கு ஏன் அப்படி தோணிச்சு?”
“சும்மாதான்” என தாட்சா புன்னகையுடன் கார் கதவைத் திறக்க மேனன் காரில் ஏறினார்.
தாட்சாவின் வீடு. ஹாலில் இருந்த சோஃபாவில் மேனனுக்கான படுக்கை விரிக்கப்பட்டிருந்தது.
தாட்சா பைஜாமா குர்தா என இரவு உடையில் இருந்தாள்.
“மேனன் வேஷ்டி தரவா... இருக்கு”
“இல்ல.. இல்ல இது ஓகே” என்றார் மேனன்.
“அம்மாவை எழுப்பி என்னோட ரூம்ல படுத்துக்க சொல்லவா? நீங்க அந்த ரூம்ல கொஞ்சம் வசதியா படுத்துக்கலாம்!”
“சே... சே... அம்மாவை எல்லாம் டிஸ்டர்ப் பண்ண வேணாம்!”
“வீட்டுக்கு கூப்பிட்டுட்டு இப்படி ஹால்ல படுக்க வைக்கிறது கஷ்டமா இருக்கு” என்றாள் தாட்சா.
“ஒண்ணும் பிரச்சனை இல்லை தாட்சா. எனக்கு ஓகே”
தாட்சா புன்னகையுடன் அவரைப் பார்த்தாள்.
“தாட்சா...”
“சொல்லுங்க மேனன்”
“என்ன பார்த்தா உங்களுக்குப் பயமா இல்லையா?”
“உங்களை பார்த்து என்ன பயம்?”
“என்ன மாதிரி ஆளுங்களோட இருக்கிறது கஷ்டம் தாட்சா. என்னென்னவோ பேசி தேவையில்லாத பிரச்னைகளை இழுத்துக்கிறேன். சரின்னு தோணுனா காம்ப்ரமைஸ் பண்ண மாட்டேன். இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் தள்ளி நின்னு பாக்குறது ஓகே... கூட சேர்ந்திருக்கிறது ரொம்ப கஷ்டம்!”
தாட்சா மேனன் அருகில் வந்து நின்றாள்.
“மேனன் எனக்கு உங்களைப் பாக்குறப்ப எல்லாம் என்ன தோணுதுன்னு சொல்லட்டுமா?”
மேனன் அவளை ஏறிட்டுப் பார்த்தார்.
“ஒரு அற்புதமான ஆள் நீங்க... உங்களை எப்பவும் பத்திரமா பார்த்துக்கணும்னு எனக்கு தோணும் மேனன்.”
மேனன் கண்கள் லேசாகக் கலங்கின.
“அழறது மேனன் ஸ்டைல் இல்ல... இதையே லைட்டா சொல்லட்டா… நீங்க என்னோட ரஜினிகாந்த், மேனன். நான் உங்களோட டை ஹார்ட் ஃபேன். நீங்க ஆடுனாலும் பாடுனாலும் சண்டை போட்டாலும், எதுவுமே பண்ணாம சும்மா இருந்தாலும் உங்களை நான் ஃபிரேம் பை ஃபிரேம் ரசிச்சுகிட்டே இருப்பேன்!”
“ஏன் தாட்சா என்ன போய்?”
“எப்பவாவது உங்களுக்கு நாம இவ்வளவு நல்லவனா இருக்கமே... நமக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாமேன்னு தோணியிருக்கா மேனன்!”
மேனன் புன்னகையுடன் ஆம் என்பதாக தலையாட்டினார்.
“அது கொஞ்சம் லேட்டா நடக்குதுன்னு நினைச்சுக்குங்க” என்றவள் தனது இரு கரங்களால் மேனனின் கன்னங்களை ஆதரவாகப் பற்றி அவரது உச்சந்தலையில் முத்தமிட்டாள்.
“குட் நைட் மேனன்” என தாட்சா தனது அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்.
மேனன் சோஃபாவில் சாய்ந்து படுத்தார். அவள் தந்துவிட்டு போன முத்தம் இன்னும் உச்சந்தலையில் இருப்பதை உணர்ந்தார் மேனன்.
இன்னொரு உயிரால் நேசிக்கப்படுதலை விட உலகத்தில் சிறந்த அனுபவம் வேறென்னவாக இருக்க முடியும். உதட்டு முத்தங்கள் நிகழ்ந்த பிறகு நினைவுகளில் இருப்பதில்லை. உச்சந்தலை முத்தங்கள் வெகுநேரம் நம்முடன் பயணிக்கின்றன. உன்னை முழுமையாக நான் நேசிக்கிறேன் என்பதைச் சொல்ல உச்சந்தலை முத்தங்களால் மட்டுமே சாத்தியம்.
