``திருநங்கையாக ஓர் ஆண் நடிப்பது அயோக்கியத்தனம்!" - சீறும் இயக்குநர் திவ்யபாரதி

`கக்கூஸ்' ஆவணப்படத்தின் மூலம் கைகளால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலத்தையும், `ஒருத்தரும் வரேல’ ஆணவப்படத்தின் மூலம் மீனவர்களின் துயரத்தையும் நம் கண்முன்னே நிறுத்தி கலங்கடித்த திவ்யபாரதி, அடுத்ததாக திருநங்கைகளின் வாழ்க்கையுடன் நம்மைச் சந்திக்க வருகிறார். இந்தமுறை ஆவணப்படம் மட்டுமல்லாது திருநங்கைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து முழுநீள திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார் அவர். ஆவணப்படத்தின் பெயர் `சாட்லா’. முழுநீள திரைப்படத்தின் பெயர் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், அவரிடம் உரையாடினோம்...

``எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் இந்தச் சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தி வருகிறீர்கள். `சாட்லா’வுக்கான பயணம் எங்கிருந்து தொடங்கியது?”

``2008-லிருந்து நான் திருநங்கைகள் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பிலிருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களை விளிம்புநிலை மக்கள் என்று நாம் வகைப்படுத்துகிறோம். ஆனால், திருநங்கைகள் இன்னும் விளிம்புநிலை என்ற எல்லைக்குகூட வரவில்லை. அவர்கள் விளிம்புநிலைக்கும் கீழே உள்ள சமூகமாகத்தான் இருக்கின்றனர். அவர்கள் உலகம் இன்னும் மாய உலகமாகத்தான் இருக்கிறது. இப்படியான சூழலில், திருநங்கைகளின் உலகத்தை எவ்வித சமரசமுமின்றி மக்களுக்கு காட்ட வேண்டிய அவசியமும் தேவையும் அதிகமாகவே இருக்கிறது. அந்தப் புள்ளியிலிருந்து தொடங்கியதுதான் `சாட்லா’. திருநங்கைகள் கைத்தட்டும் முறைக்கு அவர்களுடைய மொழியில் `சாட்லா’ என்று பெயர். இந்தியா முழுவதுமுள்ள ஒவ்வொரு திருநங்கையும் `சாட்லா போடுறது’ என்ற வார்த்தையைக் கடக்காமல் இருக்க வாய்ப்பில்லை. ஆகையால்தான் அதை ஆவணப்படத்தின் தலைப்பாகத் தேர்ந்தெடுத்தேன்.”

சாட்லா ஆவணப்படத்தின் போஸ்டர்

``ஆவணப்படம் மட்டுமல்லாமல் இந்தமுறை திருநங்கைகள் தொடர்பான முழுநீள திரைப்படத்தையும் இயக்கியுள்ளீர்கள்... என்ன காரணம்?”

``ஆவணப்படத்துக்கான வேலைகள் பாதி முடிந்த பிறகுதான்... இது ஆவணப்படத்தில் மட்டும் சொல்லிவிடக்கூடிய விஷயம் இல்லை என்பது எனக்குப் புரிந்தது. `கக்கூஸ்' ஆவணப்படத்தில் அந்த மக்கள் குப்பை அள்ளுவதையும், கைகளால் மலத்தை தொடுவதையும் என்னால் காட்சிப்படுத்த முடிந்தது. அவர்கள் பேட்டியின்போது அந்தக் காட்சிகளை ஒளிபரப்பியதாலேயே பார்வையாளர்களால் அந்த வலியை அப்படியே உள்வாங்கிக்கொண்டனர். ஆனால், திருநங்கைகள் குறித்த ஆவணப்படத்தில் அப்படியான வாய்ப்புகள் இல்லை. திருநங்கைகள் செக்ஸ் வொர்க்குக்குச் செல்வதையும், ஆணுறுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொள்வதையும் ஆவணப்படத்தில் எப்படி என்னால் காட்சிப்படுத்த முடியும்?

