''இரண்டு தோசை, இரண்டு சட்னி, மூன்று முத்தங்கள்!'' - அநீதி ஆந்தாலஜி கதைகள் - 4

இரண்டு இட்லி!

இந்தக்காலம் போல 'கூகிள் பே- ல காசு... வாயில பிரியாணி' போல இல்லை. என்னமோ நம்பிக்கையாம், தும்பிக்கையாம், வார்த்தையாம், உறவாம். அருளின் அப்பா சேத்தியாத்தோப்பில் இருக்கும் வீட்டை விற்றுவிட்டார். கிரயமும் முடிந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. இன்னும் மீதிப்பணம் வந்து சேரவில்லை. போன் மூலம் கேட்டது போக, அருளின் அப்பா கடிதம் எல்லாம் எழுதிப்போட்டுவிட்டார். அதற்கும் தவறாமல் பதில் கடிதம் வந்தது. விலாவாரியாக நலம் விசாரித்து, நலம் விழைந்து ஏக தடபுடலாக இருந்தது பதில் கடிதம். ஆனால், பணம் மட்டும் வரவில்லை.

''நேர்ல போனா அது ஒரு மரியாதை... வேலை நடக்கும்'' - இப்படி ஆறேழு மாதமாகச் சொல்லி வருகிறார் தந்தையார். ஆனால், அருளுக்குத்தான் போகப் பிடிக்கவில்லை. தட்டிக்கழித்துக்கொண்டே வந்தான்.

நச்சரிப்புத் தாங்க முடியாமல் இதோ கிளம்பி விட்டான். கோயம்பேட்டில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தைப் பிடித்து விட்டான். அருள் சேத்தியாத்தோப்பிற்குப் போய் பல வருடங்கள் ஆகின்றன. அருள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, அந்த ஊரில் ஒரு சில லாட்ஜ் பெயர்களைப் பார்த்திருக்கிறான். எல்லாம் மர்ம பிரதேசமாக இருக்கும் அப்போது. தண்ணி அடிப்பது, பெண்களுடன் ஒதுங்குவது என போக்கிரிகள் புகலிடமாகத்தான் அந்த லாட்ஜுகள் அப்போது பெயரெடுத்திருந்தன. கீழே சில பல கடைகள் இருக்கும். மாடியில் தகர போர்டில் 'பிரின்ஸ் லாட்ஜ்', 'சரவணா லாட்ஜ்' என்று பெயர்ப்பலகைகள் காணப்படும். பள்ளி நண்பர்களுடன் விளையாடி முடித்து விட்டு டீ குடித்துக்கொண்டே சைட் அடிக்கையில் கண்ணில் பட்ட பெயர்கள் இவை.

சேத்தியாத்தோப்பு அப்போது ஒரு குட்டி ஜங்‌ஷன். ஆனால், பேருந்து நிலையம் கிடையாது. நடு ரோட்டில் நிறுத்தி சீட் ஏற்றுவார்கள். ஆனால் பிஸியாக இருக்கும். விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், கடலூர், கும்பகோணம், அரியலூர், ஜெயங்கொண்டம், வடலூர் எனப் பல ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் நின்று இளைப்பாறி 'புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்க்' என்று காற்றை இறக்கிச் செல்லும் இடமாக சேத்தியாத்தோப்பு இருந்தது.

இப்போது எங்கு தங்குவது என்று தெரியவில்லை. ஊரில் ஏதும் தகவல் தொடர்பும் இல்லை. ''போய்ப்பார்க்கலாம்... வேலை முடிஞ்சதுன்னா உடனே திரும்பிடறேன். தங்க இடம் கிடைக்கலைன்னா, கும்பகோணம் இல்ல சிதம்பரத்துல தங்கிக்கறேன்'' என்று மனைவியிடம் சொல்லியிருந்தான். வேலை முடிந்து விட்டால், பாண்டி சென்று தங்கி விட்டு வரலாம் என்பது அருளின் அல்ப ஆசை.

மதிய நேரத்தில் சேத்தியாத்தோப்பில் இறங்கினான். ஆட்டோக்காரரிடம் விலாசம் சொன்னான். இவன் கடன் கொடுக்க வந்தது போல வாய் நிறையச் சிரிப்புடன் முருகேசு வரவேற்றார். எந்தக் கல்மிஷமும் இல்லாமல் ''தண்ணி குடிங்க முதல்ல'' என்று சொல்லி பாயைத் தட்டிப் போட்டார்.

வளவளவென பேசிக்கொண்டு இருந்தார். சாப்பாடு போட்டார். கைகழுவத் தோட்டத்துப்பக்கம் போனபோது, அங்கேயே பென்சைத் தூக்கி வந்து போட்டார். ''காத்தோட்டமா இருக்கும் உட்காருங்க'' என்றார்.

ஒரே வீட்டை இரண்டாகப் பிரித்திருந்தார்கள். இரண்டு குடும்பங்களுக்கும் தோட்டம் ஒன்றுதான். இரண்டு குளியலறைகள் தனித்தனியாக இருந்தன. இரண்டு சிமென்ட் தொட்டியும் தள்ளித் தள்ளி இருந்தன. துணி துவைக்க இரண்டு மேடைகள். கொடியில் துணிகள் காய்ந்து கொண்டிருந்தன. பிராவைப் போட்டு, பிராவுக்கு கூச்சம் வராமல் இருக்க அதன் மேல் சிவப்பு கலர் துண்டைப் போட்டு கிளிப் போட்டிருந்தார்கள் போல. நம்பிக்கைத் துரோகம் இழைத்து விட்டு காற்றில் பறந்து முறுக்கிக்கொண்டு இருந்தது துண்டு.

