`இன்ப அதிர்ச்சி, இமேஜை மாத்தின கேரக்டர், அந்த பாராட்டு!' - கே.வி.ஆனந்த் நினைவுகள் பகிரும் பிரபலங்கள்

திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், இயற்கை விவசாயி உள்ளிட்ட பன்முகத்தன்மை கொண்ட கே.வி.ஆனந்த், தமிழ் சினிமாவின் திறமையான கலைஞர்களில் ஒருவர். இயக்குநராக வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல படைப்புகளைக் கொடுத்து வந்தவர், இந்த கொரோனா பேரிடர் காலத்தில் நீங்காத துயரத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.

கே.வி.ஆனந்த்

ஒருபுறம் கொரோனா பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். மற்றொரு புறம், திறமையான கலைஞர்கள் பலரையும் இழந்து வருகிறோம். இதில் பெரும் கொடுமையான விஷயம், நாம் நேசித்த ஆன்மாக்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் வாய்ப்புகூட அமையாமல் போகிறது. அப்படியான இழப்பையும் சோகத்தையும் கொடுத்திருக்கிறது கே.வி.ஆனந்தின் மறைவு. அவரது இயக்கத்தில் பணியாற்றிய பிரபலங்கள் சிலரிடம் அவருடைய நினைவுகள் குறித்துப் பேசினோம்.

உமா (நடிகை, இசைக் கலைஞர்):

``இன்னைக்கு என்னோட காலைப் பொழுதே ஆனந்த் சாருடைய இறப்புச் செய்தியுடன்தான் தொடங்குச்சு. அப்போதிலிருந்து மனசு பாரமாவே இருக்கு. நிஜத்தை அப்படியே பிரதிபலிக்கும் திறமையான ஒளிப்பதிவாளர். அதைக் கண்கூடா பார்க்கும் அனுபவம் `சிவாஜி’ படத்துல எனக்குக் கிடைச்சது. ஒரு படப்பிடிப்பு எவ்வளவு வேகமா நடக்கணும்ங்கிறது ஒளிப்பதிவாளரோட வேலைத்திறன்லதான் இருக்கும். ஒளிப்பதிவாளருக்கும் இயக்குநருக்கும் `கெமிஸ்ட்ரி’ சிறப்பா பொருந்திப்போனால்தான், மொத்தப் படத்தையும் நல்ல முறையில உருவாக்க முடியும்.

உமா

அந்த வகையில இயக்குநரோட எண்ண ஓட்டத்தைச் சரியா புரிஞ்சு, `டக்கு டக்கு’னு நடிகர்கள்கிட்ட சலிப்பில்லாம வேலை வாங்குறதுல ஆனந்த் சார் கை தேர்ந்தவர். சின்னத்திரையில நிறைய அனுபவம் இருந்தாலும், `சிவாஜி’ படத்துல நடிக்கும்போது சின்ன தயக்கம் எனக்கு இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் மறந்து மிக இயல்பா நடிக்க என்னை ஊக்கப்படுத்தினதுல அவருக்கும் பங்குண்டு. `சின்ன கேரக்டர்தான். பிரதமரோட மனைவி ரோல்ல நீங்க நடிக்கிறதுதான் சரியா இருக்கும்னு எனக்குத் தோணுது’ன்னு அவர் சொன்னார். `நீங்க சொன்னா சரியா இருக்கும்’னு `காப்பான்’ படத்துல நடிக்க ஒப்புக்கிட்டேன்.

ஷூட்டிங் போன பிறகுதான், மோகன்லால் சாரோட மனைவி ரோல்னு தெரிஞ்சு இன்ப அதிர்ச்சியானேன். பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகள்ல எதேச்சையா சந்திச்சுப் பேசுவோம். ஒரு ஷாட்டுக்கும் இன்னொரு ஷாட்டுக்கும் நடுவுல பம்பரமா சுழன்று வேலை செய்வார். அதுதான் அவரைப் பத்தின நினைவுகள்ல எனக்கு முக்கியமா வந்துபோகும். இவ்வளவு சீக்கிரமே அவரை இழப்போம்னு நினைக்கவேயில்லை” என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் உமா பத்மநாபன்.

கே.வி.ஆனந்த்

கலைராணி (நடிகை):

``20 வருஷங்களுக்கு முன்பு, கூத்துப்பட்டறையில விழிப்புணர்வு நாடகம் ஒண்ணு செஞ்சோம். அதுல அவரும் வேலை செஞ்சார். அப்போதான் அவருடன் எனக்கு அறிமுகம் கிடைச்சது. அதுக்குப் பிறகு `முதல்வன்’ படத்துக்காக ஷங்கர் சார் வலியுறுத்தியும் முதல்ல மறுத்தேன். அவரைச் சந்திக்கலாம்னு நேர்ல போனப்போ, அங்க ஆனந்த் சார் இருந்தார். அவரும் அந்தப் படத்துல வேலை செய்றார்னு தெரிஞ்சுகிட்டதும், நமக்குத் தெரிஞ்ச நபரும் அந்த புராஜெக்ட்ல இருக்கார்னு கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுச்சு. அந்தப் படத்துல அர்ஜுனுக்கு மருதாணி வைக்கும் காட்சி. அப்போ நான் நெகிழ்ச்சியா பேசும்போது, பெருக்கெடுக்கும் கண்ணீர்த் துளிகள் முகத்துல வழியக் கூடாது. கட்டிலுக்கு அடியில வைக்கப்பட்டிருந்த கேமரா லென்ஸ் மேலத்தான் நேரா விழணும்னு சொன்னாங்க.