அது வெறும் வார்த்தைகளால் கடத்திவிடக் கூடிய வலி அல்ல. நான் அவர்கள் கூடவே பயணித்திருக்கிறேன். ஆணுறுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டு அவர்கள் படுத்துக்கிடக்கும் காட்சிகளை உடனிருந்து நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் வாழ்க்கையில் உள்ள சந்தோஷம், காதல், நகைச்சுவை, வலி, எதிர்பார்ப்பு, கனவு என எல்லாவற்றையும் நேர்மையாக அப்படியே மக்களுக்கு கடத்த வேண்டுமானால் முழுநீள பிக்ஷன் திரைப்படமும் தேவைப்பட்டது. எனவேதான் ஆவணப்படம் மட்டுமல்லாது முழுநீள படமும் தேவை என முடிவு செய்தேன். தற்போது இரு படங்களும் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கின்றன. ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் முழுநீள திரைப்படத்தின் பெயரும் அதுகுறித்த அறிவிப்பும் வெளியாகும்.”

'சாட்லா' படப்பிடிப்பில்...

``என்ன கதை... யாரெல்லாம் நடித்திருக்கின்றனர்.”

``உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இதற்காக நான் தனியாகக் கதையெல்லாம் எழுதவில்லை. ஆவணப்படத்துக்காக நான் சந்தித்த திருநங்கைகளுடைய கதைகளுக்கு ஒரு வடிவம் கொடுத்துள்ளேன் அவ்வளவுதான். கடலூரில் நான் சந்தித்த ஒரு திருநங்கைதான் லீட் ரோல் பண்ணியிருக்கிறார். ஏழெட்டு திருநங்கைகளை மையமாக வைத்துதான் கதை நகரும். வழக்கமாக சினிமாக்களில் திருநங்கைகள் கதாபாத்திரத்தில் ஆண்கள்தாம் நடிக்கின்றனர். திருநங்கைகளின் வாழ்க்கையை உயர்த்துகிறோம் என்ற பெயரில் திருநங்கையின் இடத்தில் ஓர் ஆணை நடிக்க வைப்பது திருநங்கையின் வாய்ப்பையும் சேர்த்துப் பறிக்கும் செயல். அந்த அயோக்கியத்தனத்தை நான் செய்யவில்லை. திருநங்கைகளின் கதாபாத்திரம் அனைத்திலும் திருநங்கைகளையே நடிக்க வைத்திருக்கிறேன். நிஜத்தில் அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதை அப்படியே படத்தில் பிரதிபலித்திருக்கின்றனர்.”

``திருநங்கைகளின் கதாபத்திரத்தை ஆண்கள் ஏற்று நடிப்பதை `அயோக்கியத்தனம்' என்று சாடும் அளவுக்கு அது தவறானதா?”

``நிச்சயமாக! அது அயோக்கியத்தனம்தான். வக்கீல், டாக்டர் என்பதைப்போல திருநங்கை என்பது ஒரு புரொஃபஷன் கிடையாது. அதுவொரு பாலினம். அதில் எப்படி இன்னொருவரை நடிக்க முடியும்? விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய கேரக்டரில் ஒரு பெண்ணையோ, நயன்தாரா நடிக்க வேண்டிய கேரக்டரில் ஓர் ஆணையோ நடிக்க வைத்துவிடுவார்களா? ஆண் இடத்தில் பெண்ணையும் பெண் இடத்தில் ஆணையும் நடிக்க வைக்க முடியாதபோது திருநங்கைகளின் இடத்தில் மட்டும் எப்படி ஓர் ஆணை நடிக்க வைக்கின்றனர்? ஃபேஸ் வேல்யூ வேண்டும்... அவர்களுக்கு முறையாக நடிக்கத் தெரியாது அப்படி இப்படி என என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முதலில் வாய்ப்பு கொடுத்தால்தானே ஃபேஸ் வேல்யூ உருவாகும். எல்லோருக்கும் முதல் படத்திலேயே ஃபேஸ் வேல்யூ வந்துவிடுமா? ஓர் ஆணால் திருநங்கையாக நடிக்க முடிகிறபோது திருநங்கையாகவே வாழ்கிறவருக்கு நடிக்கத் தெரியாதா? அவர்களது நடிப்பு 9 வயதில் வீட்டிலிருந்தே தொடங்கிவிடுகிறது. வீட்டில் எல்லோரும் ஆண் பிள்ளை என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, வெளியில் ஆணாக நடித்துக்கொண்டு உள்ளுக்குள் பெண்ணாக வாழும் அவர்களது நடிப்பு யாருக்கும் கைவராது. சொல்லப்போனால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையும் நடிப்பு போலத்தான் ஆகிவிட்டது. எனவே அவர்களைப் புறக்கணித்துவிட்டு அவர்கள் கேரக்டரை ஓர் ஆணே செய்வது என்பது அயோக்கியத்தனம்தான் என்பதை அடித்துச் சொல்வேன். அதன் மூலம் அவர்களுடைய வாய்ப்பு பறிபோய்விடுகிறது.”

