விஷாலின் `சக்ரா' திரைப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, ஷ்ருஷ்டி டாங்கே ஆகியோருடன் கே.ஆர்.விஜயாவும் நடித்திருக்கிறார். யாருக்குத்தான் அவரைப் பிடிக்காது! நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிக்க வந்திருப்பவரிடம் பேசினோம்.
``சக்ரா' படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நான் ஒன்றும் நடிக்கவில்லையே?" எனத் தயங்கியபடியே பேசினார் நடிகை கே.ஆர்.விஜயா.
``நீண்ட இடைவெளிக்கு அப்புறமா உங்கள திரைல பார்க்கிறோம். `சக்ரா' பட அனுபவம் பற்றி..."
``சக்ரா படத்துக்காக என்னை அணுகியிருந்தப்போ முக்கால்வாசி கதையை முடிச்சிருந்தாங்க. அந்த நேரத்துலதான் கெஸ்ட் ரோல் பண்ண என்கிட்ட கேட்டாங்க. உங்கள மாதிரி ஆர்ட்டிஸ்ட் பண்ணினா ப்ராமினென்ட்டா இருக்கும்னு சொன்னாங்க. நான் பண்றேன்னு சொன்னேன்.''
``கொரோனா டைம்ல சக்ரா பட வேலைகள் எப்படிப் போனது?"
``கொரோனா பரவல் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே படத்தை எடுத்து முடிச்சுட்டாங்க. ஃபினிஷிங் சீனும் சின்ன பேட்ச் வொர்க்கும் இருந்துது. அதை மட்டும் கடைசியா எடுத்தாங்க. படத்தை ரொம்ப ஷார்ட் டைம்ல ஃபாஸ்ட்டா எடுத்து முடிச்சிட்டாங்க. கொரோனா வந்ததால அப்டியே இழுத்து ஒன் இயர் கேப் ஆகிடுச்சு.''
``ஷ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, ஷ்ருஷ்டி டாங்கேன்னு மூணு ஹீரோயின்கள் சக்ரா படத்தில் நடிச்சிருக்காங்க. அப்போ இருந்த ஹீரோயின்களுக்கும் இப்போ இருக்குறவங்களும் நிறைய வித்தியாசங்கள் இருக்கா?"
``இப்போ இருக்குற யாரோடும் எனக்குப் பழக்கம் கிடையாது. அதுக்காக அவங்ளைத் தெரியாதுன்னு சொல்றதும் தப்பு. வேணும்னே சீனியர் ஆர்டிஸ்ட்கள் தெரியாதுன்னு சொல்றதாகூட அவங்க நினைச்சிக்கலாம். ஆனா, அது அப்படிக் கிடையாது. நாங்க முன்ன மாதிரி அதிகம் மேகஸின்ஸ் படிக்குறதோ, நாளைக்கு என்ன நடக்கப்போகுதுன்னு பெருசா எதையும் ஃபாலோ பண்றதோ கிடையாது. படங்களுக்கு கதை கேக்குறப்போ அந்தக் கதையையும் கேரக்டரையும் மனசுல உள்வாங்கிக்குவோம். அதுக்கப்புறம், நடிப்பு மட்டுமல்லாம குடும்பம், பொறுப்புகள், வேலைகள்ன்னு அப்படியே போயிடும். நாங்க முன்ன மாதிரி அப்டேட்டடா சினிமாவை அதிகம் கவனிக்கிறது இல்லைங்குறதுதான் உண்மை.''
``முன்னாடி இருந்த மாதிரி இப்போ நல்ல கதைகள் படங்களுக்கு அமையுறது இல்லைன்னு நினைச்சு இருக்கீங்களா?"
``காலங்கள் மாறுது இல்லையா. அந்தக் காலத்துல இப்போ இருக்குற அளவுக்கு வசதிகள் கிடையாது. கம்ப்யூட்டர் வசதிகள் கிடையாது. இப்போ ஹாலிவுட் படங்கள்போல எல்லாம் வேகம் வேகமா போகுது. அந்தக் காலத்துல ஒரு குழந்தை பொறக்குறது, வளர்ந்து படிக்கிறது, ஸ்கூலுக்குப் போறது, அப்புறம் டீனேஜுக்கு வர்றது, வயசுக்கு வர்றது முதல் கல்யாணம் பண்ணிக் கொடுக்குறது, அவ தாய் ஆகுறது, மாமியார் ஆகுறதுன்னு கதைகளும் வேற வேற பரிணாமங்களை எடுத்துச்சு. கதைக்களமும் அருமையா இருந்துது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பவர்ஃபுல்லா இருந்துச்சு.
