இடியட் பாக்ஸ் - 37: ஜவுளிக் கடை அதிபர் `ஐயா’ ஏன் திடீரென ஆரஞ்சு டிவிக்குள் நுழைந்தார்?!

தல்வார் டவர்ஸுக்குள் மார்க்ஸின் புல்லட் தட தடவென்ற சத்தத்துடன் நுழைய “தல... தல...” என்ற பாண்டியனின் சத்தம் கேட்டது. பிரேக் அடித்து பைக்கை நிறுத்தி திரும்பிப் பார்த்தான் மார்க்ஸ். தல்வார் டவர்ஸின் காம்பவுண்டுக்கு வெளியே இருந்த கண்ணன் டீக்கடையில் அவனது டீம் மொத்தமும் நின்று கொண்டிருந்தனர். “வாப்பா” என நெல்லையப்பன் கையை அசைத்து அவனை அழைக்க புல்லட்டைத் திருப்பிய மார்க்ஸ் கண்ணன் டீக்கடையருகே வந்து நிறுத்தினான்.

“இங்க என்ன பண்றீங்க எல்லாரும்?” என்றபடி பைக்கிலிருந்து மார்க்ஸ் இறங்கினான்.

“வாப்பா சொல்றேன்” என்றார் நெல்லையப்பன். அவரது கையிலிருந்த லன்ச் பேக் அவர் இன்னும் அலுவலகத்திற்குள் போகவில்லை எனச் சொன்னது. “வாங்க சார்” என்றபடி மார்க்ஸ் கேட்காமலேயே சிகரெட்டை தந்த கண்ணன் “லெமன் டீயா நார்மல் டீயா சார்” எனக் கேட்டான்.

“லெமன் டீ... சர்க்கரை கம்மியா” என்றபடி தனது அணியினர் அருகில் வந்தான் மார்க்ஸ்.

“ஏன் ஆபிஸ் போகாம எல்லாரும் வெளிய நிக்குறீங்க?”

“இன்னைக்கு வியாழக்கிழமை” என பாண்டியன் தயக்கமாகச் சொன்னான். சட்டென மார்க்ஸுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. இன்று ரேட்டிங் டே... அவர்கள் தயாரித்த மூன்று சீரியல்களின் முதல் இரண்டு வார ரேட்டிங் சொல்லிக் கொள்ளும்படியில்லை. இன்றைக்கு மூன்றாவது வார ரேட்டிங் வரப்போகிறது. அது என்னவாக இருக்குமோ என்கிற பயத்தில்தான் அனைவரும் அலுவலகத்திற்குள் நுழையாமல் டீக்கடையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

“நீங்க வாசல்ல நின்னா ரேட்டிங் வராம போயிடுமா?”

“அதில்ல தல... ஏஞ்சலும் அவங்க டீமும் ஓவரா சீனப்போடுறானுங்க... லஞ்ச் டயத்துல கேன்டீன்ல ஏதோ கேக் கட்டிங் எல்லாம் பிளான் பண்ணியிருக்காங்களாம்” என்றான் பாண்டியன்.

“ரேட்டிங் வர்றதுக்கு முன்னாடியே கேக்கை வாங்கி வச்சிட்டானுங்களா?”

“வரும்னு அவனுங்களுக்கு ஒரு நம்பிக்கைதான்!”

“ஏண்டா ஷோ ஆரம்பிச்சு மூணு வாரம் கூட ஆகல... அதுக்குள்ள எதுக்கு இந்த வெற்றி விழா?”

“நம்மள வெறுப்பேத்ததான்” என்றார் நெல்லையப்பன்.

“ஆமா தல... ஓவரா சீனப்போடுறானுங்க... அதான் நம்ம ரேட்டிங் சரியில்லன்னா இப்படியே குருப்பா கிளம்பி தேவி தியேட்டர்ல 1 மணி ஷோ போயிரலாம்னு பிளான்” என்றான் பாண்டியன்.

“அது 4 மணிக்கு முடிஞ்சிருமே அதுக்கப்புறம் என்ன பண்ணுவீங்க?”

அவர்கள் அனைவரும் மெளனமாயிருந்தார்கள்.

