`100 கிலோ எடை, நிறைய பாடி ஷேமிங், அதுக்கிடையே காதல் புரபோஸல்!' - கீர்த்தி சுரேஷ் அக்கா ஷேரிங்ஸ்

நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ், பிரபல மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். சினிமா துறையில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருப்பவர், உடல் பருமனால் பல்வேறு கேலி, கிண்டல்களுக்கு ஆளாகியிருக்கிறார். இதனால், தாழ்வு மனப்பான்மையுடன் இருந்துள்ளவருக்கு, அவரின் குடும்பம் உற்ற துணையாக இருந்திருக்கிறது. இதனால், சினிமா பணிகளுக்கு இடையே, உடல் எடையையும் கணிசமாகக் குறைத்திருக்கிறார்.

ரேவதி சுரேஷ்

உடல் எடையைக் குறைப்பதற்கு முந்தைய, பிந்தைய படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரேவதி. அதனுடன், ``என் வாழ்க்கையில என்னோட எடையை மேனேஜ் செய்றதுலதான் எப்போதுமே கஷ்டப்பட்டேன். என் எடையைப் பார்த்து, என்னோட அம்மாவுடனும் தங்கையுடனும் என்னை ஒப்பிட்டுப் பலரும் பேசுவாங்க. டீன் ஏஜ்ல நான் பெரிசா தன்னம்பிக்கை இல்லாமலேயேதான் இருந்தேன். இப்போ 20 கிலோ எடை குறைச்சிருக்கேன். இந்த மாற்றத்தை என்னோட யோகா குருவுக்குச் சமர்ப்பணம் செய்றேன்" என்று உடல் பருமனால் சமூகத்தில் தான் எதிர்கொண்ட வலிகளை ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ரேவதியிடம் பேசினோம்.

``குழந்தைப் பருவத்துல இருந்தே நான் கொஞ்சம் பப்ளியாதான் இருப்பேன். கூடவே, மாநிறம்தான். அம்மாவும் தங்கச்சியும் கலரா இருப்பாங்க. `நீ மட்டும் ஏன் கலரா இல்ல?', `நீ மட்டும் ஏன் குண்டா இருக்கே?'ன்னு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்தே என்கிட்ட பலரும் கேட்பது வாடிக்கையாச்சு. நான் சாப்பாடு கம்மியாதான் சாப்பிடுவேன். என் உடம்புல என்ன பிரச்னைனு தெரியாம, `நீ கம்மியா சாப்பிடு', `பொண்ணுன்னா ஒல்லியாதான் இருக்கணும்; வெயிட் போடக் கூடாது'ன்னு பலரும் பலவிதமா சொல்லிட்டே இருப்பாங்க. அப்படிச் சொன்ன பலருமே பெரியவங்கதான்.

கீர்த்தியுடன் ரேவதி

`குண்டா இருக்கிறது தப்போ'ன்னு ஃபீல் பண்ற மாதிரி அட்வைஸ், கிண்டல்களை எதிர்கொண்டேன். `நீ மகளைச் சரியா கவனிக்கிறதில்ல'ன்னு என் அம்மாவையும் விமர்சனம் செய்வாங்க. ஸ்கூல் கல்ச்சுரல் நிகழ்ச்சியில என்னைப் பெரும்பாலும் யானை உள்ளிட்ட சில ரோல்கள்லதான் நடிக்க வாய்ப்பு தருவாங்க. ஸ்டேஜ் முன்னாடி நானும் வெரைட்டியா டான்ஸ் ஆடணும்னு ஆசைப்படுவேன். ஆனாலும், கிடைச்ச வாய்ப்புகளில் என்னோட திறமையை நல்லாவே வெளிப்படுத்தினேன். விளையாடப்போனாலும், `வெயில்ல இன்னும் கறுத்துடுவே'ன்னு சொல்வாங்க. மனதளவில் ஃபிட்டா இருந்தாலும், அந்தப் பேச்செல்லாம் என்னோட தன்னம்பிக்கையை பலவீனப்படுத்துற மாதிரி இருந்துச்சு. ரொம்பவே வருத்தப்படுவேன்!