பாண்டியனின் அறையில் மார்க்ஸ், நெல்லையப்பன், பாண்டியன், சண்முகம் நால்வரும் இருந்தார்கள்.
“சாரி சண்முகம் நான் லைட்டா போட்டிருக்கேன். தப்பா எடுத்துக்காத” என்றான் மார்க்ஸ்.
“என்னன்னே என் கிட்ட போய் சாரி எல்லாம் சொல்றீங்க” என்றான் சண்முகம்.
“டேய்... நாகர்கோவில் உன்னால இன்னைக்கு எவ்வளவு பெரிய பிரச்னைன்னு உனக்கு தெரியுதா இல்லையா?” என்றார் நெல்லையப்பன்.
புரிந்தது என்பதாக சண்முகம் தலையாட்டினான்.
“அந்த பப்பி லஹரி கோச்சுகிட்டு போயிட்டாண்டா ஷோவ விட்டு...”
“சண்முகம் ஓப்பனிங்கே பயங்கரமா இருக்கே மாமா. ஹர்ஷவர்தனை ஃபீல்ட் அவுட் பண்ணிட்டானே” என்றான் பாண்டியன்.
மார்க்ஸ் சிரித்தான்.
“டேய் சண்முகம்… இந்த வாய்ஸ் ஸ்டார் ஷோல நீ ஜெயிக்கிறயோ இல்லையோ நாலு ரவுண்ட் செலக்டானாலே பயங்கர பாப்புலராயிடுவ. ஒரே ஒரு சினிமா பாட்டு மட்டும் பாடிட்டேன்னா போதும்... சினிமா புகழ் சண்முகன்னு சொல்லி அமெரிக்காலருந்து ஆண்டிபட்டி வரைக்கும் ஆல் ஆர்கெஸ்ட்ரால பாடி கோடி கோடியா சம்பாதிச்சிருவ!”
சண்முகம் கையைக் கட்டிக் கொண்டான். அவன் முகத்தில் இதெல்லாம் நடந்தாலும் நடந்திரும் போலயே என்கிற பாவனை தெரிந்தது.
“மார்க்ஸ்... இப்பவே இவனை நாலு போட்டோ பிடிச்சு வச்சுக்கோ... இன்னும் நாலு மாசத்துல இவன் எப்படி சந்திரமுகியா மாறுறான்னு மட்டும் பாரு. ஸ்டைலா முடி வெட்டி மண்டையில் நாலு கோடு போடுவான். கலர் கலரா சட்டை போடுவான். பம்மி பம்மி இன்னைக்கு பாடுனான் இல்ல அப்புறம் ஓடிக்கிட்டே பாடுவான். பாடிகிட்டே ஆடுவான். எல்லா சேட்டையும் பண்ணுவான் பாரு” என்றார் நெல்லைப்பன்.
“அண்ணே அப்படியெல்லாம் இல்லன்ணே...” என்றான் சண்முகம்
“டேய் டேய் உன்ன மாதிரி எத்தனை பேர் பார்த்திருக்கோம். வரும்போது இப்படி தாண்டா அமாவாசையா வருவீங்க... பாப்புலர் ஆனதும் ராஜராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ-ன்னு எங்க கிட்டயே சீன் போடுவீங்க பாரு அதான்டா கஷ்டமா இருக்கும்.”
“நாம அறிமுகப்படுத்தின ஒருத்தன் நல்லா இருந்தா சந்தோஷம்தான் மாமா?”
“யாருக்கு சந்தோஷம்... சம்பாதிச்சா அவனுக்கு சந்தோஷம் ... நமக்கு என்னய்யா சந்தோஷம்? இன்னைக்கு கோயம்பேடுல இருந்து நடந்து வந்தான்ல... நான் எழுதி தாரேன்... ஷோ முடியறதுக்குள்ள லோக்கல் ஃபிளைட்ல பிசினஸ் கிளாஸ் இல்லையான்னேன்னு ஃபீல் பண்றானா இல்லையா பாரு!”
“இப்ப ஏன் இவனைப் பார்த்து பொறாமைப்படுற?” எனச் சிரித்தான் பாண்டியன்.
“பாண்டியா... ஷேர் ஆட்டோன்னு ஒண்ணு கண்டுபிடிச்ச பொறகுதான்டா ஆட்டோவுலயே நம்மளால ஏற முடிஞ்சுது.. ஆனா இவனுங்க ஒரே பாட்டுல பால் ஊத்தி பால்கோவா வித்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கட்டி அண்ணாமலையா மாறிடுறானுங்களே!”
“திறமை மாமா” என்றான் மார்க்ஸ்.