“நல்ல ரேட்டிங் வருது அவங்க கொண்டாடுறாங்க... அதுல நாம வெறுப்பாக என்ன இருக்கு? நாமளும் அந்த ரேட்டிங்கை எப்படி கொண்டு வர்றதுன்னு யோசிங்க... எவ்வளவு நாள் இப்படி ஓடி ஒளிவீங்க... இன்னைக்கு ஆபிஸை கட் அடிக்கலாம் நாளைக்கு வந்துதான ஆகணும்!”

“இல்ல தல... கஷ்டப்பட்டு ஷோ பண்றோம்... ரேட்டிங் வரலைன்னா சங்கடமாயிடுது. முன்னாடி நாமல்லாம் ஒரே டீமா இருந்தோம். அப்ப பெருசா ஃபீல் ஆவாது... இப்பல்லாம் ரேட்டிங் வரலைன்னா அவங்ககிட்ட தோத்துட்ட மாதிரி இருக்கு தல!”

மார்க்ஸுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. அவன் யோசனையாக சிகரெட்டை வாயில் வைத்தான். பாண்டியன் வத்திபெட்டியை நீட்ட மார்க்ஸ் அதை வாங்கிப் பற்ற வைத்தான்.

“மணி என்னாச்சு?” என்றான் மார்க்ஸ்.

“11 ஆகப் போகுது தல... ரேட்டிங் எனி டைம் வந்துடும்!”

“சரி, இன்னைக்கு கண்ணன் கடையில இருந்தே என்ன ரேட்டிங் வருதுன்னு பார்ப்போம். கண்ணனோட அதிர்ஷ்டம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.”

“அதிர்ஷ்டமான கடை சார் நம்மளுடையது. சூப்பரா வரும் பாருங்க” என்றபடி அவன் டீ கிளாஸை நீட்டினான்.

“என்ன சூப்பரா வரும்?” என்றார் நெல்லையப்பன்.

“டிஆர்பி தான்” என்றான் கண்ணன்.

“யப்பா இவனுக்கு நம்மளவிட சேனல் மேட்டர் எல்லாம் தெரியுதுப்பா” என நெல்லையப்பன் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

மார்க்ஸ் யோசனையுடன் லெமன் டீயை உறிஞ்சினான். மேனன் போட்ட கால்குலேஷன் சரியா தவறா எனத் தெரிந்து கொள்ள தவித்தது அவன் மனசு.

இடியட் பாக்ஸ்

திவ்யா தனது அறையில் சேரில் அமர்ந்திருந்தாள். அவளது அணியினர் அனைவரும் அவளது அறையில் கூடியிருந்தனர். மார்க்ஸின் சீரியல்களுக்கு இன்னும் கொஞ்சம் ரேட்டிங் வரட்டும் என மானசீகமாக நினைத்துக் கொண்டாள் திவ்யா.

“திவ்யா ஒரு மணிக்கு கேன்டீன்ல கேக் கட்டிங்” என்றால் ஏஞ்சல்.

“கேக் கட்டிங்கா எதுக்கு?” எனப் புரியாமல் கேட்டாள் திவ்யா.

“ரெண்டு வாரமா நம்ம சீரியல்ஸ்தான் டாப் 3 பொசிஷன்ல இருக்கு. இந்த ரேட்டிங் வந்தா மூணாவது வாரம். அதை செலிபிரேட் பண்ணத்தான் கேக் கட்டிங்.”

“இன்னும் ரேட்டிங் வரலையே...”

“என்ன ரேட்டிங் வரும்ன்றதுதான் நமக்குத் தெரியுமே” என நம்பிக்கையாக சிரித்தான் தனபால்.

“மூணு வார ரேட்டிங்கை வெச்செல்லாம் ஒரு சீரியல் ஹிட்டா ஃபிளாப்பான்னு முடிவு பண்ண முடியாது. கொண்டாடுறது ஓகே. ஆனா இது ரொம்ப சீக்கிரம். 100 எபிசோடா இதே ரேட்டிங் இருந்து அப்ப இந்த செலிபிரேட் பண்ணா அதுல ஒரு அர்த்தமிருக்கும்” என்றாள் திவ்யா.

