சாய்னா... இந்திய விளையாட்டு உலகின் மிக முக்கியமான ஒரு வீராங்கனையின் பயோபிக் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கிறது. சாய்னா நேவாலாக பரினிதி சோப்ரா நடிக்க, 'தாரா ஜமீன் பர்' திரைப்படத்தின் எழுத்தாளரான அமோல் குப்தே, இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இரண்டே கால் மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படத்தில், ஒரு விளையாட்டு ரசிகனின் கண்ணில்பட்ட சில விஷயங்கள் இங்கே!
உலகின் நம்பர் 1 பேட்மின்டன் வீராங்கனையாக உருவெடுக்கவேண்டும் என்ற தன் கனவை சாய்னா எப்படி எதிர்கொண்டார், அதற்கு என்னென்ன தியாகங்கள் செய்தார், என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்பதே இந்தப் படம். 2018 காமன்வெல்த் இறுதிப் போட்டியை சாய்னா வெல்கிறார். அதன்பிறகு நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒரு கேள்வி கேட்கப்பட, ஃபிளாஷ்பேக் காட்சிகள் விரிகின்றன. சாய்னாவின் பயணம் அங்கு தொடங்குகிறது.
ஸ்போர்ட்ஸ் படங்களில் பெரிதாக ஒரே டெம்ப்ளேட்தான் இருக்கும். ஒரு சிறுவனின்/ சிறுமியின் ஆசை, அதற்கான அவர் உழைப்பு, அவர் முன் இருக்கும் தடைகள், அதை அவர் எப்படி உடைத்தார்… இதில் வித்தியாசப்படுவது என்னவோ அது என்ன தடை என்பதும், அதை அவர் எப்படி உடைத்தார் என்பதும்தான். இந்த இடங்களில் பெரிதாக கவனம் செலுத்தியிருந்தால் படம் அழுத்தமாக இருந்திருக்கும். கோபிசந்த் உடனான மனக்கசப்பு, சாய்னாவின் காயங்கள், ரசிகர்களின் ரியாக்ஷனால் அவர் அடைந்த மன உளைச்சல்… ஒரு சினிமாவுக்குத் தேவையான முக்கியமான விஷயங்களை ஜஸ்ட் லைக் தட் கடந்துவிட்டு, மற்ற டெம்ப்ளேட் சமாச்சாரங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கியதால், இதை ஒரு முழுமையான படமாக உணரமுடியவில்லை.
பயோபிக் படங்களின் மிகப்பெரிய சவால் அந்தப் பிரதான கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிகரைத் தேர்வு செய்வதுதான். அதிலும் பயோபிக் எனும்போது, அது மிகப்பெரிய கடினம். அவர்களின் உடல்வாகு, ஆட்ட நுட்பங்கள் என ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கவேண்டும். தோனி படத்துக்கு சுஷாந்த் போல் ஒருவர் அமைந்தது மிகப்பெரிய விஷயம். ஆனால், சாய்னாவுக்கு அது நடக்கவில்லை. முதலில் ஒப்பந்தமான ஷ்ரத்தா கபூர் விலகியதால், பரினிதி சோப்ரா இந்தக் கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகள் இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால், அவரால் சாய்னாவை திரையில் கொண்டுவர முடியவில்லை. சாய்னாவை, அவர் வலியை, அவர் ஆட்டத்தை… எதையும் கொண்டுவர முடியவில்லை.
சாய்னாவின் மூவ்மென்ட்களை, ஷாட்களை பரினிதியால் வெளிக்கொண்டுவர முடியவில்லை என்பதை படக்குழுவும் உணர்ந்திருக்கிறது. அதிக தாமதிக்காமல் படத்தைத் தொடங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், டெக்னிக்கல் ஏரியாவில் அதை சரிசெய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், பெரும்பாலான பேட்மின்டன் காட்சிகள் குளோஸ் அப் மூலமும், பரினிதியின் தலைக்குப் பின்னால் ஷாட்கள் வைத்தும் சரிசெய்திருக்கிறார்கள். இதன் காரணமாக, பேட்மின்டன் போட்டிகளை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. போக, சாய்னாவின் உணர்வுகளையுமே இந்தப் படமோ, பரினிதியோ முழுமையாகக் கடத்தவில்லை. அட, அந்த முகத்தில் இருக்கும் பெரிய மச்சம் கூட சரியாக ஒட்டவில்லை. 'தமிழ்ப்பட'த்தில் சிவா ஒட்டிக்கொள்ளும் மரு போலத் தனியாகத் தெரிகிறது.
