ஆரி ஆன் ஃபயர்... எக்ஸ்போஸ் ஆகும் பாலா... அதட்டும் அர்ச்சனா! பிக்பாஸ் – நாள் 26 #Aari

“ஆள் முன்கோபியாக இருக்கிறாரே... இரண்டு வாரத்திற்கு மேல் தாக்குப் பிடிப்பாரா?” என்று நினைத்த பாலாஜி இப்போது தவிர்க்க முடியாத போட்டியாளராக முன்னேறிக் கொண்டிருக்கிறார். ‘அம்மி அரைக்க வைப்பேன்’ என்று சும்மா கோபத்தில் கூறியதை அவர் பிறகு உண்மையாக்கியதை வைத்து அவரை ‘ராஜதந்திரி’ என்று நேற்று எழுதியிருந்தேன்.

இன்று அதை அழுத்தமாக நிரூபித்தார் பாலாஜி. தான் வீட்டின் தலைவராவதற்கான வாய்ப்பு எளிதில் கிடைத்தும் சம்யுக்தாவை தலைவராக்கி ‘அழகு பார்த்த’ விதத்தைப் பார்க்கும் போது அவர் மனதில் நெடுங்கால திட்டம் இருப்பதைப் போல் தோன்றுகிறது. இந்த வகையில் சுரேஷையும் தாண்டி குருவை மிஞ்சிய சிஷ்யனாக பயணித்துக் கொண்டிருக்கிறார். அவரது தந்திரங்கள் தொடர்ந்து வெற்றி பெறுமா?

என்ன நடந்ததென்று பார்ப்போம்.

பிக்பாஸ் – நாள் 26

'வேர் இஸ் தி பார்ட்டி?’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்ததது. ‘அடாது மழை பெய்தாலும் விடாது தனியாகத்தான் நிற்பேன்’ என்கிற கொள்கையுடைய ஷிவானி, அந்த மழையிலும் குடை பிடித்துக் கொண்டு கூட்டத்தில் சேராமல் தனியாக சாமியாடிக் கொண்டிருந்தார்.

கமல் குறிப்பிட்டது போல விண்வெளிக்கே அனுப்பினாலும் ‘ஸ்பேஸ் இல்லை’ என்கிற அனத்தலை அனிதா கைவிட மாட்டார் போலிருக்கிறது. ''ரியோ உள்ளிட்ட சிலர் பேசிய பேச்சுக்களை விடவும் தான் பேசியது குறைவு. ஆனால் தன்னுடைய பேச்சு மட்டும் ஆட்சேபிக்கப்பட்டது ஏன்?'' என்பது அவரது ஆதங்கம்.

எந்தவொரு மனிதக் கூட்டத்திலும் உடலிலும் புத்தியிலும் ‘வலிமையுள்ள’ சிலர் முன்னணியில் இருப்பார்கள். அவர்கள் பிழை செய்யும் போது மற்றவர்கள் அதிகம் கண்டுகொள்ள மாட்டார்கள் அல்லது எதிர்க்கத் தயங்குவார்கள். வலிமையானவனை பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற மனப்பான்மை அது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிலும் இப்படியான பாகுபாடு இருக்கிறது. அனிதாவிற்குப் பதிலாக அதே இடத்தில் அர்ச்சனா இருந்திருந்தால் மக்கள் ஆட்சேபிக்க தயங்கியிருக்கக்கூடும்.

ஆனால் இதைத் தாண்டியும் சில விஷயங்கள் இருக்கின்றன.

முதலாவது, ஒருவர் வளர்த்து வைத்திருக்கும் பிம்பம். அதையொட்டியும் மக்களின் எதிர்வினைகள் வரும். தன்னுடைய சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகளினால் சிலர் ‘காமெடி பீஸ்’ என்கிற பிம்பம் உருவாக அவர்களே காரணமாக இருப்பார்கள். அனிதாவிற்கும் அப்படியான பிம்பம் தன்னிச்சையாக உருவாகி விட்டது. அது கூட ஆட்சேபத்தை வைக்கக்கூடிய காரணமாக இருந்திருக்கலாம்.

