இடியட் பாக்ஸ் - 19 | மார்க்ஸும், ஏஞ்சலும் ஏன் பிரிந்தார்கள்?!

திவ்யா அறைக்கதவை திறந்தாள். அங்கு தொப்பலாக நனைந்தபடி மார்க்ஸ் நின்று கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அந்தக் கோலத்தில் திவ்யா அவனைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் மார்க்ஸ்.

என்ன சொல்வது எனத் தெரியாமல் திவ்யா திகைத்து போய் நின்றாள். கட்டிலில் அமர்ந்திருந்த நந்திதா முகத்தில் புன்னகை.

“என்கிட்ட பேசுறதுக்கா இந்த நேரத்தில இப்படி நனைஞ்சுகிட்டு வந்து நிக்குற?”

'ஆம்' என்பதாக மார்க்ஸ் தலையாட்டினான்.

“என்ன பேசணும்?”

“ஏன் என்கிட்ட கோபப்படல... சண்டை போடல... திட்டல?''

என்ன செய்யலாம் இவனை என்பது போல திவ்யா அவனையே பார்த்தாள். அவனது தலைமுடியிலிருந்து மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

“என்னெல்லாம் திட்டணும்னு தோணுதோ திட்டிரு. உன் மனசுல இருக்கிறதை எல்லாம் கொட்டிட்டேன்னா நான் கொஞ்சம் ஃபீரியாயிடுவேன்!”

நந்திதா புன்னகையுடன் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“எதுக்கு நான் உன்னைத் திட்டணும்?” என திவ்யா கேட்க, “நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்ச ஒரு விஷயம் மொத்த ஆபிஸுக்கும் தெரிஞ்சிருச்சு... உனக்கு கோபம் வரலையா?”

“நீதான் எல்லார் கிட்டயும் சொன்னியா?”

“எல்லார் கிட்டயும் சொல்லல... ஆனா ஏஞ்சல் கிட்ட சொன்னேன். அவ நம்ப மாட்டான்னு நினைச்சுதான் சொன்னேன்.”

“அப்ப நீதான் சொன்ன?”

“ஆமா... அவளை வெறுப்பேத்த சொன்னேன். ஆனா சத்தியமா இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கல!”

“உண்மையை ஒத்துகிட்டா பண்ணது தப்பில்லைன்னு ஆகிடுமா?”

“ஆகாது... அதான் உன்னைப்பார்த்து திட்டு வாங்கிட்டு போலாம்னு வந்தேன்” என மார்க்ஸ் வெறும் கையால் முகத்தை துடைத்துக் கொள்ள... “உள்ளே வா” என்றாள் திவ்யா.

“இல்ல பரவாயில்ல... ரூம் எல்லாம் ஈரமாயிடும்”

“பரவாயில்ல வா... வாசல்ல வச்சுலாம் உன்னை திட்ட முடியாது” என அவள் உள்ளே வர... மார்க்ஸ் தயக்கமாக உள்ளே நுழைந்தான்.

கட்டிலில் அமர்ந்திருந்த நந்திதா “ஹாய்” என அவனைப்பார்த்து கை அசைக்க மார்க்ஸும் பதிலுக்கு சத்தமே வராமல் “ஹாய்” என்றான்.

“நந்து உன் ரூம் கீ குடு” என திவ்யா கேட்க... அவள் கீ கார்டை எடுத்துத்தந்தாள்.

“பக்கத்து ரூம் 503 நந்துவோடது... முதல்ல தலைய துவட்டு... வாட்ரோப்ல நைட் டிரஸ் இருக்கும். அத போட்டுட்டு உன் டிரஸ்ஸை லாண்டரிக்கு போடு. காலையில தந்திருவாங்க... சாப்பிடலன்னா ஃபுட் ஆர்டர் பண்ணி சாப்பிடு... நல்லா படுத்துத் தூங்கு... காலையில பிரேக்பாஸ்ட்டுக்கு கீழ ரெஸ்ட்டாரன்ட்டுல மீட் பண்ணலாம்!” என அவள் நந்து அறையின் கீ கார்டைத் தர...

