சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பேபியம்மாவின் வீட்டு மொட்டை மாடி ஆரஞ்சு டிவியின் புரோகிராமிங் டீம் ஆட்களால் நிறைந்திருந்தது. மெல்லிய இசை ஒன்று தவழ்ந்து கொண்டிருந்தது. அதைத்தாண்டி பேச்சு சத்தம் பெரிதாக கேட்டுக் கொண்டிருந்தது. மார்க்ஸ் டீம், திவ்யா டீம் என்பது அழிந்து போய் அங்கு அனைவரும் ஒரே டீமாக நின்று கொண்டிருந்தார்கள். பிரிவுகளும், இணைப்புகளும் இது மாதிரி பார்ட்டிகளில் நிகழ்வது சகஜம்.
ஏஞ்சலின் அப்பா பார் பொறுப்பாளாராக நின்று கொண்டிருந்தார். ஏஞ்சல் வீட்டில் பார்ட்டி என்றாலே ஏஞ்சலின் அப்பாதான் பாரை கவனித்துக்கொள்வது வழக்கம். வாயில் ஒரு சிகரெட்டுடன் விடிய விடிய சளைக்காமல் அனைவருக்கும் ஊற்றிக் கொடுத்து ஆனந்தப்படும் ஒரு ஜீவன் அவர்.
மதியமே ஆரம்பித்து சிக்கன் 65, பீஃப் ஃபிரை, மட்டன் சுக்கா அதில்லாமல் சைவ குடிமகன்களுக்காக உருளை வருவல், காலிஃபிளவர் ஃபிரை என அம்மா ஸ்நாக்ஸ்களை செய்து அசத்தியிருந்தார். ஏஞ்சல் வீட்டு பார்ட்டிகளில் தவறாமல் இடம் பெறக்கூடிய இன்னொரு நபர் அவளது அப்பாவின் நண்பர் பிரகாஷ்.
ஒரு குட்டி ஸ்டவ்வை வைத்துக் கொண்டு ஆம்லெட், ஆப்பாயில், கலக்கிகளை சூடாகப் போட்டுக் கொடுத்து கொண்டேயிருப்பார். சார்மினார் மட்டன் பிரியாணி ஸ்பெஷலாக ஆர்டர் செய்திருந்தான் மார்க்ஸ். அசைவம் சாப்பிடாதவர்களுக்காக அம்மா சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என தனியாக சமைத்திருந்தார்.
சின்ன பார்ட்டிம்மா என்றுதான் ஆரம்பிப்பார்கள். அதில்லாம எப்படி, இதில்லாம எப்படி என ஒவ்வொரு விஷயமாக சேர்ந்து அது மிகப்பெரிய பார்ட்டியாக மாறிவிடும்.
பேபியம்மாவுக்கு ஆரஞ்சு டிவி ஆட்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர் அன்னலட்சுமி. உண்டு மகிழும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறோம். பரிமாறி மகிழும் உள்ளம் பேபியம்மாவினுடையது. மேனன் பார்ட்டிக்கு வருகிறார் என சொன்னபோது முதலில் பேபியம்மா நம்பவில்லை. “நிஜமாவே அவரு நம்ம வீட்டுக்கு வர்றாரா” என ஆச்சர்யமாகக் கேட்டார் பேபியம்மாள்.
“ஏம்மா வரக்கூடாதா?”
“வரலாம் வரலாம் ஆனா அவருக்காகல்லாம் என்னால நடிக்க முடியாது. எல்லார்கிட்டயும் எப்படி இருப்பனோ அப்படித்தான் அவர் கிட்டயும் இருப்பேன்” என்றார் அவர்.
“அவரு நம்ம டைப்பும்மா... நீங்க பாருங்க உங்களுக்கே புரியும்” என்றான் மார்க்ஸ்.
“சேச்சி... வணக்கம்… உங்கள சேச்சின்னு கூப்பிடலாம் இல்ல” என மேனன் கேட்ட அந்த நொடியிலேயே பேபியம்மாவுக்கு மேனனை பிடித்துப்போனது.
“ஒரு சின்ன பரிசு... வாடிகன் போனப்ப வாங்குனது” என அவர் சின்ன அட்டைப்பெட்டி ஒன்றை தந்தார். அம்மா அதை பிரிக்க புனித மேரியின் சிறிய சிலை ஒன்றும், பவளத்தால் ஆன ஜெபமாலை ஒன்றும் அதில் இருந்தது.
