ஒருவழியாக 53-வது நாளைக் கண்ணில் காட்டி விட்டார்கள். மேகம் கருமூட்டமாக இருப்பதை முதல் ஷாட்டில் வானிலை மாதிரி காட்டி புயல் சூழலை உணர்த்தியது பிக்பாஸ் டீம்.
‘கர்ணா’ திரைப்படத்திலிருந்து ‘ஹலோ மிஸ் செல்லம்மா’ என்கிற ரகளையான பாட்டு ஒலித்தது. இசையமைப்பாளர் வித்யாசாகர் இன்னமும் அதிகமாக கவனிக்கப்பட்டிருக்க வேண்டிய அதிதிறமைசாலி. கால் சென்டர் டாஸ்க் நடந்து கொண்டிருப்பதால் அதற்கு மேட்ச்சான பாட்டை போடுகிறார்களாம். இருந்தாலும் மறந்து போன பாட்டை நினைவுப்படுத்திய பிக்பாஸ் டீமிற்கு நன்றி. டாஸ்க் ஆரம்பித்தது. அனிதா Vs நிஷா. இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். கால்சென்டர் ஜோடியை இவர்களாக முடிவு செய்து கொண்டதால் சொதப்பலாக அமைந்தது. மாறாக பிக்பாஸே கோர்த்து விட்டிருந்தால் ரகளையாக இருந்திருக்கும். உதாரணத்திற்கு ரியோ Vs பாலாஜி. இந்த டாஸ்க் சில இடங்களில் நன்றாகவும் சில இடங்களில் மகா சலிப்பாகவும் அமைந்ததற்கு முடிவை போட்டியாளர்கள் கையில் எடுத்ததே காரணம்.
"மல்லிகையே... மல்லிகையே..." பாடலில் ரம்யாவும் தேவயானியும் ஒன்றாக பாடுவதைப் போல நிஷாவும் அனிதாவும் ஒருவரையொருவர் அன்பொழுக விசாரித்து உரையாடலை ஆரம்பித்தனர். நிஷாவின் பதில்களுக்கு அனிதா தந்த எக்ஸ்பிரஷனையெல்லாம் வைத்து ஒரு நல்ல மீம்ஸ் வீடியோ தயாரிக்கலாம். குறிப்பாக, "எனக்கு இங்க ஒரு தம்பி இருக்கான்'’ என்று நிஷா, ரியோவைப் பற்றி சொன்ன போது அனிதா தந்த எக்ஸ்பிரஷன் ‘ஓஹோ’ ரகம். நிஷா முன்பு கண்கலங்கியது போலவே பதிலுக்கு ரியோவும் இப்போது கண்கலங்கி கணக்கைத் தீர்த்தார். “ஏன் எங்க டீமை விட்டுப் பிரிஞ்சுப் போயிட்டீங்க?” என்பதே அனிதாவிற்கு நிஷா முன்வைத்த அடிப்படையான கேள்வி. ‘செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு இப்படி ஒரு கேள்வியா?’ என்பது அனிதாவின் இடக்கான பதில்.
மிகச் சுருக்கமான காதல் கதையைப் போல இந்த உரையாடல் சுருக்கமாக முடிந்தது. நிஷா விட்டுக் கொடுத்து நாமினேட் ஆக, அனிதாவிற்கு இரண்டு ஸ்டார் கிடைத்தது. “சனம்.. உங்க போர்டை நிஷா கிட்ட கொடுங்க’ என்று பிக்பாஸ் சொன்னவுடன் ‘தாலி – காலி – போலி’ என்கிற ரைமிங்கான கிண்டலுடன் அதை வாங்கி மாட்டிக் கொண்டார் நிஷா. அடுத்த கால் சென்டர் ஜோடி: ஆரி Vs ஷிவானி. ‘நீங்கள் இந்தப் போட்டியில் தொடர தகுதியானவர்தானா? உங்களுக்கு மட்டும் பாலாஜி தனி சலுகைகள் அளிக்கிறாரா’ என்பதுதான் ஷிவானியை, ஆரி மறைமுகமாக கேட்க விரும்பிய கேள்விகள். ஆனால் அதிக கடுமை கூடாது என்பதில் ஆரி கவனமாக இருந்து வலிக்காமல் கேட்டார் ஆரி. இவரின் டார்க்கெட்டும் பாலாஜிதான். இவற்றிற்கெல்லாம் ஒருமாதிரியாக பதில் சொல்லி சமாளித்தார் ஷிவானி.