அடுத்த விஷயம் முக்கியமானது. பார்வையாளர்களின் மனநிலை, சூழல், நேரம் ஆகியவற்றையும் ஒரு நல்ல பேச்சாளன் கணக்கில் எடுத்துக் கொள்வான். ஒருவர் சிறந்த பேச்சாளராக இருந்தால் கூட, அவர் புத்திசாலியாக இருந்தால் சூழல் கருதி தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொள்வார்.

அவர் பேசவரும் போது கூட்டம் ஆரம்பித்து நீண்ட நேரமாகி இருக்கலாம். பசி, நீண்ட நேரம் அமர்ந்திருந்த சலிப்பு, வீட்டிற்குப் போக வேண்டும் என்கிற எண்ணம் போன்ற காரணங்களினால் மக்கள் அது சார்ந்த உடல்மொழிகளை வெளிப்படுத்தும்போது புத்திசாலித்தனமான பேச்சாளர் சட்டென்று முடித்துக் கொள்வார்.

பிக்பாஸ் – நாள் 26

ஆனால் அவர் சுவாரஸ்யமான, முக்கியமான பேச்சாளராக ஒருவேளை இருந்தால், நேரம், பசி போன்றவற்றை மக்கள் பெரிதாக கருத்தில் கொள்ள மாட்டார்கள். எனவேதான் முக்கியமான பேச்சாளர்களை இறுதியில் பேச வைப்பார்கள்.

இது போன்ற நடைமுறை விஷயங்களை கணக்கில் கொள்ளாமல் ‘மைக்’ கிடைத்த ஒரே காரணத்தினால் மேடையை நீண்ட நேரம் ஆக்கிரமித்து மக்களின் புகார்களையும் வசைகளையும் வாங்கியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அந்த வகையில், அனிதா புத்திசாலித்தனமான பேச்சாளராகவும் இல்லை. சுவாரஸ்யமான பேச்சாளராகவும் இல்லை. ஒரு சாதாரண சம்பவத்திற்கு அதிக அளவு நெகிழ்ச்சியைக் கூட்டி இழுவையாக கலங்கிக் கொண்டிருந்தார். அது அவரது சொந்த வாழ்க்கையில் மிக முக்கியமானதாக இருந்திருக்கலாம். ஆனால் சுவாரஸ்யமே இல்லாமல் இழுக்கும் போது எதிரே இருப்பவர்களுக்கு சலிப்பையே தரும்.

அனிதாவின் இழுவையான உரை போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல் பெரும்பாலான பார்வையாளர்களுக்கு கூட – அதுவும் எடிட்டட் வெர்ஷன் - சுவாரசியமின்மையைத் தந்ததை கவனிக்க வேண்டும். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் அனிதா அனத்துவது முறையானதல்ல.

அந்தச் சமயத்தில் சற்று துணிச்சலாக முன்வந்து அனிதாவை தடுத்து நிறுத்தியவர் சம்யுக்தா. எனவே வரும் நாட்களில் சம்யுக்தாவை தனது எதிரியாக அனிதா பார்க்கக்கூடும்.

சம்யுக்தாவுடன் ஏற்கெனவே விரோதப் புகை இருக்கிற சனம், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். ‘அவ என்ன பிக்பாஸோட அசிஸ்டென்ட்டா... ரூல்ஸ் செட் பண்ணலாமா?’ என்றெல்லாம் பேசி அனிதாவை ஏற்றி விட்டுக்கொண்டிருந்தார். (ஆனால் இதே சனம்தான் இதர சமயங்களில் ‘ரூல்ஸ் இருக்கு... இல்லை’ என்று மற்றவர்களை ஆட்சேபிப்பவர்.)

பிக்பாஸ் – நாள் 26

அப்போது அங்கு வந்த சம்யுக்தாவை, கிட்னி திருடும் கூட்டத்தைச் சேர்ந்த சிறுவன் மாதிரி ‘வாடா... வாடா... கிட்ட வாடா’ என்று சனம் அழைக்க, புத்திசாலியான சம்யுக்தா தவிர்த்து விட்டது சுவாரஸ்யம். ஏனெனில் அதற்கு முன்புதான் நீண்ட நேரம் அதைப் பற்றி வீட்டின் உள்ளே பேசியிருப்பார்கள் போல. ‘டைம் வேஸ்ட்’ என்று சிரிப்புடன் அலுத்துக் கொண்டார் சாம்.