அம்மாவின் கண்கள் கலங்கின. வாடிகன் போக வேண்டும் என்பது அம்மாவின் வாழ்நாள் கனவு.
“தம்பி” என அம்மா மேனனின் கையை பற்றிக் கொண்டார். மேனன் வாஞ்சையாக அம்மாவின் கரங்களை தட்டி புன்னகைத்தார். மார்க்ஸுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அம்மாவுக்கு எது பிடிக்கும் என விசாரித்து அறிந்து அவருக்கு பொருத்தமான ஒரு பரிசைத் தேர்ந்தெடுத்து மேனன் அசத்தியது அவனை ஆச்சர்யப்படுத்தியது. இதை விட ஓர் உயர்ந்த பரிசை அம்மாவுக்கு யாரும் தந்ததில்லை என்பதை அம்மாவின் சந்தோஷம் சொல்லியது. பரிசின் மதிப்பை பணம் நிர்ணியப்பதில்லை. அதை பெற்றுக் கொள்பவரின் சந்தோஷமே முடிவு செய்கிறது.
மேனன் கறுப்பு சட்டை வேஷ்டியில் எளிமையாக வந்திருந்தார். “வாங்க சார்” என அவரை மார்க்ஸ் மொட்டை மாடிக்கு அழைத்து போனான். ஆனந்தி, தனபால் மற்றும் சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்த தாட்சா திரும்பி மேனனைப் பார்த்தாள்.
நீல நிற ஜீன்ஸும், சிவப்பு முழுக்கை டி- ஷர்ட்டுமாக நின்று கொண்டிருந்த தாட்சாவை ஆச்சரியமாகப் பார்த்தார் மேனன். சின்ன புன்னகையுடன் மேனன் தாட்சாவை நெருங்க மற்றவர்கள் அவருக்கு வணக்கம் ஒன்றை வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
“பார்க்குறதுக்கு அச்சு அசலா தாட்சா மாதிரியே இருக்கீங்க... நீங்க தாட்சாவோட யங்கர் சிஸ்டரா?” என்றார் மேனன்.
“பழைய ஜோக் மேனன்” என தாட்சா வாய்விட்டு சிரித்தாள்.
“அடுத்த தடவ பெட்டரா ட்ரை பண்றேன்” என மேனன் புன்னகைத்தார்.
“வேஷ்டி உங்களுக்கு நல்லா இருக்கு... சொல்லியிருந்தா நானும் பிளாக் சாரியில வந்திருப்பேன். மேட்சிங்கா இருந்திருக்கும்” என்றாள் தாட்சா.
“தாட்சா...” என மேனன் ஏதோ சொல்ல வர...
“நான் அழகா இருக்கேன்... அதான” என்றாள் தாட்சா.
மேனன் சிரித்தார்.
“அதில்லயா... நான் தான் அவசரப்பட்டுட்டேனா?” என்றாள் தாட்சா.
“நீங்க எப்பவுமே அழகுதான் தாட்சா...”
“சரி நீங்க என்ன சொல்ல வந்தீங்க சொல்லுங்க...”
“இந்த டிரஸ்ல காலேஜ் பொண்ணு மாதிரி இருக்கீங்க” என்றார் மேனன்.
தாட்சா வெட்கத்துடன் சிரித்தாள்.
பாண்டியன், நெல்லையப்பன் கோப்பைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். பேபியம்மா அவர்கள் அருகே வந்தார்.
“நெல்லை...”
“சொல்லுங்க தாய் கிழவி” என்றார் நெல்லையப்பன்.
பேபியம்மா சிரித்தபடி “என்ன பாண்டியா அதுக்குள்ளயே வா” என்றார்.
“மூடிய திறந்ததுமே போதையாகுற ஒரே ஆள் மாமா மட்டும்தான்” என்றான் பாண்டியன்.
“ரெண்டு ரவுண்டுக்கு மேல அடிக்க கூடாதுன்னு சொன்னேன் இல்ல” என பேபியம்மா அதட்டலாகக் கேட்டார்.
“அந்த ரெண்டாவது ரவுண்டு தாம்மா இது” என்றார் நெல்லையப்பன்.
“இதுக்கு மேல அவர் அடிக்கிற எல்லா ரவுண்டுமே ரெண்டாவது ரவுண்ட் தான்மா” என சிரித்தான் பாண்டியன்.