‘இறுதிப் போட்டிக்கு யார் யார் எல்லாம் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?’ என்கிற கேள்விக்கு தன்னையே முதலில் சொல்லிக் கொண்டது ஷிவானியின் அபாரமான தன்னம்பிக்கை. (இருந்துட்டுப் போகட்டும்!). இதற்கு பாலாஜி கைத்தட்டி மகிழ்ந்தார். இதர போட்டியாளர்களாக ‘பாலா, சாம், ரம்யா, ரியோ ஆகியோர்களின் பெயர்களைச் சொன்னார் ஷிவானி. எதிர் டீமாக இருந்தாலும் வலுவான போட்டியாளராக அவர் ரியோவைத் தேர்ந்தெடுத்தது சிறப்பு. கேள்வி கேட்ட ஆரியைத் தவிர்த்து விட்டது சாமர்த்தியம்.
"பாலாஜி மீது உங்களுக்கு இருப்பது அன்பா, காதலா’' என்ற மிக நேரடியான கேள்வியை ஆரி தவிர்த்திருக்கலாம். ஏனெனில் என்னதான் பாலா – ஷிவானி எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிவது எரிச்சலை ஏற்படுத்தினாலும், அது தனிமனித சுதந்திரம். அவற்றை நேரடி கேள்விக்குட்படுத்தக்கூடாது. அவர்களுக்குள்ள உறவின் காரணமாக விளையாட்டு பாதிக்கப்படுகிறதா என்பதுதான் பிரதானமாக அமைந்திருக்க வேண்டும். இதர கேள்விகளை சூசகமாக முன்வைத்த ஆரி இதில் சறுக்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், ‘இக்ங்ஞாயி’ என்று ஷிவானி சொன்னதிற்குப் பிறகும் "உங்கள் குரல் ரொம்ப இனிமையா இருக்கு ஷவானி'’ என்று அபாண்டமாக பொய் சொன்ன ஆரியை, அந்தக் காரணத்திற்காகவே உடனடியான எவிக்ட் செய்யலாம் என்று தோன்றுகிறது. ஷிவானி இழுத்து இழுத்துப் பேசியதால் டாஸ்க் பஸ்ஸர் அடித்து அவர் வெற்றி பெற்றார். பதிலுக்கு நான்கு நட்சத்திரங்களை தாராளமாக வழங்கினார் ஆரி.
‘அப்பாடா. ஒரு வழியா இந்த டாஸ்க் பாதி முடிஞ்சது’ என்று அகம் மகிழ்ந்தார்கள். இவர்கள் இப்போது எதிர் டீமை கேள்வி கேட்க கொலைவெறியோடு காத்துக் கொண்டிருப்பார்கள். சாமிற்கு ஒரு நட்சத்திரம் மட்டுமே கிடைத்தால் "நீங்கதான் worst performer... என்ன பண்றது? உங்களுக்கு கிடைச்சது பிசிநாறி காலர்’' என்று சாமை கிண்டல் செய்வதின் மூலம் சனத்தை கிண்டல் செய்தார் பாலாஜி. அங்கு சனம் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு ‘நொய் நொய்’ பஞ்சாயத்து ஓடியிருக்கும். "என் கிட்ட கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் உன் கிட்டயும் ஆஜீத் கிட்டயும் கேக்கறாங்க'’ என்று பிறகு ஷிவானியிடம் பாலாஜி கூறியது உண்மை.
அனிதாதான் டீம் லீடர் என்கிற அதிர்ச்சியான தகவலே இப்போதுதான் எனக்கு தெரிய வந்தது. "டயர்டா இருக்கு. வெக்கேஷன் லீவ் கிடைச்சா நல்லாயிருக்கும்'’ என்று எந்த முகூர்த்த நேரத்தில் அவர் சொன்னாரோ, தெரியவில்லை. பிக்பாஸ் வீடே ஒட்டுமொத்தமாக (மழையால்) ஊத்தி மூடிக் கொண்டது.
புயல் மழை காரணமாக அன்றிரவு போட்டியாளர்கள் வெளியே தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார் பிக்பாஸ். எல்லோரும் பாதுகாப்பான உடையில் வெளியே வந்தார்கள். சுற்றுலா கிளம்பும் மாணவி போல "அய்யாங்... இங்க பஸ் இருக்கு... அதுல நாலு டயர் இருக்கு'’ என்று உற்சாகமாக கூவிக் கொண்டிருந்தார் அனிதா. ‘"உங்க எல்லோரையும் ஒட்டுமொத்தமா இந்த வீட்டிலிருந்து எவிக்ட் பண்றதுக்கு நாங்க போட்ட பிளான் இது" என்று அப்போது பிக்பாஸ் சொல்லியிருந்தால் ஜாலியாக இருந்திருக்கும்.
