சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் புறப்படும் பாலிவுட்... சச்சினுடன் கைகோக்கும் பிரபலங்கள் யார் யார்?

ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துடன் சேர்ந்து தொண்டு நிறுவனம் ஒன்று இசையுடன் கூடிய வீடியோ ஒன்றைத் தயாரித்து வருகிறது. இந்த வீடியோவில் பாலிவுட் நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார், டாப்சி பன்னு, ஷில்பா ஷெட்டி, அர்ஜூன் கபூர், ராஜ்குமார் ராவ் போன்ற பிரபலங்கள் இடம்பெற்று இருக்கின்றனர். இந்த வீடியோவிற்கு 'தார்தி கா தில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு மட்டுமல்லாது ஐநா சபையும் ஆதரவு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆசிப் பாம்லா என்பவர் இந்த இசை வீடியோவை எடுக்கும் பணியை ஒருங்கிணைத்து வருகிறார். ஏற்கெனவே ஆசிப்பின் தொண்டு நிறுவனம் பிளாஸ்டிக்கிற்கு எதிராக தயாரித்த வீடியோவை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியிருந்தது.

Sachin Tendulkar

புதிதாக தயாரிக்கப்படும் வீடியோவில் பூமிக்கு எப்படி புத்துயிர் கொடுப்பது என்பதை வலியுறுத்தி இசையுடன் கூடிய வீடியோவும், தனியாக பாட்டும் தயாராகி வருகிறது.

இது குறித்து ஆசிப் அளித்த பேட்டியில், "பாலிவுட் பிரபலங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதால் அவர்களை இதில் சேர்த்துள்ளோம். சச்சின் டெண்டுல்கர், மணிஷ் மல்கோத்ரா, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவு திட்ட அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் பலர் தங்களது பிஸியான நேரத்திலும் நேரம் எடுத்துக்கொண்டு இந்த வீடியோ விழிப்புணர்வில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்" என்றார்.

பொதுமுடக்க காலத்தில் இந்த வீடியோவை எடுப்பது மிகவும் சவாலாக இருந்தது என்றும் ஆசிப் தெரிவித்துள்ளார். பாடகர்கள் அட்னன் சமி, ஷங்கர் மகாதேவன், பாலக் முச்சல் ஆகியோர் இதனை பாடியிருக்கின்றனர். இந்த இசை வீடியோவின் டீசர் வரும் 31ம் தேதி சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது. ஜூன் 5ம் தேதி, சுற்றுச்சூழல் தினத்தன்று, இந்த இசை வீடியோ வெளியாகும்.



from விகடன்

Comments