**

அடுத்த பஞ்சாயத்து பொங்கலின் வடிவில் வந்தது. மக்களுக்கு உணவு பரிமாறும் வேலையை கையில் எடுத்துக் கொண்ட ஆரி, ஆஜித் வரும் போது "போதுமாடா... இன்னம் கொஞ்சம் வைக்கட்டுமா?” என்பது போல் கரண்டியைத் தட்டி தட்டி பொங்கலை வைத்தார்.

‘தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை, பசியுடன் சாப்பாடு அதிகம் கேட்பவர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லக்கூடாது’ என்று நினைப்பதுதான் தாய்மையின் பொதுவான குணம். வீட்டிலுள்ள பெண்கள் இப்படித்தான் நினைப்பார்கள்; தியாகவுள்ளத்துடன் செயல்படுவார்கள்.

ஆனால் இதன் எதிர்முனையில், ‘உணவு எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது’ என்றுதான் ஆண்கள் நினைப்பார்கள். திருமணம், வீட்டு விசேஷம் போன்ற சமயங்களில் பரிமாறும் ஆண்கள் “கேட்டு வை... அதிகமா வெச்சுடாத... எல்லோருக்கும் வரணும்’ என்று திட்டமிட்டுக் கொண்டேயிருப்பதைக் கவனிக்கலாம்.

இரண்டிலுமே தவறில்லை. சமையல் செய்வதைப் போலவே பரிமாறுவதும் ஒரு கலை. சாப்பிடுவரைப் போய் "போதுமா...” என்று ஆரி கேட்டது, அர்ச்சனாவிற்கு ஆட்சேபத்தை ஏற்படுத்தி விட்டதுபோல. எனவே அடுத்து வருபவர்களுக்கு பரிமாறும் வேலையை தானே எடுத்துக் கொண்டார். அப்போதே ஆரியின் முகம் சுருங்கிப் போயிற்று. இந்த விஷயத்தை அர்ச்சனா ஆரியை தனியாக அழைத்துச் சொல்லியிருக்கலாம்.

பார்க்கும்போது மிகச் சாதாரணமாக கடந்து போன இந்தக் காட்சி, பிறகு பெரிய அளவில் வாக்குவாதமாக மாறியது. நம் வீடுகளில் கூட பார்த்தால்... சரி வேண்டாம்... பொங்கலை நிறுத்திக் கொள்கிறேன்.

**

பிக்பாஸ் – நாள் 26

டாஸ்க்கை சுவாரஸ்யமாக செய்த இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சமயம் வந்தது. மக்கள் ஒருமனதாக பாலா மற்றும் நிஷாவைத் தேர்ந்தெடுத்தார்கள். ‘வாரம் முழுவதும் ஈடுபாட்டோடு செயல்பட்டவர்’ என்கிற தேர்வில் நாலு பேர் வந்து பின்பு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோம். (அப்படியா... நம்பவே முடியலையே!)

ஆக... பாலா, நிஷா மற்றும் சோம் ஆகியோர் அடுத்த வார கேப்டன் தேர்தலில் இருப்பார்கள். (பொறுங்கள்... அதிலும் ஒரு ட்விஸ்ட் பிறகு நடந்தது).

அடுத்தது வில்லங்கமான தேர்வு. ‘சுவாரஸ்யமும் ஈடுபாடும் இல்லாமல் செயல்பட்டவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’. பெரும்பாலோனோர்களின் தேர்வில் ஆரி மற்றும் அனிதாவின் பெயர்கள் மறுபடி மறுபடி அடிபட்டன.

பாலாவின் பெயரை நாமினேட் செய்ய சனம் முன்வரும்போது ‘அவர் தலைவர் தேர்தலில் இருப்பதால் நாமினேட் செய்ய முடியாது’ என்று மக்கள் சொல்ல பிக்பாஸூம் அதை வழிமொழிந்தார். ‘அவர் இன்னமும் தலைவர் ஆகலைல்ல?’ என்று சனம் கேட்டது சரியானது. தலைவராக வெல்லும் முன்னரே சலுகையைத் தருவது முறையானதல்ல.

