2020 Rewind - `Scam 1992' முதல் 'தி பாய்ஸ்' வரை... கவனம் ஈர்த்த 17 வெப்சீரிஸ்கள்!

இந்த 'லாக்டௌன் வருடம்' என்ன செய்ததோ இல்லையோ, ஓடிடி தளங்களை வாழ வைத்திருக்கிறது. இதுவரை ஒரு வெப் சிரீஸைக்கூட ஓடிடி-யில் பார்த்திராதவர்கள்கூட, 'நெட்ஃப்ளிக்ஸ் அண்டு சில்' மோடுக்கு வந்திருக்கிறார்கள். டிரெண்டிங்கில் வந்த 'மணி ஹெய்ஸ்ட்', 'டார்க்' முதல் சமீபத்தில் ஹிட்டடித்த 'தி குயின்ஸ் கேம்பிட்' வரை பார்த்துத் தள்ளியிருக்கிறார்கள். ஓடிடி-க்கு மிக முக்கியமான இந்த 2020-ல் கவனம் ஈர்த்த சில வெப்சீரிஸ்களை மொழி வேறுபாடின்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்!

பி.கு: எங்களின் பார்வைக்கு எட்டியவரை, நாங்கள் பார்த்தவற்றுள் சிறந்ததை மட்டுமே இங்கே பட்டியலிட்டுள்ளோம். ஏதேனும் தவறிருந்தால் உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் பொறுத்தருளவும். அப்படியே உங்களின் பரிந்துரைகளை கமென்ட்டில் அடிஷனல் ஷீட் வாங்கி எழுதிவிடவும்.
Paatal Lok

ஒரு நியூஸ் சேனலில் ப்ரைம் டைம் ஷோ நடத்துகிறார் சஞ்சீவ் மெஹ்ரா. அவரைக் கொல்ல நான்கு நபர்கள் திட்டமிடுகிறார்கள். இதைப் பற்றி விசாரிக்கும் அதிகாரி ஹதிராம் சௌத்ரி (ஜெய்தீப்). இவர்களையும், இவர் சார்ந்த இந்த சிஸ்டத்தையும் அலசுகிறது 'பாதாள் லோக்'. இந்தச் சமூக அடுக்கில் வெவ்வேறு நிலையில் இருக்கும் வெவ்வேறு மனிதர்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிய அவர்களது வாழ்க்கைச் சூழல் என ஒவ்வொரு எபிசோடிலும் முதல் இரண்டு நிமிடங்களிலேயே கதை சொல்லிவிடுகிறார்கள். இஸ்லாமியர்கள் சாப்பிடும் அனைத்து அசைவ உணவுகளும் பீஃப்பாகவே சிலரால் பார்க்கப்படுவது ஏன் எனத் தொடங்கி, பட்டியலினத்தவர்களை கைகழுவிவிடும் அரசியல் கட்சிகள்வரை 'பாதாள் லோக்' யாரையும் விமர்சிப்பதில் இருந்து பின்வாங்கவில்லை. புகழ்ச்சிக்கெனப் பொய்யை விற்பனை செய்யும் மீடியா, அதிகார துஷ்பிரயோக சீண்டல்கள், ஆணாதிக்க மனப்பான்மை, சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் கொடுஞ்செயல்கள், அரசுக்கு ஆதரவாகப் பல்லைக் கடித்துக்கொண்டு இளிக்கும் கார்ப்பரேட்டுகள் என ஒரு கதைக்குள் இத்தனை விஷயங்களை நுழைக்க முடியுமா என நினைத்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது.

The Queen's Gambit

ஒரு புனைவுத் தொடரால் இந்த ஆண்டு செஸ்ஸின் மீதான ஆர்வம் பலருக்கு வந்திருக்கிறது. chess.com தளத்தில் பலர் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'The queen's gambit' புத்தகம் மீண்டும் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இப்படியானதொரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது நெட்பிளிக்ஸில் வெளியான தொடரான The queen's gambit. ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் பெத் ஹர்மன் எப்படி சதுரங்கத்தில் உலகை வென்றார் என்பதைச் சொல்கிறது The queen's gambit. அங்கிருக்கும் தூய்மை பணியாளரின் மூலம் சதுரங்கம் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் ஹர்மனுக்குத் தலைக்குள்ளேயே காய்கள் நகர ஆரம்பிக்கின்றன. ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து வளர்ப்பு மகளாக மாறும் ஹர்மனுக்கு தொடர் வெற்றிகள்தான். மது, போதை மருந்துப் பழக்கத்துக்கு உள்ளாகும் ஹர்மன், ஆண்கள் நிரம்பியிருக்கும் விளையாட்டில் எப்படி கோலோச்சுகிறார் என 7 எபிசோடாக விரிகிறது கதை. வால்டர் டெவிஸ் எழுதிய நாவலை மையப்படுத்திய புனைவுக் கதை என்றாலும் தேர்ந்த நடையால் ஓர் உண்மைச் சம்பவம் போன்ற பாதிப்பைத் தருகிறது இந்தத் தொடர்.

