நானும் நீயுமா - 7 : குடிகாரன், கோமாளி, கிழவன்… ஏன் சிவாஜி இமேஜ் பற்றி கவலைப்படவில்லை?

தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளின் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் - சிவாஜி ஒப்பீட்டை பார்த்து வருகிறோம். இதில், கடந்த வாரங்களில் சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆர் தனது பிம்பத்தை எவ்வாறு கவனமாக வளர்த்துக் கொண்டார் என்பதைப் பார்த்தோம். எம்.ஜி.ஆர் தனது இமேஜ் குறித்து எப்போதும் கவனமாக இருந்தார் என்றால் சிவாஜியின் கவனமோ ஒரே விஷயத்தில்தான் பிரதானமாக இருந்தது. ஆம். அது நடிப்பு... நடிப்பு... நடிப்பு!

அது இந்தியச் சினிமாவில் என்றல்ல, எந்தப் பிரதேசத்தின் சினிமாவிலும் ஹீரோக்களுக்கு என்று கட்டமைக்கப்பட்ட சில அடிப்படையான குணாதிசயங்கள் உண்டு. அவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக இருப்பார்கள். ஏழைகளை, பெண்களைக் காப்பாற்றுபவர்களாக இருப்பார்கள். பெரியவர்களை மதிப்பவர்களாக இருப்பார்கள். அதனால்தான் வில்லன்கள் எத்தனை திறமையாக நடித்தாலும் ஹீரோக்களைத்தான் நமக்கு அதிகம் பிடித்துப் போகிறது. இந்த வரிசையை உடைத்தவர்களாக எம்.ஆர்.ராதா, சத்யராஜ் போன்ற சிலரை மட்டுமே சொல்ல முடியும். தங்களின் தனித்தன்மையான நடிப்பின் மூலம் ஹீரோவிற்கு நிகராக உயர்ந்து விடுகிறார்கள்.

நான் ஒரு முறை கமல் நடித்த 'காக்கி சட்டை' திரைப்படத்தை அதன் மறுவெளியீட்டில் பார்த்த சமயத்தில், சத்யராஜின் பெயர் டைட்டிலில் வந்த போது ஏறத்தாழ கமல்ஹாசனுக்கு நிகராக பார்வையாளர்கள் கைத்தட்டியதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஆனால், இதெல்லாம் அரிய விதிவிலக்குகள் மட்டுமே.

இன்றும் கூட வில்லன்களை விடவும் ஹீரோக்களையே நாம் அதிகம் விரும்புகிறோம். திரையில் அவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக நடிப்பது என்பது அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களிலும் உண்மையாக இருக்கக்கூடும் என்று நம்புகிறோம். முந்தைய காலகட்டத்தில் இந்த சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது அது சற்று மட்டுப்பட்டிருந்தாலும் அடிப்படையில் அப்படியேதான் உள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் திரையரங்குகளில் ரசிகர்கள் வெளிப்படுத்தும் ஆரவாரங்கள் இன்னமும் குறைந்தபாடில்லை. அதாவது நிஜத்துக்கும் நிழலுக்குமான வித்தியாசத்தை நாம் இன்னமும் கூட கணிசமாக உணரவில்லை.

சிவாஜி கணேசன்

இந்தச் சமூகப் போக்குதான் எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு கணிசமாக உதவியது எனலாம். ஆனால், ஒரு முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் சிவாஜி தனது பிம்பத்தைப் பற்றி அவ்வளவாக கவலைப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அதே சமயத்தில், ஒரு ஹீரோவின் பிம்பம் சமூகத்தில் எவ்வாறு பிரதிபலிக்கிறது, வெற்றியைத் தேடித் தருகிறது என்பதை அவர் உணர்ந்தே இருந்தார்.

தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் 'என் சரிதை' என்கிற நூலில் சிவாஜி இவ்வாறு சொல்கிறார்.

''நிஜ வாழ்க்கையில் நடிகர்களுக்கு பல கெட்ட வழக்கங்கள் இருந்தாலும் படங்களில் நல்லவன் போல் காட்டிக் கொண்டு, அரசியலில் நுழைந்து, மக்களுடைய மனதில் இடம் பிடிக்க வேண்டிய தத்துவம் எனக்கு அப்போது தெரியாது. என்னைப் பொறுத்தவரை வில்லனா, ஹீரோவா என்பது முக்கியமல்ல. நான் நடிகனா என்பதுதான் முக்கியம்!''