''ஒண்ணுமில்ல தம்பி... கிரையம் பண்ணிப்போட்ட நெலம் அப்டியே கெடக்கு. இன்னும் காலைக் கூட எடுத்து வக்கலை. இன்னும் தோ, இதே வாடகை வீட்டிலதான் இருக்கோம். வர வேண்டிய பணமும் இன்னும் கைக்கு வரல. என்ன ஒண்ணு, அப்பா பேர்ல இருந்த நெலம் இப்ப எம்பேர்ல மாறி இருக்கு அவ்ளோதான்...''

“இல்ல நாலு வருஷமா...''

“சரிதான் தம்பி, குடுத்து இருக்கணும்தான்...” இழுத்தார்.

“தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கோம், அதான் அப்பா...”

“போன்ல அப்பா சொன்னாரு. பணம் எங்கயும் போய்டாது. அதைப்பத்தி கவலைப்பட வேணாம்''

''அதைப்பத்தி கவலைப்பட்டிருந்தா அப்பா கிரயம் பண்ணிக் குடுத்து இருக்க மாட்டாரே!''

''ஹா ஹா... அதுவும் சரிதான். ஒரு எடத்துல பணம் சொல்லி வச்சிருக்கேன். சீட்டு ஒண்ணும் எடுத்திருக்கேன். முழுசா கொடுக்கலைன்னாலும் நீங்க வந்ததுக்கு கொஞ்சம் குடுத்து அனுப்பறேன். இங்கயே பென்ச்சி உட்கார்ந்து இருங்க, நான் வெளில போய்ட்டு என்ன, ஏதுன்னு பாத்துட்டு வரேன். இங்கயே நல்லா காத்து வரும். மொபைல் சிக்னல் நல்லா வரும். போர் அடிச்சிதுன்னா, பைக் வெளில நிக்கிது. நீங்க படிச்ச ஊர்தானே போய் சுத்திப் பாருங்க... சீக்கிரம் வந்துடறேன்.''

அவர் வேட்டியை அவிழ்த்து மீண்டும் கட்டிக்கொண்டு வெளியே கிளம்பி விட்டார்.

கொஞ்ச நேரம் பென்ச்சிலேயே அமர்ந்து மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான். அவர் மனைவி ஒரு தலையணையைக் கொண்டு வந்துக்கொடுத்து, ''தலைக்கி வச்சிட்டு பென்ச்சிலயே படுங்க... காத்து தூக்கிட்டுப் போகும்'' என்று சொல்லி, ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து மேலே ஒரு டம்ளரை அண்ணா கைகாட்டுவது போல வைத்து விட்டுச் சென்றார்.

வாங்கியபோது இருந்த நிறத்தை எப்போதோ இழந்திருந்த தலையணை உறை தலையணையுடன் ஈருடல் ஓர் உயிர் போல ஒட்டிக்கொண்டிருந்தது. மிக மெல்லிய அலுமினியத் தகட்டை ஒட்டிய விரைப்புடனும் இருந்தது. அதை அசூயையாகப் பார்த்துக்கொண்டு இருந்தபோது ஒரு அம்மா பக்கத்து வீட்டில் இருந்து கொல்லைப்புறம் வந்து ஒரு அன்னக்கூடையை எடுத்துக்கொண்டு போனார். சின்ன சிநேகிதமான சிரிப்பு.

காத்து, காத்து என்று ஆளாளுக்குச் சொன்னார்களே ஒழிய அதை மட்டும் காணவில்லை. வேறு வழியின்றி பென்ச்சில் படுத்தான் அருள். அந்த தலையணையை வைத்துத்தான்.

பக்கத்து வீட்டில் இருந்து இன்னொரு பெண்மணி வந்து கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் துணிகளை எடுக்க ஆரம்பித்தபோது யதேச்சையாகப் பார்த்தான். எங்கேயோ பார்த்த முகமாக லேசாக நினைவு தட்டியது.

அந்தப் பெண்மணியும், இவனைப் பார்த்து

''அருள்தானே நீங்க?''

''ஆமாங்க, நீங்க...?''

''என்னத் தெரியலையா? நான் தான் ராஜி. எங்க இந்தப் பக்கம்?”

“அட ராஜி, ம் என்ன இப்படி மாறிட்ட? அடையாளமே தெரியலை!''