Mrs America

வலதுசாரி - இடதுசாரி அரசியல், தன்பால் ஈர்ப்பாளர்கள், பெண்ணியவாதிகள் என ஒவ்வொரு ஃபிரேமிலும் அமெரிக்காவின் அரசியல் பேசியது இவ்வாண்டு வெளியான இன்னொரு லிமிட்டெட் சீரிஸான Mrs America. அமெரிக்க பெண்கள் போராடிப்பெற்ற சமவுரிமைச் சட்டத் திருத்தத்தைப் (ERA Equal Rights Amendment) பற்றி பேசுகிறது Mrs America. 70களின் உடைகள், அதற்கேற்ற விக்குகள், ஒப்பனை, வாகனங்கள் என ஒரு தொடருக்கு சினிமாவுக்கான உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போராட்டங்கள் என்பதால், அந்தக் காட்சிகளையும் அப்போது அதிபர்களாக இருந்த நிக்ஸன், கார்டர், ரீகன் போன்றவர்களையும் ஆங்காங்கே திரைக்கதைக்குள் நுழைய அனுமதித்திருக்கிறார்கள். கதையின் சுவாரஸ்யத்துக்காக பிலிஸின் அணியில் இருந்த நபர்களாக சில கதாபாத்திரங்களை சேர்த்திருக்கிறார்கள். வரலாற்றுத் தொடரில் இப்படியான சின்னச்சின்ன திரிபுகள் மட்டும்தான் குறை. பெண்கள், குறிப்பாக அரசியலில் ஈடுபட விரும்பும் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர் இந்த Mrs America.

Aarya

குடும்பம் சகிதமாக சின்ன லெவலில் சட்டத்துக்குப்புறம்பான தொழில் செய்துவருகிறது ஆர்யாவின் (சுஷ்மிதா சென்) குடும்பம். ஓப்பியம் மலர்கள் என்னும் பெயரில், அதன் மறைவில் போதைமருந்து கடத்துகிறார்கள். அளவான லாபம், அன்பான குடும்பம் என இருக்கும் இவர்கள் கையில் 300 கோடி ரூபாய் 'கோலமாவு' சிக்குகிறது. பணம் பாதாளம் வரை பாயும், போதைப்பொருள் பொறமண்டை வரை பாயும் என்பதால், குடும்பம் அல்லோல்படுகிறது. எல்லா பொறுப்புகளும் ஆர்யாவுக்கு வருகிறது. டான், டானுக்கு எல்லாம் டான் என வில்லன்கள் அவதரிக்கிறார்கள். துரோகங்களையும் சோகங்களையும் எப்படி இந்த கோலமாவு ஆர்யா டீல் செய்து, அடுத்த சீசனில் அடியெடுத்து வைக்கிறாள் என்பதுதான் ஆர்யா வெப் சீரிஸின் கதை. டட்சு தொலைக்காட்சித் தொடரான பெனோஜாவை அப்படியே பாலிவுட்டுக்கு எண்டமோல் ஷைன் நிறுவனம் மூலம் பக்காவாக கடத்திக்கொண்டு வந்திருக்கிறார்கள். சில பல க்ளேஷக்கள் இருந்தாலும், இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாலிவுட் தொடர்களில் பார்க்கவேண்டிய பட்டியலில் நிச்சயம் ஆர்யாவுக்கு இடமுண்டு.