சிவாஜி அறிமுகமான, 1952-ல் வெளியான, 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் அவர் அடைந்த பிரமாண்ட வெற்றியையும் புகழையும் பற்றி நாம் அறிவோம். அந்த வெற்றியைக் கொண்டு இனிமேல் தான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவர் பிடிவாதமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டிலேயே, அதாவது 1953-ல் வெளியான 'திரும்பிப் பார்' திரைப்படத்தில் அவர் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். இதைப் போலவே 1954-ல் வெளியான 'அந்த நாள்' திரைப்படத்திலும், தேசத்தைக் காட்டிக் கொடுக்கும் துரோகி போன்ற பாத்திரத்தில் நடித்தார். இதே ஆண்டில்தான் 'மனோகரா' என்கிற வெற்றிப்படத்தின் ருசியையும் அவர் அடைந்திருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

'தனது திரைப்படங்கள் மக்களிடம் பாராட்டையும் வெற்றியையும் பெறுகிறது.. எனவே இப்படியே பாதுகாப்பாக ஹீரோவாக நடிப்போம்' என்று அவர் திட்டமிடவில்லை. ஒரு திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் என்ன என்பதையே பிரதானமாக கவனித்தார். இது ஏதோ அவரது ஆரம்பக் காலகட்டத்தில் மட்டும் நடக்கவில்லை. அவர் தொடர் வெற்றிகளை சந்தித்து எம்.ஜி.ஆருக்கு இணையாக முன்னணி நடிகராக மாறி விட்ட காலக்கட்டத்திலும் கூட தொடர்ந்தது. பெண் பித்தனாக, குடிகாரனாக, கோமாளியாக, வயதானவனாக என்று எந்தவொரு பாத்திரத்திலும் நடிக்க அவர் தயங்கியதே இல்லை.

உதாரணத்திற்கு 1966-ல் வெளிவந்த 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம். இதில் அவர் திருமணமாகி ஐந்தாறு பிள்ளைகளைக் கொண்ட தகப்பன் பாத்திரத்தில் நடித்தார். இந்தச் சமயத்தில் அவரது உண்மையான வயது 38 மட்டுமே. ஐம்பது வயதுகளைக் கடந்தும் இருபது வயது நடிகையோடு மட்டுமே டூயட் பாடுவேன் என்று அடம்பிடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் வெற்றிகரமான நாயகனாக விளங்கிய நேரத்திலேயே பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட அவர் தயங்கியதில்லை.

சிவாஜி

'மோட்டார் சுந்தரம் பிள்ளை' திரைப்படத்தைப் பற்றி பேசும் போது இன்னொரு விஷயத்தை அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். 'ஓவர் ஆக்டிங்' என்கிற புகார் சிவாஜியின் நடிப்பு மீது பொத்தாம் பொதுவாக எப்போதும் குறிப்பிடப்படுகிறது. இந்த அம்சம் கிண்டலாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு கிண்டலடிக்கிறவர்கள், இந்தத் திரைப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும். மிக அடக்கமான, இயல்பான நடிப்பை இதில் தந்து அசத்தியிருப்பார் சிவாஜி.

‘'நீங்கள் நடிப்பது ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்களே?'’ என்கிற கேள்வி சிவாஜியின் முன் வைக்கப்படும் போது அவர் இவ்வாறு பதில் சொல்கிறார்.