“நான் பேசிட்டு கிளம்பிடுறேன்...”

“எனக்கு இப்ப மூட் இல்ல... உன்ன எப்படி எல்லாம் திட்டணும்னு கொஞ்சம் யோசிக்க வேண்டியதிருக்கு... காலையில திட்டுறேன்!”

“அப்ப நான் போயிட்டு காலையில வர்றேனே...”

“வெளிய ரோட்டுல ஏகப்பட்ட தண்ணி நிக்குது... போய் படு... காலையில பேசலாம்” என திவ்யா உறுதியாகச் சொல்ல தயக்கமாக நந்திதாவின் அறை சாவியை மார்க்ஸ் வாங்கிக் கொண்டான்.

“சாரி ரூம் கொஞ்சம் மெஸ்ஸியா இருக்கும்” என நந்திதா சொல்ல,

“அவன் பார்த்துப்பான்... கிளம்பு” என திவ்யா சொல்ல, மார்க்ஸ் தயக்கமாக அறையை விட்டு நகர்ந்தான்.

அவன் வெளியே போனதும் அறைக்கதவை சாத்திவிட்டு... 'உஸ்' என்ற பெருமூச்சுடன் அறையிலிருந்த சோஃபாவில் சாய்ந்தாள் திவ்யா. அதுவரை அடக்கிக்கொண்டிருந்த நந்திதா வாய் விட்டு சிரிக்க... அந்த சிரிப்பு திவ்யாவையும் தொற்றிக் கொண்டது.

“என்னால நம்பவே முடியல” என நந்திதா சொல்ல... “ஆமாடி இப்படி வந்து நிப்பான்னு நானும் சத்தியமா நினைக்கல” என அதை ஆமோதித்தாள் திவ்யா.

“நான் அவனை சொல்லல... சாப்பிடு... டிரஸ்ஸை லாண்டரிக்கு போடு... தூங்குன்னு நீ சொன்னதைத்தான் என்னால நம்பமுடியலன்னு சொன்னேன்” என நந்திதா சிரித்தாள்.

“என்ன வேற என்னடி பண்ண சொல்ற?!”

“நிஜமா கோபப்படுறவங்க ராத்திரி 11 மணிக்கு ரூம் கதவைத் தட்டுறவனை 'முட்டாள், கெட்டவுட்'டுன்னு துரத்திட்டு கதவை சாத்தியிருப்பாங்க...”

திவ்யா நந்திதாவைப் பார்க்க...

நந்திதா சிரிப்புடன் “ஒத்துக்க” என்றாள்.

“என்ன ஒத்துக்கணும்?”

“ஒருவாரத்தில முத்தம் கொடுத்தது, 'ஆமா முத்தம் கொடுத்தேன்'னு எல்லார் முன்னாடியும் ஒத்துகிட்டது, அப்புறமா அக்கறையா அவனுக்கு என் ரூம் கீயைக் குடுத்து தூங்க சொன்னது... இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?”

“என்ன அர்த்தம்?” என எதுவும் தெரியாத பாவனையில் திவ்யா கேட்க, “என்ன அர்த்தமா” என நந்திதா எழுந்து திவ்யாவைப் பிடிக்க வர, அவள் எழுந்து ஓடினாள்.

''பண்றதை எல்லாம் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி நடிப்பு வேற” என்றபடி நந்திதா அவளைத் துரத்த... அந்த சின்ன அறைக்குள் ஒரு சடுகுடு ஆட்டம் நடந்தது. நந்திதா அவளை எட்டிப் பிடிக்க இருவரும் படுக்கையில் சரிந்தனர். மல்லாக்கப்படுத்து மூச்சு வாங்க இருவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

“நந்து... நியாயமா நான் அவன் கிட்ட கோபப்பட்டிருக்கணும். போடான்னு துரத்தி இருக்கணும். ஆனா என்னன்னு தெரியல என்னால அப்படி நடந்துக்க முடியல” என்றாள் திவ்யா.