“ரொம்ப நாளாச்சு திவ்யா இப்படி ஒரு சக்ஸஸ், சந்தோஷமெல்லாம் பார்த்து... இந்த கேக் கட்டிங் கஷ்டப்பட்டு வேலை செஞ்ச டீமுக்கு ஒரு மோட்டிவேஷனா இருக்கும்” என்றாள் ஏஞ்சல். அவள் சொன்னதும் திவ்யாவுக்குக் கொஞ்சம் நியாயமாகத்தான் பட்டது.

“அப்படி யோசிச்சா ஓகேதான்” என்றாள் திவ்யா.

அனைவரும் புன்னகைத்தனர்.

“நாம கொண்டாடுறதெல்லாம் சரிதான்... அதுக்காக மார்க்ஸ் டீமை கஷ்டப்படுத்துற மாதிரி எதுவும் பண்ண வேண்டாம்!”

“நாம கொண்டாடுனாலே அவங்க மனசு கஷ்டமாயிடுவாங்க” என சிரித்தாள் ஏஞ்சல்.

திவ்யாவின் டேபிளில் இருந்த இன்டர்காம் அடித்தது.

“ரேட்டிங் வந்திருச்சு” என்றான் தனபால்.

அனைவரையும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

கண்ணன் டீக்கடையில் நின்று கொண்டிருந்த மார்க்ஸும் அவனது அணியினரும் பதற்றத்தை மறைத்தபடி சகஜமாக இருப்பதுபோல நடித்தபடியிருந்தனர்.

“பாண்டியா ஒரு போனைப் போடு இன்னுமா ரேட்டிங் வரல” என்றார் நெல்லையப்பன்.

“மாமா ரேட்டிங் வந்ததும் பாஸ்கரே போன் பண்றேன்னு சொல்லியிருக்கான். பொறுமையா இரு” என்றான் பாண்டியன்.

“நீங்க எல்லாம் சேர்ந்து என்ன டென்ஷன் பண்ணிருவீங்க போலயே” என்றபடி மார்க்ஸ் இன்னொரு சிகரெட்டை எடுத்துப்பற்ற வைக்க போனவன் 'ஏ' என்ற சத்தம் கேட்டு திரும்பினான். மொத்த பேரும் சத்தம் கேட்டு திரும்பினார்கள். ‘’ஏஏஏ…’’ என்ற உற்சாக கூச்சலுடன் தல்வார் டவர் பில்டிங்கிலிருந்து வெளியே ஓடி வந்தான் பாஸ்கர்.

மார்க்ஸும் மற்றவர்களும் புரியாமல் பார்த்தனர். ஓடி வந்த பாஸ்கர் காம்பவுண்டில் இருந்த தடுப்பு கம்பியை பிடித்து ஏறி மறுபுறம் கண்ணன் கடையருகே குதித்தவன் மார்க்ஸை அணைத்துக் கொண்டான்.

“தல நாம கலக்கிட்டோம்...” என உற்சாகமாக கத்தினான்.

ஏதோ ஒரு சந்தோஷமான செய்தி என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது.

“டேய் பாஸ்கர் விஷயம் என்னன்னு சொல்லுடா” எனக் கேட்ட பாண்டியனின் உடல் பதற்றத்தில் நடுங்கியது.

“வேற வேற வேற லெவல்...”

“டேய் ராஸ்கல்... ரேட்டிங்கை சொல்லுடா” என்றார் நெல்லையப்பன்.

“அவங்களோட டாப் சீரியல் ரேட்டிங் ஆறு”

“நம்ம சீரியல் ரேட்டிங்கை சொல்லுடா...”

“நம்ம ஸ்கூல் ஸ்டோரி... என்ன ரேட்டிங் தெரியுமா?” என அவன் நிறுத்த... அனைவரும் அவனையே பார்த்தனர்.

“6.5... அதான் டாப் ரேட்டட் ஷோ இந்த வாரம்” என பாஸ்கர் சொல்லி வாய் மூடும் முன் 'ஓ' எனக் கத்தியபடி மார்க்ஸை அவனைவரும் அப்படியே தூக்க அந்த இடமே களேபரமானது.