என்றெல்லாம் தன் மீது சொல்லப்படும் புகாருக்கு பல்வேறு விளக்கங்கள் தருகிறார் சிவாஜி கணேசன் ('என் சரிதை' நூல்). இந்தச் சம்பவம் பலரும் அறிந்ததுதான். நடிகரும் பத்திரிகையாளருமான 'சோ' பல மேடைகளில் இதைச் சொல்லியிருக்கிறார். ஒரு முறை சோவும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரு படப்பிடிப்பில், தனது வழக்கமான பாணியில் ஒரு காட்சியில் சிவாஜி ஆரவாரமாக நடித்து முடித்தவுடன், அனைவரும் கைத்தட்டி பாராட்டியிருக்கிறார்கள். ஆனால், சோ மட்டும் அமைதியாக நின்றிருக்கிறார். இதைக் கவனித்த விட்ட சிவாஜி, சோவை தனியறைக்கு அழைத்துச் சென்று 'ஏன்... நான் நடிச்சது பிடிக்கலையா?" என்று கேட்க, தன் நக்கலான பாணியில் 'ரொம்ப ஓவரா இருந்தது' என்று சோ சொல்லியிருக்கிறார்.

பிறகு ‘'சரி... அதே காட்சியை இப்போது subtle ஆக நடித்துக் காட்டுகிறேன்... பார்!'’ என்று சிவாஜி இயல்பாக நடித்துக் காண்பிக்க, சோ பிரமித்துப் போயிருக்கிறார். கூத்து நாடகங்களில் நடிப்பவர்களின் பொதுவான நடிப்பு இலக்கணம் இதுதான்.

தூரத்தில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் பார்வையாளனுக்கும் தெரியும்படி தன் உடல்மொழியை மிகையாக நிகழ்த்திக் காட்டினால்தான் அவர்களுக்குப் புரியும். ஆனால், இதே நாடக நடிகர்கள் சினிமாவிற்குள் வரும் போது அதன் மொழிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள பலரால் இயலவில்லை. கோபமாக நடிக்க வேண்டிய ஒரு காட்சியில், அந்த உணர்ச்சியை பார்வையாளர்களுக்கு உணர்த்த, கண்களை மிகையாக உருட்டி, கைகளை ஆவேசமாக உதறி என்று நடிக்க வேண்டியதில்லை. ஏனெனில், சினிமா என்பது கேமராவின் மூலம் துண்டு துண்டாக படமாக்கப்படும் ஒரு விஷயம். ஒரு க்ளோசப் ஷாட்டின் மூலம் இந்த பாவத்தை எளிதில் உணர்த்தி விட முடியும்.

ஆனால், இந்த இரண்டு நடிப்பிற்குமான வித்தியாசம் சிவாஜிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்திற்கே முன்னுரிமை தந்திருக்கிறார்.

"சரி... ஓவர் ஆக்டிங் -ன்னு சொல்றாங்களேன்னு சில படங்கள்ல இயல்பா நடிச்சுப் பார்த்தேன். என்னப்பா... சிவாஜி நடிக்கவேயில்லைன்னு கேக்கறாங்க' என்று சொல்லிச் சிரிக்கிறார் சிவாஜி. ('என் சரிதை' நூல்).

சிவாஜியின் இயற்பெயர் கணேசமூர்த்தி. அவரது தந்தையார் சின்னையா மன்றாயர், ரயில்வே ஒர்க்ஷாப்பில் பணிபுரிந்தவர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெள்ளையனை எதிர்த்து புரட்சி செய்து சிறைக்குச் சென்றவர். தந்தை சிறைக்குச் சென்றிருந்த சமயத்தில் பிறந்தவர்தான் சிவாஜி. இதனால் அவரின் குடும்பம், விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கு இடம் பெயர்ந்தது. தந்தை இல்லாத குடும்பத்தில் வறுமை இயல்பாகப் புகுந்தது. தாயார் ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றினார்.

பள்ளிப் பருவத்திலேயே நாடகக்கலையின் மீது சிவாஜிக்கு இயல்பாக ஆர்வம் இருந்தது. எந்தவொரு ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட இலக்கியம், அல்லது சம்பவம் அவர்களை அழுத்தமாகப் பாதித்திருக்கும். பிற்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமைந்திருக்கும். காந்தியின் வாழ்க்கையில் 'அரிச்சந்திரா' நாடகம் அவரை அதிகம் பாதித்தது போல, சிவாஜியைப் பாதித்தது 'கட்டபொம்மன்' நாடகம். நடிப்பு மீது ஆர்வம் மிகுந்ததால், வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் ஓடி வந்து, அந்த ஊரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த மதுரை ஸ்ரீபாலகான சபா என்கிற நாடகக் குழுவில் ‘'தான் ஒரு அனாதை'’ என்று பொய் சொல்லி சேர்ந்து விடுகிறார்.