இதற்கிடையில் "இந்த வீட்டில் நெகட்டிவிட்டி அதிகமா ஆயிடுச்சு. பேச்சு வார்த்தை துண்டாயிடுச்சு. குட்மார்னிங் கூட சொல்லிக்கறதில்ல" என்று சமாதானப் புறாவாக முன்வந்தார் சனம். (வெரி குட்!) ஆனால் புறாவை சூப் வைத்துக் குடித்த இம்சை அரசனாக மாறிய ரியோ "அதெல்லாம் ரொம்ப முயற்சி செஞ்சாச்சு.. ரொம்ப டயர்ட் ஆயிடுச்சு" என்று சனத்தின் நியாயமான கருத்தை வெட்டி விட்டார்.
நாள் 54. வெளியிலிருந்து வீட்டுக்குள் மறுபடியும் நுழைந்த மக்களை "ராயபுரம் பீட்டரு'’ என்கிற ரகளையான பாடலுடன் வரவேற்றார் பிக்பாஸ். மழையில் நனைந்து ஆட ஷிவானி, ரம்யா, சனம் ஆகியோர் தயங்கவில்லை.
ஏற்கெனவே கேப்டன் ரியோ அடிவாங்கி சோர்ந்திருக்கும் சமயத்தில் புதிதாக அதில் ஒரு ஏழரையைக் கூட்டினார் பாலாஜி. '‘சோமு மட்டும் தூங்கறான். நானும் தூங்கலாமா?’' என்று ரியோவை நேரடியாக கேட்காமல் துணைத் தலைவர் ஷிவானியை கேட்க அவர் ரியோவிடம் கேட்டு ஒப்புதல் வாங்கினார். இந்த எளிய விஷயத்தை ஷிவானிக்கு புரிய வைப்பதற்கே பாலாஜிக்கு அரைமணி நேரம் ஆனது. துணைத் தலைவருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது போலிருக்கிறது. (தமிழக அரசியல்!) ஷிவானி ஒவ்வொன்றிற்கும் ரியோவிடம் கேட்டு விட்டு வந்தார்.
பாலாஜி தூங்குவதற்கு அனுமதி வாங்கிய தகவலை அறிந்ததும் "டேய்... நீ இப்பத்தானே தூங்கி எழுந்தே?” என்று அதிர்ச்சியான சனம், ‘"அப்ப நானும் தூங்க பர்மிஷன் வேணும்’' என்று ஷிவானியை இம்சிக்க ஆரம்பித்தார். நாலைந்து பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒருவரையொருவர் கை காட்டி படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் அலும்பு செய்வதுதான் நினைவிற்கு வந்தது.
"சனம் ஏற்கெனவே பர்மிஷன் வாங்கி தூங்கியாச்சு. திரும்பவும் கேட்டா நான் அசிங்க அசிங்கமா கேட்பேன்” என்று மிகையான எதிர்வினையைக் காட்டினார். சனம் என்ன நிஷாவா? சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்ள? இதற்கு தனது "நொய் நொய்" பாணியில் பஞ்சாயத்தை அவர் ஆரம்பிக்க ‘"நீங்க பேசிட்டே இருங்க. இதோ வந்துடறேன்" என்று ஜாலியாக எஸ்கேப் ஆனார் ரியோ. அரைமணி நேரத்திற்கு தம் பிடித்து சண்டையிட்டால் கூட சனத்திற்கு திருப்தியாகி விடும்... இப்படி சர்காஸ்டிக்காக எதையாவது சொன்னால்தான் உக்கிரமாகி விடுகிறார்.
ஒவ்வொருவராக தூங்க அனுமதி கேட்க ஆரம்பித்ததும் கடுப்பான ரியோ "கால் ஹவர் தூங்கிட்டு வேலையைப் பாருங்க’' என்று அதட்டல் போட்டு விட்டு போனார். அவர்களின் டீம் என்றால் தூங்குவதற்கு எளிதில் அனுமதி கிடைப்பதை தனது திருவிளையாடலின் மூலம் பாலாஜி சுட்டிக் காட்ட விரும்பிய நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறிற்று.
லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க் இன்னமும் முடியாததால் அடுத்த வாரம் தொடரும் என்பதை அறிவித்த பிக்பாஸ், இந்த வார மதிப்பெண்களை முழுவதுமாக அள்ளி வழங்கினார். நிஷா கண் அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது நாய் குரைக்கும் சத்தத்தை முதன்முறையாக பிக்பாஸ் வீட்டில் கேட்க முடிந்தது. "யாரு யாரு... தூங்கறது..." என எல்லோரும் தேடிக் கொண்டிருந்த போது, திருட்டுக் கொட்டாக ‘நான் தூங்கலையே’ என்று சாதித்தார் நிஷா. இதற்கு பக்கத்தில் இருந்த அர்ச்சனாவின் உடந்தை வேறு. ‘இவங்க நாயை எழுப்பி விட்டிருப்பாங்க’ என்று கிண்டலடித்தார் சோம்.
