போலீஸுக்குப் பணப்பட்டுவாடா; பதவிக்கேற்ப `கவர்’ - 6 பேர் பணியிடை நீக்கம் - பின்னணி என்ன?

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா நடந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி காவல்நிலையம்

தி.மு.க முதன்மை செயலாளர் கே.என் நேரு திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் பல மூத்த நிர்வாகிகள் இருந்தும் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. கே.என் நேருவை எதிர்த்து புதுமுக வேட்பாளரான பத்மநாபன் என்பவர் களம் காண்கிறார். அ.ம.மு.க சார்பில் கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ-க்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கே.என் நேரு எளிதாக வென்றுவிடுவார் என்கிற பேச்சுக்கள் அடிபடும் சூழலில் போலீஸாருக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துக்கொண்டிருக்கிறது.

திருச்சியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். நாளை திருச்சி போலீஸார் தபால் வாக்கு செலுத்த இருக்கும் நிலையில், போலீஸாருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு கவரிலும் பதவிக்கு ஏற்றார் போல் பணம் வைத்து விநியோகிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்ற நிலையில். தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒரு தேர்தல் அலுவலர் மற்றும் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் காவல் உதவி ஆணையர்கள் நேரடியாக சோதனையிட்டு விசாரணை நடத்தினர். திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் ,உறையூர், தில்லைநகர், நீதிமன்றம், எடைமலைப்பட்டிபுதூர், கன்டோன்மென்ட் ஆகிய 6 காவல் நிலையங்களில் கவர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருச்சி கண்டோண்மெண்ட் காவல்நிலையம்

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் ,உறையூர், தில்லைநகர், நீதிமன்றம், எடைமலைப்பட்டிபுதூர், கன்டோன்மென்ட் காவல் நிலையங்களில் கவர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை, பதவிக்கு ஏற்றாற் போல் கவர் கொடுக்கப்பட்டிருப்பது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சி போலீஸார்

இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் இன்று உத்தரவிட்டிருக்கிறார்.

தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு தான் பணாப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக அ.தி.மு.க தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கே.என் நேரு

அதில், திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த சதி திட்டம் தீட்டப்படுவதாகவும், தன் மீது களங்கம் ஏற்படுத்த அவதூறு பரப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதமும் அனுப்பியிருக்கிறார்.



from விகடன்

Comments