ராஜியும் அருளும் வெவ்வேறு பள்ளி என்றாலும் ஒரே வகுப்பு, ஒரே டியூஷன் சென்டர். பத்தாவது படிக்கும் போதுதான் அருள் கண்களுக்குக் கொஞ்சம் அழகாகத் தெரிய ஆரம்பித்தாள். சின்னச் சின்ன பார்வை பரிமாற்றங்கள் தவிர வேறெதுவும் இல்லாத நிலையில் 11-ம் வகுப்பு படிக்கையில் டியூஷன் செண்டர் சார்பாக ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். அப்போது கொஞ்சம் நெருக்கமாகி கிண்டலாக பேசிக்கொள்ள முடிந்தது. பிச்சாவரத்தில் படகில் செல்கையில், படகு ஆடுவதை சாக்கு வைத்து, ராஜியின் கைகளைப் பிடித்துக்கொண்டான் அருள். கொஞ்சமாக ஒட்டி உரசிக் கொள்வதுடன் அந்த சுற்றுலாவும் முடிவுக்கு வந்தது. இது எதுவும் இருவருக்கும் தெரியாமல் நடந்ததாக இருவரும் காட்டிக்கொண்டாலும், ஒரு சின்னப் பற்றுதல் வந்திருந்தது. உடல் மூலம் சின்னதாகப் பேசிக்கொண்டாலும் உறவில் ஒரு பெரிய முன்னேற்றம் வந்து விடுகிறது. வாய் கிழியப் பல மாதங்கள் பேசியும் அதே இடத்தில் நின்று கொண்டிருப்போர்தான் அதிகம். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில் நிறைய நேரம் டியூஷன் சென்டரில் கிடக்க வேண்டி வந்தது.

அதைப்போன்ற தருணங்களில் வகுப்பில் யாருமில்லாத போது, (அதற்காகவே திட்டம் போட்டு முன்கூட்டியே வந்தார்கள் இருவரும்) அருகருகே அமர்ந்து படித்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது புத்தகத்தைப் பார்ப்பது போலவும், நோட்ஸை நோட்டம் விடுவது போலவும் லேசாக தொட்டுக்கொள்வார்கள். ரொம்ப வளர்த்துவானேன். ஒரு நாள் ராஜி கைகளில் முத்தமிட்டு விட்டான் அருள். அன்றைக்கு அழுது கொண்டே இருந்தாள். ஆனால் மறுநாளும் வகுப்புக்கு சீக்கிரமே வந்தாள். முதல் நாள் சம்பவத்திற்கு சமாதானப்படுத்த, அவளை அன்றைக்கு கன்னத்தில் முத்தமிட்டான் அருள். அதற்கு சமாதானப்படுத்த மறுநாள் கட்டிப்பிடித்தான். இது கொஞ்ச நாள் தொடர்ந்து ஒரு நாள் அவள் சட்டையில் கை வைத்து அறை வாங்கினான்.

பிறகு தேர்வு எழுதுவதற்கு சில நாட்கள் முன்பு வரை, அவசர அடி முத்தம் எப்போதேனும் கொடுத்துக்கொண்டார்கள். எத்தனை தடவை முத்தம் வாங்கினாலும் அழுவதை ராஜி நிறுத்தியதேயில்லை. பிறகு அருள் படிக்க சென்னை வந்தபின் ராஜியுடன் தொடர்பில்லை. சென்னை பியூட்டிகளை கரெக்ட் செய்வதில் மும்முரமானான் அருள்.

இந்த ஃப்ளாஷ்பேக் முடிவதற்கும் மாலை ஆவதற்கும், ராஜி கொடுத்த காபியை அருள் குடித்து முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அதற்குள் ராஜி தன் குடும்பம், கணவன், குழந்தை என அனைத்தையும் ஒப்பித்து இருந்தாள். கணவனுக்கு வெளிநாட்டில் வேலை. குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றன.

''உனக்கு பழசெல்லாம் நியாபகம் இருக்கா ராஜி?''

முருகேசு, தோட்டத்திற்குள் வந்தார்.

''ராஜி, அருளைத் தெரியுமா?''

''ஒண்ணா டியூஷன் படிச்சோம்ணே''

''ஹோ சரி சரி, தம்பி நாளைக்குத்தான் கிடைக்கும்னு சொல்லிட்டாங்க. தங்கி, நாளைக்கு வாங்கிட்டுப் போயிடலாம்!''

''அப்டிங்களா சரிங்க, நான் சிதம்பரம் இல்ல கும்பகோணம் போய் லாட்ஜ்ல தங்கிட்டு நாளைக்கு வரேன்!''

''அட, வீட்ல தனி ரூம் இருக்கு. புடிக்கலைன்னா மொட்டை மாடி இருக்கு. கட்டில் போடச் சொல்றேன். எங்கேயும் போக வேணாம், இங்கயே தங்குங்க!''

நீங்க பேசிட்டு இருங்க என்பது போல சைகை காட்டி விட்டு முருகேசு வீட்டுக்குள் போய் விட்டார்.

''எதுக்கு லாட்ஜெல்லாம் அருள், இங்கயே தங்கிக்கோ'' என்றாள் ராஜி.

''சரி... நான் கேட்டேனே, உனக்கு பழசெல்லாம் நியாபகம் இருக்கா ராஜி?''

''எதோ படிச்சோம், முடிச்சோம், டூர் போனோம்... பெருசா நியாபகம் இல்லையே. உனக்கு பழைய ஃபிரண்ட்ஸ் எல்லாம் நியாபகம் இருக்கா?''

''ராஜி நான் அதைக் கேக்கலை. நாம் பாசமா இருந்தது, நெருக்கமா இருந்தது, அதைக் கேக்குறேன்!''

''ஏய்... அப்டியா இருந்தோம்? அதெல்லாம் எனக்கு ஒண்ணுமே நினைவில்லை. அப்பல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியாது!''

''இல்ல ராஜி... முத்தம் குடுத்தேனே, நீ கூட அழுவியே!''