'சாட்லா' படப்பிடிப்பில்..

Also Read: ஓராண்டிலேயே பாலின் தரத்தில் முதலிடம்... கோவில்பட்டி திருநங்கைகள் பால் பண்ணை சாதித்தது எப்படி?

``ஆவணப்படத்தைப்போல அல்ல முழுநீள திரைப்படம். மிகப்பெரிய தொகை தேவைப்படும். இந்தப் படத்தை எந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது?"

``என்னை மாதிரியான ஆளுக்கு எந்தத் தயாரிப்பாளர் வரப்போகிறார்? என்னுடைய இரண்டாவது ஆவணப்படமான `ஒருத்தரும் வரேல' படத்தை எந்தச் சமூகத்துக்காக எடுத்தேனோ... அந்த மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம்தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். `நீங்க எங்க சமூகத்துக்காக ஒரு படைப்பைக் கொடுத்தீங்க; உங்களுக்காக நாங்க ஏதாவது பண்ணனும்' என்று சொல்லி அவர்கள் இந்தப் படத்தை தயாரிக்க முன்வரும்போது நான் நெகிழ்ந்துபோய்விட்டேன். இந்தப் படத்தில் முதலீடு செய்தால் பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு இருக்கிறது என்பது நன்றாகத் தெரிந்தும் ஒரு குடும்பம் எந்த எதிர்பார்ப்பும் லாபநோக்கமும் இல்லாமல் தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை தூக்கிக் கொடுப்பது எவ்வளவு பெரிய விஷயம்? அப்படியான மனிதர்களின் பேரன்பால்தான் என்னைப் போன்றோரால் தொடர்ந்து சமூகத்துக்காக இயங்க முடிகிறது."

``திருநங்கைகளுடன் நிறைய பயணித்திருக்கிறீர்கள்... திருநங்கைகள் என்றதும் சட்டென உங்கள் நினைவுக்கு வருவது என்ன?"

``ஒரு திருநங்கை தன்னை பெண்ணாக நிறுவுவதற்காக மேற்கொள்ளும் சிரத்தைகள்தான். நான் பெரும்பாலும் ஜீன்ஸ்... டி-ஷர்ட் என ஆண் உடையிலேயேதான் இருக்கிறேன். ஆண் உடையில் இருந்தாலும் ஆணைப்போல ஹேர்கட் செய்துகொண்டாலும் இந்தச் சமூகம் என்னை ஒரு பெண்ணாகத்தான் பார்க்கும். ஆனால், திருநங்கைகளுக்கு அப்படி அல்ல... ஆணுறுப்பு நீக்க ஆபரேஷன் செய்துகொள்வதில் ஆரம்பித்து தொடர்ந்து தன்னை பெண்ணாக நிறுவிக்கொள்ள தங்கள் உடல்மீது முதலீடு செய்துகொண்டே இருக்க வேண்டியுள்ளது.

ஆண் குழந்தைகள் சிறு வயதில் விளையாடப் போகும்போது, `உயிர்த் தடத்தில் அடிபடாம பார்த்து விளையாடுடா' என எச்சரிப்போம். அந்த உயிர்த்தடத்தை அறுத்து தூக்கி எறிவதற்கு முடிவெடுக்க எவ்வளவு பெரிய பலம் வேண்டும்? அந்தப் பலமும் இந்தச் சமூகத்துடன் அனுதினமும் அவர்கள் நிகழ்த்தும் போராட்டங்களும்தான் நினைவுக்கு வருகின்றன."



from விகடன்

Comments