“டேய் டேய் விடுங்கடா... மாமா விடு மாமா” என மார்க்ஸ் சத்தமிட்டான். ஆனால் அவன் மனம் சந்தோஷத்தில் பறந்து கொண்டிருந்தது.

“நான் அப்பவே சொன்னேன்ல... நம்ம கடை ராசியான கடைப்பா...” என சந்தடி சாக்கில் கடைக்கு விளம்பரம் ஓட்டினான் கண்ணன்.

விசிலும் கூச்சலுமாக சில நிமிடங்கள் கழிந்தன. மார்க்ஸ் தரையில் இறங்கினான்.

“மத்த ரேட்டிங் சொல்லு பாஸ்கர்!”

“சீரியல்ல நம்ம ஸ்கூல் ஸ்டோரி ஃபர்ஸ்ட் 6.5… அவங்களோடது செகண்ட் ஆறு ரேட்டிங். அப்புறம் மூணாவது நாலாவது இடத்தில அவங்க சீரியல்தான். ஒண்ணு 4.5 இன்னொன்னு 4.3”

“அதை விடு நம்மளோட அடுத்த ரெண்டு சீரியல் ரேட்டிங் சொல்லு” என்றான் பாண்டியன்.

“அந்த காமெடி பேய் கதை 3.5 வந்திருச்சு”

“பாண்டியா சூப்பர்ரா. பேய்க்கு புள்ள இருக்குன்ற சென்ட்டிமென்ட் வொர்க்கவுட்டாயிருச்சுப்பா” என்றார் நெல்லையப்பன்.

“அந்த கலர் கம்மியான பொண்ணு கதை எவ்வளவுப்பா?”

“அது மட்டும்தான் ரொம்ப கம்மியா இருக்கு... 2.1” என்றான் பாஸ்கர்.

ஒரு சீரியல் முதலிடத்திலிருப்பது சந்தோஷமாக இருந்தாலும் மற்றொரு சீரியல் கடைசி இடத்தில் இருப்பது சங்கடமாக இருந்தது மார்க்ஸூக்கு.

இதுதான் சேனல் வாழ்க்கை. ஒரே சமயத்தில் சந்தோஷமும் சங்கடமும் கலந்தது அது. வாழ்க்கை என்பது சேனல்களை பொறுத்தவரை வருடங்களில் இல்லை. வாரங்களில்தான். போனவாரம் முதலிடத்தில் இருந்த சீரியல் இந்த வாரம் முதலிடத்தில் இல்லை. அடுத்த வாரம் இது முதலிடத்திலேயே இருக்குமா? அதுவும் சொல்ல முடியாது. கீழே இருப்பவர்கள் மேலே போவதும், மேலே இருப்பவர்கள் கீழே வருவதும் கண்ணுக்கு முன்னால் நிகழ்வது மீடியா உலகில் மட்டும்தான்.

“யோவ் மார்க்ஸு... ஃபர்ஸ்ட்டு வந்திருக்கோம். அதைக் கொண்டாடுறதை விட்டுட்டு ரேட்டிங் வராத சீரியலை நினைச்சு ஃபீல் பண்ணிகிட்டு இருக்கியே...” என்றார் நெல்லையப்பன்.

“இல்லன்ணே… சந்தோஷம்தான்”

“அப்படிச் சொல்லுப்பா!” எனும் போதே பாஸ்கர் போன் அடித்தது. போனை எடுத்து பார்த்தவன்.

“அய்யய்யோ... சார் அடிக்கிறாரு... நான் வரேன்” என பதற்றமானான்.

“இரு பாஸ்கரு டீ அடிச்சிட்டு போலாம்”

“இல்ல... இல்ல... சந்தோஷத்துல வேலைய அப்படியே போட்டுட்டு ஓடி வந்துட்டேன்... நான் போறேன்” என அவன் மீண்டும் கம்பியை பிடித்து உள்ளே குதித்தவன் ஆபிஸ் பில்டிங்கை நோக்கி ஓடினான். அனைவரும் சிரித்தனர். அவர்களது சிரிப்பில் இப்போது சந்தோஷம் நிறைந்திருந்தது.