தன்னை நாமினேட் செய்ய முயன்ற சனத்திற்கு பிக்பாஸ் செக்மெட் வைத்ததைப் பார்த்ததும் பழிப்புக் காட்டினார் பாலா. ‘Grow up man’ என்று பதிலுக்கு எரிச்சலைக் காட்டினார் சனம். (‘குஷி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இவர்களை வைத்து எடுக்கலாம் போல).

ஆக... ஜெயிலுக்குப் போவது... மன்னிக்க... ஓய்வெடுக்கும் அறைக்கு போகப் போவது ஆரியும் அனிதாவும்.

பிக்பாஸ் – நாள் 26

பாவம் ஆரி... இரண்டாவது முறையாக ஜெயிலுக்குப் போக தேர்வானார். எனவே இது சார்ந்த கோபம் அவருக்குள் எழுந்தது. “இந்த வீட்டில் ஃபேவரிட்டிஸம் நிச்சயம் இருக்கு. அடுத்த வாரம் அதை நெத்தியில அடிச்ச மாதிரி நேர்மையா சொல்வேன்” என்று கறாராக சொல்ல, அதனால் அடிபட்ட சிலர் ‘ஏன்... இப்பவே சொல்லுங்க பாஸூ’ என்று உசுப்பேற்றினர்.

ஆனால், பின்வாங்கிய ஆரி ‘இன்னமும் நல்லா கவனிச்சுட்டு அடுத்த வாரம் சொல்றேன்’ என்றது ஒரு சிறிய சறுக்கல். "நீங்களே... இப்ப டிப்ளமஸியாத்தான் இருக்கீங்க” என்கிற தனது வழக்கமான ஆயுதத்தை எடுத்து பாலா வீச, (அப்பாடா! நாம தப்பிச்சோம் – வேல்முருகன் மைண்ட் வாய்ஸ்). ‘அதுவொண்ணும் கெட்ட வார்த்தை இல்லை. சும்மா சும்மா அதையே சொல்லி ஆட்சேபிக்க வேணாம்’ என்கிற சரியான பாயின்ட்டை வைத்தார் அர்ச்சனா.

மற்றவர்களுக்கு நிறைய அட்வைஸ் செய்தாலும் அதைச் செயல்படுத்துவதில் ஆரிக்கு சில சங்கடங்கள் இருக்கின்றன போல. எளிமையான விளையாட்டுக்களில் கலந்து கொண்டு மக்களுடன் ஐக்கியமாவதற்கு அவருக்கு மனத்தடை இருப்பது போல் தெரிகிறது. ஆரி, தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்துக் கொள்கிறாரா? 'அரக்கர் டாஸ்க்கில் ஒதுங்கியிருந்தது, பெண்களின் மேக்கப்பை கலைக்காமல் அந்தத் தண்டனையை தான் ஏற்றுக் கொண்டது’ போன்ற சில காரணங்கள் நினைவிற்கு வருகின்றன.

எனவே, இந்த வாரப் பஞ்சாயத்தில் கமலை விடவும் ஆரி அதிகம் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம்.

சரி. அனிதாவிற்கான காரணங்கள்? அதிகம் விளக்க வேண்டியதில்லை. ‘அனிதா’ என்கிற ஒரு வார்த்தை மட்டும் போதும். பெயர் சொன்னாலே பொருள் எளிதில் விளங்கும். ‘நான் ஜெயிலுக்குப் போறேன்... ஜெயிலுக்குப் போறேன்’ என்கிற காமெடியை செய்து தனது சோகத்தை மறைத்துக் கொண்டார் அனிதா.

பிக்பாஸ் – நாள் 26

போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் டாஸ்க்கில் ஒன்றாவதாக தேர்வான ரம்யாவிற்கு சிறப்புப் பரிசை அறிவித்தார் பிக்பாஸ். ‘என்னமோ, ஏதோ என்று பார்த்தால் அது வெறும் சோப்பு டப்பா’ பாவம், ரம்யா. உள்ளூற ஏமாற்றமாக இருந்திருக்கலாம்.