Never Have I Ever

இந்திய சீன நடிகர்களை அவர்களின் மார்க்கெட்டுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்த ஆங்கில தொடர்களுக்கு மத்தியில், இதன் முதன்மை கதாபாத்திரம் ஒரு தமிழ் ஈழப் பெண். தொடரின் பேசுபொருள் தமிழ் பெண்ணைப் பற்றியதென நம்மைப் பார்த்ததும் க்ளிக் செய்ய வைக்கிறது இந்தத் தொடர். தேவி விஷ்வகுமாரின் தந்தை இறந்துவிட, அதன் அதிர்ச்சியில் அவளது இரு கால்களும் செயல் இழந்துவிடுகின்றன. வீல் சேரில் முடங்குகிறது அவளது பள்ளி நாட்கள். பள்ளியில் இதனால் கேலிக்கு உண்டாகும் தேவி, புது கல்வியாண்டை தனதாக்க பள்ளியின் அழகான மாணவனுடன் டேட்டிங் செல்ல முயல்வதுதான் கதை. கண்டிப்பான அம்மா, பிடிக்கவே பிடிக்காத உடன் படிக்கும் புத்திசாலி பையன், பள்ளி சீனியர் கிரஷ், ஒட்டிக்கொள்ளும் உறவினர்கள் என இங்கு நாம் பார்க்கும் கதாபாத்திரங்களுக்கு அமெரிக்க முலாம் பூசி அழகுபார்க்குகிறது இந்த ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (never have I ever). பத்து எபிசோடுகள் ஒவ்வொன்றும் 30 நிமிடங்களே என்பதால், ஒரு மாலை ஜாலியாக வீட்டில் அமர்ந்தால், இரவு டின்னருடன் சீரிஸுக்கும் குட்பை சொல்லலாம்.

Alice in Borderland

சர்வைவல் பிரியர்களுக்காகவே இந்த ஆண்டு அளவெடுத்து செய்தது போல் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது Alice in Wonderland சாரி பாஸ் Alice in BorderLand. ஜாலியாக டோக்கியோவை சுற்றிவரும் மூன்று இளைஞர்கள் போலீஸுக்கு பயந்து ஓர் அறைக்குள் நுழைகிறார்கள். வெளியே வந்தால், டோக்கியாவே ஆள் அரவமற்று இருக்கிறது. இரவு நேரங்களில் நடக்கும் போட்டிகளில் பங்குபெற வேண்டும். வெல்பவர்களுக்கு பாஸும், உயிரும் பரிசாக தரப்படும். இப்படியாக வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் மனிதர்கள், வேற லெவல் போட்டிகள், எமோஷனல் காட்சிகள் என பக்காவாக வெளியாகியிருக்கிறது இந்த ஜப்பானியத் தொடர். வித்தியாசமான போட்டிகள், வாழ்க்கைச் சூழல்கள் என த்ரில்லராக நகரும் தொடரின் அடுத்த சீசனையும் உறுதி செய்திருக்கிறது நெட்பிளிக்ஸ்.

Arrowverse

டிசியும், மார்வெல்லும் சினிமாக்களுக்கு நிகராக தொலைக்காட்சித் தொடர்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார்கள். பேட்மேனுக்கு கோத்தம் நகரம் போல, ஏரோ நாயகன் ஆலிவர் குயினுக்கு ஸ்டார்லிங் சிட்டிதான் எல்லாம். வில்லன்கள் துப்பாக்கி தோட்டாக்கள் கொண்டு துளைத்துக்கொண்டிருக்க, ஏரோவிடம் இருப்பது எல்லாம் வில் அம்பு தான். அதை வைத்து எப்படி தன் நகரத்தின் வீழ்ச்சிக்குக் காரணமானவர்களை வெல்கிறார் என்பதுதான் எரோவின் ஒன்லைன். எட்டு ஆண்டுகளாக ஹிட் அடித்து வந்த இந்தத் தொடர், இந்த ஆண்டு முடிவுற்றது. ஏரோ வெளியான சில ஆண்டுகளிலேயே, அதன் கிளைத் தொடர்களாக 'தி ஃபிளாஷ்', 'சூப்பர் கேர்ள்', 'பேட் வுமன்', 'டிசி லெஜன்ஸ் ஆஃப் டுமாரோ' போன்ற தொடர்களை அறிமுகம் செய்தது டிசி. இவற்றுள் பேட்வுமனைத் தவிர பிற தொடர்கள் ஹாட்ஸ்டாரிலும், ஏரோ நெட்ஃப்ளிக்ஸிலும் வெளியானது. 'HBO Max' இந்தியாவில் வரும்போது எல்லாவற்றையும் அதில் பார்க்க முடியும். அதிரடி சண்டைக் காட்சிகள் உங்கள் 'கப் ஆஃப் டீ' என்றால், ஏரோவை நீங்கள் நெட்ஃப்ளிக்ஸில் க்ளிக் செய்யலாம்.

