முதலாளி வர்க்கத்திடம் மொத்தமாக அதிகாரம் குவிந்திருக்கும் இந்த உலகில் நம் உரிமையைப் பெற போராட்டமே தீர்வு எனச் சொல்லும் மற்றுமொரு செக்க சிவந்த சினிமா இந்த 'சங்கத்தலைவன்'.
கதையின் நாயகன் ரங்கனாக கருணாஸ். முதலாளி மகனாக இருந்தாலும் தறி ஆலை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்துகொண்டிருக்கிறார். அந்த தறி முதலாளியின் (மாரிமுத்து) விசுவாசியாக இருக்கிறார். ஒரு விபத்துக்குப் பிறகு முதலாளியின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவர எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பிக்கிறார். அதனால் அவர் பெற்றதும் இழந்ததும் என்ன என்பதுதான் கதை. பாரதிநாதனின் 'தறியுடன்' நாவலை மையமாகக் கொண்டு சங்கத்தலைவனை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மணிமாறன். லால் சலாம் தோழரே!
பல நாள்களுக்குப் பிறகு கருணாஸுக்கு முழுப்படத்தையும் தாங்கிப்பிடிக்கும் வேலை. தொய்வில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார். அவரது கதாபாத்திர வரைவும் வெகு யதார்த்தமாய் அமைத்திருக்கிறது. பயந்தாங்கொள்ளி தொழிலாளியாக இருந்து போராளித் தலைவனாய் அவர் உருவாகும் விதம், ஜாதி மறுப்புத் திருமணம் சரியா தவறா என்கிற விவாதத்திற்குள் தயங்கித் தயங்கி நுழையும் அவரின் பாத்திர அமைப்பு என எவ்வித ஹீரோயிசப் போற்றுதலும் இல்லாமல் குறைகளோடு உருவாக்கியிருப்பது ரங்கன் கதாபாத்திரத்தோடு நம்மை நெருங்கச் செய்கிறது.
சங்கத்தலைவனாக மிடுக்காக இருக்கிறார் சமுத்திரக்கனி. பழக்கப்பட்ட பாத்திரம் என்றாலும் நிறைவாக இருக்கிறார். முதன்முதலாக சலூனில் கருணாஸிடம் கம்யூனிஸம் பேசும் காட்சி ஓவர்டோஸ். அதுவும் இதுவரை சமூக பிரச்னைக்கு அட்வைஸ் செய்து வந்தவர், அதில் தனிப்பட்ட குடும்ப பிரச்னைகளுக்கெல்லாம் கான்ட்ராக்ட் எடுத்துப் பேசுகிறார். ஆங்காங்கே பிக்பாஸ் ஆரி ப்ரோ வாடை சாரே! இயக்குநர் மொத்தமாக அவர் சொல்ல நினைக்கும் மெசேஜை சொல்வதற்கான கருவியாகவே சமுத்திரக்கனியைப் பயன்படுத்தியிருக்கிறார். தொகுப்பாளினி ரம்யா படத்தின் சர்ப்ரைஸ்! சமுத்திரக்கனியின் மனைவியாக குடும்பம் கொஞ்சம் போராட்டம் கொஞ்சமாய் பேலன்ஸ் செய்து முன்னேறும் வேடத்தில் நன்றாகவே பொருந்துகிறார்.
மற்றவர்களும் யதார்த்தமாக அந்த தறி தொழிலாளர்களின் வாழ்வியலை நமக்குக் கடத்துகின்றனர். கருணாஸின் மீது காதல் கொள்ளும் சுனுலட்சுமி இயல்பாக நடித்திருக்கிறார். பாலா சிங், ஜூனியர் பாலையா, சீனு மோகன் எனப் பலரும் ஆங்காங்கே வந்துபோகிறார்கள். மாரிமுத்து நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களே அவருக்குக் கொடுக்கப்பட்டு வருவது அலுப்பு. கொஞ்சம் மாத்தி யோசிங்க கோலிவுட் இயக்குநர்களே!
முதல் பாதி பெரிதும் தொய்வில்லாமல் நகர்கிறது. இரண்டாம் பாதியில் ஆங்காங்கே பிரசார நெடி இருப்பதால் படம் நீளமாய்த் தோன்றுகிறது. பொதுவுடைமை குறித்த உரையாடல்கள்கூட சினிமாவாக இல்லாமல், கேள்வி - பதில் நிகழ்ச்சியாகவே விரிகின்றது. புரட்சியை விதைக்க நினைக்கும் படத்திற்குத் துடிப்பான பின்னணி இசை அவசியம்தான். ஆனால் படம் முடிந்தபின்னும் தனியாக ஒலித்துக்கொண்டிருக்கும் ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசையால் போதுமான தாக்கம் ஏற்படவில்லை என்பதே நிஜம். தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு டெலி ஃப்லிம்மின் வாடையே படம் நெடுக வீசுகிறது. சில இடங்களில் டப்பிங் பிரச்னைகளும் எட்டிப் பார்க்கின்றன.
கீழ்வெண்மணி உள்ளிட்ட பல நிஜ சம்பவங்களின் தாக்கம் படம் நெடுக இருப்பது திரைக்கதையின் பெரிய பலம். அதுவே படத்தோடு நம்மை ஒன்றவைக்கிறது. நிகழ்கால அரசியலை நச்சென நையாண்டி செய்யும் பாடல் 'சர்வேசா' செம! ஆனால் படத்தில் அது வரும் இடமும் காட்சியமைப்பும் நம் பொறுமையைச் சோதிக்கிறது. கிட்டத்தட்டக் கதை முடிந்தது என நாம் எழத் தயாராகும்போதுதான் க்ளைமாக்ஸ் எனப் படத்தின் அடிநாதமான சில காட்சிகளை வைத்திருக்கிறார்கள். படம் எதை நோக்கி நகர்கிறது என்பதை அறியவே முதல் பாதிவரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனாலேயே பல இடங்களில் ஒரு திரைப்படத்துக்குரிய இலக்கணம் வெளிப்படாமல் வெறும் காட்சிகளின் கோர்வையாக மட்டுமே படம் நகர்கிறது.
பொதுவுடைமை கொள்கைகளை மக்களிடம் எடுத்துச்செல்வதற்குக் கடுமையாக முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். அதே முயற்சியை ஒரு சுவாரஸ்ய திரைப்படமாக்கவும் போட்டிருந்தால் வெகுஜன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பான் இந்த 'சங்கத்தலைவன்'!
from விகடன்
Comments