“யூ ஆர் இன் லவ், மிஸ் திவ்யா”

“காதல்ன்றது பெரிய வார்த்தை... அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் போகணும்... எனக்கு அவனைப் பிடிச்சிருக்கான்னு கேட்டா ஆமா பிடிச்சிருக்குதான்.”

“இப்படித்தான் எல்லா காதலும் ஆரம்பிக்கும்!”

“காதல்ன்றது ஸ்டார்டிங் பாயின்ட் கிடையாது... காதல்ன்றது என்னைப்பொறுத்தவரைக்கும் ஃபினிஷிங் பாயின்ட். அவனை காதலிக்கிறேன்னு நான் முடிவு பண்ணிட்டா அதுக்கப்புறம் எங்களுக்கு நடுவில வேற ஒண்ணும் இல்லல்ல...”

“கல்யாணம், குடும்பம், குழந்தை இது எல்லாம் காதலுக்கு அப்புறம்தானே?”

“அது எல்லாம் காதலிக்கிற ரெண்டு பேருக்கு நடுவில அதுக்கப்புறம் நடக்கிற இன்ஸிடன்ட்ஸ். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான அதிகபட்ச உறவுன்றது காதல்தான். காதலிக்க ஆரம்பிக்கிற ரெண்டு பேர் கடைசி வரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்க மட்டும்தான் முடியும். அதைத்தாண்டி வேற என்ன உணர்வு இருக்கு?”

“இப்ப நீ என்ன சொல்ல வர்ற?”

“காதல்ன்ற வார்த்தைய அப்படி சட்டுன்னு யூஸ் பண்ணாதேன்றேன். நான் மார்க்ஸை காதலிக்கிறேன்னு சொன்னா அது கதையோட ஆரம்பம் கிடையாது. அதான் க்ளைமேக்ஸ். படுத்து தூங்கலாமா?”

நந்திதா சிரித்தாள்.

“என்னடி சிரிக்கிற?”

“என்னயே இப்படி குழப்புறயே... அந்த மார்க்ஸை என்ன குழப்பு குழப்புவேன்னு நினைச்சேன் சிரிப்பு வந்திச்சு!”

“அது அவன் பிரச்னை... அவன் பார்த்துப்பான்... நீ படுத்து தூங்கு” என திவ்யா போர்வையை இழுத்து போர்த்திக் கொள்ள, நந்திதாவும் புன்னகையுடன் படுத்துக்கொண்டாள். வெளியே மழை இன்னும் தீவிரமாக பெய்யத் துவங்கியது.

காலை நேரம் ஹோட்டல் ரெஸ்ட்டாரன்ட்டில் திவ்யாவும் மார்க்ஸும் எதிர் எதிரே அமர்ந்திருந்தார்கள்.

சற்று தள்ளி வேறொரு டேபிளில் நந்திதா அமர்ந்திருந்தாள்.

“தேங்க்ஸ்” என ஆரம்பித்தான் மார்க்ஸ்.

அவனை ஏறிட்டுப் பார்த்த திவ்யா “தேங்ஸா எதுக்கு?”

“உங்க கோபத்தை எதிர்பார்த்து வந்தேன்... இப்படி அன்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல”

“நான் எப்ப உன்கிட்ட அன்பா பேசுனேன்...”

“அன்பா பேசலைங்க... அன்பா நடந்துகிட்டீங்க... சொல்றதைவிட செய்யுறது பெரிய விஷயம் இல்லையா?”

திவ்யா மார்க்ஸை முறைக்க...

“சாரி... சாரி... நான் பேசல நீங்க பேசுங்க”

“நமக்குள்ள நடந்த ஒரு விஷயத்தை மொத்த ஆபிஸும் பேசுனப்ப நான் டென்ஷனானது உண்மைதான். ஆனா அதை வெளியே சொல்லி விளம்பரம் தேடிக்கிற அளவுக்கு நீ சீப்பான ஆள் இல்லன்னு நான் நம்புறேன். அதனால உன் கிட்ட பெரிசா கோபப்படனும்னு எனக்குத் தோணல... அவ்வளவுதான்.”