அப்பவெல்லாம் சினிமாவுக்குள்ள வந்தவங்க நாடக கம்பெனியில இருந்து வந்தவங்க. தங்களோட கடின உழைப்பு மட்டுமல்லாம கதை, சென்டிமென்டுகள்னு தங்களை ஒவ்வொரு கதாபாத்திரமாவும் அழகா விரைவா செதுக்க கத்துக் கிட்டிருந்தாங்க. இப்போ அந்த மாதிரி சென்டிமென்ட்டுகள் எல்லாம் படத்துல வர்றதும் இல்ல. நாம கொஞ்சம் மாடர்ன் ஆகிட்டோம், எமோஷன்களுக்கோ கதைகளுக்கோ பெரிய அளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல. அதுக்காக அதை நம்ம தப்புன்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் எந்த மாதிரியான படம் நல்லா போகுதோ அதையே திரைத்துறையினர் ஃபாலோ பண்ணுவாங்க அவ்ளோதான்.''
``லாக்டௌன் நாள்கள் உங்களுக்கு எப்படிப் போச்சு?"
``கொரோனா பீரியட்ல பூரா ஓல்ட் மூவீஸ்தானே டிவியில போட்டுட்டு இருந்தாங்க. அதனால நிறைய பழைய படங்கள் பார்க்குற மாதிரியான சூழல் எங்க வீட்டுல அமைஞ்சது. அம்மா இதுல நல்லா பண்ணியிருந்திருக்கீங்க. இன்னைக்கு வரைக்கும் பாக்காம விட்டுட்டோமேன்னு என் பிள்ளைங்க புதுசா பார்க்குற மாதிரி என் படங்களைப் பார்த்து கமென்ட்ஸ் சொன்னாங்க. இத்தனை வருஷங்கள் ஆனாலும் ரசிச்சுப் பர்க்குறாங்க இல்லையா! நிச்சயமா அதுக்கு எல்லாம் வேல்யூ இருக்கு!''
``சமீபத்துல நீங்க ரொம்ப ரசிச்சு பாத்தா ஒரு தமிழ் படம்?"
``இப்போ சமீபத்துல ரொம்ப ரசிச்சு பார்த்தது நயன்தாரா நடிச்சிருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம்தான். ரொம்ப நல்லா இருந்துது. `சம் சேஞ்' அதுல கவனிக்க முடிஞ்சுது. ஒரு கமர்ஷியல் படத்தை பக்தியாகவும் சரி, காமெடியாகவும் சரி, ரொம்ப நேர்த்தியா வடிவமைச்சிருந்தாங்க.''
``நீங்க நிறைய சாமி படங்கள்ல நடிச்சிருக்கீங்க... இந்தப் படம் பார்த்தப்போ எப்படி இருந்துச்சு?"
``படத்துக்கு படம் எல்லாமே வித்தியாசம் இருக்கணும் இல்லையா. அப்போதானே ஆடியன்ஸுக்கும் இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும். வாழ்க்கைங்குறதே காமெடி, கஷ்டம், துக்கம், சந்தோஷம்னு எல்லாம் கலந்ததுதானே. அது சாமி படங்களுக்கும் பொருந்தும். வல்கராக மட்டும் போகக் கூடாது. அதைத் தவிர எல்லா மாதிரியும் இருக்கலாம். எந்தத் தப்பும் கிடையாது!''
``இப்போ இருக்குற இயக்குநர்கள்ல யாரை ரொம்ப பிடிக்கும்?"
``இப்போ வர்றவங்கள்ல முக்கால்வாசிக்கு மேல புது ஆளுங்கதானே. பெருசா சினிமாவை ஃபாலோ பண்ணாததால அவங்க எல்லாம் அவ்ளோ பழக்கம் கிடையாது. தெரியாததைப் பத்தி நான் எதுவும் சொல்லக் கூடாது. இந்தக் காலத்துல வர்ற பல படங்கள்லயும் நடிப்புக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனா, அதையும் தாண்டி சில படங்களை டெக்னிகலா ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா பண்றாங்க. ரொம்ப நல்ல விஷயம்!''
``உங்களுடைய முதல் படமான `கற்பகம்' உங்கள் சினிமா வாழ்க்கைக்கு மிக பெரிய டர்னிங் பாய்ன்ட் இல்லையா?"
``கற்பகம் படத்துல நடிக்கும்போது எனக்கு பெரிய படிப்பு கிடையாது. 15 வயசுதான் எனக்கு அப்போ. பெரிய நாலெட்ஜ் எல்லாம் கிடையாது. என்ன சொல்லிக் குடுக்குறாங்களோ அதை நடிச்சப் பழகினேன். எனக்கு சினிமாதான் படிப்பு. சொல்லப்போனா, ராமாயணம் மகாபாரதம் ஆகட்டும், காந்தி, நேருஜி பத்தியெல்லாம்கூட சினிமா வாயிலாதான் நான் கத்துகிட்டேன். அது என்னமோ எங்க வீட்ல எல்லாருமே படிச்சவங்க. நான் மட்டும்தான் அதுல சேராத ஆளு.''
``500 படங்களுக்கு மேல நடிச்சிருக்குறீங்க... அந்த அனுபவம் பற்றி..."