தலைவர் போட்டியில் இருப்பவர்களில் ஒருவர் அல்லது இருவரை ரம்யா மாற்றலாமாம். நிஷாவைத் தூக்கி விட்டு அந்த இடத்தில் சாமை இறக்கினார் ரம்யா. சில சந்தர்ப்பங்களை சாம் கையாண்டது சமயோசிதமாக இருந்ததாம்.

(பாலாவைத் தூக்கி விட்டு நிஷாவிற்கு ரம்யா சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம். ஆனால் வலிமையானவர்களை பகைத்துக் கொள்ள மக்கள் விரும்ப மாட்டார்கள் என்கிற மனோபாவம் இங்கும் வெளிப்படுகிறது).

**

‘ஆஜித் – பொங்கல் – ஆரி’ விவகாரத்தை மறுபடியும் சுரேஷிடம் கிளறிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ‘சாப்பாடு அளவா வெக்கறாங்களான்னு ஆரி கேட்கறாரு’ என்று இவர் சொல்ல ‘ச்சே.. கருமம்... இதில எல்லாமா... கணக்குப் பார்ப்பாங்க’ என்று அருவருத்தார் சுரேஷ்.

இந்த உரையாடலில் இணைந்த பாலா இன்னமும் சூட்டைக் கிளப்பினார். பாலாவிடமுள்ள கெட்ட வழக்கம் இதுதான். நண்பர் என்கிற நிலையில் தன்னிடம் தனியாக சொல்லப்படும் அபிப்பராயங்களை, தகவல்களை சமயம் பார்த்து இவர் சட்டென்று பொதுவில் போட்டு உடைத்து விடுகிறார். இதே விஷயத்தில்தான் சனத்திற்கும் இவருக்கும் ‘எலுமிச்சை’ சண்டையாக வெடித்தது.

பொது வாழ்க்கையில் பாலா செய்வதற்குப் பெயர் ‘நம்பிக்கைத் துரோகம்’. ஆனால் பிக்பாஸ் வீட்டினுள் அதை ஒரு தந்திரமான உத்தியாக பாலா பயன்படுத்துகிறாரோ என்னவோ... ஆரி முன்னர் தன்னிடம் தனியாகச் சொல்லியிருந்த ‘சப்பாத்தி’ மேட்டரை பாலா இங்கு போட்டுக் கொடுத்துவிட்டார். மட்டுமல்லாமல் பிறகு அர்ச்சனா சென்று ஜெயிலில் இருந்த ஆரியிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘அதை விட்டுடப் போறீங்க’ என்று அங்கும் ‘சப்பாத்தி’ மேட்டரை நினைவுப்படுத்தினார் பாலா.

பிக்பாஸ் – நாள் 26
‘மனசுலயே வெச்சுக்காம கேட்டு பிரச்னையை முடிச்சுக்கங்க’ என்று பாலா தெளிவுப்படுத்த முயல்வது ஒருவகையில் நல்லது. ஆனால் நண்பர்கள் சொல்லும் தனிப்பட்ட தகவல்களை சமயம் பார்த்து போட்டுக் கொடுப்பது நிச்சயம் கெட்ட வழக்கம்தான்.

“அவர் சாப்பாடு பத்தி சொன்ன மாதிரி எனக்குத் தெரியல. 'தனக்கு வேலை கொடுக்கலை’ன்ற மாதிரிதான் தெரிஞ்சது’ என்று நிஷா சொன்ன கோணமும் நியாயமாக தெரிந்தது."வேலையே தராமல் 'வேலை செய்யலை’ என்று ஒவ்வொரு வாரமும் என் மீது எப்படி முத்திரை குத்த முடியும்?” என்பது போலவும் பிறகு ஆரி வாதிட்டார்.

எந்தவொரு மனிதக்கூட்டத்திலும் வலிமையானவர்கள், பாதுகாப்பு கருதி அவர்களுடன் கூட்டு சேர்பவர்கள் ஆகியோர் இருப்பதைப் போலவே அங்கு நிகழும் ‘அரசியலை’ எதிர்க்கும் ஒரு துணிச்சல்காரன் இருப்பான். அப்படிப்பட்டவராக ஆரி இருக்கிறார்.