“ஆனாலும் ஏஞ்சல்கிட்ட சொன்னது என் தப்புதான்!”

“இனிமே பின்னாடி போய் நடந்ததை சரி பண்ண முடியாது. இதோட இந்தப் பிரச்னைக்கு ஃபுல்ஸ்டாப் வச்சிட்டு அடுத்து என்னன்னு யோசிக்கலாமா” என திவ்யா சொல்ல, மார்க்ஸ் தயக்கமாக

“அடுத்தது என்ன?” எனக் கேட்டான்.

“ஆபிஸ்ல நமக்கு நடுவுல ஒரு போட்டி இருக்கு... அது ஞாபகம் இருக்கா?!”

''ஆம்'' என்பதாக தலையாட்டினான் மார்க்ஸ்.

“என்னோட புரோகிராம்ஸ் சக்ஸஸ்னா நீ என் டீம்ல வேலை செய்யுறேன்னு சொல்லியிருக்க...”

மார்க்ஸ் சிரித்தான்.

இடியட் பாக்ஸ் | மார்க்ஸ், திவ்யா

“என்ன சிரிக்கிற?”

“இன்னைக்கு இருந்தே உங்களுக்கு ரிப்போர்டிங் பண்றதா இருந்தா கூட எனக்கு ஓகேதான்!”

“என்ன திடீர்னு?”

“அப்ப நீங்க யாருன்னு தெரியாது. அதனால முறைச்சுகிட்டேன். இப்ப நீங்க யாருன்னு புரிஞ்சுருச்சு அதான்...”

“ஒண்ணும் தேவையில்ல... உன்னை ஜெயிச்சே அதை நான் எடுத்துக்கிறேன்”

“சரிங்க...”

“பிரேக்ஃபாஸ்ட் சாப்டுட்டு ஆபிஸ்க்கு கிளம்பு” என அவள் எழுந்து நகரப் போக “திவ்யா” என்றான் மார்க்ஸ்.

“என்ன?”

“நீங்க கொஞ்சம் என்ன மாதிரி ஆயிட்டீங்க...”

“உன் கூடவே சுத்துறேன் இல்ல உன்கிட்ட இருந்து ஒட்டிக்கிருச்சுன்னு நினைக்கிறேன்” எனச் சொன்னவள், சொன்ன அடுத்த நிமிடம் அவளுக்கு தான் அவனை முத்தமிட்டது நினைவுக்கு வர அவசரமாக, “இல்ல... நான் என்ன மீன் பண்ணி சொன்னேன்னா” என ஏதோ சொல்ல வர...

மார்க்ஸ் புன்னகையுடன் “எனக்குப் புரியுது” என்றான்.

திவ்யாவுக்கும் சிரிப்பு வந்தது... இருவரும் புன்னகைத்தனர்.

“நான் உங்களை ஆபிஸ்ல டிராப் பண்ணவா?” என்றான் மார்க்ஸ்.

“ஒண்ணும் தேவையில்லை... தேங்ஸ்” என அவள் கை எடுத்து கும்பிட “நான் உங்க கூட வர்றேன்” என்றபடி நந்திதா அவர்கள் அருகே வந்தாள்.

“பக்கத்து டேபிள்ல உட்கார்ந்து எவ்வளவு நேரம்தான் ஒட்டு கேட்காத மாதிரியே நடிக்கிறது என்னால முடியல...” என அவள் சொல்ல மார்க்ஸும் திவ்யாவும் சிரித்தனர்.

“நாங்க பேசுனது பூரா ஒட்டுக் கேட்டியா?” என திவ்யா கேட்க, “ஆமா... ஆனா ரெண்டு பேரும் ரொம்ப போரா பேசுனீங்க...” எனச் சொல்லி சிரித்தாள் நந்திதா.

“சரி நான் ஆபிஸ் கிளம்பறேன்... நீ வர்றியா இல்லயா?” என திவ்யா நந்திதாவைக் கேட்டாள்.

