குத்துச்சண்டையும், பா.இரஞ்சித்தின் மெட்ராஸ் பரம்பரைகளும்... `சார்பட்டா' வீடியோ சொல்வது என்ன?!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் திரைப்படங்களும், அவர் பேச்சும் எப்போதும் தமிழ்ச்சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். ரஜினியுடன் 'கபாலி', 'காலா' எனத் தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கியவர் இப்போது ஆர்யாவுடன் 'சார்பட்டா' படத்தோடு வந்திருக்கிறார். இரஞ்சித்தின் முதல் ஸ்போர்ட்ஸ் டிராமா படம் இது.

பழைய மெட்ராஸை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் 'சார்பட்டா' படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ இன்று யூடியூபில் வெளியானது. இந்த 3 நிமிட வீடியோவில் என்ன ஸ்பெஷல்?!

70, 80-களில் வடசென்னை பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த ரோஷமான ஆங்கிலக் குத்துச்சண்டைதான் படத்தின் கதைக்களம். சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இந்த இரண்டு பரம்பரைகள் தொடர்ந்து குத்துச்சண்டைப் போட்டியில் மோதிக்கொள்வதும், இவர்களுக்கு இடையேயான ஈகோவுமே படத்தின் திரைக்கதையாக விரிவடையும் எனத் தெரிகிறது.

எப்போதும் கதாபாத்திரங்களின் பெயர்களின் மூலமாகவே அந்த கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்துபவர் பா.இரஞ்சித். 'சார்பட்டா' படத்தில் சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த கதாநாயகன் ஆர்யாவின் பெயர் 'கபிலன்' என்றும், இன்னொரு முக்கிய கதாபாத்திரமான கலையரசனின் பெயர் 'வெற்றிச்செல்வன்' என்றும் வைக்கப்பட்டிருக்கிறது. ஜான் கொக்கேன் மற்றும் சந்தோஷ் பிரதாப்புக்கு வேம்புலி, ராமன் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இடியப்ப பரம்பரையின் இன்னொரு முக்கிய கேரெக்டரான நடிகர் ஷபீரின் கதாபாத்திரத்துக்கு டான்ஸிங் ரோஸ் எனப்பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

சார்பட்டா

ஆர்யாவின் சினிமா கரியரில் சார்பட்டா மிகவும் முக்கியமானப் படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 'நான் கடவுள்', 'அவன் இவன்' என சில படங்களில் ஆர்யா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அவருக்கே உரிய தனித்த கதாபாத்திரம் இதுவரை அவருக்குக் கிடைக்கவில்லை. அந்தக் குறையை 'கபிலன்' தீர்ப்பான் என்கிற உற்சாகத்தில் இருக்கிறார்கள் ஆர்யா ரசிகர்கள்.

படத்தில் சார்பட்டா பரம்பரையின் ரங்கன் வாத்தியாராக பசுபதி அறிமுகப்படுத்தப்படுகிறார். 'விருமாண்டி' படத்துக்குப்பிறகு பசுபதிக்கு ஒரு இன்டென்ஸான கதாபாத்திரமாக இது இருக்கும் என்பதை உணர்த்துகிறது வீடியோ. இவரை எதிர்க்கும் இடியப்ப பரம்பரையின் வாத்தியாராக 'காதலும் கடந்து போகும்' படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் அசத்திய சுந்தர், துரைக்கண்ணு வாத்தியாராக அறிமுகமாகிறார்.

இரஞ்சித்தின் படங்களில் பெண்களின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும். 'சார்பட்டா'விலும் மாரியம்மாளாக கதாநாயகி துஷாரா, 'பாக்கியம்' கதாபாத்திரத்தில் அனுபமா, லக்‌ஷ்மி கதாபாத்திரத்தில் சஞ்சனா என மூன்று பெண் கதாபாத்திரங்கள் வீடியோவில் காட்டப்படுகின்றன. இவர்கள் மூவருக்குமே திரைக்கதையில் மிக முக்கிய பங்கு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கையில் கிட்டாரோடு கெவின் என்கிற டாடியாக ஜான் விஜய் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவரது ஹேர்ஸ்டைல், கிட்டார், பெயர் என எல்லாமே அவர் ஒரு ஆங்கிலோ இந்திய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

சார்பட்டா

நடிகர் காளிவெங்கட் படத்தில் கோனி சந்திரன் எனும் கான்ட்ராக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'பழைய ஜோக்' தங்கதுரை டைகர் கார்டன் தங்கமாக நடித்திருக்கிறார்.

கதாபாத்திர அறிமுக வீடியோ, ஆர்யா உள்பட அத்தனை நடிகர்களும் இந்த கேரக்டர்களுக்காக எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

வீடியோவின் கடைசியாக சார்பட்டா பரம்பரையும், இடியப்ப பரம்பரையும் மோதிக்கொள்ளும் குத்துச்சண்டை அரங்கிற்குப் பின்னால் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் காட்டப்படுகிறது.

இந்த கதாபாத்திர வீடியோவின் இசையிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அவரது பின்னணி இசை படத்துக்கான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் கூட்டுகிறது.

கிராமங்களில் குறிப்பாக தென் தமிழத்தில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டாக இருந்ததைப்போல, சென்னை போன்ற பெருநகரத்தில் குத்துச்சண்டை என்பது எளிய மக்களின் விளையாட்டாக, அவர்களின் கலாசாரமாக, அவர்களின் அடையாளமாக இருந்திருக்கிறது. அதை மீண்டும் தன் கலையின் வழியே மீட்டெடுக்க முயன்றிருக்கும் பா.இரஞ்சித், 'சார்பட்டா'வை எப்படிப் படமாக்கியிருக்கிறார் என்பதைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்!



from விகடன்

Comments