அம்மா பிரபலமான நடிகையா இருந்ததால, அவ்வப்போது பேட்டிக்காகப் பத்திரிகையாளர்கள் எங்க வீட்டுக்கு வருவாங்க. அப்போ ஃபேமிலி போட்டோஸ் எடுக்க என்னையும் கூப்பிடுவாங்க. குண்டா இருந்ததால, போட்டோஸ் எடுத்துக்க ரொம்பவே தயங்கி மறுப்பேன். அம்மாவும் எனக்கு நம்பிக்கை கொடுத்து ஊக்கப்படுத்துவாங்க. கீர்த்தியும் நானும் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். ஸ்கூல்ல என்னை யாராச்சும் கிண்டல் செஞ்சா, அவங்ககிட்ட எனக்காக கீர்த்தி சண்டை போடுவா. டீன் ஏஜ்ல அடிக்கடி எனக்கு ரத்தப் பரிசோதனை செய்வோம். உடம்புல எந்தப் பிரச்னையும் இல்லைனுதான் ரிசல்ட் வரும். நேரத்துக்குச் சாப்பிடாம இருக்கிறதுதான் என்னோட உடல்பருமனுக்குக் காரணம்னு தாமதமாதான் தெரிஞ்சது.

குடும்பத்தினருடன் ரேவதி

ரொம்பவே மெனக்கெட்டு உடல் எடையைக் குறைப்பேன். `என்ன நீ ஒல்லியாகிட்டே! கன்னம் ரொம்ப உள்ள போன மாதிரி இருக்கு. நீ கொஞ்சம் பூசினா மாதிரி இருந்தால்தான் நல்லா இருப்பே’ன்னு இன்னொரு கும்பல் சொல்லும். யப்பா! ஆளாளுக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுத்து, நிறைய பேரோட நிம்மதியைக் கெடுக்கிறதை வாடிக்கையா வெச்சிருக்காங்க. இதனால நிம்மதி கெட்டதோடு, நானும் உடல் எடையைக் குறைக்கிறது, ஏத்துறதுனு மாத்தி மாத்தி என்னோட உடலையும் மனசையும் ரொம்பவே வருத்திகிட்டு இருந்தேன். கடவுள் நமக்குக் கொடுத்தது இதுதான். இதையே மகிழ்ச்சியா ஏத்துக்கலாம்னு பக்குவப்படுறப்போ, நம்ம தன்னம்பிக்கையைச் சோதிச்சுப் பார்க்கிற மாதிரியே பலரும் தொடர்ந்து ஃப்ரீ அட்வைஸ் கொடுத்துகிட்டே இருந்தாங்க" என்று ஆதங்கத்துடன் கூறும் ரேவதி, கல்லூரிப் படிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அந்தத் தருணம்தான் ரேவதிக்கு பாசிட்டிவ் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

``அமெரிக்காவுல படிச்ச காலத்துலயும் குண்டாதான் இருந்தேன். அங்க இருந்த வரைக்கும் உடல்பருமனெல்லாம் எனக்கு ஒரு பிரச்னையாவே தெரியல. அங்க காலேஜ் படிச்ச காலம் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருந்துச்சு. ஒருமுறை காலேஜ் நிகழ்ச்சிக்கு, எனக்குப் பிடிச்ச மாதிரி புடவை கட்டிகிட்டுப் போனேன். எல்லோரும் என்னைப் பாராட்டினாங்க. எனக்கு ஆச்சர்யம் தாங்கல. உடனே ஓடிப்போய் கண்ணாடியில என்னோட தோற்றத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். தோற்றம் ஒரு பொருட்டே இல்ல. நம்ம திறமைதான் முக்கியம்னு முழுமையா நான் அங்க இருக்கும்போதுதான் உணர்ந்தேன். மறுபடியும் இந்தியா திரும்பியதுல இருந்து தொடர்ந்து உடல் கேலியை எதிர்கொண்டேன்.

ரேவதி சுரேஷ்

சின்ன வயசுல இருந்து பத்மா சுப்ரமணியம் மேடம்கிட்ட கிளாசிகல் டான்ஸ் கத்துக்கிறேன். படிப்பு, வேலை விஷயமா நடுவுல டான்ஸ் பயிற்சியை நிறுத்திடுவேன். அதனாலயும் திடீர்னு எனக்கு வெயிட் அதிகரிச்சது. நான் துவண்டு போகும் நேரமெல்லாம், என் குடும்பத்தினரின் ஊக்கம் எனக்கு அதிகம் கிடைச்சது. ஆனாலும், கொஞ்சம் நம்பிக்கை இழந்து இருந்த நேரம். அப்போதான் என் கணவர் எனக்கு புரபோஸ் செய்தார்.

