தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் முக்கியமானது ‘சூர்ய வம்சம்’. விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், ராதிகா, தேவயானி, ப்ரியாராமன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்த இந்தப்படம் இன்று 25-ம் ஆண்டுக்குள் நுழைகிறது. 1997 ஜூன் 27-ம் தேதி வெளியான ‘சூர்யவம்சம்' 24 ஆண்டுகளை நிறைவு செய்து வெள்ளிவிழா ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் இயக்குநர் விக்ரமனிடம் பேசினேன்.
‘‘தலைமுறைகளை தாண்டியும் ‘சூர்யவம்சம்‘ ஜெயிச்சிருக்கு, ஜெயிச்சிட்டு இருக்குதுனு நினைக்கும்போது ஒரு படைப்பாளியா ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ஆரம்பத்துல இந்தக் கதை தயாரிப்பாளர் சௌத்ரி சாருக்கு பிடிக்கல. பலரும் இதை ரொம்ப சாதாரணமான கதையாதான் நினைச்சாங்க. இந்தப் படம் ஏன் ஓடும், எதுக்காக ஓடும்னு தெரியாமல் ஆல் டைம் ரெக்கார்ட் அடிக்கும்னு நம்பின ஒரே ஆள் நான் மட்டும்தான். என்னோட அசாத்திய நம்பிக்கையாலும், உறுதியான நிலைப்பாட்டாலும்தான் சௌத்ரி சார் இதை தயாரிச்சார்.
நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்த நேரத்துல உருவான கதைதான் இது. விஜயகுமார் மாதிரி ஒரு அப்பா, கார்த்திக் மாதிரி ஒரு பையன், அவங்களுக்குள்ளான உறவுனு கதை பண்ணி வச்சிருந்தேன். டைட்டில் என்ன எழுதியிருந்தேன்னு ஞாபகத்துல இல்ல. ஆனா, இந்தக் கதையை என் முதல்படமா பண்ண விரும்பல. முதல்படம் வித்தியாசமான கதையா, ட்ரெண்ட் செட் படமா இருக்கணும்னு நினைச்சு, ‘புது வசந்தம்‘ பண்ணினேன். அதுவும் ஒர்க் அவுட் ஆச்சு. அடுத்து சரத்குமாருக்காக ‘சூர்யவம்சம்‘ கதை பண்றதுக்காக டிஸ்கஷனுக்காக குற்றாலம் போயிருந்தேன்.
அங்கே போனதும் ஒருநாள் காலையில தோணினதுதான் ‘வானத்தை போல‘ கதை. ஒரு சீன் தான் தோணுச்சு. அதையே டெவலப் பண்ணி, டெவலப் பண்ணி, ‘வானத்தை போல‘ முழு ஸ்கிரிப்ட் ஆகிடுச்சு. அதுக்கப்புறம் பண்ணின கதைதான் ‘சூர்ய வம்சம்‘. இந்தக் கதையை சரத் சார்கிட்ட சொன்னதும், அவருக்குப் பிடிச்சு போச்சு. ‘‘ஒகே பாஸ்... அப்பா- பையன் ரெண்டையும் பண்ணிடலாம்’னு அவரே முடிவு பண்ணி சொல்லிட்டார்.
என்னோட எல்லா படங்களையும் வளசரவாக்கம் முருகன் கோயில்லதான் சென்டிமென்ட்டா ஆரம்பிப்பேன். அப்படித்தான் ‘சூர்யவம்சம்' படத்தையும் அங்கேயே ஆரம்பிச்சேன். இன்னொரு விஷயம் காலையில முதல் ஷாட் எடுக்கற வரைக்கும் நான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டதில்லை. முதல் நாள் காலையில ‘நட்சத்திர ஜன்னலில்...‘ பாடல்ல வரும் ஒரு சில ஷாட்ஸையும், அன்று மதியமே குஷால் தாஸ் கார்டனில் தேவயானி கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற சீனுக்கான ஷாட்ஸையும் ஷூட் பண்ணேன்.