வீட்டிற்குள் நிகழும் குழு மனப்பான்மை, வேண்டியவர்களுக்கு மட்டும் காட்டப்படும் சலுகைகள் போன்றவற்றை மற்றவர்கள் சொல்லத் தயங்கி அல்லது மூடி மறைத்து நடமாடிக் கொண்டிருக்கும் போது அதை பொதுவில் போட்டு உடைக்கும் நபராக ஆரி மாறத் துவங்கியிருக்கிறார். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஆனால், யாருக்காகப் போராடுகிறார்களோ... அவர்களாலேயே வீழ்த்தப்படுவதுதான் இது போன்ற போராளிகளுக்கு எப்போதும் நிகழும் சோகம். வரலாறு முழுக்க இதற்கு நிரூபணங்கள் இருக்கின்றன.

பிக்பாஸ் – நாள் 26

‘இந்த வீட்டில் சரியாக செயல்படாதவர் என்று என்னை மட்டுமே ஏன் சொல்கிறீர்கள்?’ என்று ஆட்சேபம் எழுப்பிய ஆரி "வேலை செய்யாம தூங்கறவங்களும் இங்கேதானே இருந்தாங்க” என்று மறைமுகமாக பாலாவை இழுத்து விட்டார். சப்பாத்தி மேட்டரை போட்டுக் கொடுத்ததற்காக பழிக்குப் பழி. வழக்கம் போல் இடக்குமடக்கான உரையாடலை பாலா ஆரம்பிக்க, அவரைச் சரியாக கார்னர் செய்து நிறுத்தினார் ஆரி.

அர்ச்சனா, பாலா, ஆரி ஆகியோருக்கு இடையில் சூடான விவாதம் நடந்து கொண்டிருக்க அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் அனிதா. ‘அய்யாங்... பாருங்களேன்... இப்பவும் எனக்கு ஸ்பேஸ் தரமாட்டேன்கிறாங்க’ என்பது அவரின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம்.

இந்த வாக்குவாதம் முடிந்து உள்ளே சென்றார் அர்ச்சனா. அப்போது மக்களுக்கு நிஷா உணவு பரிமாறிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் ஆரி மேலுள்ள கோபத்தை நிஷாவிடம் காட்டி ‘சென்சார்’ செய்யப்பட்ட வார்த்தைகளால் தி்ட்டினார். வேல்முருகன், நிஷா போன்றவர்களை சக போட்டியாளர்களாக நினைக்காமல் ஏதோ அடிமைகள் போலவே அர்ச்சனா நடத்துவது மேட்டிமைத்தனம். நிஷாவைத் திட்டியதால் சாப்பிட மாட்டேன் என்று ஒரு டிராமாவை நிகழ்த்தி அடங்கினார் சுரேஷ்.

“ஏண்டா ஆஜித்து... நீ என்ன ஐம்பது கிராம் பொங்கல்தான் சாப்பிடுவியா... கூட 25 கிராம் வெச்சா சாப்பிட மாட்டியா?” என்று மிரட்டலான தொனியில் அர்ச்சனா கேட்க, பாவம் ஆஜித்... “பொங்கல் என்ன... நீங்க எதைப் பொங்கிப் போட்டாலும் சாப்பிடுவேன்" என்று தடுமாறினார்.

**

அடுத்ததாக வீட்டின் தலைவருக்கான போட்டி நடந்தது. தன் மேல் எறியப்படும் பந்துகளை யார் அதிகம் சேகரிக்கிறார்களோ அவரே தலைவர். இதில் பாலாவின் ராஜதந்திரம் வெளிப்பட்டது. தான் சேகரித்த பந்துகளை தன்னிடம் வைத்துக் கொள்ளாமல் சம்யுக்தாவின் கூடையில் போட்டார். ‘எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம்’ என்று பிக்பாஸ் அறிவித்த விதி அவருக்கு செளகரியமாகப் போனது.