“நெல்லை... வாந்தி எடுத்த... கொன்னே போடுவேன்” என பேபியம்மா அங்கிருந்து நகர்ந்தார்.
“டேய் அந்த புளு பக்கெட்ட எடுத்து ரெடியா வைடா... போனவாட்டி மொத்த மொட்டை மாடிய கழுவ விட்டிருச்சிடா இந்தம்மா” என பயத்துடன் சொன்னார் நெல்லையப்பன்.
“அவ்வளவுதான் உன் கோட்டா முடிஞ்சுது.... உனக்கு அடுத்த ரவுண்ட் எல்லாம் தர மாட்டாங்க” என்றான் பாண்டியன்.
“எனக்கு தான தர மாட்டாங்க... மேனனுக்குத் தருவாங்கல்ல” என்றார் நெல்லையப்பன்.
“யோவ் மாமா”
“இப்புடு சூடு” என்றபடி நெல்லையப்பன் நடந்து மேனன் அருகில் வந்தார்.
“நெல்லையப்பன் உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன்” என்றார் மேனன்.
“மனசுக்குள்ள பட்சி சொல்லிச்சு. அதான் நானே வந்திட்டேன் சார்” என்றார் நெல்லையப்பன்.
“சொல்லுங்க நெல்லையப்பன்”
“ஒரு சின்ன மேஜிக் பண்ணட்டா சார்?”
பாண்டியன் தள்ளியிருந்து பதற்றமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“பண்ணுங்களேன்” என மேனன் புன்னகைத்தார்.
“அந்த கிளாஸ குடுங்க” என மேனன் கையில் இருந்த கிளாஸை வாங்கிய நெல்லையப்பன் மட மடவென குடித்து விட்டு காலியான கிளாஸை மீண்டும் அவரிடம் தந்தவர், “உங்க கிளாஸ்ல இருந்த டிரிங்க்கை நான் இப்ப திரும்பவும் வர வைக்கட்டா” என்றார்.
சரி என்பதாக தலையாட்டினார் மேனன்.
மந்திரம் போடுவது போல கண்களை மூடி கையை சுழற்றியவர் “வந்திருச்சு” என்றார்.
“எங்க வந்துச்சு... கிளாஸ் காலியா தான இருக்கு” என்றாள் தாட்சா.
“அது ஊத்துன பாட்டிலுக்கே போயிருச்சு... அங்க போயி நீங்க வாங்கிக்கலாம் சார்” என பாரை கை காட்டினார் நெல்லையப்பன். மேனன் ரசித்து சிரிக்க தாட்சாவும் சிரித்தாள்.
“நீங்க வாங்கிட்டு வாங்க திரும்பவும் அந்த மேஜிக்கை நான் இன்னொரு தடவ பண்ணி காட்டுறேன்” என்றார் நெல்லையப்பன்.
“இல்ல நெல்லையப்பன்... இந்த மேஜிக் நானே பிராக்டீஸ் பண்ணி பார்த்துக்கிறேன்” என்றார் மேனன்.
“சரிடா சரிடா பயப்படாத” என்றார் நெல்லையப்பன். தாட்சா வாய் மூடி சிரித்தாள். பாண்டியன் அவசரமாக அங்கு வந்தான்.
“மாமா... மார்க்ஸ் உன்ன கூப்புட்டான்... வா... ”
“அவனுக்கு வேணும்னா இங்க வந்து என்ன பார்க்க சொல்லுடா... புரோகிராமிங் ஹெட்டுன்னா பெரிய இவனா அவன்… என்ன பாப்பா நான் சொல்றது?” என்றார் நெல்லையப்பன்.
தாட்சா புரியாமல் விழித்தாள். “அவரு பாப்பான்னு சொன்னது உங்களைத்தான். ஜீன்ஸ், டி-ஷர்ட் போட்டதால அவரு கண்ணுக்கு நீங்க பாப்பாவா தெரியுறீங்க” என மேனன் சிரித்தார்.
“ஏன் நெல்லையப்பன் நான் பாப்பாவா?’’ என பொய் கோபத்துடன் தாட்சா கேட்டாள்.