மணிவண்ணன் சார் இரண்டாவது பாதியில் காணாமல் போயிடுவார். அதுக்கு காரணம் அப்ப அவர் கால்ஷீட் ஒரு முழு படத்துக்கும் ட்ராவல் பண்ற மாதிரி கிடைக்கிறது கஷ்டமா இருந்துச்சு. அதனால, அவர் கேரக்டரோட உதவியா குமரேசன்ங்கற கேரக்டரை படம் முழுக்க கொண்டு போயிருப்பேன்.
ஏப்ரல் 14 தமிழ் வருஷப்பிறப்பு நாள்தான் எனக்கு ரொம்ப ராசியான நாள். அதனால, அந்த நாள்ல படங்கள் ரிலீஸ் பண்ண விரும்புவேன். ஆனா, செளத்ரி சார் அப்ப ‘லவ் டுடே’ படம் தயாரிச்சிருந்தார். ‘இந்தப் படம் காலேஜ் லவ் சப்ஜெட். அதனால சம்மர் லீவ்ல வந்தா சரியா இருக்கும்’னு சொல்லிட்டு ‘லவ் டுடே’ படத்தை முதல்ல ரிலீஸ் பண்ணார். ஜூன்ல ‘சூர்யவம்சம்’ படத்தை ரிலீஸ் பண்ணார். இந்தப் படம் சரியா என்னைக்கு ரிலீஸ் ஆச்சுன்னுகூட எனக்குத் தெரியாது. நான், அப்ப அசோசியேஷன் வேலைகள்ல பிஸியா இருந்தேன். படம் ரிலீசான பிறகுதான் தியேட்டர்காரங்களுக்கெல்லாம் போன் பண்ணி படம் எப்படிப் போகுதுன்னு கேட்டேன். சென்னை வந்து செளத்ரி சாரைப் பார்த்தேன். அப்புறம்தான் படம் மிகப்பெரிய ஹிட்னு தெரிஞ்சது.
படத்துல எனக்கு பிடிச்ச சீன், ‘இட்லி உப்புமா’ சீன்தான். அதுதான் இன்னைக்கும் ஃபேமஸ். படம் ரிலீஸாகி பெரிய ஹிட் ஆன அந்த வருஷம் டிசம்பர் 31-ம் தேதி ராத்திரி கும்பகோணத்துல இருந்து சென்னைக்கு திரும்பிட்டு இருந்தேன். நைட் எட்டு மணிக்கெல்லாம் பசி எடுத்துருச்சு. வழியில ஒரு ஐயர் ஹோட்டல்ல ‘சாப்பிட என்ன இருக்கு?‘னு கேட்டேன். அவருக்கு நான் யாரு, என்னன்னுலாம் தெரியல. ‘சூர்யவம்சம் இருக்கு. சாப்டுறீயேளா?’ன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்தார்.
‘சூர்ய வம்சம்’ இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியானு அத்தனை மொழிகள்லயும் ரீமேக்காகி சக்சஸ் ஆச்சு. கன்னட ரீமேக் மட்டும் நான் டைரக்ட் பண்ணேன். கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடிச்சிருந்தார். இந்தியில் அமிதாப்பச்சன். அமிதாப் ஹீரோவா நடிச்ச கடைசிப் படம் இதுதான். இன்னிக்கும் டிவி-ல அதிக தடவை டெலிகாஸ்ட் ஆன படமும் ‘சூர்யவம்சம்‘ தான்’’ என புன்னகைக்கிறார் விக்ரமன்.
இன்னும் பல சுவாரஸ்யமான சம்பவங்களை இயக்குநர் விக்ரமன் பகிர்ந்திருக்கிறார். சினிமா விகடன் யூடியூப் தளத்தில் அவரின் வீடியோ பேட்டியைக் காணலாம்.
from விகடன்
Comments