எல்லாமே ரஹ்மானுக்காக... அன்புத் தாய் கரீமா பேகத்துக்கு நன்றியுடன் ஓர் அஞ்சலி!

உலகையே தன் இசையால் ஆண்டுவரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் வயது மூப்பின் காரணமாக இரு தினங்களுக்கு முன் காலமானார்.

சென்னையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ரஹ்மான், தனது ஒன்பதாவது வயதிலேயே தந்தையை இழந்து, பின்னர், குடும்பச்சூழல் காரணமாக பதினொன்றாம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பிலிருந்தும் வெளியேறினார். அதன்பிறகு இசையுலகில் நுழைந்த ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் வரலாற்றில் புதிய அத்தியாயத்தினை படைத்தார். அவரின் இந்தப் பயணத்தில், அவர் எடுத்த ஒவ்வொரு முக்கிய முடிவுகளிலும் அவரது தாயார் கரீமா பேகம் உடனிருந்துள்ளார். ரஹ்மானின் ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னாலும் அவரின் அன்புத்தாயின் பங்கிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார்

சிறுவயதிலேயே, தந்தையை இழந்த ரஹ்மானுக்கு பக்கபலமாக இருந்தவர் அவரது தாயார் கஸ்தூரி சேகர் (எ) கரீமா பேகம். இசைக்குழுக்களில் இசை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிவந்தவர் ரஹ்மானின் தந்தை ராஜகோபாலகுலசேகரன் (எ) சேகர். அவர் ரஹ்மானின் ஒன்பாதவது வயதிலேயே எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். அதற்குப் பின்னர் குடும்பப் பொறுப்புகளை ஏற்ற கரீமா பேகம், ரஹ்மானையும், அவரது தங்கைகளையும் வாழ்வின் சரியான பாதையில் வழிநடத்திச் சென்றார்.

சரியான வருமானம் இல்லாமல் தன் கணவரின் இசைக்கருவிகளை எல்லாம் விற்று வாழ்க்கையை நகர்த்தி வந்தார் கரீமா பேகம். ஒருகட்டத்தில் அதுவும் முடிவிற்கு வரவே, குடும்பத்தின் பொருளாதார சூழல் மிகவும் வலுவிழந்துபோனது.

அது போன்றதொரு கடினமான சூழலில் கரீமா பேகம் சவாலான ஒரு முடிவினை எடுத்தார். தனது மகனின் பள்ளிப்படிப்பை பதினொன்றாம் வகுப்பிலேயே நிறுத்திவிட்டு நான்கு வயதிலேயே பியானோவை வாசித்த சிறுவன் திலீப் குமாரினுள் ஒளிந்திருந்த இசை ஆர்வத்தினை கண்டறிந்து அவரது திறமையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, அவரை அதன் பக்கம் முழுமையாகத் திருப்பினார்.

ஏ.ஆர். ரஹ்மான் ஒரு நேர்காணலில், “எனது தாய் அதீத இறைநம்பிக்கையை உடையவர். சிறுவயதில், எங்கள் வீட்டில் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் என மூன்று மதங்களைச் சேர்ந்த கடவுளின் புகைப்படங்களும் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும்” என்று கூறியிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் கரீமா பேகம்

Also Read: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் உடல்நலக் குறைவால் மரணம்! #NowAtVikatan

அதேபோல் ஒருமுறை, ரஹ்மான் தனது ஸ்டூடியோவிற்கான சில கருவிகளை வாங்குவதற்கு போதுமான பணமின்றி இருந்தபோது, தாயார் கரீமா பேகம் மகள்களின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை விற்று பணமாக்கிக் கொடுத்துள்ளார். இச்சம்பவத்தினை ஏ.ஆர். ரஹ்மான் தனது சுயசைரிதை நூலான ‘A R Rahman – Notes of a Dream’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவயது முதலே தனது தாயாருடன் மிகவும் இணக்கமாகயிருந்த ரஹ்மான் புகழ்பெற்ற பிறகும் கூட தனது தாயாருடனும், தனது குடும்பத்தாருடனும் அதிகமான நேரத்தைச் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்லும் ரஹ்மான் தாயின் உடல்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாகப் பயணங்களை முழுவதுமாகத் தவிர்த்துவந்தார்.

இசையுலகிற்கு அரியதொரு பொக்கிஷத்தினை அளித்த கரீமா பேகத்திற்கு நன்றியுடன் நம் அஞ்சலியை செலுத்துவோம்.


from விகடன்

Comments