“உன் வாப்பா வயசு எனக்கு... நான் உன்ன பாப்பான்னு சொல்லக் கூடாதா? டேய் மேனா... உங்க எல்லாரயும் விட நான்தான் வயசுலயும் அனுபவத்துலயும் மூத்தவன்... நான் யார வேணா எப்படி வேணா கூப்பிடுவேன்… எனக்கு உரிமை இருக்கு.”
“ஆமா நெல்லையப்பன்... கண்டிப்பா இருக்கு” என்றார் மேனன்.
“இந்திராகாந்தி இந்தியாவுக்கு டிவி கொண்டு வந்த காலத்துல இருந்து டிவில இருக்கேன்... தெரியும்ல... தூர்தர்ஷன்னு பேர் வச்சே நான்தான்!”
“மாமா போலாம் மாமா” என பாண்டியன் அவர் கையை பிடித்து இழுத்தான்.
“பொறுடா ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிட்டு வந்துடுறேன்... நீ போ நான் அவர் கிட்ட தனியா பேசணும்” என நெல்லையப்பன் மேனனைப் பார்க்க... அவர் பாண்டியனை பார்த்து “போங்க நான் பார்த்துக்கிறேன்” என்பது போல கண்ணால் சாடை செய்தார். பாண்டியன் யோசனையாக நகர்ந்தான்.
நெல்லையப்பன் தொண்டையை செருமிக் கொள்ள தாட்சா, மேனன் இருவருக்குமே அவர் ஏதோ விவகாரமாக சொல்லப் போகிறார் என்பது புரிந்தது.
“மேனன் நீ அருமையான ஆள். தைரியமான ஆள். மனசுல பட்டத பட்டுன்னு சொல்லக் கூடியவன். ஆனா, ஒரு விஷயம் மட்டும் சொல்றதுக்கு ரொம்ப தயங்கிக்கிட்டு இருக்க கரெக்டா?”
மேனன் புன்னகைத்தார். தாட்சா தன் மனது படபடப்பதை உணர்ந்தாள்.
“தைரியமா சொல்லு மேனன். சரியா வரும்.”
மேனன் தலையாட்டினார்.
“நான் சொல்றேன் சரியா வரும். உன்னது பரணி நட்சத்திரம், பரணி, தரணி ஆளும். அது மகம், ஜெயலலிதா நட்சத்திரம்!”
“ரெண்டுமே பெரிய நட்சத்திரமா இருக்கே” என்றார் மேனன்.
“ஆமா... அதனால தான் இன்னும் வெயிட்டிங்ல இருக்கு... நீ தான் மகத்துக்கு ஏத்த சரியான ஆள். ஆனா நீ தான் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்... நீ போயிடுவ எனக்குத் தெரியும்” என்றார் நெல்லையப்பன்.
மேனன் புன்னகைத்தார். தாட்சா அந்தப் பேச்சை கவனிக்காதது போல வேறு திசையில் பார்த்தாள்.
“என்ன பாக்குற, இறங்கி போறதுக்கு யோசிக்கிறியா? உனக்கு இப்படி ஒரு இரண்டாவது ரவுண்ட் கிடைக்கிறதுக்கு நீ குடுத்து வச்சிருக்கணும்... கண்ணுல வச்சு பத்திரமா பார்த்துக்கோ” என்ற நெல்லையப்பன் திரும்பி நடந்தார்.
மேனனுக்கும் தாட்சாவுக்கும் நடுவில் சின்ன படபடப்பும், சந்தோஷமுமான மெளனம் நிலவியது.
“என்னோட நட்சத்திரம் மகம்னு நான் நெல்லையப்பனுக்கு சொன்னதே இல்லை” என்றாள் தாட்சா.
“நான் அட்ஜஸ்ட் பண்ணி போற ஆள்னு கூட அவர் கிட்ட சொன்னதில்ல” என்றார் மேனன்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இது காதல்தான் என்று காதலிப்பவர்கள் உணர்வதற்கு முன்பே அவர்களை சுற்றியிருப்பவர்கள் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.
பேபியம்மா அருகில் நந்திதா நின்று கொண்டிருந்தாள்.
“அவனுக்கு வாழ்த்து சொன்னியாடி?” என்றார் பேபியம்மா...
“நான் வாழ்த்து சொல்லி என்னா ஆகப்போகுது?” என மார்க்ஸைப் பார்த்தபடி சொன்னாள் நந்திதா.
பேபியம்மா திரும்பி பார்த்தார். மார்க்ஸ் மொட்டைமாடி சுவரில் அமர்ந்திருக்க திவ்யா அவன் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.
