“நான் இந்தியன், நான் தமிழன், நான் முஸ்லிம். முஸ்லிம்கள் அரேபியாவில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் வெறுப்பை காட்டுகிறது''... கடந்த இரண்டு நாளாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒரு பதிவு ட்ரெண்டாகிக் கொண்டிருந்தது. காரணம் அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு போஸ்டுக்கு சிலர் கேட்ட கேள்வியும், அதற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பதிலும்தான்!
தனது இசையாலும், குரலாலும் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. சமூகத்தில் நிலவும் சூழ்நிலைகளுக்குப் ஏற்ப அவ்வப்போது சில பதிவுகளை ரத்னச் சுருக்கமாக பதிவிடுவார். இவர், கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முகநூலில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலிருந்து 8:30 என்ற அத்தியாயத்தில் உள்ள வசனத்தை எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது இவரது ரசிகர்கள் சிலரைக் கோபப்பட வைத்திருக்கிறது.
''அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.''
இந்தப் பதிவின் கமென்ட்டில் ரசிகர் ஒருவர், ''யுவன் ஷங்கர் ராஜாவாக உங்களை ரசிக்கிறேன். இது, மதத்தைப் பரப்புவதற்கான தளமல்ல. இது தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து விலகிவிடுவேன்'' எனக் கூற, அதற்கு ஒரே வார்த்தையில் 'Leave' என பதிலளித்திருக்கிறார் யுவன். இதைத்தொடர்ந்து மற்றொருவர் உங்கள் பெயரை மாற்றுங்கள் என கூற, “நான் இந்தியன், நான் தமிழன், நான் முஸ்லிம். முஸ்லிம்கள் அரேபியாவில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் வெறுப்பை காட்டுகிறது. மத நம்பிக்கை என்பது வேறு, தேசியம் என்பது வேறு. வெறுப்பை விதைக்காதீர்கள் சகோதரா!'' என்று கூறியுள்ளார்.
இந்தப் பதிவிற்கு இன்னும் சிலர் ''சூழ்ச்சியாளர்களிடமிருந்து இறைவன் காப்பாற்றுவான்'' என்ற வசனத்தை யுவன், இந்தச் சமயத்தில் பதிவிட்டது ஆட்சியாளர்களை எதிர்த்து போடப்பட்ட பதிவு என்றும் கூறிவருகின்றனர். ''உங்களுக்கான சுதந்திரம். உங்களுக்குப் பிடித்ததை எழுதுகிறீர்கள். உங்கள் உரிமை அது. இதைக் கேட்க யாருக்கும் உரிமையில்லை'' எனவும் சிலர் யுவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
from விகடன்
Comments