ரொம்பவே ஆர்வமா அந்தக் காட்சியில நடிச்சேன். சில டேக் போன நிலையில, ஆனந்த் சார் சரியா ஆலோசனை கொடுத்து சரியா நடிக்க வெச்சார். அந்தக் காட்சியில அவர் வெச்ச லைட்டிங் அமைப்பு பிரமாதமா இருக்கும். ஒளிப்பதிவாளரா அவரோட திறமையை நேர்ல பார்த்து வியந்தேன். அடுத்து பல வருஷம் நாங்க ஒண்ணா வேலை செய்ய வாய்ப்பு அமையல. ஒருநாள் போன் செஞ்சு, `ஒரு கதை இருக்கு. நீங்க இமேஜ் பார்ப்பீங்களா?’ன்னு கேட்டார். `அதெல்லாம் பார்க்க மாட்டேன். ரோல்தான் முக்கியம்’னு சொன்னேன். `அயன்’ படத்துல நான் நடிச்ச ரோல் பத்தி விளக்கினார். ஸ்கிரிப்ட்ல இல்லாத நிலையில, கதைப்படி என்னோட வீட்டுக்கு வரும் சூர்யாவையும் ஜெகனையும் நான் அடிச்சா நல்லா இருக்கும்னு ஆனந்த் சார்கிட்ட சொன்னேன்.

கே.வி.ஆனந்த் உடன் கலைராணி

பொருத்தமாதான் இருக்கும்னு சொல்லி, அதன்படியே நடிக்க வெச்சார். அப்பாவி அம்மாவா நடிச்சுகிட்டு இருந்த நிலையில, அந்தப் படம் எனக்கு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்துச்சு. அவர் எனக்கு நல்ல நண்பர். எல்லோர்கிட்டயும் இயல்பா பழகக்கூடியவர். கடந்த ஓராண்டாகவே நிறைய மறைவுச் செய்திகளைக் கேட்டு ரொம்பவே வருத்தப்பட்டேன். அதனால, செய்திகளைப் பார்க்கிறதையே கணிசமா குறைச்சுகிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குக் காலையில யூடியூப்ல செய்தி பார்த்தேன். அதுல, ஆனந்த் சாரோட மறைவுச் செய்தியைப் பார்த்ததும் பெரும் அதிர்ச்சி. அவருக்குத் தெரிஞ்ச ஒருவர் மூலமா செய்தியை உறுதிப்படுத்தினேன். மனசு ரொம்பவே கலக்கமா இருக்கு” என்று ஆற்றாமையுடன் முடித்தார்.

அனிதா சம்பத் (செய்தி வாசிப்பாளர்):

``காலையில எழுந்திரிச்சதுமே, கே.வி.ஆனந்த் சார் இறப்புச் செய்தி பத்தி என்னோட குடும்பத்தினர் வாயிலா தெரிஞ்சுகிட்டேன். நம்பவே முடியல! செய்திச் சேனல்களைப் பார்த்த பிறகும்கூட, அந்த உண்மையை நம்ப ரொம்ப நேரமாச்சு. `கவண்’ படத்துல பத்திரிகையாளரா சின்ன ரோல்ல நடிச்சேன். பிறகு, `காப்பான்’ படத்துக்காக ஆடிஷன் வெச்சு என்னைத் தேர்வு செஞ்சாங்க. திண்டுக்கல்ல ஷூட்டிங் நடந்துச்சு. அங்க போனப்போ, `நீங்க செய்தி வாசிக்கிறதைப் பார்த்திருக்கேன். உங்க உச்சரிப்பு நல்லா இருக்கும்’னு பாராட்டினார். பத்திரிகையாளரா அந்தப் படத்துலயும் நடிச்சேன். எனக்கும் சூர்யா சாருக்கும் ஒவ்வொரு காட்சியையும் நடிச்சுக் காட்டினார். பிறகு, நிறைய முறை ரிகர்சல் நடக்கும். அப்புறம் சில டேக்லயே காட்சி ஓகே ஆகிடும்.

அனிதா சம்பத்

Also Read: பிடுங்கப்பட்ட கேமரா... முதல் படத்திலேயே தேசிய விருது... கே.வி.ஆனந்த் எனும் மகா கலைஞன்!

பல நாள்கள் எடுக்க வேண்டிய ஷூட்டிங்கை துல்லியமா பிளான் பண்ணி, சில நாள்கள்லயே முடிச்சுடுவார். அதுக்காக, கொஞ்ச நேரம்கூட ஓய்வில்லாம பட்டாம்பூச்சிபோல சுறுசுறுப்பா வேலை செய்வார். அதனாலேயே, அவர்கூட போட்டோ எடுத்துக்க வாய்ப்பு கிடைக்கல. நடிப்பு, சினிமான்னா எவ்ளோ மெனக்கெடணும்னு அவர்தான் எனக்குப் புரிய வெச்சார். படம் ரிலீஸ் தருணம், எனக்குக் கல்யாணம் ஆன தருணம், அப்புறம் பல தருணங்கள்ல அவரைச் சந்திக்கணும், அவர்கூட போட்டோ எடுத்துக்கணும்னு நினைச்சுகிட்டே இருந்தேன். வெவ்வேறு காரணங்களால அதுக்கான வாய்ப்பு கிடைக்கல. இனி எப்போமே அவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுடுச்சு. அவரை ரொம்பவே மிஸ் பண்றேன்” என்று அமைதியானார் அனிதா.



from விகடன்

Comments