இடியட் பாக்ஸ் | திவ்யா

திவ்யா அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களின் முகங்கள் களையிழந்து போயிருந்தன. திவ்யா தனது மன ஓட்டத்தை உற்று கவனித்தாள். அது சந்தோஷமா வருத்தமா என்பதை அவளால் சரியாகக் கணிக்க முடியவில்லை.

நமது எதிரியின் தோல்வி தரக்கூடிய சந்தோஷத்தை நாம் அடைகிற வெற்றி நமக்குத்தருவதில்லை என்பதுதான் உண்மை. எதிரிகளற்ற வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் போவதற்கு அதுதான் காரணம்.

வாழ்க்கையென்பது இனிய அனுபவம் என இங்கு சொல்லித்தரபடவில்லை. வாழ்க்கை ஒரு பந்தயமென கற்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் சந்தோஷமாக இருப்பதற்கு வெற்றி தேவைப்படுகிறது. வெல்வதற்கு நமக்கொரு எதிரி தேவைப்படுகிறான். இந்த பந்தயத்தில் தோற்று விடுவோமோ என்கிற பயம் வாழ்நாள் முழுவதும் நம்மை துரத்திக் கொண்டேயிருக்கிறது. கொட்டுகிற அருவியில் நனைகிற மாதிரி நிபந்தனைகளற்ற சந்தோஷமே வாழ்க்கை என்பதை யாரும் உணர்வதே இல்லை.

“திவ்யா” எனத் தயக்கமான குரலில் அவளை அழைத்தாள் ஏஞ்சல்.

திவ்யா அவளை ஏறிட்டு பார்த்தாள்.

“கேக் கட்டிங்!”

“இதுக்கப்புறமுமா?”

“ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு”

“அதுக்குத்தான் அவசரப்படாதிங்கன்னு சொன்னேன்!”

“இல்ல ஏற்பாடு பண்ணியாச்சு பேக்கடிக்க வேண்டாம்...”

“எதுக்குன்னு கேட்டா என்னன்னு சொல்லுவீங்க?”

“நம்மளோட மூணு சீரியலும் ஒண்ணா சேர்த்தா அவங்க சீரியலைவிட ஜாஸ்தி GRP வரும்...”

திவ்யா புன்னகைத்தாள்.

“சரி வெட்டுவோம்” என அவள் எழ அனைவரும் எழுந்தனர்.

திவ்யா ஏஞ்சல் மற்றும் அவளது அணியினர் கேன்டீனின் கண்ணாடி கதவை திறக்க... மார்க்ஸ் அணியினரின் கூச்சல் பெரிதாகக் கேட்டது. ஒரு கணம் உள்ளே போவதா வேண்டாமா என திவ்யா தயங்க அதற்குள் அவளைப் பார்த்துவிட்ட நெல்லையப்பன் “மேடம் வாங்க வந்து நம்ம செலிபிரேஷன்ல கலந்துக்கங்க” என அழைத்தார்.

தயக்கமாக அவளது அணியினர் உள்ளே நுழைந்தனர்.

ஏஞ்சல் வாங்கி வைத்திருந்த கேக்கை வெட்டித்தான் அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த அடுத்த கணம் ஏஞ்சலின் கோபம் தலைக்கேறியது. “யாரை கேட்டுடா இந்த கேக்கை எடுத்தீங்க?!”

“ஏஞ்சல் கூல் டவுன். லன்ச் சாப்பிடலாம்னுதான் கேன்டீனுக்கு வந்தோம். பார்த்தா கேக் ரெடியா இருந்துச்சு... அதான் வெட்டிட்டோம்” என நெல்லையப்பன் சிரித்தார்.

கூட்டத்தில் மார்க்ஸைத் தேடினாள் திவ்யா அவன் அங்கு இல்லை.

"அசிங்கமா இல்ல மாமா.... ஓசி கேக் வெட்டுறதுக்கு?”