இது போன்ற உடல் வலிமை சார்ந்த விளையாட்டுக்களில் ஆண் போட்டியாளர்களோடு பெண்கள் மோதுவது சமநிலையற்ற தன்மையைத் தருகிறது. மிகவும் சிரமப்பட்டு பந்துகளை சேகரித்துக் கொண்டிருந்தார் சம்யுக்தா. சோம் தனது பனியனுக்குள் பந்துகளை திணித்துக் கொள்ள ‘அவன் வயித்தைப் பார்த்தியா... என்னை மாதிரி இருக்கான்’ என்று சுயபகடி செய்தார் சுரேஷ்.

பிக்பாஸ் – நாள் 26
சம்யுக்தாவின் கூடையில் பந்துகளை பாலா போட்டதை மக்கள் ஆட்சேபிக்க "இது என் கேம்...” என்றார் பாலா. “ஆளாளுக்கு பிக்பாஸா இருக்காங்க” என்று சலித்துக் கொண்டார் சுரேஷ். தன் சிஷ்யன் தன்னையும் மிஞ்சி மேலே செல்வது குறித்து அவருக்கு எரிச்சல் வந்திருக்கக்கூடும்.

பாலா அவருடைய விளையாட்டை விளையாடுவது சரி. ஆனால் அவருக்காக வாக்களித்த மக்களைப் பற்றியும் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். வாக்குகளை வாங்கி ஜெயித்து விட்டு சட்டென்று அணி மாறும் அரசியல்வாதிகளைப் போலவே பாலாவின் செயலும் ஒருபக்கம் இருக்கிறது.

வருங்காலத்தில் நெருக்கடிகளை அதிகம் சந்திக்க நேரும் போது தான் தலைவர் ஆகி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்கிற யோசனை பாலாவிடம் இருக்கிறதோ என்னமோ... ஆனால் காற்று எப்போதும் அவருக்கு சாதகமாக வீசுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

**

“ஏண்டா தம்பி... அது ஏன் சாமை தலைவராக்குனே. சோமை ஆக்கியிருக்கலாம்ல?” என்கிற ரைமிங்கான கேள்வியை பாலாவிடம் ஆரி கேட்க “நான் எப்ப தலைவராகணும்னு எனக்குத் தெரியும்... சோமை ஏன் ஆக்கலைன்னா... அவன் ‘ஆமா சாமி’ கோஷ்டியைச் சேர்ந்தவன். ஆனா சாம்... அப்படியில்ல. நான் பார்த்தவரைக்கும் பல சமயங்கள்ல யோசிச்சு சரியான முடிவுகளை எடுக்கறவங்க" என்று பாலா சொல்வது சரியாகத்தான் தெரிகிறது.

அர்ச்சனாவின் கோஷ்டியில் இருக்கும் பொம்மைகளில் ஒருவரான சோம், தலைவரானால் நிச்சயம் பாகுபாட்டுடன் செயல்படுவார். மட்டுமன்றி அவரால் துணிச்சலாக தட்டிக் கேட்கவும் முடியாது. அதட்டி வேலை வாங்கத் தெரியாது.

**

"ரியோ இந்த வீட்டில் முன்பு தனியாகத் தெரிந்து கொண்டிருந்தார். ஆனால் அர்ச்சனா வந்த பிறகு ரியோ மங்கி விட்டார். இதை உணர்கிறீர்களா?” என்று ஆரி, அனிதாவிடம் கேட்க அவரும் அதை வழிமொழிந்தார்.

"இந்த வீட்ல குரூப்பிஸம் உட்கொண்டு நிறைய பாலிட்டிக்ஸ் இருக்கு. அதனாலதான் குரூப்ல சேராத என்னை ஒவ்வொரு வாரமும் பலியாடா தேர்ந்தெடுக்கறாங்க” என்று ஆரி புலம்ப, அங்கும் அவருக்கு ஸ்பேஸ் கொடுக்காத அனிதா, “நீங்களாவது ரெண்டாவது தடவைதான் ஜெயிலுக்கு வர்றீங்க. ஆனா நான் ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆகறேன். நான் வெளிப்படையா இருக்கறேன்-ன்னு இவங்களுக்கெல்லாம் பொறாமை” என்ற போது நடிகர் செந்திலின் நினைவுதான் வந்தது.