``அம்மாவுக்கு பூர்வீகம் கேரளா, அப்பாவுக்கு ஆந்திரா. எங்க வீட்டுல மொத்தம் 8 குழந்தைங்க. அதுல நான்தான் மூத்தவள். அப்பா மிலிட்டரில இருந்தவரு. மாமா, அப்பான்னு எல்லாரும் மிலிட்டரில இருந்தவங்கதான். செகண்ட் வேர்ல்டு வார் எல்லாம் அந்த நேரத்துலதான் முடிஞ்சிருந்துது. மிலிட்டரியில இருந்திருந்தாலும் கூட சினிமா மேல அப்பாவுக்கு ரொம்ப இஷ்டம். நாங்க ஆந்திராவுல இருந்தப்போ அவருக்குப் பிடிச்ச நடிகர்கள்ல ஒருத்தரோட வீட்டுக்குப் பக்கத்துலயேதான் இருந்தோம். நிறைய நடிகர்களை அவருக்குத் தெரியும். அதுவும் இல்லாம அந்தக் காலத்துலேயே அவருக்கு நிறைய சினிமா மோகம் உண்டு. அதனாலேயே அம்மாவும் அப்பாவும் சேர்ந்து பொண்ணை ஆர்ட்டிஸ்ட் ஆக்கிடணும்னு நினைச்சாங்க. அதுல நான்தான் மாட்டிக்கிட்டேன். நிறைய பொறுப்புகளும் கடமைகளும் இருந்ததால அதுவே என்னை நிறைய மோல்டு செஞ்சிருந்தது.
நான்தான் இவ்ளோ பண்ணினேனான்னு எனக்கே தெரியல. ரொம்ப மலைப்பா இருக்கு. ஃபர்ஸ்ட் படம் பண்ணிட்டு இருந்தப்போ கூடவே டிராமாவும் பண்ணிட்டு இருந்தேன். ஒரு நாள் சாயங்காலம் 6 மணி ஆனதும் டைரக்டர்கிட்ட நான் டிராமாவுக்குப் போகணும்ன்னு சொன்னேன். டிராமா வேணுமா சினிமா வேணுமான்னு கேட்டாரு. அன்னைக்கு அவரு என்னை டிராமாவுக்கு போகவே விடல. இனிமே சினிமாதான். அப்படின்னா அதை மட்டும் வச்சுக்கோங்க. ரெண்டு வேலையும் ஒரே நேரத்துல வேண்டாம்னு சொன்னாரு. அன்னைக்கு நான் முடிவு பண்ணதுதான். அப்போதுல இருந்து வேலை வேலைன்னே பழகிடுச்சு. அதனாலயே ஃபங்க்ஷன்களுக்கு போற பழக்கம்கூட இருந்தது இல்ல. சினிமாவுக்கு வந்த மூணாவது வருஷத்துலயே என் திருமணம் முடிஞ்சது. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எல்லா வசதிகளும் வீட்டுலயே அமைச்சுக் கொடுத்ததால அதிகம் வெளியே போனதில்லை.''
``இத்தனை வருஷங்கள் எவர்லாஸ்ட்டிங் ஃபேம்ல நீடிக்கும் உங்க சீக்ரெட் என்ன?"
``எனக்கு கிடைச்ச கதாபாத்திரங்கள் அந்த மாதிரி. ஒவ்வொரு கதையும் கதாபாத்திரமும்னு எல்லாரோட எமோஷன்களோடும் ஒண்ணா கலக்குற மாதிரி எனக்கு அமைஞ்ச கதாபாத்திரங்கள்தான் அதுக்கு முக்கிய காரணம்.
அதனாலேயே. இப்போ வரை எல்லாரோட வீடுகள்லயும் நான் இருக்கேன். எனக்கு கிடைச்ச புரொடியூசர்ஸ், ரைட்டர்ஸ், ஆர்ட்டிஸ்ட்ஸ் ஸ்டூடியோவுல வொர்க் பண்ணின லைட் பாய்ஸ் முதல் கொண்டு என் குடும்பம் வரை எல்லாரும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க.''
``சமீபகாலமா வளர்ந்து வர்ற ஹீரோயின்களே பி.ஆர்.ஓ வச்சிருக்காங்க. உங்கள தொடர்பு கொண்டப்போ நீங்களே போனை எடுத்தது ஆச்சர்யமா இருக்கு..!"
``இப்போன்னு இல்ல. அந்தக் காலத்துலயும் எனக்கு பி.ஆர்.ஓ கிடையாது. எப்போவுமே போன் அடிச்சா நான்தான் எடுப்பேன். எனக்கு எது தேவை, எது வேணும் வேண்டாம்னு எனக்குதானே தெரியும். என்னுடைய அசிஸ்டன்ட்டுக்குத் தெரியாது இல்லையா. நானே எடுத்துட்டா ஓகேவா, இல்லையானு சொல்லிடுவேன். அது அதோட முடிஞ்சிடும்.''
from விகடன்
Comments