“தப்புதான்... விலை என்னன்னு சொல்லு கொடுத்துடுறோம். ஜெயிச்சிருவோம்னு நினைச்சி கேக்கை வாங்கிட்டீங்க... ஆனா என்ன பண்றது நாங்க ஜெயிச்சிட்டோம். தோத்த நீங்க கேக் வெட்ட மாட்டீங்கன்னுதான் நாங்க வெட்டிட்டோம்... கேக்கு வேஸ்டாகக் கூடாதில்ல... என்ன நான் சொல்றது?” எனச் சிரித்தார் நெல்லையப்பன். அனைவரும் சிரித்தனர்.

ஏஞ்சல் கோபமாக ஏதோ சொல்ல வர திவ்யா அவளது கையைப் பிடித்து அவளை நிறுத்தியவள் மெதுவாக நெல்லையப்பன் அருகில் வந்தாள்.

மார்க்ஸ் டீம் மெளனமானது. கேக்கை வெட்டி ஒரு துண்டை எடுத்தவள், “வாழ்த்துகள் நெல்லையப்பன்” என அவரைப் பார்த்து நீட்ட கேன்டீனில் கனத்த மெளனம் நிலவியது.

“வாங்கிக்க நெல்லையப்பன் நிஜமாவே எனக்கு சந்தோஷம்தான்” என திவ்யா சொல்ல நெல்லையப்பன் வாயைத் திறக்க திவ்யா கேக்கை ஊட்டினாள்.

அனைவரும் மீண்டும் 'ஏ' எனக் கத்த... “மேடம் கொச்சுக்காதிங்க” என நெல்லையப்பன் கேக்கை வெட்டி திவ்யாவுக்கு ஊட்டினார். அனைவரும் 'ஓ' என மீண்டும் ஒலியெழுப்பினர். திவ்யா புன்னகைத்தாள். வாயில் வைத்த கேக் மனசு வரை கசந்தது.

மார்க்ஸ் தனது அறையில் தனியாக அமர்ந்திருந்தான். ஒட்டுமொத்த உலகமும் இது ஜெயிக்காது என ஒதுக்கித் தள்ளிய படைப்பு வெற்றி பெறும் போது படைப்பாளிக்கு வரும் சந்தோமும் கர்வமும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனாலும் நண்பர்களின் தோல்வியில் கிடைக்கிற வெற்றியை நம்மால் கொண்டாட முடிவதில்லைதான்.

அவனது அறையில் இருந்த இன்டர்காம் ஒலித்தது. மார்க்ஸ் போனை எடுக்க...

“கொஞ்சம் என் ரூம் வரைக்கும் வர முடியுமா?’’ என்றார் மேனன்.

மார்க்ஸ் மேனனின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

மேனன், தாட்சா இருவரும் அமர்ந்திருந்தார்கள். சேல்ஸ் மேனேஜர் சீயோன் உதவி மேனேஜர்கள் மணி, ஐயப்பன், அப்பாராவ் என மொத்த சேல்ஸ் டீமும் அங்கிருந்தனர். அவர்களுக்கு நடுவில் ஐயா அமர்ந்திருந்தார்.

ஐயா தமிழகத்தின் முன்னணி பிசினஸ்மேன். நகைக்கடை, புடவைக்கடை, பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடை என தி.நகரில் பாதி அவரது கடைகள்தான். வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை என சென்னையின் அனைத்து பகுதிகளிலும் அவரது கடைகளுக்கான கிளைகள் உண்டு. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அவரது நிறுவனத்திற்கு கிளைகள் உண்டு. மும்பையில் கூட பிரமாண்டமாக அவரது நிறுவனத்தின் கிளை துவங்க வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சேனல் வருமானத்தில் கால்பகுதி ஐயாவின் விளம்பரங்கள் மூலம்தான் வந்து கொண்டிருந்தது.

“இதுதான் மார்க்ஸ்... அந்த சீரியலோட இன்சார்ஜ்” என்றான் சீயோன்.

“வணக்கம் தம்பி” என அய்யா கை கூப்ப மார்க்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை.