Scam 1992

1990-களில் இந்தியாவை உலுக்கிய ஒரு ஊழல் '1992 பங்குச்சந்தை ஊழல்'. இந்தியப் பங்குச்சந்தையை தலைகீழாகப் புரட்டிப்போட்ட இந்த ஊழலில் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவின் பெயர் வரை அடிபட்டது. இதன் விளைவாக பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 'Scam' என்ற சொல்லாடலை இந்திய ஊடகங்களில் புழக்கத்திற்கு கொண்டுவந்த இந்த ஊழலின் மாஸ்டர் மைண்ட்டான ஹர்ஷத் மெஹ்தாவின் கதையைச் சொல்கிறது இந்த பத்து எபிசோடு லிமிடெட் சீரிஸ். இதை இயக்கியிருக்கிறார் பிரபல இயக்குநர் ஹன்சல் மெஹ்தா. பத்திரிகையாளர்கள் சுச்சிதா தலால் மற்றும் தேபஷிஷ் பாசுவின் 'The Scam: Who Won, who Lost, who Got Away' புத்தகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் தொடரில் அவர்களே முக்கிய கதாபாத்திரங்களாகவும் வருகின்றனர். ஹர்ஷத் மெஹ்தாவின் எழுச்சியுடன், டைம்ஸ் ஆஃப் இந்தியா நிருபராக சுச்சிதா தலால் எப்படி இத்தனை பெரிய ஊழலை கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் கொண்டுவருகிறார் என்பதும் கதையின் முக்கிய கருவாக இருக்கிறது. பொருளாதாரம், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள், வங்கி பரிவர்த்தனைகள் என சாமான்யனுக்கு எளிதில் புரியாத கதைக்களம்தான். ஆனால், கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு விறுவிறுப்பாகக் கதை சொன்னதில் வெல்கிறது Scam 1992. கனவுகள் பேராசையாகும் ஹர்ஷத் மெஹ்தாவாக ப்ரதீக் காந்தி. இவரது நமட்டு சிரிப்பிடம் தோற்றுவிடும் வாரிசு பாலிவுட் பட்டாளம். பரபர நிருபர் சுச்சிதா தலாலாக ஷ்ரேயா தன்வந்திரி கவர்கிறார். தொழில்நுட்ப ரீதியாகவும் எந்தக் குறையும் வைக்கவில்லை. தற்போது இந்த தொடரின் தீம் மியூசிக்தான் பலரின் ரிங்டோன். இதுவரை ஓடிடி தளங்களில் வந்த மிகச் சிறந்த இந்தியத் தொடர்களுள் நிச்சயம் இதற்கும் ஓர் இடமுண்டு.

Asur

இந்த வருடம் வெளியான இந்திய தயாரிப்புகளில் நிச்சயம் டாப் 3-க்குள் இருக்கும் அத்தனை தகுதிகளையும் பெற்றது 'Voot' தளத்தில் வெளியான 'அசுர்'. சீரியல் கில்லரைப் பிடிப்பதுதான் கதை என்றாலும் அதனுள் ஃபாரன்ஸிக் அறிவியல், புராணங்களின் மேற்கோள்கள், மூட நம்பிக்கைகள், உளவியல் எனப் பல தளங்களில் இந்தத் தொடர் பயணித்தது. வித்தியாசமான குணாதிசயங்கள், மற்றவர்களைவிடத் தனித்துத் தெரியும் அசாத்திய திறமை உடைய குழந்தைகளைத் தவறான வளர்ப்பு என்பது எப்படி ஓர் அரக்கனாக மாற்றுகிறது என்பதுதான் இதன் அடிநாதம். வாரணாசி நகரத்தைப் பிரதான கதைக்களமாகக் கொண்டு அன்று, இன்று என நான்லீனியர் முறையில் விரிகின்றன தொடரின் அத்தியாயங்கள். அன்றைய கதை அசுரன் உருவானது பற்றியும் இன்றைய கதை அந்த அசுரன் என்ன செய்கிறான் என்பதுமாக நகர்கின்றன. சிரியல் கில்லரைப் பிடிக்க ஃபாரன்ஸிக் எக்ஸ்பர்ட்டாக இருந்து பேராசிரியராக மாறிய நாயகனின் உதவியை நாடுகிறது சிபிஐ. சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து தன் ஆசானே கொலையாளி எனச் சிறைக்கு அனுப்புகிறான் நாயகன். ஆனால், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் அவனுக்கு வேறொரு படிப்பினையைக் கொடுக்கிறது. நிஜ அசுரன் யார்? கதாநாயகர்கள் இருவருமே ஃபாரன்ஸிக் அறிவியலில் ஜீனியஸ் என்பதால், ஸ்க்ரிப்ட் ஆராய்ச்சிக்காக நிறையவே உழைத்திருக்கிறார்கள். பரபரப்பான திரைக்கதை, அடுத்து என்ன எனச் சுவாரஸ்யம் கூட்டும் முடிச்சுகள் போன்றவற்றால் நம்மைக் கட்டிப்போட்டது இந்த 'அசுர' ஆட்டம்!