“இல்ல நான் மார்க்ஸோட ஜாலியா பைக்ல வாரேன்!” என அவள் சிரிக்க பதிலுக்கு சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் திவ்யா.

............................................

மார்க்ஸ், பாண்டியன் நெல்லையப்பன் என தனது அணியுடன் கான்ஃபிரன்ஸ் ரூமில் அமர்ந்திருந்தான்.

அவர்களுக்கு எதிரே இயக்குநர் சூர்யா அமர்ந்திருந்தான்.

“மார்க்ஸ் சீரியல் டைரக்ட் பண்றதுக்கு நான் ரெடி, ஆனா நல்ல ப்ரொடியூஸரா சொல்லுங்க... போன தடவை அந்த மஞ்சள் பை என் உசிரை வாங்கிட்டான்... ரெஸ்ட்டாரன்ட், போலிஸ் ஸ்டேஷன், ஆபிஸ், ரிச் ஹவுஸ், புவர் ஹவுஸ் எல்லாத்தையும் அவன் வீட்லயே எடுக்க சொல்றான்” என்றான் சூர்யா.

மார்க்ஸ் புன்னகைத்தான்.

“இந்த தடவை அற்புதமான ஒரு ப்ரொடியூஸரை பிடிச்சிருக்கோம். நீ அவனை கைநீட்டி ஒரு வார்த்தை குத்தம் சொல்ல முடியாது. நீ என்ன கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம தருவான்” என்றார் நெல்லையப்பன்.

“அது யாரு அப்படி அதிசயமான ப்ரொடியூஸர்?”

“நீதான்” என நெல்லையப்பன் சொல்ல சூர்யா ஷாக்கானான்.

அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

“எந்த ப்ரொடியூஸரைக் குடுத்தாலும் சரியில்லன்னு புலம்பற... அவனுங்களையும் உண்டு இல்லைன்னு பண்ணிடுற. அதனால இந்தத் தடவை உன்னையே ப்ரொடியூஸரா ஆக்கிரலாம்னு மார்க்ஸ் முடிவு பண்ணிருக்கான்!”

“என்ன சூர்யா ஓகேதான உங்களுக்கு?” என மார்க்ஸ் கேட்க...

“இல்ல இது சரியா வருமா?” எனத் தயக்கமாக சூர்யா கேட்க...

“ஒண்ணு நீ நல்ல ப்ரொடியூஸரா மாறணும்... இல்லைன்னா ப்ரொடியூஸரா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சிக்கிட்டு நீ அவங்களை டார்ச்சர் பண்ணாத நல்ல டைரக்டரா மாறணும். எது நடந்தாலும் ஓகேதான்...” என்றார் நெல்லையப்பன்.

“ப்ரொடியூஸ் பண்ண பணம் வேணாமா” என சூர்யா கேட்க...

“சேனல்ல அட்வான்ஸுக்கு ஏற்பாடு பண்றேன். டைரக்டராவும் நல்ல ப்ரொடியூஸராவும் உன் பேரைக் காப்பாத்திக்க ஹார்ட்வொர்க் பண்ணு!”

“நிச்சயமா மார்க்ஸ்... என் மேல நம்பிக்கை வச்சு இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்க... உன் பேரை காப்பாத்திடுறேன்” என நெகிழ்ச்சியாகச் சொன்னான் சூர்யா.

“அவன் பேரை அவன் காப்பாத்திப்பான். உன் பேரை நீ காப்பாத்திகிட்டா போதும்” என நெல்லையப்பன் சொல்ல அனைவரும் மீண்டும் சிரித்தனர்.

“வெறும் டைரக்டரா இருக்கிறப்ப அது வேணும் இது வேணும்னு ப்ரொடியூஸரை டார்ச்சர் பண்ணி நல்லா ஷூட் பண்ணுவ.. ப்ரொடியூசர் ஆனதும் சுத்தி விட்டுராத...” என நெல்லையப்பன் சொல்ல...

