'மாஸ்டர்' விஜய்கே ஆஸ்ட்ரிச் கதை, சென்னையில் 'ரூட்'டு தல, தோனிக்கு மாற்று?! இன்றைய டாப் 5 செய்திகள்!

ஓடிடி-க்கு ஏன் வந்தது 'மாஸ்டர்'?!

திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் முதுகில் குத்திவிட்டதாகப் புலம்புகிறது 'மாஸ்டர்' தயாரிப்பு டீம். ஒப்பந்தப்படி வசூல் கணக்கை விநியோகஸ்தர் - திரையரங்க உரிமையாளர்கள் சரியாகக்காட்டாமல் போங்காட்டம் ஆட, தயாரிப்புத் தரப்புக்கு நஷ்டம். குறிப்பாக சென்னையில் பல கோடிகளை முதல் மூன்று நாள் வசூலில் பார்த்த தியேட்டர் அதிபர்கள் , ''50 சதவிகித இருக்கை மட்டுமே, எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லை'' என்றெல்லாம் நஷ்டக்கணக்கை சொல்ல கடுப்பாகியிருக்கிறார் விஜய். 45 நாட்களுக்குப்பிறகே அமேஸான் ப்ரைமில் ரிலீஸ் என்றிருந்ததை 16 நாட்களில் ரிலீஸ் என மாற்றி, அமேஸானில் 50 கோடி ரூபாய்க்கு படத்தையும் விற்றுமுடித்திருக்கிறார்கள். இன்று நள்ளிரவு முதல் 'மாஸ்டர்' படத்தை ஓடிடி-யில் பார்க்கலாம். #ஆஸ்ட்ரிச் கதை தெரியுமா, ஆஸ்ட்ரிச் கதை!

ஜோ ரூட்

சென்னையில் விராட் கோலி, ஜோ ரூட்!

பிப்ரவரி 5 மற்றும் 13-ம் தேதிகளில் இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கின்றன. இதில் விளையாடுவதற்காக இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்கள். இலங்கையில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் அணி முழுமையாக அப்படியே வந்திருக்கும் நிலையில், இவர்களுக்கு முன்பாக நேரடியாக இங்கிலாந்தில் இருந்து வந்து சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் வீரர்கள் அனைவரும் குவாரன்டைனில் இருக்கிறார்கள். ''நானே துணி துவைக்கிறேன், நானே பெட் கவர் மாற்றுகிறேன்'' என்றெல்லாம் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் புலம்பிக்கொண்டிருக்கிறார் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்டுக்கு சென்னை டெஸ்ட் 100வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது! #ரூட்டு தல!

ட்ரம்ப்பே... இனி இந்த பக்கம் வரக்கூடாதப்பே!

அமெரிக்காவில் அவர்கள் நுழையக்கூடாது, இவர்கள் நுழையக்கூடாது எனத் தடைப்போட்டுக்கொண்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சோஷியல் மீடியா நிறுவனங்கள் எல்லாம் இப்போது மாறி மாறி நிரந்தரத் தடை போடுகின்றன. ட்ரம்ப்பின் பதிவுகள் வன்முறையைத் தூண்டுவதாக ட்விட்டர் நிரந்தரத் தடைபோட்ட நிலையில், இப்போது கூகுளின் யு-ட்யூப்பும் ட்ரம்புக்கு நிரந்தரத் தடை போட்டிருக்கிறது. மேலும், H-1B விசா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு (மனைவி/கணவன்) வேலை செய்ய அனுமதிகிடையாது என்கிற ட்ரம்ப் அரசின் விதியை உடைத்திருக்கிறது பைடன் அரசு. ''H-1B விசா மூலம் அமெரிக்காவுக்குள் வந்திருப்பவர்களால் நாடு முன்னேற்றம் காண்கிறது. இவர்களின் வாழ்க்கைத்துணைவர்கள் 93 சதவிகிதம் பெண்கள். இவர்களும் சேர்ந்து அமெரிக்காவில் வேலை செய்யும்போது நாட்டின் பொருளாதாரம் உயரும். அமெரிக்காவுக்குத்தான் நன்மை'' என்று ட்ரம்பின் முரட்டுக் கொள்கைகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக உடைத்துக்கொண்டிருக்கிறது பைடன் அரசு! #டம்மி ட்ரம்ப்பு!

தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ்

ஸ்மித், மேக்ஸ்வெல், கேரி... சென்னை சூப்பர் கிங்ஸுக்குள் யார் !

சென்னையில் 2021 சீசனுக்கான ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. 8 அணிகளும் தங்களுக்கு தேவையற்ற வீரர்கள் என 55 வீரர்களைக் கழற்றிவிட்டிருக்கிறது. இந்த வீரர்கள் மட்டுமல்லாது இன்னும் சில வீரர்களையும் சேர்த்து ஐபிஎல் ஏலம் நடைபெற இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் இதுவாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்தடுத்த சீசன்களுக்கு சென்னை அணிக்குத் தலைமை தாங்கக்கூடிய தலைவனை தேடிக்கொண்டிருக்கிறது சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். இந்த ஆண்டு ஏலத்தில் ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட 7 பேரை சென்னை அணி வாங்க முடியும். ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி என இந்த மூவருமே லீடர்ஷிப் ரோலில் சரியாகப் பொருந்தக்கூடியவர்கள் என்பதால் யாரை வாங்கலாம் என்கிற குழப்பத்தில் இருக்கிறது சூப்பர் கிங்ஸ். கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட விக்கெட் கீப்பர் என்பதால் அலெக்ஸ் கேரியே தோனிக்கு மாற்றாக இருக்கக்கூடும் என்கிறார்கள். #கேரியின் கரியர் ஆரம்பிக்கட்டும்!

சிவகார்த்திகேயன், 'அயலான்' டீம்

சிவகார்த்திகேயனின் சிரிப்பு 'டான்'!

'டாக்டர்', 'அயலான்' என கையில் இருந்த இரண்டு படங்களையும் முழுவதுமாக முடித்துவிட்ட சிவகார்த்திகேயன் தனது புதிய படத்தை அறிவித்திருக்கிறார். 'டான்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். படத்தில் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவராக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். '' 'டான்' எனப் பெயர்வைத்திருப்பதால் இது ஆக்‌ஷன் படமெல்லாம் இல்லை. இவர் கத்தி தூக்குற டான் இல்லை, கத்தி சிரிக்கவைக்கிற டான்'' என்கிறார் இயக்குநர் சிபி. அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரியின் பின்பாதியில் தொடங்குகிறது. #சிரிப்பு... சிரிப்பு... சிறப்பு... சிறப்பு!



from விகடன்

Comments