''சின்னப்புள்லையிலயா, ஏதாச்சும் கனவு கண்டியா? நீ அப்பல்லாம் எப்ப பாத்தாலும் ஒரு நீல கலர் கட்டம் போட்ட சட்டை போட்டுட்டுத் திரிவ. அதான் நியாபகம் இருக்கு. சரி நான் போயி இட்லி மாவு அரைச்சிட்டு வரேன்!''

ராஜி சென்று விட்டாள்.

ராஜி இப்போது அடையாளம் தெரியாமல் இருக்கிறாள். பருத்தும் இருக்கிறாள். முகமும் முத்திப்போய் இருக்கிறது. தெருவில் நடக்கையில் ராஜியை அருள் பார்த்திருந்தால், ஒரு நொடி சைட் அடிக்கக் கூட நினைத்திருக்க மாட்டான். ஆனாலும் மனதில் இருக்கும் பழைய ராஜியை இப்போதிருக்கும் நிஜ ராஜியின் மேல் ஏற்றி வைத்து திடீரென்று ஒரு காதல் உருவாகி, அதை ஓர் இரவுக் காமமாக முடித்துவிட வேண்டும் என்பதுதான் அருளின் அடிமனக் கிடக்கையாக இருக்க முடியும். ஆனால், அருள் அதை உணராமல் தவிக்க ஆரம்பித்தான். ராஜியை கட்டிப்பிடிக்க வேண்டும், அவள் மடியில் சாய வேண்டும், அவளை இறுக்கி முத்தமிட வேண்டும், முடிந்தால்…முடிந்தால் அவளை அப்படியே… இவை எல்லாம் அவன் கண்களில் தெரிந்தன. கண்களின் மொழியை டீகோட் செய்யத் தெரிந்தவர்கள் செய்தால் மேலே எழுதி இருப்பதுதான் வரும்.

அருள் பைக் எடுத்துக்கொண்டு வெள்ளாற்றுப் பாலம் வரை சென்று சற்று நேரம் அமர்ந்திருந்தான். பிறகு தீப்பாய்ந்த நாச்சியர் கோயிலுக்குச் சென்று வணங்கினான். சின்ன வயதில், இதே கோயிலுக்கு வந்து ராஜியை நான் கட்டிக்கணும் என்று வேண்டியிருக்கிறான். இப்போது...

''ராஜி பாவம்... அவளை நான் நல்லா பாத்துப்பேன்'' என்று அம்மனிடம் அபத்தமாக முணுமுணுத்தான். இன்னிக்கி நைட் ராஜி எனக்கு கிடைக்கணும், நீதான் நடத்தி வைக்கணும் என்றா வேண்டிக்கொள்ள முடியும்?

இரவு உணவு 8 மணிக்கே கிச்சடி கொடுத்தார்கள். மொட்டைமாடியில் படுத்துக்கொள்வதாகச் சொல்லி விட்டான்.

இரவு காற்று இயற்கையாக நன்றாகவே வீசியது. ஒரு ஸ்டூல் வைத்து அதன் மேல் டேபிள் ஃபேன் வைத்திருந்தார் முருகேசு.

சிறிது நேரத்தில் தோசை சுட்டு எடுத்துக்கொண்டு வந்தாள் ராஜி. இரண்டு சட்னி அரைத்திருந்தாள். கிச்சடி சாப்பிட்டு விட்டேன் என்று சொல்லியும், ''வீட்டு தோசைதான 2 சாப்பிடு... கரையறதே தெரியாது'' என்றாள்.

''கொஞ்ச நேரம் கழிச்சி சாப்புடறேன்!''

''நாளைக்குப் போறியா அருள்?''

''ஆமா, பணம் குடுத்ததும் போயிடுவேன்!''

''சரி, போய் எல்லாரையும் கேட்டதா சொல்லு. ஊருக்குப் போய் அப்பப்ப போன் பண்ணு. நல்லா தூங்கு, நான் வரேன்!''

கிளம்ப யத்தனித்தவளை,

''கொஞ்சம் ஒக்காரேன்!''

''வீட்ல வேலை கெடக்கு அருள்!''

படகில் கையைப் பிடித்ததைப்போலவே லாவகமாக அவள் கையைப் பற்றி இழுத்து அமர வைத்தான்.

''என்ன அருள்.. வேலை கெடக்கு, சரி சொல்லு!''

அவள் அருகில் நகர்ந்து அமர்ந்தான். வீட்டு அடுப்படி வாசனை வீசியது. அருளுக்கு சுகந்தமாக இருந்தது.

''சின்ன வயசில உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கும் தான். நீதான் எதையும் காட்டிக்காம இருக்க. நாம எவ்ளோ ஆசையா கிஸ் பண்ணியிருக்கோம் தெரியுமா?''

இப்படி பேசிக்கொண்டே, அவளை அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு விட்டான் அருள். அவள் முகத்தை விடுவித்துக்கொள்ள முயல, அவளது உதட்டில் வலிமையாக முத்தமிட்டு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் அருள். அவள் மீண்டும் இவனை விலக்க முற்பட, அவளை அப்படியே கட்டிலில் வலுக்கட்டாயமாகப் படுக்க வைத்தான்.

''அருள் உனக்கு பைத்தியம் பிடிச்சிடிச்சா?'' நிதானமாக அதே சமயம் தெளிவாகக் கேட்ட ராஜி, அருள் குழம்பிய ஒருகணத்தில் கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள்.

