மக்கள் நீதி மய்யக் குழப்பம், நிறுத்திவைக்கப்படும் `விக்ரம்’... கமல்ஹாசனின் முடிவு என்ன?!

பெரும் குழப்பத்தில் இருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். 2021 சட்டமன்ற தேர்தலில் தான் தோற்றதைவிடவும், கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகிக் கொண்டேயிருப்பது அவருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் தொடங்கி, சந்தோஷ் பாபு, முருகானந்தம், சி.கே.குமரவேல் என முக்கிய நிர்வாகிகள் மட்டுமல்லாமல், மாவட்ட அளவில் பலரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்திருக்கிறார்கள். இதனால் அடுத்து என்ன செய்வது என்கிற கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறார் கமல்.

‘’அரசியல் போதும். கட்சியைக் கலைத்துவிடு'’ என கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் உள்பட அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அவருக்கு நெருக்கடி தருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக கட்சி நிர்வாகிகளுடன் நடத்தப்பட இருந்த வீடியோ மீட்டிங்குகளையும் ரத்து செய்திருக்கிறார் கமல். தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதும் சந்தேகமாகவே இருப்பதால் கட்சியை அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை உயிர்ப்போடு வைத்திருப்பது சிரமம் என்கிற யோசனையில் கமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சங்க்யா சொல்யூஷன்ஸில் நிறைய பேர் வேலை செய்கிறார்கள். இவர்களுக்குத் தொடர்ந்து சம்பளம் தருவதிலும் சிக்கல் உருவாகலாம் என்கிறார்கள் கட்சிக்கு நெருக்கமானவர்கள்.

கமல்ஹாசன்

இதற்கிடையே தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே கட்சியை விட்டு விலகிய சில நிர்வாகிகளிடத்தில் பேசி அவர்களை மீண்டும் கட்சிக்கு வரும்படி அழைத்திருக்கிறார் கமல்ஹாசன். புது பொறுப்புகள் கொடுக்கப்படும் என்றும் அவர்களிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால், விலகியவர்கள் மீண்டும் கட்சியில் சேர விரும்பவில்லை என்றே தெரிகிறது.

அதோடு, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் விரைவில் திமுக-வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரோடு சேர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த பலரும் திமுகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

'விக்ரம்' கமல்

இதற்கிடையே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் தயாரித்து நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘விக்ரம்' படத்தின் வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறன. இயக்குநர் லோகேஷ் கனகராஜை தற்போதைக்கு வேறு ப்ராஜெக்ட்களில் கவனம் செலுத்தும்படி கமல்ஹாசன் தரப்பில் கேட்டுக்கொண்டதாகச் சொல்கிறார்கள். அதனால், லோகேஷ் கனகராஜ் தற்போது ‘மாநகரம் -2’ படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருப்பதாகத் தெரிகிறது.

‘’என் உயிருள்ளவரை அரசியல் இருப்பேன்… அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்'’ என வீடியோ மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார் கமல்ஹாசன். பல கேள்விகளுக்கும் அதில் பூடகமாக பதில் அளித்திருந்தார். தினமும் ட்விட்டர் மூலம் கோரிக்கைகள், கண்டன அறிக்கைகள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார் கமல். ஆனால், இது தொடர்ந்து நீடிக்குமா என்கிற சந்தேகம் கமல்ஹாசனுக்கே இருக்கிறது என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கிறது!



from விகடன்

Comments