பரினிதி கதாபாத்தரத்திலும் நடிப்பிலும் குறைகள் இருந்தாலும், இளம் சாய்னாவாக வரும் நாயிஷா கௌர் படோயா அப்படியே சாய்னாவை உரித்து வைத்திருக்கிறார். பார்ப்பதற்கும் சரி, விளையாடுவதும் சரி, அப்படியே சாய்னா! சாய்னாவின் மூவ்மென்ட்கள், ஷட்டிலைப் பிடித்திருக்கும் பாங்கு, சர்வீஸ் ரிசீவ் செய்யும்போது கொடுக்கும் பார்வை - எங்கிருந்து இவரைப் பிடித்தார்களோ! அதுவும் அந்த around the head smash - டிரேட்மார்க் சாய்னா! ஐந்தாறு வருடங்கள் கழித்து இவர் சாய்னா ரோலில் நடித்திருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும். இவரைக் கண்டுபிடித்தவருக்கு ஒரு ஸ்பெஷல் விருது கொடுக்கவேண்டும்.
பொதுவாக, ஒவ்வொரு விளையாட்டு வீரரும் 100 சதவிகித சந்தோஷத்தோடுதான் அத்தனை தியாகங்களையும் செய்வதாக திரைப்படங்கள் காட்டும். ஆனால், தன் உணர்வை, காதலை ஒதுக்கிவைக்கவேண்டும் என்ற நிலை வரும்போது அதற்காக வருந்துகிறார் சாய்னா. ஒருகட்டத்தில், ‘இந்த விளையாட்டுக்காக இதற்கு மேல் எதையெல்லாம் தியாகம் செய்யவேண்டும்’ என்ற மனநிலைக்குமே வந்துவிடுவார். இதையும், விளம்பரத்தில் நடிக்கச் சென்று பயிற்சிக்கு வராததால் பயிற்சியாளருடன் (கோபிசந்த்) ஏற்பட்ட மனக்கசப்பு போன்ற விஷயங்களையும் நேர்மையாகச் சொன்னது பாராட்டுதலுக்குரியது. ஒரு விளையாட்டு வீரரின் பயணத்தில், அவர் வாழ்க்கையில் இந்த கார்ப்ரேட்களின் பங்கு எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக சில காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதுவும் நல்ல விஷயம்!
Also Read: Godzilla vs Kong... ஜெயிச்சது என்னமோ சினிமாதான் சாரே! மிஸ் பண்ணிடாதீங்க... வருத்தப்படுவீங்க!
அதேசமயம், அந்த பயிற்சியாளரின் கதாபாத்திரத்தை முழுமையாகக் காட்டாதது சரியா என்ற கேள்வியையும் எழுப்பவேண்டியிருக்கிறது. புதிதாகப் படம் பார்ப்பவர்களுக்கு கோபிசந்த் ஏதோ கண்ணாடி அறைக்குள் இருக்கும் கண்டிப்பான பயிற்சியாளராகவும், அவரைவிடக் கனிவான பயிற்சியாளருடன் சேர்ந்த பிறகே சாய்னா நம்பர் 1 ஆனதாகவுமே புரிந்துகொள்ளக்கூடும்.
முக்கிய நபர்களின், நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுவதைத் தவிர்த்திருக்கிறார்கள். கோபிசந்த் கதாபாத்திரத்தின் பெயரை ராஜன் என்று மாற்றியிருக்கிறார்கள். கரோலினா மரின் பெயரை மாற்றியவர்கள், அவரை வலது கை ப்ளேயராகவும் மாற்றியிருக்கிறார்கள். ஏன் என்றுதான் தெரியவில்லை. சென்னையில் நடக்கும் ஒரு ஜூனியர் தொடரில், ‘பூப்பந்து’ போட்டி என்று தொங்கிய பேனர், அந்தக் காலகட்டத்தில் இருந்த பாயின்ட் சிஸ்டம் போன்ற விஷயங்களில் அவர்களின் உழைப்பு தெரிகிறது. அதே உழைப்பை கொஞ்சம் திரைக்கதையிலும் கொட்டியிருக்கலாம்.
இத்தனை அவசரப்படாமல் பொறுமையாக ப்ளான் செய்து, சாய்னாவாக நடித்திருக்கும் பரினிதியிடமும் சற்று நம்பகத்தன்மை கொண்ட நடிப்பை வாங்கியிருந்தால், இந்தப் படம் நிச்சயம் நிஜ 'சாய்னா'வுக்கான மகுடமாக இருந்திருக்கும். இப்போது இது பாலிவுட் பயோபிக் சீசனில் வெளியான மற்றுமொரு டெம்ப்ளேட் படம் அவ்வளவே!
from விகடன்
Comments