பிக்பாஸ் – நாள் 26

இவர்களின் அற்பச் சண்டைகளையே காட்டிக் கொண்டிருந்தால் எப்படி, பிக்பாஸூம் தனது பிஸினஸை வேகமாக நடத்த வேண்டாமா? எனவே ஆடைகளுக்கான பிராண்டுகளை விளம்பரப்படுத்தும் ஃபேஷன் ஷோ நடந்தது. மக்களுக்கு ஆடைகள் பரிசாக கிடைத்தன.

ஊரே இப்படி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க.. ஊரின் மூலையில் இரண்டு ஜெயில் பறவைகள் சோகமாக அமர்ந்து கொண்டிருந்தன. பாவம்.. அவர்கள். பிக்பாஸ் இந்த நேரத்தில் திறந்து விட்டிருக்கலாம்.

‘விஜயதசமி’ சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் ஆங்க்கர் பொஷிஷனில் நிறுத்தி விட்டார்களே என்று ஏற்கெனவே அனிதா வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது சிறையில் அடைபட்டு ஃபேஷன்ஷோவில் தனது திறமையை வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது.

ஆனால் - நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பது ஒரு சவாலான வேலைதான். போட்டியில் பங்கேற்பவர்களை விடவும் அவர்களை ஒருங்கிணைப்பது முக்கியமான வேலை. தனக்கு தரப்பட்ட பணியில் திறமையைக் காட்டுவோம் என்றில்லாமல் ‘அங்க போயிருந்தா நல்லாயிருந்திருக்கும்’ என்று எட்டாத பழத்திற்கு அனிதா கொட்டாவி விடுவது நல்ல ஸ்போர்ட்மேன்ஷிப் இல்லை.

“ஹே... ஹே... பிக்பாஸ் அங்க்கிள் எங்களுக்கெல்லாம் புது டிரெஸ் கொடுத்தாரே... பாவம் நீங்கதான் அங்க இல்லை" என்ற படி வந்தார் சனம். சிறையில் உள்ளவர்களுக்காக உண்மையிலேயே பரிதாபப்பட்டு வந்தாரா அல்லது தனது புது ஆடையைக் காட்ட வந்தாரா என்று தெரியவில்லை. ‘இந்த சனம் குழந்தையா... இல்லயான்னு புரிஞ்சுக்கவே முடியலையே’ என்று சிரித்தார் ஆரி.

ஜெயில் பறவைகள் விடுதலையான அறிவிப்பு வந்தது. “நீங்க சொல்ற போது நான் வெளில வர முடியாது. போங்கடா டேய்" என்பது போல் ஆரி தியானத்தில் அப்படியே அமர்ந்திருக்க சட்டென்று ‘நான் கடவுள்’ ஆர்யாவைப் பார்ப்பது போலவே இருந்தது.

பிக்பாஸ் – நாள் 26

‘வாங்க ஆரி போலாம். அங்க புது டிரெஸ்... கேக்குல்லாம் இருக்கு... மிச்சமிருக்குமா... இல்லையான்னு தெரியல’ என்று அனிதா சிணுங்கியதோடு இன்றைய நாள் முடிந்தது.

பாலா தூங்கி வேலை செய்யாமல் முரண்டு பிடித்த விவகாரம், பொங்கல் – சப்பாத்தி அரசியல், கேப்டன்சியை பாலா ஏற்க மறுத்த ராஜதந்திரம் போன்றவை இந்த வார கமல் சபையில் மீண்டும் கிளறப்படும் என்று தெரிகிறது.

இந்த வார எவிக்ஷன் பட்டியல் மிக நீண்டதாக இருப்பதால் வெளியேறுபவரை யூகிப்பது சிரமமாக இருக்கிறது. ஒருவேளை அனிதா அதிக எதிர்வாக்குகளைப் பெறலாம் அல்லது பிக்பாஸ் வீட்டின் கோக்குமாக்கு விதிகளையொட்டி ஏதாவது ஒரு ‘ட்விஸ்ட்’ நிகழலாம்.



from விகடன்

Comments