Dark

இந்த வருடம் நெட்ப்ளிக்ஸில் 'மணி ஹெய்ஸ்ட்'க்கு நிகராக அதிக கவனம் ஈர்த்த படைப்பு 'டார்க்'. ஏற்கெனவே இரண்டு சீஸன்கள் முடிந்த நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி சீஸன் இந்த வருடம் வெளியானது. நெட்ப்ளிக்ஸின் முதல் ஜெர்மன் வெப் சிரீஸான ‘டார்க்’, டைம் டிராவல் கதைக்களத்தில் இதுவரை நாம் பார்த்திராத, பிரமிப்பூட்டும் ஒரு கடினமான கதையைப் புரியும்படி திரைக்கதை அமைத்துச் சொல்லியிருக்கிறது. கான்வால்ட், நீல்சன், டாப்லர், டீடமேன் என நான்கு குடும்பங்களின் நான்கு தலைமுறையின் கதைகள் எப்படி டைம் டிராவல் என்ற ஒன்றினில் பின்னிப்பிணைந்து இருக்கின்றன என்ற கதைக்குள் இயற்பியலின் குவாண்டம் பின்னலை (Quantum Entanglement), சுரோடிங்கரின் பூனை (Schrodinger’s cat), கடவுள் துகள் (God Particle), இணைப் பிரபஞ்சங்கள் போன்ற சிக்கலான கோட்பாடுகளையும் புகுத்தி 'வாவ்' போட வைத்தது. இந்த சுவாரஸ்யம்தாண்டி, அந்தக் குடும்பங்கள் கட்டிக்காக்கும் ரகசியங்கள், அவர்களின் உறவுகள் உடைக்கும் மரபுகள், அது கேள்வி கேட்கும் இலக்கணங்கள் எனப் பல தத்துவார்த்தங்களையும் உள்ளடக்கியது இந்தத் தொடர். என்டர்டெயின்மென்ட் தாண்டி நிஜமாகவே சுவாரஸ்யமான ஒரு கதையை நேரம் செலவழித்துப் பார்க்கத் தயார் என்றால் இந்த மூன்று சீஸன்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.

Better Call Saul

சிறந்த டிவி தொடர் என்னவென்று கேட்டால் பலரும் கண்ணை மூடி 'பிரேக்கிங் பேட்' என்பார்கள். அப்படியான தொடருக்கு 'பெட்டர் கால் சால்' என்றொரு ஸ்பின்-ஆஃப் தொடர் உண்டு. இது பல 'பிரேக்கிங் பேட்' ரசிகர்களுக்கே தெரியாது என்பதுதான் சோகம். காரணம், 'பிரேக்கிங் பேட்'-ல் எத்தனையோ மாஸ் கதாபாத்திரங்கள் இருக்கையில் சால் குட்மேன் என்னும் வழக்கறிஞரின் பின்கதையை சொல்கிறது 'பெட்டர் கால் சால்'. அதை நேர்த்தியாக சொல்வதால் டிஸ்டிங்க்ஷன் பெறுகிறது. எழுத்து, இயக்கம் தொடங்கி பின்னணி இசை வரை அதே பிரேக்கிங் பேட் டீம்தான். தொடரின் கிரியேட்டர் வின்ஸ் கில்லிகனின் மேஜிக் இந்தத் தொடரிலும் தொடர்கிறது. கிரிமினல் லாயர் சால் குட்மேன்தான் முக்கிய கதாபாத்திரம் என்றாலும் 'பிரேக்கிங் பேட்'-ல் ரசிகர்கள் அபிமானத்தை கவர்ந்த பல கதாபாத்திரங்களின் கடந்த காலத்தையும் தொடர் நெடுக பதிவு செய்திருக்கிறார். இதனால் பிரேக்கிங் பேட் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இந்த தொடர். இந்த ஆண்டு வெளிவந்த ஐந்தாவது சீசன் விறுவிறுப்பிலும் பிரேக்கிங் பேட் லெவலை தொட்டிருக்கிறது. சால் குட்மேன் கதாபாத்திரத்திற்கு தேவையான எனர்ஜியுடன் இந்த சீசனும் கலக்கியிருக்கிறார் பாப் ஓடென்கிர்க். பிரேக்கிங் பேட்டை விட தூக்கலான ஹ்யுமர்தான் இதன் முக்கிய ஹைலைட்.