''ஒழுங்கா நாளைக்கு பணத்தை பத்திரமா எடுத்துட்டுப்போ. பஸ்ல ஜாக்கிரதையா போ. தோசை சாப்டுத் தூங்கு. காலைல தட்ட எடுத்துக்கறேன்!''

அவள் கிளம்பிப் போனாள். அவள் போகும்போது பின்னால் பார்த்தான். எழுந்து போய் பின்னால் அணைக்கலாமா என்பது போல உடல்மொழி இருந்தது. அவள் படி இறங்க ஆரம்பித்தாள். அருளுக்கு அழுகை வந்தது. மொபைலை எடுத்து மனைவியின் போட்டோவைப் பார்த்தான்.

3 மங்கீஸ்!

பெங்களூர் வந்த பள்ளிக்கால நண்பனுடன் '3 மங்கீஸ்' பப்பில் ஃபிரஷ் பியர் அடித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று சொன்னான்.

''அனிதாவைப் பாத்தேன் மாப்ள!''

''எங்கடா பாத்த, எப்டி இருக்கா?''

''யங்காதான் இருக்கா. கரோனா டெஸ்ட் எடுக்க வந்திருந்தாடா உன் ஆளு!''

உன் ஆளு என்று சம்பத் சொன்னாலும் அனிதா 100 பேருக்கு மேல் தன் ஆளு என்று சொல்லிக்கொள்ளப்பட்டவள்.

''அவ எல்லாம் நெனப்புலயே இல்ல மச்சி. எவ்ளோ கிராஸ் ஆகி வந்துட்டோம்!''

வேறேதேதோ பேசிக்கொண்டிருந்து விட்டு பிரிந்தார்கள். ஆனால் அனிதா நம்பர் வாங்கிக்கொண்டான் திருமுடி.

அனிதாவும் திருமுடியும் ஒரே அபார்ட்மென்ட். ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, நங்கநல்லூர் வாசம். அனிதா பள்ளிப்படிப்பு படிக்கும் போதே ஹீரோயின். திருமுடி ஒரே அபார்ட்மென்ட் என்பதால் அதிகம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.

அனிதாவுக்கு போதையில் மெசேஜ் அனுப்பினான் திருமுடி. நள்ளிரவு என்பதால் வரவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறாளா என்ற குழப்பத்திலும் போதையிலும் நான்கைந்து மெசேஜ்களைத் தொடர்ந்து தட்டி விட்டான்.

கடைசி மெசேஜ் இப்படி இருந்தது.

“U r my anitha always”

காலையில் எழுந்து பார்த்தான், நீல டிக் இல்லை. படித்தாளா, நீல டிக்கை டிஸேபிள் செய்து வைத்திருக்கிறாளா தெரியவில்லை. வெட்கமாக இருந்தது. எல்லா மெசேஜ்களையும் டெலீட் செய்தான்.

அலுவலகம் சென்றும் இருப்புக் கொள்ளவில்லை. ஒரு விஷயத்தைக் கிண்டி விட்டால் உடனே ஏதாவது நடந்தாக வேண்டும். போன் அடித்தான்.

''ஹலோ!''

பெண்குரல் கேட்டது.

''அனிதா…நான் திரு!''

''ஹாய் திரு, எப்டி இருக்க?''

''ஃபைன்... ஃபைன்... நீ?''

''சூப்பரா இருக்கேன்!''

பள்ளியில் படிக்கும்போதே இப்படித்தான் சொல்வாள். ஹௌ ஆர் யூ என்று யார் கேட்டாலும் ''சூப்பரா இருக்கேன்'' என்பாள்.

அனிதா வீட்டுக்குச் சென்று சாப்பிட்டிருக்கிறான். கேரம் போர்ட் விளையாடி இருக்கிறான். ஒன்றாகப் படித்து இருக்கிறான். ஆனால் அனிதா ஏனோ இவன் வீட்டுக்கு வந்ததே இல்லை.

டிசம்பர் 31 இரவு நியூ இயர் கொண்டாட்டத்தின் போது, ''அனி... ஐ லவ் யூ'' என்றான் திரு. அனிதா என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றாள். நான்கைந்து கிஃப்ட் வாங்கி வந்திருந்தான் திரு. அதையெல்லாம் கொடுத்தான். வாங்கிக்கொண்டாள். அதனால் லவ் சக்ஸஸ் என வகுப்பில் நண்பர்களிடம் சொன்னான். நண்பர்களும் கவர்னர் போல வேண்டாவெறுப்பாகத் தலையாட்டி வைத்தனர்.

ஆனால் எப்படி காதலை ஆரம்பிப்பது எனத் தெரியாமல், அனிதா வீட்டில் இருக்கையில் சட்டை கை வைத்து அறை வாங்கினான். இது நடந்தபோது இருவரும் பத்தாம் வகுப்பு. ப்ளஸ் 1 வந்ததும் கொஞ்சம் தேறினான். டேக் கேர் சொன்னான். 'லுக்கிங் க்யூட் டுடே' சொன்னான். ஆடைகளைப் பாராட்டினான். மொட்டைமாடியில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போதே வெடுக்கென்று முத்தமிட்டான். அவள் ஒன்றும் சொல்லாததால் அது தொடர்ந்தது.

பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது, அனிதா வீட்டில் அவள் அறையில் வழக்கம் போல முத்தமிட்டான். ஒரு நொடியில் முத்தமிட்டு விலகி விடுவான் வழக்கமாய். அன்று என்னவோ மேலே முன்னேறி அவள் மீது படர்வதற்கும் அனிதா அம்மா வருவதற்கும் சரியாக இருந்தது.

அனிதா அம்மா இவனைப் போட்டு அடி பின்னி எடுத்தார். அனிதாவை ஒன்றும் செய்யவில்லை. இவன் போன பிறகு ஏதேனும் செய்தாரா என்பதை இவன் அறிந்தான் இல்லை. பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். சூடம் கொளுத்தி சத்தியம் செய்யச் சொன்னார்.

''தோ பாரு... நீ படிக்கிற பையன். உங்க வீட்ல சொன்னா, உனக்கும் அசிங்கம். உங்க அப்பா உன்னை கொன்னு போட்ருவாரு. படிப்பும் கெடும். அதனால் விடறேன். இனிமே அனிதா கிட்ட பேசவே கூடாது. இந்த வீட்டுப்பக்கம் வரவே கூடாது, ஓடிப்போ!''

ஒரு வாரம் ஜுரத்தில் கிடந்தான் திருமுடி.

''எந்த வேலையும் இல்ல, உன்னைப் பாக்க வரக்கூடாதா?''

''ஹோ... திடீர்னு என்ன என்னைப் பார்க்க?''

''இப்பதான் உன் கான்டாக்ட் கிடைச்சது!''

''சரி, வீக் எண்ட் வா''

''எங்க அனிதா மீட் பண்ணலாம்?''

''வீட்டுக்கு வா!''

''வீட்ல ஹஸ்பெண்ட்?''

''அவரை இருக்கச் சொல்லணுமா?”

“ஏய் இருப்பாரா, அவருக்கு ஏதாச்சும் டிஸ்டர்பன்ஸ்?''

''சரி வேற எங்கயாச்சும் பிளான் பண்ணிக்கலாம்!''

அதன் பிறகும் மெசேஜில் தொடர்பில் இருந்தான் திரு. அந்த வார இறுதியிலேயே பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஓடினான். திருவின் மனைவி எப்போது சென்னை போனாலும் நானும் வருவேன் என்பாள். அவளுக்கு பெங்களூர் பிடிக்க வில்லை. எதா இருந்தாலும் நம்மூரு நம்மூருதான் என்று கிருபானந்த வாரியார் போல சொல்வாள். சென்னையிலிருந்து கோவையும் போய் பெங்களூர் வரவேண்டும் எனத் தீவிரமாகப் பொய்யுரைத்து சென்னை நோக்கி ஓடினான் திரு.

அனிதாவை இம்ப்ரெஸ் செய்ய டிஸ்கவுன்ட் கூப்பன் போட்டு ஆன்லைனில் ஒரு நட்சத்திர விடுதியில் அறை எடுத்திருந்தான். மாலை அங்கே பாரில் சந்தித்தார்கள்.

அனிதா முன்பை விட மிளிரும் அழகுடன் இருந்தாள். இவனைப் பார்த்ததுமே, நலன் கூட விசாரிக்காமல்,

''ஏய் என்னடா இப்பிடி ஊதிட்ட!'' என்றாள்.

சங்கடமாக நெளிந்தான் திரு.

''என்னடா கல்லாப்பெட்டில ஒக்காந்து இருக்குற செட்டியார் மாதிரி இருக்க?''

''ஒக்காந்தே வேலை செய்யறதால அனி!''

பிறகுதான் டிரிங்ஸ் ஆர்டர் செய்தனர்.

''நம்ம லைஃப் உனக்கு நியாபகம் இருக்கா அனி?''

இரண்டு ரவுண்டுக்குப் பிறகு ஆரம்பித்தான். அப்படியே அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

''ஹேய் சொல்ல மறந்துட்டேன். அன்னிக்கு அம்மா உன்னை போட்டு அடிச்சாங்கல்ல, அப்புறம் என்னையும் அடிச்சாங்க. கொஞ்ச நாள் கழிச்சி உங்கம்மா வந்து எங்கம்மா கிட்ட சண்டை போட்டாங்க!''

“எனக்குத் தெரியாதே …என்னாச்சி“

“உங்கப்பாவுக்கும் எங்கம்மாவுக்கும் ஏதோ கச முசா போல“

திடுக்கிட்டான் திரு.

''அதனாலதான் அடுத்த வருஷம் நீங்க வீட்டை காலி பண்ணிட்டுப் போயிட்டீங்க!''

''அய்யோ, எனக்கு சத்தியமாத் தெரியாது!''

''எங்க அம்மாவுக்கு அதனாலயும் அதிகமா கோபம் வந்திருக்கும்!''

மூன்றாவது ரவுண்ட் சுத்தமாக இறங்கி விட்டது திருவுக்கு.

நாலு ரவுண்டுடன் பில் கொடுத்து விட்டு, அவள் காரில் வந்திருப்பதால் தன் அறையில் படுத்துவிட்டு காலையில் எழுந்து செல்லலாம் என்றதற்கு அனிதா ஒத்துக்கொண்ட பின் அறைக்குச் சென்றார்கள்.

அறையில் டிவி போட்டு மெல்லமாக வைத்து விட்டு,

''எனக்கும் இன்னும் மனசுல நீ அப்படியே இருக்க அனி''

''அப்டியா செம''

''உனக்கு அனி!''