“ச்சீ ச்சீ அதெல்லாம் பண்ண மாட்டேன்... பாருங்க எப்படி அசத்தி காட்டுறேன்னு” என சிரித்தான் சூர்யா.

மார்க்ஸ், “ஆல் த பெஸ்ட்” என அவன் கைகளை குலுக்கினான்.

சூர்யாவைத் தொடர்ந்து மாணிக்கம் உள்ளே நுழைந்தார்.

“வணக்கம் சார்” என அவர் கும்பிட...

“உட்காருங்க மாணிக்கம்” என மார்க்ஸ் சொல்ல அவர் அமர்ந்தார்.

“ஒரு புது சீரியல் இருக்கு ப்ரொடியூஸ் பண்ண முடியுமா?”

“சார் அதுக்காகதானே சார் 3 வருஷமா அலைஞ்சுகிட்டு இருக்கேன்” என்றார் மாணிக்கம்.

“சீரியல் பண்றதுல லாபம் கிடையாது. ஆரம்பத்தில எக்ஸ்ட்ராவா செலவு பண்ண வேண்டியதிருக்கும். சில சமயம் டிஆர்பி வரலைன்னு சீரியல் நின்னுருச்சுன்னா நஷ்டமாயிடும்” என

பிரச்னைகளைப் பாண்டியன் சொல்ல, “பரவாயில்ல சார்” என்றார் மாணிக்கம்.

“ஏம்பா நஷ்டமாகும்றான் நீ சந்தோஷமா தலையாட்டுற?” என நெல்லையப்பன் கேட்டார்.

“அப்பா மதுரையில தியேட்டர் வெச்சிருந்தாரு. அவருக்கு சினிமா ப்ரொடியூஸ் பண்ணனும்னு ரொம்ப ஆசை. ஆனா முடியாம போச்சு. அவரோட ஆசையை நிறைவேத்தணும்னுதான்...”

“அப்பா ஆசைன்னா சினிமாவே தயாரிக்கிறது?”

“அந்த ஆசையும் இருக்குங்க... முதல்ல இதுல ஆரம்பிக்கலாம்னு...”

“இதுல சம்பாதிச்சு சினிமா எடுக்கலாம்ன்னு திட்டமா?”

“இல்லைங்க... கடவுள் புண்ணியத்துல வருமானத்துக்கு வேற நிறைய தொழில் இருக்கு... இது கனவு... நல்லா பண்ணனும். பேர் எடுக்கணும் அவ்வளவுதான்!” என்றார் மாணிக்கம்.

“பாண்டியா மாணிக்கத்தோட பேசு ... நல்ல டீம் செட் பண்ணி குடு. எந்த ப்ராஜெக்ட்டுன்னு முடிவு பண்ணலாம்” என்றான் மார்க்ஸ். வணக்கம் வைத்து விட்டு நகர்ந்தார் மாணிக்கம்.

"இன்னொரு ப்ரொடியூசர் யாருப்பா?" என்றார் நெல்லையப்பன். மனோகரி, சேகர், சிவகுமார், லிங்கம்... என வரிசையாக மார்க்ஸ் பெயர்களைச் சொன்னான். நம்ம ஆபிஸ்ல வேலைய விட்டு போன ஆளுங்கப்பா அவங்க...

“ஆமான்னே நாலு பேர் ஒண்ணா சேர்ந்து ஏதாவது தொழில் பண்ண முடியுமான்னு முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்க... அவங்களுக்கு நல்லா தெரிஞ்ச தொழில் இதுதான். அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்" என்றான் மார்க்ஸ்.

“யப்பா நிஜமாவே நீ பெரிய ஆளுப்பா'' என நெகிழ்ச்சியாக நெல்லையப்பன் அவன் கைகளைப் பற்றிக் கொண்டான்.

“அண்ணே என்னன்னே நீங்க... நம்ம ஆளுங்கன்ணே அவங்க... நாம பண்ணாம யார் பண்ணுவாங்க?” என அவன் சொல்ல அறையில் இருக்கும் அனைவருக்கும் அவன் மனது புரிந்தது.