`என்கிட்ட அப்படி என்ன விஷயம் உங்களுக்குப் பிடிச்சது? நான் பெரிசா அழகில்லயே!’ன்னு அவர்கிட்ட கேட்டேன். `உன்னோட குணம், தைரியம், திறமைனு பல விஷயங்கள் உன்கிட்ட பிடிச்சிருக்கு’ன்னு அவர் சொன்னது ஆச்சர்யத்தை ஏற்படுத்துச்சு. கல்யாணத்துக்குப் பிறகும், `நீ குண்டா இருக்கிறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. யாருக்காவும் உன்னை மாத்திக்காத. உனக்குப் பிடிச்ச மாதிரி இரு’ன்னுதான் கணவர் சொல்லுவார். பக்குவப்பட்ட மனிதர்களும் இருக்கத்தான் செய்றாங்க. அப்போ நாம வருத்தப்படுறதுல அர்த்தம் இல்லைனு நானும் பக்குவப்பட்டேன்" என்பவரின் குரலில் நம்பிக்கை கூடுகிறது.

ரேவதி சுரேஷ்

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ரேவதி, விஷுவல் எஃபெக்ட் தொழில்நுட்பக் கலைஞராக பாலிவுட் படங்கள் சிலவற்றில் பணியாற்றியிருக்கிறார். பின்னர், தன் பெற்றோரின் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டை நிர்வகித்தவர், இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவருகிறார். இந்த நிலையிலும்கூட, ரேவதிக்குப் புறக்கணிப்புகள் தொடர் கதையாகியுள்ளன.

``2019-ல் `மரக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' பட ஷூட்டிங் வேலைகள்ல பிஸியா இருந்தேன். சரியா சாப்பிடாமலும், வெளியூர் பயணங்கள்ல அதிக நேரம் செலவிட்டு உடற்பயிற்சியும் பண்ணாம இருந்துட்டேன். உடல் எடை ரொம்பவே கூடி 100 கிலோவுக்கு மேல இருந்தேன். மறுபடியும் புறக்கணிப்பு பேச்சு அதிகமாச்சு. இந்த முறை ரொம்பவே தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுச்சு. தொடர்ந்து யோகா பண்ணித்தான் உடல் எடையைக் குறைச்சேன். அது அவ்வளவு சுலபமா இல்ல. இடைவிடாம யோகா செஞ்சதுடன், உரிய உணவுக்கட்டுப்பாடுகளுடன் ரொம்பவே மெனக்கெட்டேன்.

படப்பிடிப்பில் ரேவதி

Also Read: "மோடியைச் சந்தித்ததுக்குக் காரணம் இதுதாங்க; கட்சியில நான் இல்லைங்க!" - கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா

அந்த லாக்டெளன் நேரத்துல தங்கச்சி கீர்த்தியும் ரெண்டு மாதங்கள் என்கூடதான் இருந்தா. அவளும் அம்மாவும் எப்போதும்போல எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தாங்க. 20 கிலோ எடை குறைச்சு, ரொம்பவே எனர்ஜியுடனும் ஆக்ட்டிவ்வாவும் இப்போ ஃபீல் பண்றேன். அடுத்து 20 கிலோ எடையைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கேன். என்னோட அனுபவத்துல இருந்து பலருக்கும் சில விஷயங்களைப் பகிர ஆசைப்படுறேன். ஒருத்தருக்கு என்ன பிரச்னைனு முழுசா தெரிஞ்சுக்காம, யாரையும் எதுக்காவும் காயப்படுத்தாதீங்க. விமர்சனம் செய்றோம்ங்கிற பெயர்ல மனசுல இருக்கிற கசடுகளைக் கக்கிட்டுப் போகாதீங்க.

ஒருத்தர் இருப்படித்தான் இருக்கணும்; இப்படி இல்லைனா தப்புன்னு யாரும் யாருக்கும் ஃப்ரீ அட்வைஸ் பண்ணாதீங்க. புறத்தோற்றம்தான் முக்கியமானதுங்கிற மாதிரியே ஒரு போலியான கட்டமைப்பை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கட்டமைச்சு வெக்கப் போறீங்க? வயசுக்கும் அனுபவத்துக்கும் ஏத்த மாதிரி நம்ம ஒவ்வொருத்தர் பேச்சும், குணங்களும், செயல்களும் இருக்கணும். ஒருத்தரை சந்தோஷப்படுத்துறதை விடவும், இன்னொருத்தரை எந்த வகையிலும் காயப்படுத்தாம இருக்கக் கத்துக்கோங்க. வார்த்தைகளா நீ தூக்கி எறியிற குப்பை, ஒருநாள் உங்க மேல எறியப்படும்போதுதான் அந்த வலி உங்களுக்குப் புரியும். அதுக்கு இடம் கொடுக்காதீங்க" என்று வேண்டுகோள் விடுத்து முடித்தார் ரேவதி சுரேஷ்.



from விகடன்

Comments