The Boys

பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர்வுமன் என டிசி மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் ரசிகர்களா நீங்கள்? நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சீரிஸ் அமேசான் பிரைமில் இரண்டு சீசன்கள் வந்திருக்கும் தி பாய்ஸ். சூப்பர் ஹீரோக்கள் எல்லாமே ஒரு நிறுவனத்துக்கு வேலை பார்க்க, அந்த நிறுவனம் இவர்களை போலியாக மார்க்கெட்டிங் செய்கிறது. அந்த நிறுவனத்தையும், இத்தகைய சூப்பர்ஹீரோக்களையும் மக்களின் முன் துகிலுரிப்பதுதான் 'தி பாய்ஸ்' குழுவின் வேலை. அடல்ட் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் போன்றவை பிரதானமாக இருப்பதால், லேப்டாப்பில் பார்ப்பதே உத்தமம். அதே சமயம், ரகளையான ஒன்லைனர்கள், பிளாக் ஹ்யூமர் என ஜாலியாக ஒரு சூப்பர் ஹீரோ தொடர் என்றால் அது 'தி பாய்ஸ்' தான்.

Kingdom

ஜோம்பி த்ரில்லர் கதைகள் பெரும்பாலும் எதிர்காலத்திலேயோ அல்லது நிகழ்காலத்திலேயோ நடப்பதுபோன்றுதான் சித்திரிக்கப்பட்டிருக்கும். ஆனால், வித்தியாசமாக அரசர்கள் காலத்தில் ஜோம்பிக்கள் வந்தால் எப்படியிருக்கும்? நெட்ஃப்ளிக்ஸின் முதல் கொரிய வெப்சீரிஸான ‘கிங்டம்’ கொரியாவைக் கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் ஆண்ட ஜோசியான் வம்சத்தின் காலத்தில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. மனிதர்களை ஜோம்பிகளாக மாற்றும் செடியை வைத்து 'சாகாவரம்' பெற விரும்பும் சுயநல அரசக் குடும்பத்தின் இளவரசன் அந்த நாட்டை ஜோம்பி தொற்றிலிருந்தும், அதன் பெரிய படையிலிருந்தும் மீட்டானா என்பதுதான் ஒன்லைன். பரபர ட்விஸ்ட்களுடன் முடியும் எபிசோடுகள், அந்தக் கால ஆயுதங்களைக் கொண்டு ஜோம்பிக்கு எதிராகப் போர் புரியும் காட்சிகள், த்ரில்லிங்கான தருணங்கள் எனப் பக்கா என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் இந்தத் தொடர். ஜோம்பி கதைகளின் வழக்கமான மசாலாக்களைத் தாண்டி மாநில சுயாட்சி vs மத்திய அரசாட்சி, அரியணை அரசியலுக்காக எதையும் செய்யும் மனிதர்கள் எனப் பல சமகால அரசியலையும் இந்தத் தொடர் கையாள்கிறது. இரண்டு சீஸன்கள் (12 எபிசோடுகள்) வந்திருக்கும் இந்த 'கிங்டம்' தொடரின் 3-வது சீஸன் அடுத்த வருடம் வரவிருக்கிறது.