“மார்க்ஸ் உனக்கு பிடிக்குமா?” எனக் கேட்டார் பேபியம்மா...
நந்திதா திரும்பி அம்மாவைப் பார்த்தாள்.
“நிஜமா சொல்லு” என அம்மா கேட்டார்.
நந்திதா கண்கள் கலங்க ஆமென தலையாட்டினாள்.
“அன்பை கொடுக்கிறதுதான், அன்பை சம்பாதிக்கிறதுக்கான ஒரே வழி...”
“அவனுக்கு என்னோட அன்பு தேவையில்லம்மா”
“ஒருத்தர நேசிக்கிறது அவங்களோட நல்லதுக்காக இல்லடி... நம்மளோட நல்லதுக்காக!”
“அம்மா”
“ஆமா நந்து... இங்க இருக்கிற அவ்வளவு பேரையும் பத்தி அன்பா யோசிச்சு பாரு... நம்ம மனசு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதுவே இங்க இருக்கிற எல்லாரையும் இவன் தப்பு, அவன் சரியில்லைன்னு வெறுப்பா யோசிச்சு பாரு நம்ம மனசு பூரா கசக்கும். ஒரு நிமிஷம் நம்ம இங்க நிக்க முடியாது. உன் அன்போ, வெறுப்போ அவங்களை எதுவும் பண்ணப் போறதில்ல. ஆனா, உன் மனசுக்குள்ள இருக்கிற அன்போ, வெறுப்போ உன்னை பாதிக்கும்.”
நந்திதா கண்கள் கலங்க அம்மா பேசுவதை கேட்டபடியிருந்தாள்.
“அம்மா புள்ள, அண்ணன் தங்கச்சி, ஃபிரண்ட்ஸ், காதலன் காதலி இந்த உறவெல்லாம் வெறும் கவர்தான். கவரைப் பிரிச்சு பார்த்தா உள்ளார இருக்கிற பொருள் ஒண்ணே ஒண்ணு தான். அன்பு. அந்த அன்புதான் நேசம், பாசம், காதல்னு வேற வேற கவர்ல போட்டு குடுக்குறோம். எந்த கவர்ல குடுக்குறோம்றது முக்கியம் இல்ல. கவருக்குள்ள என்ன வச்சு குடுக்குறோம்றதுதான் முக்கியம்.”
நந்திதா ஆச்சர்யமாக அம்மாவை பார்த்தாள்.
“ஆயிரம் உறவு இருக்குறவன்தான் புதுசா ஒரு உறவு வேணும்னு தேடணும். நமக்குதான் யாரும் இல்லையே... அவன் உன் புருஷனா வரலன்னா என்ன? ஒரு அண்ணனா, அப்பாவா, ஃபிரண்டா ஏதோ ஒண்ணா இருந்திட்டு போட்டும்... என்ன நான் சொல்றது? அதுக்கும்தான் நமக்கு ஒரு ஆள் தேவைப்படுதில்ல!”
நந்திதா சிரித்தாள். அம்மாவின் பாணியில் அவர் சொன்ன விளக்கம் அவளுக்கு அந்தச் சமயத்தில் நியாயமாகவே பட்டது.
“ஆனா, ஒண்ணு அந்த பய நிசமாவே உன் மேல அன்பா அக்கறையா இருப்பான். அதுக்கு நான் கேரன்ட்டி”
“அது உண்மைதான்மா” எனச் சிரித்தாள் நந்திதா.
“போய் பேசுறயா?”
“வேணாம்மா... பிஸியா லவ் பண்ணிக்கிட்டு இருக்கான். பண்ணட்டும். நாளைக்கு பேசிக்கிறேன்” என்றாள் நந்திதா. அம்மா அவளை அணைத்துக் கொண்டார்.
ஏஞ்சல் கையில் கிளாஸுடன் தனியாக நடந்து வந்தாள். “ஏஞ்சல்” என்ற சத்தம் கேட்டுத் திரும்பினாள். நெல்லையப்பன் அவளைப் பார்த்து கையசைத்தார்.
“யோவ் மாமா இப்ப எதுக்கு அவள வம்புக்கு இழுக்குற?” என பல்லைக் கடித்தான் பாண்டியன்.
ஏஞ்சல் அவர் அருகே வந்தவள் “என்ன?” எனக் கேட்டாள்.