சிவாஜி கணேசன், ரஜினி, கமல்

இது போன்ற நாடகக்குழுவில் சிவாஜி அதிகமாக பெண் வேடங்களே போட்டிருக்கிறார். இளம்வயது சீதை, சூப்பர்னகை, குழுவில் ஆடும் பெண் என்று நிறைய பெண் வேடங்கள். பொதுவாக பெண் வேடங்களில் நடிப்பவர்களுக்கு அந்தத் தன்மை அவர்களின் உடல்மொழியில் இயல்பாக படிந்து விடும். ஆனால், சிவாஜிக்கு அவ்வாறு நேரவில்லை. காரணம், அவரிடம் இயல்பாக இருந்த நடிப்புத்திறமை, பாடங்களை வேகமாக கற்றுக் கொள்ளும் திறமை, ஞாபகசக்தி, சொல்லித் தந்த நடிப்பை மெருகேற்றுதல் போன்றவை காரணமாக பரதன் போன்ற ஆண் வேடங்களிலும் கலந்து நடித்தார். விரைவிலேயே அந்தக் குழுவில் ஒரு தவிர்க்க முடியாத இளம் நடிகராக தன் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார் சிவாஜி.

இது போன்ற நாடகக்குழுவில் இருக்கும் நடிகர்களை சிறைப்பறவைகள் எனலாம். ஏனெனில் அவர்கள் வெளியுலகத்தை காண்பதே அதிசயம். காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி, உணவு, நாடகம் தொடர்பான பாடம் கற்றல், ஒத்திகை பார்த்தல், மதிய உணவு, பிறகு சிறிது ஓய்வு, மாலை நாடகம் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபடுதல், இரவு ஆரம்பித்து விடிய விடிய நடிக்கும் நாடகம் என்று பொழுது சரியாக இருக்கும். உணவு என்பதும் அங்கு சாதாரணமாகவே இருக்கும். இது மட்டுமல்லாமல், நடிகர்கள் விடுமுறை எடுத்து எளிதில் ஊருக்குச் சென்று விட முடியாது. ஏனெனில் ஒரு குழுவில் பிரதான நடிகர் இல்லையென்றால் அவரது இடத்தை இன்னொருவர் இட்டு நிரப்புவது கடினம்.

சிவாஜியின் மூத்த சகோதரர் இறந்து போன விஷயமே அவருக்கு பல மாதங்களுக்குப் பின்புதான் தெரிய வந்திருக்கிறது. இந்தக் குழுவில் அவரது சக நடிகராக இருந்த காகா ராதாகிருஷ்ணன், ஊருக்குச் சென்று திரும்பிய போது இந்த விஷயத்தை சிவாஜியிடம் சொல்ல, அவர் அழுது கொண்டே ஊருக்குச் சென்று வர அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. மேலும் சில மாதங்கள் கடந்த பிறகுதான் அது சாத்தியமாயிற்று.

இது மட்டுமல்லாமல் பயிற்சியின் போது சரியாக கற்றுக் கொள்ளாத சிறுவர்களை அடி பின்னி விடுவார்கள். இத்தனை துயரங்களையும் சிவாஜி உள்ளிட்ட அந்த நாடக நடிகர்கள் தாங்கிக் கொண்டார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம்தான். அது நடிப்பு என்னும் கலையின் மீது இருந்த உண்மையான ஈடுபாடு. இந்த பலமான அஸ்திவாரம்தான் சிவாஜி என்னும் விதை பிறகு ஆலமரமாக வளர்வதற்கு காரணமாக இருந்தது. இதை சிவாஜியே மீண்டும் மீண்டும் நினைவு கூர்கிறார்.

மறுபடியும் அதே கேள்விதான். சினிமா என்னும் துறையில் மிக ஈடுபாட்டுடனும் உண்மையாகவும் பாடுபட்ட சிவாஜியால் மக்களின் பாராட்டுக்களை நிறைய பெற முடிந்ததே தவிர, செல்வாக்கை ஏன் பெற முடியவில்லை?

விடை தேடுவோம்!



from விகடன்

Comments