Upload

'சொர்க்கமும் டிஜிட்டலானால்'... இந்த கற்பனையைத் தொடராக மாற்றியிருக்கிறது அமேசான். முழு தானியங்கி வாகனங்கள், 3D பிரின்டிங்கில் உருவாகும் உணவு என மொத்தமாக தொழில்நுட்பம் ஆட்கொண்டுவிட்ட உலகில் வாழ்கிறார் நேதன் பிரவுன். மென்பொருள் வடிவமைப்பு வேலை, மிடில் கிளாஸ் குடும்பம், பணம் படைத்த கேர்ள் ஃபிரெண்ட் என வாழ்பவர், தானியங்கிக் கார் விபத்தில் சிக்குகிறார். வாசல் வரை வந்துவிட்ட மரணத்திடமிருந்து தப்பிக்க அவரிடம் இருக்கும் ஒரு ஆப்ஷன் டிஜிட்டல் சொர்க்கத்தில் ‘அப்லோடு’ ஆவது. அதென்ன டிஜிட்டல் சொர்க்கம் என்கிறீர்களா..? உங்கள் நினைவுகள் அனைத்தும் டேட்டாவாக ஒரு விர்ச்சுவல் சொர்க்கத்தில் அப்லோடு செய்யப்படும். இறந்தபின்னும் அங்கு நிம்மதியாக வாழலாம். ஆனால், இந்த சேவை சும்மா கிடைக்குமா என்ன? டெக் நிறுவனங்கள் பல பேக்கெஜ்கள் வைத்திருக்கின்றனர். எவ்வளவு செலவானாலும் அதை தான் ஏற்றக்கொள்வதாக நேதனின் காதலி சொல்ல டிஜிட்டல் சொர்கத்திற்கு ஓகே சொல்கிறார் நேதன். ஆனால், அது அவருக்கு சொர்க்கமாக இல்லை, உயிருடன் இருக்கும் காதலியின் கட்டுப்பாட்டில் வாழும் சிறையாக இருக்கிறது. சில நினைவுகள் வேறு அப்லோடு ஆகவில்லை. ஒரே ஆறுதல், டெக் சப்போர்ட்டாக அங்கு வேலைசெய்யும் நோரா. நிஜ உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் இவருடன் நேதன் நெருக்கமாகிறார். காதல் மலர்கிறது. தொலைந்துபோன நினைவுகளை நேதனுக்காகத் தேடுகிறார் நோரா. நேதன் உண்மையில் விபத்துக்குள்ளானாரா, இல்லை அது கொலையா எனப் பல கேள்விகள். இவையனைத்துக்கும் விடைதேடுவதுதான் முதல் சீசன். பிரபல தொடர்களான ‘தி ஆபீஸ்’, ‘தி சிம்ப்ஸ்சன்ஸ்'-ல் எழுத்து, இயக்கம், தயாரிப்பு போன்ற பணிகளைப் பார்த்த கிரெக் டேனியல்ஸ் ஐடியாதான் ‘அப்லோடு'. லோ-பட்ஜெட் சயின்ஸ் பிக்ஷன் தொடராக பலரையும் இந்த வருடம் கவர்ந்திருக்கிறது 'தி அப்லோடு'.

The Crown

பாகுபலி வந்ததும்தான் வந்தது கடந்த சில வருடங்களாகவே இந்திய சினிமாவில் பல அரச கதைகளை சொல்லி போர் அடிக்க தொடங்கிவிட்டார்கள். இன்னும் ஒரு பெரிய லைன்-அப் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறது. 'தி கிரௌன்' தொடரும் அரச கதைதான். ஆனால், கடந்த நூற்றாண்டில் நடப்பது. பிரிட்டனின் தற்போதைய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் கதையை சொல்கிறது இந்த தொடர். அன்றைய பிரிட்டன் எப்படி இருந்தது, நவீன மாற்றங்களுக்கு நடுவே அரச குடும்ப வாழ்க்கை எப்படியானதாக இருக்கும் என காட்டும் இந்த தொடரின் இந்த சீசன் சமீபத்திய பிரிட்டன் வரலாற்றில் மிக முக்கியப் பக்கங்களைப் புரட்டுகிறது. உலகமெங்கும் மக்களாட்சி மேலோங்கும் நேரத்தில் ஓரளவு மரியாதையையெனும் தக்க வைத்துகொள்ள அரச குடும்பம் என்ன செய்கிறது, மனம் விரும்பியவர்களை மணம் முடிக்க முடியாமல் திணறும் குடும்பத்தினர் என அரச குடும்பத்தின் பாவக்கதைகளை சொல்கிறது இந்தத் தொடர். உலக மக்களின் அபிமானம் பெரும் இளவரசி டயானா எப்படி அரச குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுகிறார் என்பதையும் பதிவுசெய்கிறது. இத்துடன் 'அயர்ன் லேடி’ என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முதல் பெண் பிரதமரான மார்கரெட் தாட்சரின் எழுச்சியும் காட்டப்படுகிறது. எப்போதும் போல நடிகர்கள், ஒளிப்பதிவு, இசை, ஒப்பனை, கலை இயக்கம் என அனைத்தும் டாப் நாட்ச். நெட்ஃபிளிக்ஸ் வாரி வழங்கியிருக்கும் பட்ஜெட் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பளிச்சிடுகிறது. சற்றே சறுக்கினாலும் ஆவணத்தொடர் உணர்வைத் தந்துவிடும் களம். ஆனால், அந்த நெடி வராமல் முடிந்தவரை சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்கிறார்கள்.