“மொட்டைமாடியே சந்தோஷமா இருக்கு... நீ மட்டும் ஏன் வயலின் வாசிக்கிற?”
“மாமா” என பாண்டியன் அவர் கையை பிடித்து அழுத்த...
“யேய் கைய நசுக்காதடா... பேசிக்கிட்டு இருக்கேன்ல”
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் ஏஞ்சல்.
“பீஸ்”
“அது பிரியாணியில் இருக்கும்... சாப்பிடும்போது கேளுங்க”
நெல்லையப்பன் கடுமையாகச் சிரித்தவர். “அதான் ஏஞ்சல்... சோகத்துலயும் ஜோக்கடிக்குது பாரு”
“எனக்கென்ன சோகம்?”
“அத நீ சொன்னாதான் எங்களுக்கு தெரியும்” என்றார் நெல்லையப்பன்.
“நீ போ ஏஞ்சல்” என்றான் பாண்டியன்.
“இருடா... ரெண்டு பெக்கு போட்டிருக்கு... மனசு விட்டு பேசட்டும்… அப்பதான பாரம் இறங்கும்”
ஏஞ்சல், நெல்லையப்பனை பார்த்தாள்.
“ஏஞ்சலு... உன் கோபம் மட்டும் சரியாச்சுன்னு வையி... நம்ம எல்லாரும் பழைய மாதிரி ஒண்ணா இருக்கலாம். அந்த மார்க்ஸ் பயல மன்னிச்சு விடலாம் இல்ல...”
ஏஞ்சல் கையில் இருந்த கிளாஸை நெல்லையப்பனிடம் கொடுத்தாள். அவர் அதை வாங்கிக் கொள்ள... ஏஞ்சல் அங்கிருந்து நகர்ந்தாள்.
“என்ன மாமா எதுவும் சொல்லாம போறா?” என்றான் பாண்டியன்.
“சொன்னாளே கேக்கலையா உனக்கு?”
“என்ன சொன்னா?”
“குடிக்கத்தான வந்த... வாயை மூடிக்கிட்டு குடி... எங்கள ஒண்ணாக்குறேன்னு ஓவரா சீன் போடாதன்னு சொல்லிட்டு போறா!”
“யோவ் மாமா... அவமானப்படுத்திட்டு போறா... நீ பேசாம இருக்க?”
“அவமானம் தாங்க முடியலடா பாண்டியா... அதான் குடிக்கிறேன். போய் இன்னொரு பெக் வாங்கிட்டு வா” என நெல்லையப்பன் ஏஞ்சல் கொடுத்த கிளாஸை ஒரே மூச்சில் குடித்தார். பாண்டியன் சிரித்துக் கொண்டான்.
காம்பவுண்ட் சுவரில் அமர்ந்திருந்த மார்க்ஸ் லேசாக சாய்வது போன்ற பாவனை செய்ய திவ்யா பதறிப்போய் அவனைப் பிடிக்க மார்க்ஸ் சிரித்தான்.
“என்ன ஜோக்கா?”
“இல்ல சும்மா... அக்கறை இருக்கான்னு பார்த்தேன்” என்றான் மார்க்ஸ்.
“அக்கறை இல்லன்னா இந்நேரம் நான் ஊர்ல இருந்திருப்பேன். இங்க உன் கூட இருந்திருக்க மாட்டேன்” என்றாள் திவ்யா.
“எனக்கு தெரியும்” என்றான் மார்க்ஸ்.
“அதுக்கப்புறம் எதுக்கு இந்த செக்கிங்?”
“ஆசையா வாங்குன தங்கசங்கிலி அலமாரியில் இருக்குன்னு தெரிஞ்சாலும், அத அப்பப்ப திறந்து பார்த்து சந்தோஷபட்டுகிறதில்லையா அந்த மாதிரி தான்!”
“ம்” என திவ்யா புன்னகைத்தாள்.
“திவ்யா”
“நான்தான்” என புன்னகைத்தாள் திவ்யா.
“உண்மைய சொல்லனும்னா இந்தப் பதவி எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு”
“ஏன்?”
“உனக்கு கிடைக்க வேண்டிய ஒண்ணை நான் எடுத்துகிட்ட மாதிரி சங்கடமா இருக்கு”
“உனக்கு கஷ்டமாயிருக்கிறதுக்கு காரணம் அதில்ல” என்றாள் திவ்யா.
