கொரோனாவின் இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருப்பதால் தமிழக அரசு லாக்டெளனில் பல்வேறு தளர்வுகளை அறிவிக்கயிருக்கிறது. அதில் மிக முக்கியமானது தியேட்டர் திறப்பு. தமிழ் சினிமா உலகம் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என மிகுந்த எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் தகவலாக ஜூலை இரண்டாம் வாரத்தில் தியேட்டர் திறப்புக்கு அனுமதிகிடைக்கும் என்கிற செய்தி கிடைத்திருக்கிறது.
இதன்படி சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்' படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகயிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கவேண்டிய ‘டாக்டர்' படம் லாக்டெளன் காரணமாக முடங்கியது. இரண்டாம் அலையின் தீவிரம் அதிகமாக இருந்ததால் ஓடிடி நேரடி ரிலீஸுக்குப் பேச்சுவார்த்தை நடந்தது.
டிஸ்னி ஹாட்ஸ்டார் இந்தப்படத்தை 45 கோடிக்கு வாங்குவதாக சொன்னது. ஆனால், தயாரிப்புத் தரப்போ 55 கோடி எதிர்பார்த்ததாக சொல்கிறார்கள். ஓடிடி உரிமம் மட்டுமல்லாமல் சேட்டிலைட் உரிமையையும் ஹாட்ஸ்டார் கேட்டது. ஆனால், ‘டாக்டர்' தயாரிப்பாளர்களோ ஏற்கெனவே படத்தை சன் டிவிக்கு விற்றுவிட்டது. சன் தரப்பும் படத்தை திருப்பித்தர மறுத்துவிட்டது. இந்நிலையில்தான் தியேட்டர்கள் மீண்டும் திறப்பதற்கான சமிஞ்சைகள் தெரிவதால் 'டாக்டர்' தியேட்டர் ரிலீஸ் என்கிற முடிவை எடுத்திருக்கிறார்கள்.
வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. ‘டாக்டர்' படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்குமார்தான் விஜய்யின் அடுத்தப்படமான ‘பீஸ்ட்' படத்தின் இயக்குநர் என்பதால் இந்தப்படத்துக்கான எதிர்பார்ப்பும் மிக அதிக அளவில் இருக்கிறது.
ஜூலையில் தியேட்டர்கள் திறந்ததும் கடந்த ஆண்டு ஓடிடி-யில் ரிலீஸான சூர்யாவின் 'சூரரை போற்று' உள்பட சில படங்கள் மீண்டும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸாக இருக்கின்றன.
from விகடன்
Comments