''எனக்கு அப்பவே ஏதும் தோணலடா... என்னமோ திருட்டுத்தனம் பண்றோம்னு ஒரு திரில் அவ்ளோதான். நீ இல்லாம வேற யாரு அந்த இடத்துல இருந்திருந்தாலும் அக்செப்ட் பண்ணி இருப்பேன்னு நினைக்கிறேன். அது சும்மா ஒரு ஃபன்.''

''சத்தியமா உனக்கு என் மேல ஃபீலிங்கே இல்லையா அனி?''

அனிதாவுக்கும் கொஞ்சம் போதை இருந்ததால் சகஜமாகப் பேசினாள். சற்று அதிகமாகவே ஆரவாரத்துடன் பேசினாள்.

''நம்பலை இல்ல, இங்க வா…என்கிட்ட வா!''

திரு தயங்க …

''வாடான்னு சொல்றேன் இல்ல?''

திரு அருகில் போனான்.

அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள்.

“பாரு எனக்கு ஒரு ஃபீலிங்கும் இல்ல. உனக்கு இருக்கா?''

உண்மையில் திருவுக்கு இப்போது ஒரு ஃபீலிங்கும் வரவில்லை.

“சரி என்னை கிஸ் பண்ணு “

“”

“பண்ணுன்னு சொல்றேன் இல்ல “

திரு வரவழைத்துக்கொண்ட ஒரு ஆர்வத்துடன், அவளுக்கு ஒரு காதலுணர்வு வரவேண்டும் என்ற உத்வேகத்துடன் முத்தமிட்டான்.

''ஹா ஹா ஹா … ஒண்ணும் இல்ல. அப்ப எப்டி கிஸ் குடுத்தியோ அதே மாதிரிதான் இப்பவும். உன் பொண்டாட்டிக்கும் இப்டித்தான் குடுப்பியா?''

''ஹேய் என்ன அனி''

“ஒரு ஃபீலிங்கும் வரலை... லீவ் இட் கூல். உனக்கு வேணும்னா கட்டிப் புடிச்சி நாலைஞ்சி கிஸ் அடிச்சிக்கோ!''

போன் அடித்தது. எடுத்துப் பேசி வைத்தாள் .

“யாரு “

“ஹப்பி “

“ஓஹ்... ஓக்கே “

''சொல்ல மறந்துட்டேன், என் ஃபர்ஸ்ட் ஹஸ்பெண்ட் கூட டிவோர்ஸ் ஆகிடுச்சி. இவரு கரன்ட் ஹப்பி''

''ஓஹ் …அப்படியா?''

''வந்து பிக்கப் பண்ணட்டுமான்னு கேட்டாரு. நான் தான் என் ஸ்கூல் மேட் கூட நைட் இருந்துட்டு காலைல வரேன்னு சொன்னேன்!''

''ஓஹ்!''

''சரக்கு பத்தலை, ஆர்டர் பண்றியா?''

ஆர்டர் செய்தான்.

“அவர் பேரு வருணன்”

“ஓஹ் சரி சரி... என்னைப் பத்தி சொன்னியா?''

''ம்ம் சொன்னேன்!''

''எல்லாமா?''

''என்னடா எல்லாமா, எல்லாந்தான் சொன்னேன்!''

''என்ன சொன்னாரு?''

''உன்னைப் பாவம்னு சொன்னாரு!''

பேரர் மதுவை எடுத்து வந்து அறைக்குள் வைத்தார்.

அஸ்தானா... கஜகஸ்தான் வேர்ல்ட் எக்ஸ்போவில் கொஞ்சம் கூட எதிர்பாராமல் நிவ்யாவை சந்தித்தான் அஸ்வத். ஃப்யூச்சர் எனர்ஜி வேர்ல்ட் எக்ஸ்போவில் ஷெல் நிறுவனம் சார்பாக வந்திருந்தாள் நிவ்யா.

நிவ்யாவைப் பார்த்த அடுத்தக் கணம் தன் பதவி அந்தஸ்து என அனைத்தும் மறந்து அவளிடம் ஓடினான் அஸ்வத்.

''நிவ்யா, நிவ்யா, அஸ்வத்'' என சிரித்துக்கொண்டே முன்னால் போய் நின்றான்.

“ஹாய் அஸ்வத்…சர்ப்ரைசிங். பயங்கர பிசியா இருக்கேன். என் நம்பர் எடுத்துக்கோ, ஈவ்னிங் மீட் பண்ணலாம்!''

வேகமாக விரைந்து மறைந்து விட்டாள்.

அஸ்வத்தும் நிவ்யாவும் போர்டிங் ஸ்கூலில் ஒன்றாகப் படித்தவர்கள். நிவ்யா பேச்சிலர் டிகிரி படிப்பதற்கே வெளிநாடு பறந்து விட்டாள். இருவரும் நன்றாக நடனம் ஆடக்கூடியவர்கள். நிறைய போட்டிகளில் வென்றிருக்கிறார்கள். பள்ளியில் படிக்கையில் நிவ்யா ராக்கி கட்ட வந்தபோது அதைத் துக்கி எறிந்து விட்டு சாப்பிடாமல் இருந்தான் அஸ்வத். நண்பர்கள் அவனை சமாதானப்படுத்து என நிவ்யாவை நச்சரித்ததால் போய் சமாதானப்படுத்தினாள். அப்போது அவன் தலையை தட்டினாள். அது அஸ்வத்துக்கு மிகவும் பிடித்துப்போய் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினான்.