“அவனுங்க என்னமோ ஆகட்டும்... நமக்கு ஒண்ணும் இல்ல... நம்மள நினைக்கனும்னு எல்லாம் அவசியம் இல்ல... அவன் எப்படி இருந்தான்னு மறக்காம இருந்தா ஒகே... அந்த கருமாத்தூர்காரன் ஞாபகம் இருக்கா... பழையதுதான் சாப்பிடுவேன்னு சிம்பதியா பேசி ஓட்டு வாங்கி ஜெயிச்சுப்புட்டு... தீபாவளி ஷோவுக்கு வந்தப்ப பர்கர் இல்லைன்னா பாட்டு வராதுன்னு சொல்றான்... எப்படியிருக்கும் எனக்கு!”
மார்க்ஸும் பாண்டியனும் சிரித்தனர்.
“அப்படியா சொன்னான் அவன்?” என சிரித்தபடி கேட்டான் மார்க்ஸ்.
“ஆமாப்பா... பர்கர் வித் டபுள் சீஸ் அண்ட் டயட் கோக்குன்னு என்கிட்ட இங்லீஷ்ல பூரான் வுடுறாம்பா”
“நீ என்ன மாமா சொன்ன?”
“மவனே நீ கேட்டதெல்லாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாத ஒரு பேப்பர்ல எழுதி குடுடா.. வாங்கிட்டு வாரேன்னு சொன்னேன்” பாண்டியனும் மார்க்ஸும் அறை அதிர சத்தம்போட்டு சிரித்தனர்.
“அப்புறம் என்னாச்சு?”
“அப்புறம் என்ன? லெமன் ரைஸ் சாப்பிட்டுட்டு ‘தொம்... தொம்னந்தொம்’னு பாடுனான்.”
சண்முகம் எதுவும் புரியாமல் அவர்களைப் பார்த்தபடி இருந்தான்.
“மார்க்ஸ் அவன் பத்து பைசா நமக்கு தர வேணாம்பா. அண்ணேன்னு ஆரம்பத்தில சொல்ற அந்த அன்பு மாறாம இருந்தா போதும்பா!”
“புரியுதுணே...”
“நீ நல்லா இரு வேணாம்னு சொல்லல... ஊர்ல எல்லாம் சீன் போடு... ஆனா உன்ன உருவாக்கின அந்த நாலு பேர் கிட்ட உண்மையாயிரு... அவ்வளவுதான்!”
“மாமா... இன்னைக்கு நாம இந்த இடத்தில் உட்கார்ந்திருக்கோம்னா அது நம்மளோட சாதனை கிடையாது. யாரோ ஒருத்தர் நம்ம மேல வச்ச நம்பிக்கை, அவங்க நமக்கு கொடுத்த வாய்ப்பு. நம்மளோட சாதனைன்றது நம்மளால நடந்ததில்லை... சின்ன சின்னதா அதுக்கு பின்னால ஆயிரம் பேரோட உதவியிருக்கு!”
“இப்ப என்ன சொல்ல வர்ற?”
“நாமதான் இவனை உருவாக்குனோம்னு பெருமைப்படுறதுக்கும் ஒண்ணும் இல்ல... நம்மள அவன் மறந்திட்டான்னு வருத்தபடவும் ஒண்ணுமில்லை” என்றான் மார்க்ஸ்.
“அடிச்சது எல்லாம் இறங்கி போச்சு பாண்டியா. இன்னொரு ரவுண்ட் ஊத்து’’ என்றார் நெல்லையப்பன். அனைவரும் சிரித்தனர்.
சண்முகத்தின் தோளில் மார்க்ஸ் கையை போட்டபடி சொன்னான்.
“சண்முகம்... ஜெயிச்சு காட்டு... உன்ன மாதிரி என்ன மாதிரி சாதாரண ஆளுங்க ஜெயிக்கிறப்ப நம்மள மாதிரி இருக்கிற பல பேருக்கு நம்மளாலயும் ஜெயிக்க முடியும்னு நம்பிக்கை வரும். மேனன் சார் உனக்காக பெரிய ரிஸ்க் எடுத்திருக்காரு. அது வேஸ்ட் இல்லன்னு ப்ரூவ் பண்ணு” என்றான் மார்க்ஸ்.
சண்முகம் தலையாட்டினான்.
மார்க்ஸ் வீட்டிற்கு வந்து கதவைத் திறந்த போது காலை மணி 4-ஐ தாண்டியிருந்தது.
தனது அறையை நோக்கி நகர முற்பட்டவன் “மார்க்ஸ்” என்ற குரல் கேட்டு திரும்பினான். பால்கனி கண்ணாடி கதவு பாதி திறந்திருந்தது. திவ்யா பால்கனியில் நின்று கொண்டிருந்தாள்.
