கொரோனா இரண்டாவது அலை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நோயின் தாக்கம் ஒருபுறம் இருக்க, உணவு உட்பட அன்றாடத் தேவைகளுக்கான பொருள்கள் கிடைக்காமல் பசி பட்டினியில், மக்கள் அல்லாடும் சூழலும் அதிகரித்துள்ளது. மருத்துவ உதவிகள் தொடங்கி, உணவு வரை தங்களால் முடிந்த உதவிகளைத் தன்னார்வலர்கள் பலரும் செய்து வருகின்றனர். குழந்தைகள் பலரும் தங்களுடைய சேமிப்புப் பணத்தை கொரோனா நிதியாகக் கொடுத்து மனிதத்தைக் காக்கின்றனர்.
அந்த வகையில், நியூஸ் சேனல் ஒன்றில் செய்தியாளராக தன் கரியரைத் தொடங்கி, அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான `நெஞ்சம் மறப்பதில்லை' உட்பட சில சீரியல்களில் நடித்தவர் சரண்யா. இவர் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று உணவு வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து சரண்யாவிடம் பேசினோம்.
``கொரோனா முதல் அலை இவ்வளவு துயரம் நிறைஞ்சதா இல்லை. இரண்டாவது அலை நினைச்சுக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு. தனக்கு நெருக்கமான நபர்களோடு இந்த கொரோனா சூழலை எப்படியாவது கடந்துற மாட்டோமானுதான் எல்லாரும் ஏங்குறாங்க. ஆனா, இழப்புகள் தொடருது. ஒவ்வொரு மரண செய்தியைக் கேட்கும்போதும், அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியல.
கொரோனாவுக்கான மருத்துவ தேவைகள் ஒரு புறம் இருந்தாலும், மூன்று வேளை உணவு கிடைக்காமல் நிறைய பேர் கஷ்டப்படுறாங்க. என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதவிகள் கேட்டு தினமும் நிறைய மெசேஜ்கள் வரும். சில குடும்பத் தலைவிகள் தனக்கு கொரோனா தொற்று, ஆனாலும் குழந்தைகளுக்காக கிச்சனில் நின்று சமைக்கும் சூழலில் இருப்பதா சொல்லி உதவிகள் கேட்டிருந்தாங்க.
பெண்கள்தாம் சமைக்கணுமா? ஆண்கள் சமைக்கக் கூடாதானு கேள்விகள் கேட்டு, இந்தச் சூழலில் பெண்ணியம் பேசுறதுல அர்த்தம் இல்லை. நம்மால் முடிஞ்ச உதவிகளை அந்தச் சகோதரிகளுக்கும், அவங்க குடும்பத்துக்கும் பண்ணணும்னு தோணுச்சு. அதான் களத்தில் இறங்குனேன்.
நான் நியூஸ் சேனலில் வேலைபார்த்தபோது, மீனவப் பெண்கள் வாழ்க்கை சார்ந்து நிறைய பேசியிருக்கேன். இப்பவும் அடிக்கடி மீனவ குடியிருப்புகளுக்கு போவேன். கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு உணவு சமைச்சு கொடுக்கப்போறேன்னு சொன்னதும், எந்தத் தயக்கமும் இல்லாமல், மீனவ குடும்பத்தில் இருக்கும் அக்காக்களும் உதவ முன்வந்தாங்க.
அதனால்தான் `shorewomensocitey' என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கினேன். சென்னைக்குள் கொரோனா பாதிக்கப்பட்டு தங்களைத் தனிமைப்படுத்திக்கிட்டவங்க உணவுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளலாம்னு சமூக வலைதளங்களில் பதவிட்டு இருந்தேன்.
தினமும் மெசேஜ்கள் வந்து குவியத் தொடங்குச்சு. எங்க அம்மா அப்பா, என்னுடைய வீட்டில் வேலை செய்யும் அக்காக்களும் சேர்ந்து சமைச்சு, உணவு பொட்டலங்களைத் தயார் பண்றோம். மாஸ்க், க்ளவுஸ் அணிந்து ரொம்ப பாதுகாப்பாக உணவு தயார் பண்றோம். கொரோனா பாதிக்கப்பட்டவங்களுக்கு உணவு கொடுப்பதால் புரதம் நிறைந்த உணவுகளைத்தான் தயார் பண்ணி கொடுக்கிறோம்.
முதல் வாரம் முழுவதும், என்னுடைய சொந்தப் பணத்தில் உதவி பண்ணேன். இப்போ மக்கள் நிறைய பேர் சப்போர்ட் பண்றாங்க. ஃபேன்ஸ் நிறைய பேர் உதவ முன்வந்திருக்காங்க. தினமும் இப்போ 120 பேருக்கு சாப்பாடு கொடுத்திட்டு இருக்கேன். உணவு கேட்டு, முகவரி அனுப்புறவங்களுக்கு நானே நேரில் போய் அவங்க வீட்டு வாசலில் உணவை வெச்சுட்டு வர்றேன். சில ரொம்ப தொலைவில் இருக்கும் வீடுகளுக்கு, என் ரசிகர்கள் வந்து உணவு வாங்கிட்டுப் போய் கொடுக்குறாங்க. டபுள் மாஸ்க், சானிடைசர்னு ரொம்ப பாதுகாப்பாதான் போயிட்டு வர்றேன். கொரோனாவுக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிச்சுதான் வாழணும். அதுக்காக சமூகமே இல்லைனு தனிச்சு சுயநலமாக வாழக் கூடாது.
சமூக வலைதளங்களை பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல, இந்த மாதிரி பயனுள்ள விஷயங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். முகம் தெரியாத மக்கள்தான் டிவியிலும், சமூகவலைதளங்களிலும் என்னை சப்போர்ட் பண்றாங்க. அவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவியைப் பண்றேன். சாதி, மதம், பத்தியெல்லாம் யோசிக்காம மனிதத்தை மனதில் கொண்டு, ஒவ்வொருவரும் தங்களால் முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளைச் செய்தால் நிச்சயம் கொரோனாவின் பாதிப்பிலிருந்து நம்மால் மீள முடியும்" என்று விடைபெறுகிறார் சரண்யா.
from விகடன்
Comments