அரசியல், சினிமா, விளையாட்டு என அன்றாட செய்திகளிலிருந்து பிரபலங்கள் சிலரிடம் ஜாலியான கேலியான குறும்புக்கேள்விகள் ஆனந்த விகடன் இதழில் தொடர்ந்து வெளியாகிறது. செல்லூர் ராஜுவின் இந்தப் பேட்டி 16/09/2020 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் குறும்புக் கேள்விகள் பகுதியில் வெளியானது.
“அமைச்சர் அறிவாளியான்னு டெஸ்ட் பண்ணப்போறீங்க.. கேளுங்க தம்பி, இதுவரை தெரியலைன்னாலும் நீங்க கேக்கற கேள்விக்கான பதில்களை இனிமே தெரிஞ்சுக்குவேன்’’ என்றபடி கேள்விகளை எதிர்கொண்டார் அமைச்சர் செல்லூர் ராஜு.
இந்திய அணுசக்தித்துறை அமைச்சர் யார்?
"டெல்லியில கேக்கறீங்களா... அங்க அணுசக்திக்கு யாரு மந்திரின்னு எனக்கெப்படிய்யா தெரியும்? எங்க துறையுடன் சம்பந்தப்பட்டவர்ங்கிற முறையில மத்திய சர்க்கார்ல எனக்கு வேளாண் அமைச்சரை மட்டும்தான் தெரியும்யா.”
திருக்குறளில் முதல் குறள் தெரியும். 1330-வது குறள் என்ன?
“திடீர்னு வந்து கடைசிக்குறள் என்னன்னு கேக்கறீங்க. தெரியாததைத் தெரியாதுன்னு சொல்லிடறது நல்லதுன்னு நினைக்கிறேன். தெரியும்னு தப்புத் தப்பாச் சொல்றப்பதானே மீம்ஸ் போடுறாய்ங்க!”
சமீபத்தில் தேசியத் தேர்வாணயத்தின் தேர்வை எழுத வந்த நடிகை யார்?
“நடிகை கவர்ன்மென்ட் வேலைக்குப் பரீட்சை எழுதறாங்களா... ஆச்சர்யமா இருக்கே!”
இப்போது இந்தியாவின் ஜிடிபி சரிவு எவ்வளவு?
“கொரோனாகூட மல்லுக்கட்டிட்டிருக்கோம் தம்பி. பல வேலைகளில் நியூஸ் பார்க்க நேரம் கிடைக்கறதில்லை. அதனால இந்தக் கேள்விக்கும் ‘தெரியாது’ங்கிறதுதான் என்னுடைய பதில், ஸாரி தம்பி!”
உலகளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர் யார்?
“பேரு சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குது. ஃபாஸ்ட் பௌலர். 600 விக்கெட் எடுத்தார்னு பேப்பர்ல படிச்சேன்யா...”
சரியான பதில்கள்:
1) இந்திய அணுசக்தித்துறை அமைச்சர்: நரேந்திர மோடி
2) 1330-வது குறள்:
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
3) தேசியத் தேர்வாணயத்தின் தேர்வை எழுத வந்த நடிகை: சாய் பல்லவி
4) இந்தியாவின் ஜிடிபி சரிவு: -23.9%
5) உலகளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்: ஜேம்ஸ் ஆண்டர்சன்
ரித்விகா, மதுவந்தி, மனோபாலா ஆகியோரும் இதே குறும்புக் கேள்விகளுக்கு ரகளையான பதில்களை சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பதில்களை கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்
Also Read: செல்லூர் ராஜுவுக்கும் மனோபாலாவுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன?
from விகடன்
Comments