பொண்ணுங்க எல்லாம் செம ஷார்ப்பு... பாயின்ட் ஆஃப் வியூவை மாத்துங்க டைரக்டர்களே?!

தமிழ் சினிமாவுக்கும், உண்மைக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்தப்படும் பெண் கேரக்டர்கள்.

தமிழ்ப் பெண்கள் எல்லாம் அறிவிலும், சிந்தனையிலும், செயல்பாட்டிலும் பல்வேறு உச்சங்களைத் தொட்டப்பிறகும், தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு பெண்கள் என்றால் அடிப்படை அறிவுகூட இல்லாத லூசு பெண்கள்.

ரெமோ

ஓர் ஆணைக் காதலிப்பதற்காகவே பிறந்தது, அவனுடன் கனவுலகத்தில் டூயட் பாடுவதற்காகவே வாழ்பவர்கள். அவர்களுக்கு என்று வாழ்க்கையில் எந்த தனிப்பட்ட லட்சியங்களும் கிடையாது. ஆண்களையே சார்ந்துவாழ்ந்து செத்துப்போவார்கள். இல்லையென்றால் வீட்டுக்குள் 20 வருஷம் முடங்கிவிட்டு ஒரு ஆணைப் பழிதீர்க்க வெளியேவருவார்கள்.

காலம் மாறியும் தமிழ் சினிமா மாறவில்லை, சினிமா இயக்குநர்களும் மாறவில்லை என்பதற்கான சில அடையாளங்கள் மட்டும் இங்கே.

மின்னலே!

சுதந்திரமான, படித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு பெண், போகிறபோக்கில் ஓர் ஏமாற்றுக்காரனிடம் காதலில் விழுந்து சிக்கலில் சிக்கிக்கொள்ளும் கதை.

அந்நியன்

முடியை இழுத்து கட்டும்போது சொந்த காதலனைக்கூட அடையாளம் தெரியாத ஓர் அப்பாவிப் பெண்ணின் கதை.

ரெமோ

ஒரு ஆண் பெண்ணாக வேடம் போடுவதைக்கூட தெரிந்துகொள்ள முடியாத ஒரு எம்பிபிஎஸ் படித்த டாக்டரின் கதை.

காற்று வெளியிடை

''ஒரு ரோட்சைடு ரோமியோவிடம் மயங்கவே மாட்டேன்'' என்று சொன்ன பத்து நிமிடங்களில் அவனைக் காதலித்து அவனின் ஈகோவால் கண்ணீர் விடும் பெண்ணின் கதை.

நண்பன்

நண்பன்

ஒரு பெண்ணின் நிச்சயத்தை உடைத்துவிட்டு அவளையும் வாழவிடாமல், ஒன்றும் சொல்லாமல் அவளை விட்டு ஓடிப்போனவைக் கொண்டாடும் கதை!

போக்கிரி

வேலை இல்லாத ஒரு ரௌடியை காதலித்து, பணமும் அந்தஸ்தும் முக்கியம் இல்லை என்று காட்டும் பெண்ணின் கதை!

தீராத விளையாட்டு பிள்ளை

திறமை, அழகு, பணம், நல்ல குணம் எல்லாவற்றையும் மறந்து, மூன்று பெண்கள், தகுதியற்ற ஒருவனிடம் மயங்கி, அவனுக்காக சண்டை போடாமல் பின்னர் உதவிக்கொள்ளும் கதை!

இதெல்லாம் சும்மா சாம்ப்பிள்தான். இதைவிடக்கொடூரமானப் பாயின்ட் ஆஃப் வியூ கொண்ட படங்கள் இருக்கின்றன. 'இறைவி' போன்று பெண்களின் எதார்த்த நிலையைக் காட்டிய சில நல்ல படங்களும் இருக்கின்றன. ஆனால், மொத்தமாகப் பார்க்கும்போது விட்டுத்தொலைக்கவேண்டியதே அதிகம். மாற்றம் வேண்டும் இயக்குநர்களே!


from விகடன்

Comments