"சீஃப் கெஸ்ட்டாதான் கூப்பிட்டாங்க... பி.ஜே.பி-ல சேர்ந்துட்டதாவே சொல்லிட்டாங்களா?" - நடிகை வினோதினி

நடிகை வினோதினி உள்ளிட்ட சில தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருப்பதாக இன்று காலை முதல் செய்திகள் வந்து கொண்டிருக்கிற சூழலில், வினோதினியிடம் பேசினேன்.

"அயோத்தியில ராமர் கோவில் கட்டப் போறாங்கள்ல, அதுக்காக அமைக்கப்பட்ட கமிட்டில உறுப்பினரா இருக்கறவர் ஆண்டாள் சொக்கலிங்கம்.‌ வாஸ்து நிபுணர். இவர், தான் கலந்துக்கிற ஒரு நிகழ்ச்சிக்கு சீஃப் கெஸ்ட்டா வர முடியுமான்னு என்னைக் கேட்டார்.

எங்க வீட்டுக்கு வாஸ்து பார்த்திருக்கிற வகையில அவரோட எனக்கு ஏற்கெனவே அறிமுகம். மரியாதை கொடுத்துக் கூப்பிடறவங்ககிட்ட நாம 'வர முடியாது'னு சொல்ல முடியாதில்லையா? அதனால தி.நகர்ல நடந்த அந்த நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்தேன். அந்தக் கூட்டத்துக்கான ஏற்பாட்டை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செய்திருந்ததா அப்புறம்தான் சொன்னாங்க.

வினோதினி

அந்தக் கூட்டத்துக்கு நான் போனப்ப அங்க காயத்ரி ரகுராம் இருந்தாங்க. அவங்க பாரதிய ஜனதா கட்சியில ஏற்கெனவே இருக்காங்கன்றதால அவங்க கூட சேர்த்து பார்த்துட்டு, நானும் பி.ஜே.பி-ல சேர்ந்துட்டதா சொல்லியிருப்பாங்கனு நினைக்கிறேன். மத்தபடி கட்சியில சேர்ந்து உறுப்பினர் கார்டெல்லாம் நான் இன்னும் வாங்கலைங்க" என்றார் வினோதினி.

மேலும், "பாரதிய ஜனதாவை நான் ஆதரிக்கிறேன். அதேசமயம் ஆர்.எஸ்.எஸ் நடத்தின கூட்டம்னு தெரிஞ்சிருந்தா நான் அந்தக் கூட்டத்துக்குப் போயிருக்க மாட்டேன்" என்று கொஞ்சம் வித்தியாச பதில் ஒன்றையும் சொன்னார் வினோதினி.



from விகடன்

Comments