“வேறென்ன?”
“தலைவர்கள் தப்பு பண்ணும் போது அத தட்டி கேட்கிறது ரொம்ப ஈஸி. ஆனா, நம்மளே தலைவரா இருக்கும் போது தப்பு பண்ணாம இருக்கிறது ரொம்ப கஷ்டம். நீ அதுக்குத்தான் பயப்படுற!”
மார்க்ஸ் புன்னகைத்தான்.
“இப்ப வரைக்கும் நீ யூனியன் லீடர்... இப்ப நீ லீடர்... நாங்க கேள்வி கேட்போம்... நீ பதில் சொல்லணும்” எனச் சிரித்தாள் திவ்யா.
மார்க்ஸ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன பாக்குற?”
“உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
“நிறைய குடிச்சிட்டேன்னு நினைக்கிறேன். நீ முதல்ல சுவத்துல இருந்து இறங்கு.”
“நிஜமா திவ்யா”
“சரி”
“என்ன சரி” என்றான் மார்க்ஸ்.
“உனக்கு என்ன ரொம்ப பிடிச்சிருக்கு ஒத்துக்கிறேன்”
“எனக்கு ஒரு பதில் சொல்லலாம் இல்ல”
“என்ன சொல்லணும்?”
“எனக்கும் பிடிச்சிருக்குன்னு சொல்லு”
“உனக்கு தோணிச்சு நீ சொல்லிட்ட... எனக்கு தோணும் போது நான் சொல்றேன்”
“திவ்யா” என அவன் ஏதோ பேச வர...
“ஒரு நிமிஷம் நான் வாஷ் ரூம் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்” என திவ்யா நகர்ந்தாள்.
“இந்த பக்க படிக்கட்டுல போனா பக்கம்” என்றான் மார்க்ஸ்.
திவ்யா புரியாமல் பார்த்தாள்..
“நான் வரேன் வா... இப்படி ஒரு வழியிருக்கு” என மார்க்ஸ் அவளுடன் வந்தான்.
இருவரும் படிக்கட்டில் இறங்கி வந்தனர். வளைந்து திரும்பும் அந்தப் படிக்கட்டில் முன்னால் சென்ற மார்க்ஸ் காலில் ஏதோ இடற அவன் தடுமாறி பின்னால் சாயப்போக பின்னால் வந்த திவ்யா சட்டென அவனை தாங்கிப் பிடித்தாள்.
அவன் சமாளித்து கொண்டு திவ்யாவின் தோளை பற்றி எழ முயல திவ்யாவும் பிடிமானத்திற்காக அவனைப் பற்றிக் கொள்ள அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்தனர். விலக வேண்டுமென அறிவும், விலக வேண்டாமென மனமும் சொல்ல அவர்கள் எந்தக் கட்டளையை ஏற்பதென்ற குழப்பத்தில் இருக்கும் சமயத்தில் மார்க்ஸ் திவ்யாவின் கன்னத்தில் முத்தமிட்டான்.
திவ்யா நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். மார்க்ஸ் அவளது இதழை நோக்கி குனிந்தான். அன்பை பரிமாறிக் கொள்ள ஆகச்சிறந்த வழி முத்தமென்பதை அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள். படபடப்பில்லாமல் தடுமாறாமல் இயல்பாய் அந்த முத்தம் நிகழ்ந்தது. மார்க்ஸ் திவ்யாவை அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பு அவன் தன் மேல் வைத்திருந்த அனைத்து காதலையும் சொல்வதாகத் தெரிந்தது திவ்யாவுக்கு.
அவளையறியாமல் அவளது கரங்களும் அவனை அணைத்துக் கொள்ள சட்டென படிக்கட்டின் விளக்குகள் எரிந்தன. இருவரும் அவசரமாக விலகி திரும்பி பார்க்க படிக்கட்டு திரும்பும் இடத்தில் மேலே ஏஞ்சல் நின்று கொண்டிருந்தாள்.
“நான்... அது” என திவ்யா பேச முடியாமல் தடுமாற...
“இட்ஸ் ஒகே... இது மார்க்ஸோட ஃபேவரைட் இடம். இங்க வச்சு அவன் எனக்கு நிறைய முத்தம் குடுத்திருக்கான்” என்றாள் ஏஞ்சல்!
- Stay Tuned...
from விகடன்
Comments