Criminal Justice: Behind Closed Doors

புகழ்பெற்ற வழக்கறிஞரான பிக்ரம் சந்திரா கத்தியால் குத்தப்பட்டு வீழ்ந்துகிடக்கிறார். குற்றச்சாட்டுக்குள்ளான அவரின் மனைவி அணு சந்திராவை குற்றவாளியாக சித்திரிக்கிறது சமூகம். அணு சந்திராவை எப்படி இந்த வழக்கிலிருந்து மீட்டு விடுதலை பெறவைக்கிறார் மாதவ் மிஸ்ரா என்பதாக நீள்கிறது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Criminal Justice: Behind Closed Doors. முதல் சீசனில் இருக்கும் வழக்கறிஞர் கதாபாத்திரங்களைத் தவிர கதை முழுக்க முழுக்க புதிய நபர்கள் என்பதால், முதல் சீசனைப் பார்க்க வேண்டியதில்லை என்பது ப்ளஸ். 'பிங்க்', 'தப்பட்' தொடங்கி பெண்களின் சம்மதம் பற்றி பேசியிருக்கும் அதிமுக்கியமான படைப்பாக வந்து நிற்கிறது Criminal Justice: Behind Closed Doors. 8 எபிசோடுளாக விரியும் கதையில் ஆங்காங்கே தொய்வுகள் இருந்தாலும், கதை பேசும் விஷயத்துக்காக தவிர்க்க முடியாத தொடராக வலம் வருகிறது.

கிறிஸ்டோபர் நோலனின் தம்பி ஜோனதன் நோலன் முன்னெடுத்துச் செல்லும் இந்தப் படைப்பின் 3வது சீஸன் இந்த வருடம் ஹாட்ஸ்டாரில் (HBO படைப்பு) வெளியானது. 'வெஸ்ட்வேர்ல்டு' என்ற தீம் பார்க், அங்கே மனிதர்களைப் போன்றே வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் உலவுகின்றன. பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்காக இருக்கும் இந்தப் பூங்காவின் ரோபோக்கள் பரிணாம வளர்ச்சியடைந்து தங்களை அடிமைப்படுத்திவரும் மனிதர்களைப் பழிவாங்க நினைத்தால் என்னவாகும்? இரண்டு சீஸன்களாக பார்க்குக்குள் சுற்றிய கதை, தற்போது அதிலிருந்து வெளியேறி மனிதர்களின் நிஜ உலகில் உலாவும் ரோபோக்களின் போராட்டங்களைப் பற்றிப் பேசியது. நாயகியாக இவான் ரேச்சல் வுட், நாயகனாக 'பிரேக்கிங் பேட்' புகழ் ஆரோன் பால் நடித்த இதில், சீனியர்களான தேண்டி நியூட்டன், எட் ஹாரிஸ் போன்றோரும் நடித்திருந்தனர். முதல் 2 சீஸன்கள் பெற்ற வரவேற்பை இது பெறவில்லை என்றாலும் முன்பைவிட அதிக பொருட்செலவில் உருவான எதிர்கால மனிதர்களின் உலகம், சண்டை காட்சிகள், நடிகர்களின் பர்ஃபாமன்ஸ் போன்றவை கவனம் பெற்றன. 4-வது சீஸன் வருமென அறிவித்திருக்கிறது HBO. எதிர்பார்ப்புகளை அது பூர்த்தி செய்யும் என நம்புவோம்!

இவை தவிர பெரிய ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்ற தொடர்களான 'Homeland', 'Agents of Shield' போன்றவை இந்த வருடத்துடன் நிறைவடைந்துள்ளன. 'Money Heist' மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாயிருந்தாலும் அதன் மற்ற சீஸன்களைத்தாண்டி ஸ்கோர் செய்யவில்லை. இவை தவிர நீங்கள் பார்த்து மகிழ்ந்த வெப்சிரீஸ்களை கமென்ட்டில் சொல்லுங்கள்.


from விகடன்

Comments