இந்த வாரம் முழுவதும் ஈடுபாட்டோடு செயல்பட்ட மூன்று போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தருணம் வந்தது. அதிசயமாக இந்த முறை ரமேஷின் பெயர் பல முறை அடிபட்டது. கால்சென்டர் டாஸ்க்கில் அவர் சிறப்பாக செயல்பட்டாராம். சேம்சைட் கோல் போட்டது, ஒரு மாதிரியாக சமாளித்தது ஆகியவற்றைத் தவிர ரமேஷ் அதிக திறமையாக செயல்பட்டது போல் தெரியவில்லை. ரம்யா இன்னமும் சற்று புத்திசாலித்தனமான கேள்விகளை முன்வைத்திருந்தால் ரமேஷ் எளிதில் விழுந்திருப்பார். இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவராக பாலாஜியை முதன்மையாகச் சொல்ல முடியும். அர்ச்சனாவின் கிடுக்கிப்பிடிகளை திறமையாக சமாளித்தார்.
‘'பாலாஜியோட உத்தி என்னன்னா... அவனே முதல்ல எழுந்திரிச்சு இரண்டு பேருக்கான காரணங்களைச் சொல்லி மத்தவங்க மைண்ட்டுக்குள்ள அதை விதைச்சிடுவான். அதன் மூலம் தன் குறையை மறைச்சுப்பான்'’ என்று ஆரி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க "பாலாஜி மட்டுமில்ல ப்ரோ. இங்க நிறைய குட்டிச்சாத்தானுங்க இருக்கு.. மாட்டிக்காம ஜாக்கிரதையா இருங்க” என்றார் ரியோ.
அடுத்து சிலம்பப் போட்டி என்கிற நகைச்சுவை டாஸ்க் ஆரம்பித்தது. இதை ஸ்பான்சர் செய்தது ‘ஹமாம்’ சோப். ஆரி வெளியில் இருக்கும் போது இந்தப் போட்டியை நடத்துவது அக்கிரமம். இதன் மூலம் பிக்பாஸ் குறும்பு செய்கிறார் என்றே தோன்றுகிறது.
"சோம் உண்மையிலேயே கராத்தே மாஸ்டரா... அல்லது பரோட்டா மாஸ்டரா'’ என்கிற சந்தேகத்தை முன்பு எழுப்பியிருந்தேன். பிக்பாஸிற்கும் அந்தச் சந்தேகம் வந்திருக்க வேண்டும். எனவே ‘சிலம்பப் போட்டிக்கு’ நடுவராக சோமை அமர்த்தினார். ஆனால் அவரோ ஆரியிடம் சென்று சலாம் வரிசை வைத்து தொழிலைக் கற்றுக் கொண்டு வந்தார். (அப்ப பரோட்டாதானா?!) இன்னொரு நடுவர் அர்ச்சனாவாம். (அன்பின் மூலம் சண்டை போட முடியும் என்பதை உலகத்திற்கே உணர்த்தியவர் என்பதால் இருக்கலாம்).
காமெடியான இந்தப் போட்டி ஆரம்பித்தது. எதிரில் இருந்த ரம்யாவிற்கு ‘வணக்கம்’ என்று சொல்லி ஆரம்பித்தார் அனிதா. பழக்க தோஷத்தில் ‘தலைப்புச் செய்திகள். சென்னை வானிலை’ என்று அவர் தொடர்ந்து விடுவாரோ என்று கலவரமாக இருந்தது. நல்ல வேளை, அவ்வாறு நடக்கவில்லை. நிஷாவும் சனமும் இந்தச் சண்டைக்காட்சியை ஹாண்டில் செய்த விதம், வடிவேலுவின் ‘பச்சக்… மொச்சக்…லொஜ்ஜக்’ காமெடியை நினைவுப்படுத்தியது.
இதில் ரம்யா –அனிதா ஜோடி வென்றது. ஆரி மற்றும் ரியோவை அன்று இரவே ரிலீஸ் செய்தார் பிக்பாஸ். ‘பாவம் ஆஜீத்தை மட்டும் வெச்சு செஞ்சாங்க’ என்று மக்கள் பேசிக் கொள்ள சிறைப்பறவைகளை தாள மேளத்துடன் வரவேற்பதோடு இன்றைய நாள் முடிந்தது.
பஞ்சாயத்து நாள். கமல் வருவார்.. இந்த வார விசாரணையை சிறப்பாக செய்வார் என்று வழக்கம் போல் நம்புவோமாக!
from விகடன்
Comments