“இன்னும் தூங்கல” என்றபடி மார்க்ஸ் பால்கனிக்கு வந்தான்.
“தூக்கம் வரல” என்றாள் திவ்யா.
“ஏன்?”
“தெரியல.. அந்த ஹர்ஷவர்தன் சண்முகத்தை செலக்ட் பண்ண மாட்டேன்னு சொன்னது, மேனன் சார் அவனை செலக்ட் பண்ணது... அவன் அழுதது இதெல்லாம் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு” என்றாள் திவ்யா.
மார்க்ஸ் அவளை வாஞ்சையாகப் பார்த்தான்.
“என்ன அப்படி பாக்குற?”
“நீயும் நானும் ஒண்ணு தங்கம்!”
திவ்யா புன்னகைத்தாள்.
“ஒரு விஷயத்துக்காக ஒரே மாதிரி ஃபீல் பண்றோம்... இதுதான்... இதுதான்” என அவன் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாற...
“இதுதான்னா என்ன?”
“மேட் ஃபார் ஈச் அதர்ன்றது” என சிரித்தான் மார்க்ஸ்.
திவ்யா அவனைப் பார்க்க...
“தப்பா எடுத்துக்காத... இது ஒரு ஃபீலிங்... வேற ஒண்ணும் இல்ல!” என அவளை அணைத்துக் கொண்டான் மார்க்ஸ். அவனுக்குக் காரணமில்லாமல் அழுகை வந்தது. அவனது அணைப்பில் வெளிப்பட்ட அதீத அன்பை திவ்யாவால் உணர முடிந்தது.
“மார்க்ஸ் என்ன அழுறயா?”
அவன் அவளை விட்டு விலகியவன்... ‘இல்ல’ என்பதாகத் தலையாட்டினான்.
“என்ன... என்னாச்சு?”
“இந்த கனெக்ஷன் எனக்கு யாரோடயும் வந்தது இல்ல... அந்த ராய் எல்லாம் வேஸ்ட்... உன்னை அயர்ன் பண்ணி அலமாரியில் வச்சிருவான். நம்மதான்… நம்ம ரெண்டு பேர்தான் சாகுற வரைக்கும் சண்டை போட்டுட்டு சந்தோஷமா இருப்போம்!”
“இப்ப எதுக்கு ராயை வம்புக்கு இழுக்குற!”
“ஏன் இழுக்க கூடாது? என் ஆள தூக்கிறதுக்குன்னே வந்திருக்கான். மவனே அவனை தூக்குறேன் நான்” என்றான் மார்க்ஸ்.
“அவன அப்புறமா தூக்கலாம்... முதல்ல நீ போய் தூங்கு!”
“அவனைத் துரத்துற வரைக்கும் தூக்கம் எல்லாம் இல்லை... ஒரு நிமிஷம் குடு பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்... வந்து அவன எப்படி தூக்குறதுன்னு பேசுவோம்” என மார்க்ஸ் நகர்ந்தான்.
திவ்யா சிரித்தாள்.
அடுத்தடுத்த நாள்களில் வாய்ஸ் ஸ்டார் நிகழ்ச்சியின் எடிட்டிங்கில் பிஸியாக இருந்தான் மார்க்ஸ்.
அப்போது, “தாட்சா உங்களை அவங்க ரூமுக்கு வர சொன்னாங்க” என்றான் ஆபீஸ் பாய்.
மார்க்ஸ் தாட்சாவின் அறைக்குள் நுழைந்த போது ஏற்கெனவே அங்கு தாட்சா, மேனன், ஏஞ்சல், திவ்யா என அனைவரும் கூடியிருந்தார்கள்.
“என்னாச்சு தாட்சா?” என்றான் மார்க்ஸ்.
“ஹர்ஷவர்தன் லீகல் நோட்டிஸ் அனுப்பியிருக்காரு. 5 கோடி ரூபா டேமேஜ் க்ளெய்ம் பண்ணியிருக்காரு. அவரோட இமேஜ் கெட்டு போயிடுமாம் நம்ம ஷோவை ஏர்ல போட கூடாதுன்றாரு!”
“அது எப்படி?” என மார்க்ஸ் ஆரம்பிக்க தாட்சா இடைமறித்தாள்.
“லீகல் டிபார்ட்மென்ட்ல பேசினோம். அந்தாளு ஸ்டே வாங்க சான்ஸ் இருக்குன்றாங்க. ஷோ ஏர்ல போகலன்னா நமக்கு பெரிய நஷ்டமாயிடும்... என்ன பண்ணலாம் இப்ப?” என கேட்டாள் தாட்சா!
- Stay Tuned...
from விகடன்
Comments