“வணக்கம் ஐயா” என அவன் கை கூப்பினான். சேனல்காரர்கள் எல்லாம் விளம்பரம் வாங்குவதற்குத் தவமாய் தவமிருக்கும் ஐயா சேனலுக்கு வந்திருக்கிறார். அவனைப் பார்த்து வணக்கம் வைக்கிறார் என்பது அவனுக்கு நம்பமுடியாததாக இருந்தது.

“ ‘அழகி’ன்னு ஒரு சீரியல் வருதே” என்றார் அய்யா...

“ஆமாங்கய்யா” என்றான் மார்க்ஸ். கலர் கம்மியான, ஆனால் அதுகுறித்து எந்த வருத்தமும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் அந்தப் பெண் சீரியலைப் பற்றி அவர் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மார்க்ஸுக்குள் எழுந்தது.

“தினமும் என் பொண்ணு அதைப் பார்த்திடுறா” என்றார் ஐயா...

மார்க்ஸ் ஆச்சர்யமாக அவரைப் பார்த்தான்.

“சின்னதுல இருந்தே அவளுக்கு நம்ம கொஞ்சம் கலர் கம்மியா இருக்கோம்னு பெரிய மனக்குறை. பள்ளிகூடம் காலேஜ்னு எங்க போனாலும் அவளுக்கு இதுதான் பிரச்னை. அவளுக்குன்னு தனியா ஒரு மார்டன் துணிக்கடை... அதை என்ன சொல்லுவீங்க?”

“பொட்டிக் அய்யா” என்றான் சீயோன்.

“ஆங்... அது தான்... 10 மாடியில வச்சு குடுத்தேன்... பார்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டா!”

வியாபார சக்கரவர்த்தியான ஐயாவை அனைவரும் அறிவார்கள். அவருடைய இந்த அப்பா முகம் யாரும் அறியாதது.

“காசு பணத்தை எவ்வளவு வேணா கொட்டிக் குடுக்க முடியும். ஆனா நம்பிக்கையை எப்படி கொடுக்கிறது? பார்க்காத டாக்டர் இல்லை. சாமியார்கள் இல்லை அந்த புள்ளைக்கு வெளி உலகத்தைப் பார்க்குற தைரியத்தை யாராலயும் தர முடியல!”

அனைவரும் அவரது வார்த்தைகளில் நெகிழ்ந்து போயிருந்தார்கள்.

“ஆனா உன்னோட ஒரு சீரியல் அந்த நம்பிக்கையை அவளுக்குக் கொடுத்திருச்சு. அப்படி ஒரு சீரியலை எப்படி எடுக்கணும்னு உனக்கு தோணுச்சு?!”

மார்க்ஸூக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை.

“அழகுன்றது நிறம் கிடையாது... இவங்க சொல்றது எல்லாம் கிடையாதுன்னு உன் சீரியல் சொன்னப்ப என் பொண்ணு கேட்டுகிட்டாப்பா... நேத்து முத தடவையா கடைக்கு அவ வந்தா... அவளுக்காக ஒரு பெரிய அறையை ரெடி பண்ணி ரொம்ப நாள் பூட்டியே வச்சிருந்தேன். நேத்து அதுல அவ வந்து உட்கார்ந்துட்டா...”

மார்க்ஸின் கண்கள் கலங்கின…

இடியட் பாக்ஸ்

“ஒரு சீரியல்ல என் புள்ள வாழ்க்கையையே மாத்திபுட்டியேய்யா..." ஐயாவின் குரல் நெகிழ்ந்தது. ஐயா சேரில் இருந்து எழுந்து அவனை அணைத்துக் கொண்டார்.

அறையில் இருக்கும் அனைவரும் கலங்கிப் போனார்கள். ஐயா தன்னை சமாளித்துக் கொண்டு மீண்டும் சேரில் அமர்ந்தார்.

“அதான் நேர்ல பார்த்து நன்றி சொல்லணும்னு கிளம்பி வந்தேன். அந்த சீரியல்ல வர்ற மொத்த விளம்பரமும் நம்ம கடை விளம்பரமாதான் இருக்கணும்!”

‘’ஐயா... அதோட ரேட்டிங் கொஞ்சம் கம்மிதான்” என இழுத்தான் சீயோன்.