நடனம் பயிற்சி செய்யும் நேரம். வெளியூர்ப்பயணம் என இருவருக்கும் நிறைய நேரம் கிடைத்தது. பயணத்தின்போது தூக்கம் தாங்காமல் அஸ்வத் மடியில் சரிந்து விடுவாள் நிவ்யா. அப்போது தூக்கத்தில் அவளை பலமுறை முத்தமிட்டு இருக்கிறான். ஒரு காதலர் தினத்தன்று மிக மிக விலை அதிகமுள்ள பரிசுப்பொருள் வாங்கிக்கொடுத்து காதலைச் சொல்லி, அவள் ஒத்துக்கொள்கிறாளா இல்லையா என்றே பார்க்காமல் முத்தமிட்டு அவனே உறுதிப்படுத்திக்கொண்டான். இது அவ்வப்போது தொடர்ந்து பள்ளி முடிந்ததும் பிரிந்து விட்டார்கள்.

அதன்பின் இன்று காலை பார்த்தபின் மீண்டும் மாலை சந்தித்தார்கள். நிவ்யா தங்கிருக்கும் விடுதிக்கு வரச்சொன்னாள்.

ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட் சென்றார்கள். போவதற்கு முன்பே ஏதேனும் கிளப்புக்கு போகலாமா என்று கேட்டான் அஸ்வத்.

''வேலை முடியட்டும் போகலாம்... ரொம்ப டயர்டா இருக்கு'' என்று சொல்லி ரூஃப் டாப்பிற்கு அழைத்து வந்தாள்.

பியர் ஆர்டர் செய்தான்.

''தென் ஹவ் இஸ் லைஃப்!'' ஆரம்பித்தாள்.

''கூல்... ஆல்வேஸ் திங்கிங் ஆஃப் யூ!“

''ஹெய் கமான், வாட் யூ ஆர் டாக்கிங்... க்ரோ அப் மேன்!''

''நிஜமா நிவி''

''சில்லியா பேசாத அஸ்வத். ஸ்கூல்ல படிக்கிறப்பவே நீ ரொம்ப மைண்டை டிஸ்டர்ப் பண்ண. ஹாலிடேல வீட்டுக்குபோனப்ப, உங்க வீட்டு மெய்ட் பொண்ணை ரேப் அட்டம்ப்ட் பண்ணி கேஸ் ஆச்சே, நியாபகம் இருக்கா?' கேஸை பணம் குடுத்து முடிச்சி வச்சாரு உங்க டாடி. எதோ சின்ன வயசுல என்னமோ பண்ண…லீவ் இட். இன்னும் வளரலையா நீ?''

''நிவி... அதெல்லாம் பெரிய ஸ்டோரி. காசுக்காக என்னமோ பண்ணாங்க. பட் நம்ம லவ் லைஃப் இன்னும் என் மைண்ட்ல அப்டியே இருக்கு!''

''சோ!''

“சோ...சோ …”

“இன்னிக்கி நைட் எதுவும் பண்ணனுமா?”

“என்ன நிவி…ஏன் இப்டி பேசற''

“இல்லடா... சாதாரணமாத்தான் கேக்கறேன். ஸ்கூல்ல லவ் பண்ணோம்னே வச்சிப்போம். இப்ப என்ன செய்யணும்?''

“ஒண்ணும் செய்ய வேணாம்... திரும்ப அந்த ரிலேஷன்ஷிப்பை கண்டினியூ பண்ணலாம்…ஃபர்ஸ்ட் ரிலேஷன்ஷிப் இல்லையா…எவர் கிரீன்''

“லுக், அப்ப இருந்த நீ வேற, நான் வேற. ரெண்டு பேருமே சின்னப் பசங்க. நீ அப்ப நல்லவனா கெட்டவானான்னு எனக்கு பிரச்னை இல்லை. இப்ப இருக்குற நீ வேற. நான் வேற''

“அதனால”

“அதனால, பழைய ஃபிரண்டுன்னு கர்டஸிக்கு ஒரு டின்னர் சாப்பிடலாம்.''

“இல்ல... நான் சீரியஸ் ரிலேஷன்ஷிப் பத்தி பேசறேன்!''

“ஏன், வைஃப் டிவோர்ஸா அஸ்வத்!''

''யெஸ்!''

''ஐ'ம் சாரி அஸ்வத்''

“இட்ஸ் ஓக்கே''

''ஐ ஆம் லிவிங் வித் ஹஸ்பண்ட் அண்ட் கிட்ஸ்!''

“ஓஹ் …அண்டர்ஸ்டுட்!''

“அதெல்லாம் பிரச்னை இல்லை. நீ திரும்ப புதுசா பழகி என்னை இம்ப்ரெஸ் பண்ணப் பாரு. பண்ணா நேரம் கிடைக்கும் போது டேட்டிங் போலாம். ஆனா அதுக்கு சான்ஸ் இல்லன்னு நினைக்கிறேன்'' சிரித்தாள் நிவ்யா.

''ஐ லவ் யூ நிவ்யா'' மீண்டும் நிவ்யாவின் கையைப் பிடித்தான்.

''அடப்போடா!''

நிவ்யா எழுந்து அறைக்குச் சென்றாள்.



from விகடன்

Comments