வெளியே போனவர்களை அலுவலகம் மெல்ல மறக்க துவங்கியிருந்தது. ஆனால் மார்க்ஸ் மறக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

“எதிரி டீம் என்ன பண்ணுதுன்னு தெரியலயே...” என பாண்டியன் சொல்ல “அதுவும் இப்ப நம்ம டீம் தான்” என்றார் நெல்லையப்பன். அனைவரும் சிரிக்க மார்க்ஸ் சீரியஸாக போனைப்பார்க்கிற பாவனையில் இருந்தான். மனசு புன்னகைத்துக் கொண்டிருந்தது.

...............................................................................

இடியட் பாக்ஸ்

தனது அறையில் அமர்ந்து திவ்யா லேப்டாப்பில் மெயில் ஒன்றை டைப் பண்ணிக் கொண்டிருக்க, அவள் மனதில் மார்க்ஸின் ஞாபகங்கள் மீண்டும் மீண்டும் ஓடியபடி இருந்தன.

அவளது அறைக்கதவைத் தட்டியபடி ஏஞ்சல் உள்ளே நுழைந்தாள்.

“குட்மார்னிங் ஏஞ்சல்...”

''குட்மார்னிங் திவ்யா..." என ஏஞ்சல் தயங்க அவள் பேசுவதற்காக திவ்யா காத்திருந்தாள்.

“தப்பா எடுத்துக்காதிங்க... நீங்க மார்க்ஸை லவ் பண்றீங்களா?” அந்தக் கேள்வியை எதிர்பார்க்காத திவ்யா அவளை எரிச்சலாகப் பார்த்தாள்.

“சாரி திவ்யா... உங்களுக்காக நான் HR கிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ணா நீங்க அவனை ஈஸியா காப்பாத்திட்டீங்க. நேத்து அவன் உங்க ஹோட்டல்ல தங்கி இருந்திருக்கான்” என திவ்யா அடுக்கிக் கொண்டே போக கரத்தை உயர்த்தி ''போதும்'' என திவ்யா அவளை நிறுத்தினாள்.

“ஏஞ்சல் என்னோட பர்சனல் விஷயங்கள்ல நீங்க தலையிட வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். நான் என்ன பண்றேன் எதுக்காக பண்றேன்னு எல்லாம் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல” எனக் கோபமாகவே சொன்னாள் திவ்யா.

''இல்ல திவ்யா... மார்க்ஸ்கிட்ட சண்டை போட்டு நாங்க உங்க டீம்ல சேர்ந்திருக்கோம். அந்த டீமைவிட நம்ம நல்லா பர்ஃபாம் பண்ணி காட்டணும்னு நாங்க வேலை செஞ்சிக்கிட்டு இருக்கோம். உங்களுக்காக நாங்க சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கீங்க... எங்களுக்குப் புரியல...''

ஏஞ்சலுக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது என திவ்யா யோசிக்க “அந்த மார்க்ஸை நம்பாதீங்க திவ்யா. நாங்க எதுக்காக பிரிஞ்சோம்னு தெரிஞ்சா நீங்க இப்படி பேச மாட்டீங்க” என்றாள் ஏஞ்சல்.

“அவன் எப்படிப்பட்ட ஆளுன்னு நீங்க தெரிஞ்சுக்கிற நாள் சீக்கிரமே வரும். அப்ப புரியும் உங்களுக்கு... ப்ரொடியூசர்ஸ் மீட்டிங் மதியம் இருக்கு உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கேன்” எனச் சொன்னவள் அவளது பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

திவ்யாவுக்கு ஏஞ்சலின் பேச்சு எரிச்சலாக இருந்தாலும் அதைத்தாண்டி எதற்காக அவர்கள் பிரிந்தார்கள் என்கிற கேள்வி இப்போது அவள் முன்னே பெரிதாக வந்து நின்றது.

- Stay Tuned...



from விகடன்

Comments