ஐயா திரும்பி அவனை முறைத்தார்.

“இல்லய்யா அப்புறமா நீங்க சொல்ல கூடாதுல்ல!”

அனைவரது முகத்திலும் புன்னகை.

“நான் கேட்டனா ரேட்டிங்... இந்த சீரியல எவ்வளவு நீளமா வேணா பண்ணு... நான் தர்றேன் விளம்பரம். என் பொண்ணு மாதிரி இன்னும் எத்தனை புள்ளைங்க மனசுக்குள்ள முடங்கி கிடக்கோ தெரியல. அது அத்தனையும் தைரியமா வெளிய வர்ற வரைக்கும் பண்ணு” என்றார் ஐயா.

மார்க்ஸ் கண்கள் கலங்கி கை கூப்பினான்.

“நான் வர்றேன் தம்பி... வர்றேங்க” எனச் சொல்லிவிட்டு ஐயா நகர... அவர் பின்னால் மொத்த சேல்ஸ் டீமும் ஓடியது.

மார்க்ஸ், மேனன், தாட்சா மட்டும் அறையில் இருந்தார்கள்.

“டிவி பிசினஸ்தான்… நான் இல்லைன்னு சொல்லல. ஆனா அதைத்தாண்டி நிறைய விஷயங்களை நாம இது மூலமா பண்ண முடியும். அதுக்கு ஒரு எக்ஸாம்ப்பிள்தான் இது. வியாபாரத்துக்காக எவ்வளவோ விஷயங்கள பண்றோம். இப்படியும் ஒண்ணு ரெண்டு ஷோ பண்ணும்போது நிஜமாவே திருப்தியாவும் சந்தோஷமாவும் இருக்கு மார்க்ஸ்!” என்றார் மேனன்.

“இதுதான் உன்னோட பலம். இதைவிட்டு கொடுக்காம சக்ஸஸ் பண்ணு மார்க்ஸ்!” என்றாள் தாட்சா.

வார்த்தைகளின்றி மெளனமாயிருந்தான் மார்க்ஸ். ஒரு தொடர் என்பது வெறும் தொடரல்ல... எத்தனையோ இல்லங்களில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு நாம் சொல்லும் செய்தி. ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு சம்பவங்களும் அவர்களுக்கு ஏதோ ஒன்று சொல்லும். நாம் என்ன செய்தி சொல்லப்போகிறோம் என்பதைப் பொறுத்துதான் நாம் யார் என்பதை உலகம் தீர்மானிக்கும்.

மார்க்ஸ் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். வாசலில் கிடந்த செருப்புகள் நந்திதாவும் திவ்யாவும் வந்துவிட்டார்கள் எனச் சொல்லியது. அவன் தனது அறைக்குள் நுழைந்தான். பொக்கே ஒன்றும் கேக் ஒன்றும் அவனது டேபிளில் இருந்தன. பொக்கேயில் ஒட்டியிருந்த வாழ்த்து அட்டை ஜன்னல் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன. சட்டென நெகழ்ச்சியாக உணர்ந்தான் மார்க்ஸ். உடனே திவ்யாவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

மார்க்ஸ் தனது அறையை விட்டு வெளியே வரவும் திவ்யா தனது அறையை விட்டு வரவும் சரியாக இருந்தது.

நேராக அவள் அருகே சென்றவன் “தேங்க் யூ” என அவளை அணைத்துக் கொண்டான்.

திவ்யா அதை எதிர்பார்க்கவில்லை...

“எதுக்கு தேங்க்ஸ்?” என்றாள் திவ்யா.

“கேக், பொக்கே... உன்னோட வாழ்த்துக்காகத்தான் இன்னைக்கு பூரா காத்திகிட்டு இருந்தேன்”

“அது நான் வாங்கல... நந்திதா வாங்கி வெச்சிருக்கா!”

ஏமாற்றமாக விலகினான் மார்க்ஸ்.

பக்கத்து அறை வாசலில் நின்று நந்திதா நடந்தவைகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். திவ்யாவும் மார்க்ஸும் அவளைப் பார்த்தார்கள்!

- Stay Tuned...



from விகடன்

Comments